உலகெங்கிலும் பண்டைய திருமண முறைகளும் அதன் காரணங்களும் அதையொட்டிய வாழ்வியல் முறைகளும் வேறுபட்டு நிற்கின்றன. சாதி, மதங்களின் வருகை பெரும் தாக்கங்களை உண்டு பண்ணியிருந்தன.

திருமணம் புரிந்த ஆணும் பெண்ணும் ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்வது வழமை எனினும் இந்தோனேசிய நியூ கினியா பகுதிகளில் கல்யாணத்துக்குப் பின்னரும் ஆண்கள் ஒரு வீட்டிலும் பெண்கள் ஒரு வீட்டிலும் வாழ்வது வழமை. ஆண்களாகிய தந்தைமாரும் கணவர்களும் அடிக்கடி தம் பெண்கள் வாழும் வீட்டிற்கு வருகை தந்த போதும், இரவுப் பொழுதை பெண்கள் வீட்டில் கழிப்பதில்லை. கிரேக்க, ரோமன், சீன மற்றும் ஆப்பிரிக்க திருமண முறைகளும் சடங்குகளும் மிகவும் சுவையான வரலாற்றைக் கொண்டவை.

தமிழர் தேசங்களில் இன்றும் திருமண சடங்குகள் பெரும் பொருள் செலவில் நடைபெற்று வருகின்றன. இவற்றின் வரலாற்றை சற்று ஆராய்ந்த பின் உலகின் பிற தேசங்களை எட்டிப் பார்ப்போம்.

பழந்தமிழர்கள் வரலாற்றில்  சங்க காலத்தில் நாள்  நட்சத்திரம் பார்த்து  மணமக்களை நீராட்டி, வாகை இலைகள், அருகம்புல் கோத்த மாலைகள் அணிவித்து பல சடங்குகளைச் செய்து இறுதியில் மணமகளை மணமகனின் கையில் ஒப்படைப்பதுடன் திருமணம் முடிவுறும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பொதுவுடமைக் காலத்தின் தொடர்ச்சியில், உழவுத் தொழிலைத் தலையாகக் கொண்ட சமுதாயத்தில் நிலவிய தமிழ் மக்களின் சடங்குகளாக இவை இருந்தன.

பொதுவாக களவு மணம், கற்பு மணம் என்ற இரு பிரிவுகளாக மணமுறைகள் இருந்தாலும், சங்ககாலத்தில் பத்து வகையான திருமண முறைகள் இருந்தன. அவை –

1. களவு மணம்
2. தொன்றியல் மரபின் மன்றல்
3. பரிசம் கொடுத்து மணத்தல்
4. சேவை மணம்
5. திணைக் கலப்பு மணம்
6. ஏறு தழுவி மணமுடித்தல்
7. மடலேறி மணமுடித்தல்
8. போர் நிகழ்த்தி மணமுடித்தல்
9. துணங்கையாடி மணத்தல்
10. பலதார மணம்

சிலப்பதிகாரம் – மணிமேகலை கால கட்டத்தில் பழந்தமிழர் போற்றிய திருமண முறைகள் ஆரிய கலப்பு ஆதிக்கத்தினால் மாற்றம் கண்டன.
வைதீக முறைகளை பின்பற்றிய காலத்தில் குலப் பாகுபாடுகள் தமிழர் திருமண முறையில் கலந்தன. நாயன்மார், ஆழ்வார் பாடல்கள், பெரியபுராணம், கம்பராமாயணம், சூளாமணி உள்பட பல இலக்கியங்களில் ஆரிய கலப்புடன்  சாதி, குலம், கோத்திரம், பார்ப்பனீய சடங்குகளுடன் திருமண முறை மாறியது.

ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில், ஆண்களின் பல தார மணங்கள் பேசப்படுவதோடு  மனைவி கணவனின் சொத்து – உடைமை என்பதும், பெண்கள் மட்டுமே கற்பிலக்கணத்துக்குக் கட்டுபட்டவர்கள் என்பதும்  ஆணித்தரமாக சொல்லப்படுகின்றன. திரௌபதி பாண்டவர்கள் ஐவரையும் மணந்தாலும், பாண்டவர்கள் தாயின் சொல்லை வேத வாக்காகப் பின்பற்றியதாலே அத்திருமணம் நடைபெற்றது என மகாபாரதம் சொல்கிறது.

தமிழர் தேசங்களை ஆண்ட மன்னர்கள் மக்களை தங்கள் அதிகாரத்துக்குள் தக்க வைக்கும் கருவியாக சனாதன தர்மத்தை சிறந்ததாகக் கருதி அதைச் செயல்படுத்தி வர சைவ, வைணவ சமயங்கள் தோன்றின.  இதற்குத் தகுந்தாற்போல் திருமண முறைகள் இக்காலகட்டத்தில் மாறின.

https://tamil.webdunia.com/article/hindu-religion-features/why-is-it-the-usual-practice-of-wearing-a-marriage-thali-on-the-yellow-rope-117050300039_1.html

மணமகளுக்கு தாலி கட்டுதல் என்பது  இன்று முக்கியமான சடங்காகும். 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் கந்தபுராணத்தில், தமிழ்க் கடவுளான முருகனுக்கு தெய்வயானையை மணம் செய்யும் நிகழ்வில் மங்கல நாணை மணமகன் மணமகள் கழுத்தில் அணிவித்ததாகக் கூறுகிறது. இது பார்ப்பனியத்தின் கூறு.

இலக்கியங்களில், புராணங்களில், மணமகளுக்கு தாலி அணிவித்தல் விவரிக்கப்படுகிறது. இந்தத் தாலி அவரவர் வணங்கும் தெய்வங்கள், சாதிகள், கோத்திரங்களுக்கு ஏற்ப பல்வேறு விதங்களில் செய்யப்பட்டன. இன்றும் நடைமுறையில் கருந்தாலி,  மஞ்சள் தாலி, தங்கத்தாலி என தாலி அணியும்  விதங்களும் கொம்பு தாலி, அம்மன் தாலி, பிள்ளையார் தாலி, கேரள தாலி பல விதமான வடிவங்களில் வேறுபட்ட தாலிகளும் வழக்கில் உண்டு.

Photo by Rajesh Mishra on Unsplash

சுமங்கலி பிரார்த்தனை, பந்தல்கால் நடுதல், காப்பு கட்டுதல், நுகத்தடி வைத்தல், கூறை ஆடை அணிதல், பாத பூசை, மாங்கல்ய தாரணம், நீர் வார்த்தல், தாலிக்கு பொன்னுருக்கல், பட்டம் கட்டுதல், தாலி அணிவித்தல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், நாலாம் நீர்ச் சடங்கு போன்ற மணச் சடங்குகள், பார்ப்பனர் சமஸ்கிருத மந்திரம் ஓதி நடத்துதல் என்பன படிப்படியாக தமிழ் மக்கள் திருமணச் சடங்குகளில் புகுத்தப்பட்டன.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பெரும்பாலான மக்களிடம் வைதிக திருமண முறைகள் தான் உள்ளன. இதன் அடிப்படையாக இருப்பது மனிதத்தன்மையற்ற சாதியமும், பார்ப்பனிய சனாதன பழக்கங்களும், நிலவுடைமைப் பண்பாடும் ஆகும். பெற்றோர்களால் குலம், கோத்திரம், நாள் குறித்தல், பெண் பார்க்கும் படலம், ஜாதகம், பெயர் ராசி பொருத்தங்கள், சீதனம், மணமகன் மணமகள் அழைப்பு, நலங்கு, சமஸ்கிருத மந்திரங்கள், அக்கினி கொண்டு யாகம் வளர்த்தல் போன்ற கணக்கற்ற ஆரிய வைதீக பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டு, இறுதியில் தாலி கட்டுதல் நடைபெறுகிறது. திருமணத்தின் பின்னரும் கூட பல சடங்குகள் உண்டு.

மணமேடைக்கு வரும் மணப்பெண்ணுக்கு முக்காடு இட்டு வரவழைப்பதும், மணமகன் தாலி அணிவித்ததும் மணமகள் மணமகனின் பாதங்களைத் தொட்டு வணங்குவதும் ஒரு சடங்காக அண்மை காலங்களிலும் தமிழரின் திருமணங்களில் காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக இந்த இரு சம்பிரதாயங்களை தனிப்பட்ட வாழ்விலும் பிற இதர திருமண வைபவங்களிலும் நேரடியாகக் கண்ட அனுபவங்கள் உண்டு. என்னுடய திருமணத்தின்போது மேற்கூறிய இரண்டு விடயங்களிலும் எனக்கு உடன்பாடு முற்றிலும் இல்லாத போதும், அதற்கான அழுத்தங்கள் வலுவாக இருந்தன.

சாதிக் கொடுமைகள், வைதிக பார்ப்பன சடங்குகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை ஒழிக்க தந்தை பெரியார் தலைமையில் ஏற்பட்ட சுயமரியாதை இயக்கம், போராட்டங்கள் மூலம் திருமண முறையில் புரட்சியை ஏற்படுத்தியது. பெரியாரின் கருத்துகள் தமிழ்ச் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் பெரும் புரட்சியைத் தோற்றுவித்தன. பிற்படுத்தப்பட்ட மக்கள் திரளாக இவ்வியக்கத்தில் அணியாகத் திரண்டனர். தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள், நகரங்கள் தோறும் சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1967ஆம் ஆண்டில் முதன் முதலில்  சீர்திருத்தத் திருமணச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, இவ்வாறான திருமணங்கள் அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றன.

இந்திய துணைக் கண்டத்தில் பிற்போக்கு சாதிய நிலவுடமை திருமண முறைக்கு எதிராக சரியான பதிலை பெரியார் இயக்கம் தந்தது.
இலங்கையிலும் புலம் பெயர் தேசங்களிலும் பெரியாரின் கருத்தியல்கள் வரவேற்பு பெறத்தொடங்கின.

தமிழர் தேசங்களில் இன்றைக்குப் பல வகையான திருமண முறைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பாரம்பரிய வைதீக இந்து திருமணம், முஸ்லிம் – கிறித்துவத் திருமணங்கள்,  சுயமரியாதை திருமணம், தனித்தமிழ் திருமணம், Living together திருமணங்கள் மற்றும் ஓரினச் சேர்க்கை திருமணங்கள்.

சுயமரியாதை திருமணம் பரவலாக்கப்பட்ட அதே காலகட்டத்தில் மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களால் தனித்தமிழ் திருமண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

https://garlandmag.com/article/mauritian-tamil-wedding/

1930-40 இல் இத்திருமண முறை பற்றி விரிவாக மறைமலை அடிகள் பேசினார். பழைய வைதிக திருமண முறைக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு யாதெனில் –

1.  சமஸ்கிருத மந்திரங்களுக்கு பதிலாக தமிழில் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை ஓதுவது
2.  பார்ப்பனர்களுக்குப் பதிலாக  மத, சாதித் தலைவர்கள் முன்நின்று நடத்துவது
3. தீ வளர்க்கும் ஆரிய மதச் சடங்கை தவிர்ப்பது

இக்காலத்தில் இவர்களுக்கும் பெரியாரின் திராவிட இயக்கத்தினருக்கும் இடையே பெரும் கருத்துப் போரே நிகழ்ந்தது. சுயமரியாதை திருமணம் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அனைத்து நிலவுடமை, சாதி, மத பண்பாட்டு பழக்கங்களை எதிர்க்கும் பரப்புரையாக இருந்தது.
தனித் தமிழ் திருமண முறையோ, சாதியையும் மதச் சடங்குகளையும் பல்வேறு வகைகளில் பின்பற்றியமையால் தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெறமுடியவில்லை.

தாலி அல்லது மாங்கல்யம் எனப்படும் மங்கல நூல், பெண்ணை அடிமையாகக் கருதும் ஒர் அடையாள சின்னம் ஆகும். பெண் விடுதலை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக இச்சின்னத்தை எதிர்த்து வருகின்றார்கள். கணவனை இழந்த பெண்களின் ‘தாலி கழற்றும் சடங்குகள்’ தமிழர் தேசங்களில் இன்றும் பின்பற்றுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆராய்வோம்…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.