கருப்பை அதிகாரம் – 1
பெண் என்பவள் பலவீனமானவள் என்ற கருத்து பண்பாட்டின் வழியாகவும் வாழ்க்கை முறை வழியாகவும் பெண்களிடத்தில் காலம் காலமாகக் கடத்தப்பட்டு வருகின்றது. அக்கருத்தை உள்வாங்கிக்கொள்ளும் பெண்கள் தங்களைப் பலவீனமானவர்களாகக் கட்டமைத்துக்கொள்கின்றனர். அதன் வழி பெண்மை மென்மையின் வடிவமாக உருப்பெறுகின்றது.
கருவில் வளர்கின்ற சிசுக்கள் தாய்மார்களுடைய ஆழமான, தொடர்ச்சியான செய்கைகள் சிலவற்றை உள்வாங்கிக்கொண்டு அவற்றையே தங்களுக்குமான உணர்வுகளாக வடித்துக்கொள்கின்றனர்.
நமது சமூகத்தில் கர்ப்பிணிப் பெண்களைப் பெரும்பாலும் பாலின ரீதியில் ஒடுக்குவதும் தரக்குறைவாக நடத்துவதும் இயல்பான ஒன்றாக உள்ளது. ஒடுக்கப்படுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் கருவில் வளரும் சிசுக்களும் ஒருவித அடிமை உணர்வுகளைத் தங்களுக்குள் கட்டமைத்துக்கொள்கின்றன.
குழந்தைகள் தாயுடைய அரவணைப்பில் வளர்கின்ற வரை தாயுடைய உணர்வுகளை மட்டுமே பின்பற்றுகின்றன. குழந்தைகள் வளர்ந்து தன்னுடைய பாலினம் தந்தையது பாலின வகையைச் சேர்ந்தது என்ற உண்மையை அறிகின்ற பொழுது ஆண் குழந்தைகள் தாயிடம் பெற்ற அடிமை உணர்வுகளிலிருந்து விடுபட்டு, தந்தையுடைய ஆதிக்க உளவியலை உள்வாங்கிக்கொண்டு தங்களை ஆதிக்கவாதியாகவும் வலிமையுடையவர்களாகவும் கட்டமைத்துக் கொள்கின்றனர்.
’குடும்பத்தின் வாரிசாக வந்த மகராசன்’ என்று ஆண் குழந்தையின் குறியைப் பிடித்துக் கும்பிடுவதில் தொடங்கி விளையாடுகையில் தவறி விழுந்து கண்கலங்குகையில் ’ஆம்பளைப் புள்ள நீ, பொட்டைப் புள்ள மாதிரி அழுகக் கூடாது’ என்று ஆறுதல் கூறுவது வரை குடும்ப உறவுகளும் சமூகமும் ஆண் பாலினத்தைப் பலமானதாகவும் பெண் பாலினத்தைப் பலவீனமானதாகவும் கற்பிதம் செய்து, ஆண் குழந்தைகள் தொடக்கத்திலிருந்தே தங்களை வலிமை மிக்கவர்களாகக் கட்டமைத்துக்கொள்ள பாதை அமைத்துக் கொடுக்கின்றது.
மறுபுறம் கருவிலிருந்த பொழுது தாயிடமிருந்து பெற்ற ஒரு வித அடிமைத்தனத்தின் பாதிப்பை காலத்துக்கும் கொண்டிருக்கும்படியான சூழலைப் பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
குடும்ப வன்முறைகளினால் கர்ப்பிணி பெண்கள் அடைகின்ற மன அழுத்தங்கள் அனைத்தும் பெண் குழந்தைகளை நேரிடையாகப் பாதிக்கின்றன. பெண் குழந்தைகள் வளர்ந்து தானும் தாயுடைய பாலினத்தைச் சேர்ந்தவள் என்று அறிந்து கொள்ளும் தருணத்திலிருந்து எவ்வித சந்தேகமும் இன்றி தங்களை மென்மையானவர்களாகவும் பலவீனமானவர்களாகவும் கட்டமைத்துக்கொண்டு, தாயின் பிரதியாக வாழப் பழகிவிடுகின்றனர்.
ஆண் குழந்தைகளுக்கு வழங்குகின்ற கார், விமானம், ஜே.சி.பி போன்ற வாகன ரக விளையாட்டுப் பொருட்களை வழங்காமல் குடும்ப நிறுவனங்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு கிட்சன் செட்டுகளையும் டெடி, பார்பி பொம்மைகளையும் வழங்கி மென்மையான விளையாட்டு உலகத்தை அமைத்துத் தருகின்றன.
மேலும் மரமேறி விளையாட, நீண்ட தூரம் சைக்கிளிங் செய்ய, நண்பர்களுடன் நீச்சல் பழக ஆண் குழந்தைகளை அனுமதிப்பது போல் சாதரணமாகப் பெண் குழந்தைகளை குடும்பங்கள் அனுமதிப்பதில்லை.
ஒரு மனிதனுக்கு எந்த வயதிலும் அவன் விரும்பிய வண்ணம் தனக்குத் தகுந்தவாறும் தேவைக்கேற்பவும் உடலை வளைத்துக்கொள்ளத் தேவையான பலத்தைத் தருவதில் குழந்தைப் பருவ வளர்ப்பு முறை முக்கியப் பங்காற்றுகின்றது.
நாத்திகக் கொள்கையில் ஆழங்கால்பட்ட ஒருவனுக்கு இரவு நேரத்தில் ஏற்படுகின்ற ஒரு சில ஒலிகள் பேய் பயத்தை உண்டாக்க முக்கியக் காரணமாக அவனது குழந்தைப் பருவத்தில் குடும்பத்தினர் ’புளிய மரத்தில் பேய் இருக்கு’, ’பூச்சாண்டி வரான்’ போன்று பயம்காட்டி கட்டுப்படுத்தி வளர்த்த முறை அமையும். அதுபோல குழந்தைப் பருவம் தொடங்கி அடக்கி வளர்க்கப்படுவதால் பெண்கள் கல்வி கற்று, பொருளாதார விடுதலையடைந்து உயரிய பதவிகளை வகிக்கின்ற பொழுதும்கூடத் தங்களை வலிமையானவர்கள் என்று முழுமையாக நம்பத் தயங்குகின்றனர். பெண்ணாகப் பிறந்துவிட்டதாலேயே பலர் தங்களை பலவீனமானவர்களென்று நம்பிவிடுகின்றனர்.
பெண் குழந்தைகள் வளரிளம் பருவத்தை எட்டியதும் குடும்பத்தினரால் ஓடியாடி விளையாடக்கூடத் தடை விதிக்கப்படுகின்றது. ’இன்னைக்கோ நாளைக்கோ வயதுக்கு வரப்போறவ, ஓடியாடி விளையாண்டா ஊர் என்னன்னு சிரிக்கும்’ என்று சிட்டாகப் பறக்கும் சிறுமிகளின் சிறகை ஒடித்துவிடுகின்றனர்.
புதிதாக வளர்ந்துவரும் மார்பகப் பகுதிகள் துருத்திக்கொண்டு வெளியில் தெரிந்துவிடுமோ?; நடக்கையில் பின்பகுதியை யாராவது கேவலமாகப் பார்த்துவிடுவார்களோ போன்ற உடல் மீதான தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும் வகையில் சமூகம் தொடர்ந்து சிறுமிகளை அச்சுறுத்தி வருகின்றது.
பதின் பருவத்தில் முதல் தடவை ஏற்படுகின்ற மாதவிடாய் வயிற்று வலிகளுக்கு, ’பொண்ணாப் பொறந்துட்டா மாதத்துல மூணுநாள் வலி அனுபவிச்சிதான் ஆகணும்’ என்று வருகின்ற எதிர்மறையான ஆறுதல் மொழிகள் பெண்களை, ’ஏன்தான் போயும்போயும் பொண்ணாப் பொறந்தமோ’ என்று தன்னுடைய பாலினத்தின் மீது அதிருப்திகொள்ளச் செய்கின்றது.
தொடர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படுகின்ற கடுமையான உடற் சோர்வு, இடுப்பு மற்றும் வயிற்று வலி, வாந்தி மயக்கம் போன்றவற்றிற்கு ஊட்டச் சத்து பற்றாக்குறையும் மாதவிடாய் மீதான தவறான கற்பிதங்களுமே காரணமாகின்றன.
பள்ளி, கல்லூரியில் படிக்கின்ற பெண்களும்கூட வழக்கமாகத் தங்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் உதிரத்தைக் கண்டதும் அருவருப்பாக உணர்ந்து மயங்கி விழக்கூடிய நிலை இன்றும் நீடிக்கின்றது.
மாதவிடாய் எந்தத் தேதியில் வரும், இரண்டு நாள் முன்கூட்டியே வந்துவிட்டால் என்ன செய்வது? வழிபாட்டு நாளில் வந்துவிட்டால் எப்படி எல்லாம் அவஸ்தைப் பட வேண்டி வரும்? இன்றைக்கு மாதவிடாய் ஆக வேண்டிய நாள், வெள்ளை நிற உடையை மறந்து அணிந்து வந்துவிட்டோமே? நேப்கின்களை இன்று எடுத்து வர மறந்து விட்டோமே? போன்ற பயம் நிறைந்த சிந்தனைகள் அதிகமாகப் பெண்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.
அறியாமல் ஆடைகளில் மாதவிடாய் உதிரம் கசிந்து படிவது என்பது பெண்களை வெகுவாகப் பதட்டமடையச் செய்யக்கூடிய வகையில் மாதவிடாய் உதிரம் மிகவும் அருவருப்பானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணித்து வைக்காத தருணங்களில் முன்கூட்டியே மாதவிடாய் வெளியேறுவதைப் பெண்கள் வெகுவாக வெறுக்கின்றனர். அறிவுக்கு எட்டாமல் நிகழ்வதை எண்ணிப் பல பெண்கள் அவதியுறுகின்றனர்.
அவதியுருகின்றனர் என்பதைத் தாண்டி வழக்கமாக ஏற்படுகின்ற மாதவிடாயைக்கூடக் கணிக்க முடியாதபடி உடலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்று குறிப்படுவது பொருத்தமாக இருக்கும். 8 மணி நேர அலுவலகப் பணி முடித்த பின் இரவு உறங்கும் வரை வீட்டுப் பணிகளில் ஈடுபடும்படியான நிர்பந்தத்தில் இருக்கின்ற பெண்களை, தங்களைப் பற்றியும் தங்களது உடலைப் பற்றியும் கவனித்துக்கொள்ள விடாமல் குடும்ப நிறுவனம் அன்பு, கருணை, தியாகம் என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றது.
பெண்கள் தங்களது உடலோடு பேச வேண்டும். உடலுக்கு என்ன தேவை இருக்கிறது? எதைக் கேட்கிறது? எதைத் தருகிறோம்? சரியாகத்தான் தருகிறமோ? ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதையெல்லாம் பெண்கள் உடலோடு உரையாடித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கிற பொழுது உரையாடலாம் என்று எண்ணி கண்டுகொள்ளாமல் விடுவதைத் தவிர்த்து திட்டமிட்டு தினமும் உரையாடலை நிகழ்த்திக்கொள்ள வேண்டும்.
உடலோடு பேசுவதற்கான மொழியாக தினசரி உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அம்மியில் அரைப்பதும் துவைத்துப் பெருக்கி கோலமிடுவதுமே பெண்களுக்குப் போதுமான உடற்பயிற்சியாக இருக்கும் என்று நடைபயிற்சியோடு கூடிய சில விளையாட்டுகளுடன் ஜிம்முக்கு தினசரி சென்று வரும் ஆண்கள் கூறும் அரைவேக்காட்டு ஐடியாக்களுக்கு ஒரு போதும் செவிசாய்த்துவிடாதீர்கள் பெண்களே!
அம்மியில் அரைக்கையில் மூளை சுவையைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், அதேபோல் துவைக்கும் பொழுதும் பெருக்கிக் கோலமிடும் பொழுதும் செய்யும் பணியைப் பற்றியே மூளையின் சிந்தனை செயல்படும். உங்கள் உடலோடு பேசிக்கொள்ள மூளை உடலைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். உடலின் மீதான கவனக் குவிப்பை உடற்பயிற்சிகள் முழுமையாக ஏற்படுத்தித் தருகின்றன. அது மட்டுமின்றி உடலைப் பின்புறமாக வளைப்பது போன்ற உடற்பயிற்சிகளை அன்றாட வீட்டுப் பணிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியாது.
தினசரி நேரமொதுக்கி உடற்பயிற்சிகளைச் செய்கையில் உடலானது நம் வசத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடிய நிலைக்கு வரும். அமைதிக்கான பயிற்சிகளைப் பின்பற்றுகையில் பெண்களின் உடலும் உளவியலும் நலம் பெறும்.
உடல் குறித்தான தினசரி தேவை, மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள பெண்கள் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் வலியுறுத்துகின்ற நேர மேலாண்மையைப் பெண்கள் சமரசமின்றி கடைபிடிக்க வேண்டும்.
இவையெல்லாம் பெண்களின் கடமையென்று கருதி வீட்டுப் பராமரிப்புப் பணிகள் அனைத்தையும் இழுத்துப்போட்டு செய்யாமல் ஆண் உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து, வீட்டுப் பணிச்சுமையைக் குறைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வதும், கலை இலக்கியத்தில் நேரம் செலவிடுவதும், விரும்பிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தனிமனிதனின் அடிப்படை உரிமை என்பதைப் பெண்கள் உணர்ந்து தங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய மாதவிடாய் போன்ற கருப்பை சார்ந்த நிகழ்வுகளைப் பெண்களால் எளிதில் உணரவும் கணிக்கவும் முடியும்.
பெண்மை என்ற பாலினம் பலவீனமானதல்ல. பலவீனமானதாக ஆக்கப்பட்டுள்ளது. கருப்பை என்பது பெண்ணுடலில் இருக்கக்கூடிய தனித்துவமான உறுப்பு. கருப்பை மீதான அதிகாரம் அதை வைத்திருக்கக்கூடிய பெண்ணுக்கு மட்மே உரியது. இயற்கைக்கு மாறாக கருப்பை மீது கணவனும் பெற்றோரும் குடும்பமும் சாதியும் சமயமும் அரசும் ஆதிக்கம் செலுத்துகின்ற பொழுதே பெண் பலவீனமானவளாக ஒடுக்கப்படுகிறாள் என்பதைப் பெண்கள் உணர்ந்து சுயத்தை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், குடும்ப அடிமைகளாகப் பெண்களைக் குழந்தை பெற்று வளர்க்க மட்டுமே பயன்படுத்தி வந்த காலகட்டத்தில், முறையான கருத்தடை உபகரணங்கள் தோன்றி பரவலாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத காலகட்டத்தில் பெண்ணியத்தைத் தீவீரமான சிந்தனைக்கு உட்படுத்திய பெண்ணியவாதிகள் கருப்பையை அகற்றித்தான் பெண் விடுதலையை சாத்தியப்படுத்த முடியும் என்று கருதியதை அந்தக் காலகட்டத்தின் நியதியாகக் கொண்டு புறக்கணிக்காது போற்ற வேண்டும்.
அதேநேரம் ஏராளமான கருத்தடை சாதனங்களும் பாலுறவு உபகரணங்களும் தோன்றிவிட்ட, ஓரளவிற்கு சமத்துவப் பாதையைப் பற்றிக்கொண்டு பெண்கள் போராடி நகரும் நம் காலத்தோடு கருப்பையை அகற்றி அதிகாரத்தை அடைவது என்ற அன்றைய கால நியதியைப் பொருத்திப் பார்ப்பதும் முறையாக இருக்காது.
கருப்பையை அகற்றாமல் அதன் மீதான அதிகாரத்தைக் கணவனுக்கும் காதலனுக்கும், பேரப் புள்ளையப் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம்பிடிக்கும் குடும்பத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் சுயத்தோடு பெண்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்வது இன்றைய காலத்தின் தேவையாகவும் கனவாகவும் இருக்க வேண்டும்.
கருப்பை ஆற்றல் மிக்கதும் தனித்துவமானதும்கூட; பெண்களுக்குக் காம இன்பத்தைக் கடலளவு தரக்கூடியது கருப்பை. எனவே கருப்பையையும் அதன் செயல்களையும் அறிந்து பெண்கள் கொண்டாட வேண்டும். தீட்டு, புனிதக் கற்பிதங்களிலிருந்து கருப்பையை விடுவித்து பெண்களுக்கான மகிழ்ச்சியின் ஊற்றாக வைத்துக் கொண்டாடப்பட வேண்டும்.
– தொடரும்
படைப்பாளர்:
கல்பனா
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.