வேலை என்று சொன்னாலே அது ஆண்களுக்கு மட்டும்தான் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல. பெண்களும் ஆண்களுக்கு நிகராக, ஏன் சில இடங்களில் ஆண்களைவிட அதிகமாகவே உழைக்கிறார்கள். வெளியில் உழைத்துவிட்டுக் களைத்து வந்தாலும் வீட்டில் கால் நீட்டிப் படுத்து ஓய்வெடுக்க இயலாது. ஏனெனில் வீட்டுப் பணிகள் வரிசை கட்டி நிற்கும். வெளியில்  உழைக்கும் ஆண்கள் கூட்டம் வீட்டிற்கு வரும்போதே ‘சுதி’ ஏற்றிக் கொண்டு வருவதுண்டு. அல்லாவிடினும் வீட்டில் வந்து உடை மாற்றிக் கொண்டு தொலைக்காட்சியையோ அல்லது மொபைலையோ நோக்கிக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள். ஏனென்றால் வீட்டு வேலை செய்வது பெண்களின் பொறுப்பு என்றும், ஆண்கள் செய்தால் அசிங்கம் என்றும் காலங்காலமாக மூளையின் ஒரு மூலையில் உருவேற்றி வைத்திருக்கிறது இந்தச் சமுதாயம்.

காலங் காலமாகப் பெண்கள் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அதை ஆண்கள் பொருட்படுத்துவது இல்லை என்பது எத்தனை வேதனையான விஷயம். ஆண், பெண் பாகுபாடு கூடாது என்று வெறும் வாய் வார்த்தையாக மட்டும் பேசிப் பயனில்லை. கொள்கை ரீதியாகவும் அது செயல்படுத்தப்பட வேண்டும். அதில் முக்கியமானது இருபாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதுதான்.

பணியில் ஆண், பெண் என்கிற பேதம் இல்லை. சில வேலைகள் செய்ய அதிகமான உடல் உழைப்பு தேவைப்படும். சிலவற்றுக்குச் சாதாரண உழைப்பு போதும். ஆனாலும் சம்பளம் என்பது ஒரே வேலையில் இருக்கும் இருபாலருக்கும் ஒன்று போல் வழங்கப்படுவதில்லை. பெண் உழைப்புக்கு அஞ்சியவள் இல்லை. ஆனால், நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும்கூட ஊதியம் வழங்குவது ஆண், பெண் என்கிற பேதத்தின் அடிப்படையில்தான். ஒரு சில பணிகளைத் தவிர இதரப் பணிகள் எல்லாவற்றிலும் ஊதிய விஷயத்தில் பாலின பேதம் நிச்சயம் இருக்கிறது. இதை எதிர்த்து யாரும் குரல் கொடுப்பது இல்லை. பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்லிச் சொல்லியே மரபணுக்களில் உருவேற்றியிருக்கிறார்கள். அந்தளவுக்கு இதைப் பெண்களும் ஏற்றுக்கொண்டு நார்மலைஸ் ஆக்கி விட்டார்கள். அவ்வளவு ஏன், திரைப்படத் துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் இருக்கிறதா? ஜென்ட்ஸ் சூப்பர் ஸ்டாருக்கும், லேடி சூப்பர் ஸ்டாருக்கும் சத்தியமாக ஒன்றுபோல் சம்பளம் வழங்கவே மாட்டார்கள். ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் கதாநாயகி என்னதான் உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும், ஆண் ச்சும்மா ‘நடந்து’ வந்தாலே போதும் என்று சம்பளத்தை ஏற்றிவிட்டு ஜல்லியடிப்பார்கள். போதாக்குறைக்குப் பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் சம்பளத்தையும் கேட்கவே கூடாது என்று சொல்லியிருப்பது எவ்வளவு அநியாயம். ஏனென்றால் ஆணிடம் சம்பளத்தை விசாரிக்கும்போது பெண்ணின் சம்பளத்துடன் கட்டாயமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும். இப்போதுதான் எதிர்ப்புக் குரல்கள் பரவலாக எழ ஆரம்பித்து இருக்கிறது. இது வரவேற்கத் தகுந்த மாற்றம். 

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்வதை இனிமேல் மாற்றி உத்தியோகம் மனுஷ லட்சணம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் வேலைக்குச் செல்வது என்பது புருஷர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அல்ல. அவர்களைவிட அதிகமாக உழைக்கும் பெண்களுக்கும் இதில் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இருபாலருக்கும் பொதுவாக மனுஷ லட்சணம் என்று மாற்றுவதில் தவறு ஒன்றும் இல்லைதானே? பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. பொது அறிவு விரிகிறது. பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை. அடுத்தவருக்குப் பாரமாக இருந்து சுய பச்சாதாபத்தில் மருகிக் கொண்டிருப்பதைவிடப் பணிபுரியச் செல்வது நல்லது.

ஆனால், இன்றும் கூடத் திருமணம் நிச்சயமாகும் போதே நிறைய பேர், “பெண் வேலைக்குச் செல்ல வேண்டாம், வீட்டைப் பார்த்துக் கொண்டு, கணவனின் பெற்றோரைக் கவனித்துக் கொண்டு இருந்தாலே போதும்” என்று அன்பொழுகச் சொல்கிறார்கள். இது எவ்வளவு வடிகட்டிய அயோக்கியத்தனம் தெரியுமா?. முதலில் பெண்ணுக்குப் பணிபுரியச் செல்வதில் விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டைக் கவனித்துக் கொள்வது முழுக்க முழுக்கப் பெண்ணின் வேலை மட்டுமே அல்ல என்பதை ஆண்கள் முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இருவரும் இணையும் இல்லறத்தில் இருவரும் வீட்டு வேலைகளைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதுபோலவே பொருளாதாரத் தேவைகளுக்கும் வேலைக்குச் செல்வதில் இருவரும் சரிசமமான உரிமைகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்புறம் பெண் கணவனின் பெற்றோரைக் கவனித்துக் கொள்வது போல ஆணும் மனைவியின் பெற்றோரைக் கவனித்துக் கொள்வதுதானே நியாயம்? ஆனால், அதற்கும் ஒரு முட்டுக்கட்டையை,”பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது அவள் பெற்றோருக்கு இழுக்கு.. மானங்கெட்ட செயல். தீரா அவமானம்..” என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் பெண் ஓர் ஆணின் உடமை, திருமணம் என்கிற ஒன்றைச் செய்து கொண்டு அழைத்து வந்த அடிமை என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் அவளுக்கும், இந்தச் சமுதாயத்துக்கும் அறிவித்துக் கொண்டே இருக்கும் ஒரு கீழ்மைச் செயலாகும். வளர்த்து, திருமணம் செய்து ஒரு வீட்டிற்கு அனுப்பிய பின் அந்தப் பெண்ணுக்கும் அவளது வீட்டுக்கும் எந்த விதமான நேரடி உறவும் இல்லை, அதோடு எல்லாம் முடிந்து போயிற்று என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவள் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்புகளில் இருந்து அவளை வழுவச் செய்கிறார்கள். அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும் அவளால் அதைப் பார்த்துக் கண்ணீர் வடிக்க மட்டும்தான் முடிகிறதே தவிர, நேரடியாக உதவிகள் எதுவும் செய்ய இயலுவதில்லை. அப்படியே செய்தாலும் அதற்கு கணவனின், அவன் குடும்பத்தின் அனுமதியைப் பெற்றுத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டிய விஷயங்கள்.

அப்புறம் முக்கியமான ஒன்று. தாய்மை என்கிற ஒன்றை வலுக்கட்டாயமாகப் பெண்கள் மீது மட்டுமே ஏற்றிப் புனிதப்படுத்திக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அன்பு, பாசம் எல்லாம் இருபாலருக்கும் பொதுவானதுதானே? பின் ஏன் பிள்ளை வளர்ப்பில் முழுப் பொறுப்பையும் பெண்ணின் தலையில் மட்டுமே கட்டுகிறார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பிள்ளை வளர்ப்பு என்பது சற்று ஆயாசமும் சோர்வும் தரும் வேலை என்பதுதான் உண்மை. திரைப்படங்களில் காட்டுவது மாதிரி யாரும் பாடி, ஆடி ஒரே பாடலில் பிள்ளையை வளர்த்துவிட முடியாது. அதிக உடல் உழைப்பும் நேரமும் கவனமும் தேவைப்படும் வேலை அது. பெண்ணும் பணிக்குச் செல்லும் பட்சத்தில் அவளால் எப்படி இந்த இரட்டைக் குதிரைகளில் அல்ல… அல்ல… மூன்று குதிரைகளில், அதாவது அலுவலகப் பணி, குழந்தை பராமரிப்பு, உதவிக்கு ஆளில்லாதவர்களுக்குக் கூடுதலாக வீட்டு வேலையும் சேர்த்து சவாரி செய்ய இயலும் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா நாம்?. இதில் பிள்ளைகள் ஏதாவது சாதனை செய்தால்,”என் பிள்ளை… என் ரத்தம்… என் வம்சம்… என் வித்து…” என்றெல்லாம் பெருமை(?) பீற்றிக் கொள்ளும் ஆண்கள் அவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் மட்டும் உடனே,”உன் பிள்ளை லட்சணத்தைப் பாத்தியா?  உன் பொண்ணு என்ன பண்ணிருக்கா பாரு? நீ பெத்தது எப்படி எதுத்து பேசுது பாரு? வளர்த்த லட்சணம் அப்படி..” என்று சற்றும் கூசாமல் தாயைப் பார்த்து விரல் சுட்டிக் குற்றம் சாட்டுகின்றனர். எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் இது? அதனால் இனியோர் ஒப்பந்தம் கொண்டு வர வேண்டும். அதாவது குழந்தை பெற்ற பின்பு  தாய் பணி விடுப்பு எடுத்துக் கொண்டு குழந்தையைப் பாலூட்டி வளர்க்க வேண்டும். பால்குடி மறந்த பின்னர் தந்தை கட்டாயமாக அதே போல் ஒன்றிரண்டு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு குழந்தையை வளர்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தைப் பராமரிப்பு குறித்தும், அதன் சிரமங்கள் குறித்தும் ஆண்களுக்குப் புரியவரும். இருவரும் சேர்ந்து வளர்த்தால் நாளை ஒருவரை மட்டும் எதற்கும் குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயம் இல்லை. இதையெல்லாம் சட்டமாக்கினால் பெண்கள் வாழ்வில் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும்.

என் உறவினர் பெண் ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தார். அவர் மகளைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர் வேலைக்குச் செல்கிறாரா என்று கேட்டேன். “இல்லடா, எக்ஸாம் எல்லாம் எழுதி செலக்ட்டானா.  ஆனா அதுக்குள்ள கன்சீவ் ஆயிட்டா. அதனால மாப்பிள்ளை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டாரு..” என்றபோது எனக்கு ஏமாற்றமா இருந்தது. ஏனென்றால் அவரது மகள் நன்கு படித்தவர். நிச்சயம் வேலைக்குச் செல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். “கன்சீவ் ஆனதாலதானே வேண்டாம்னு சொன்னாரு. டெலிவரி முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு போகலாம்ல..” என்றேன். “அது..வந்து.. அவர் வேலைக்கே போக வேண்டாம்னு சொல்லிட்டாரு..” என்று சொன்னபோது அவர் என் விழிகளைச் சந்திக்கவில்லை. ஏனெனில் அவர், அவரது மகன், மருமகள் எல்லாரும் பணிக்குச் செல்பவர்கள். மகள் வேலைக்குச் செல்லாத ஆதங்கம் அவரது குரலில் மறைந்திருந்தது. 

இன்னொரு நிகழ்வு. இன்னோர் உறவினர் பெண். நல்ல வேலைக்குச் சென்று கை நிறைய சம்பளம் வாங்குபவர். அவரது மகளும் நல்ல வேலையில் இருக்கிறார். அவரது சகோதரி மகள்களும் வேலைக்குச் செல்கிறார்கள். எனக்கு அவர்களைப் பார்க்கும் போது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வேலைக்குப் போகச் சொல்வார். ஒருநாள் அவர் இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. வந்தவர் இவரிடம் இவரது மருமகள் வேலைக்குச் செல்லாதது குறித்து விசாரித்தார். அதற்கு இவர் சொன்ன பதில், “அவளை வேலைக்கு அனுப்புற ஐடியாவே இல்லைங்க. ரொம்ப வாய் பேசுறா. கையிலயும் நாலு காசு பாத்துட்டா அவ்வளவுதான். அடங்கவே மாட்டா. வீட்டுலயே கிடந்து வீட்டு வேலை பார்க்கட்டும். அப்பத்தான் வாயை மூடிட்டுக் கிடப்பா” என்கிற போது அவரைப் பார்க்கவே அத்தனை அருவருப்பாக இருந்தது. தான் மற்றும் தன்னைச் சார்ந்த நெருக்க உறவுகள், நட்புகள்  வேலைக்குச் செல்வதை ஊக்குவிப்பவர் தன் சொந்த மருமகள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்வது பிடிக்கவே இல்லை. 

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தனக்கான சுய சம்பாத்தியத்தைக் கையில் வைத்திருப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். சோம்பித் திரியாமல், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட அடுத்தவர் கையை எதிர்பார்த்துக் கொண்டிராமல் வேலையோ தொழிலோ தனக்கான நிலையான, நிரந்தர வருமானத்துக்கு வழிசெய்து கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பெண்களால்தாம் இந்தச் சமுதாயத்தை நல்ல விதமாக வடிவமைக்க முடியும். வாழ்வை இனிதாக வாழக் கடினமாக உழைத்தால் மட்டும் போதாது. கொஞ்சம் கவனமாகவும் உழைக்க வேண்டும். நம் வாழ்க்கை நம் கையில்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது