ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்றொரு புத்தகம் இருக்கிறது. ஆண்களும் பெண்களும் அடிப்படையிலேயே எப்படி வெவ்வேறாகச் சிந்திக்கிறார்கள் என்று விளக்கும் அந்தப் புத்தகம். ஆண்கள் புள்ளிவிவரங்கள், உண்மைகள் அடிப்படையில் அனைத்தையும் அணுகுகிறார்கள். பெண்கள் உணர்வின் அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் என்பது மொத்த புத்தகத்தின் கருத்து. ‘இங்கே வா’ என்பதை ‘இதர் ஆவோ’ என இந்தியில் சொல்வதென்றால் ‘அங்கே போ’ என்பதை எப்படிச் சொல்வது எனக் கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பார். அதற்கு செந்தில், அங்கே போய் நின்று கொண்டு ‘இதர் ஆவோ’ என்பார். அது மாதிரி வெவ்வேறு தலைப்புகளில் ஒரே கருத்தைச் சொல்லும் இந்தப் புத்தகம். புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த நான் எதன் அடிப்படையில் இப்படி ஒரு கருத்தை நிறுவுகிறார் இந்த நூலாசிரியர் என ஒவ்வோர் அத்தியாயம் முடிவிலும், புத்தகத்தின் இறுதியிலும் தரவுகள், புள்ளிவிவரங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்த நண்பர் புள்ளிவிவரம் பற்றி எந்தக் கவலையும் இன்றி எவ்வளவு நல்லா எழுதியிருக்கார், பார் என உணர்ச்சிவசப்பட்டுத்தான் சொன்னார்.
வண்டி ஓட்ட வராது, வாய்ப்பேச்சு அதிகம், பூகோளம் புரியாது, கணக்கு போட மாட்டார்கள் என ஏகப்பட்ட ஸ்டீரியோடைப்கள். நீங்கள் சொல்லும்படி நான் இல்லை என மறுக்கும் பெண்களுக்குக் கிடைக்கும் ரெடிமேட் பதில், “நீ இல்லை, பொதுவாக மற்ற பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்” என்பதுதான். அப்படித் தனிப்பட்ட மோசமான அனுபவத்தை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, முன்முடிவுடன் அணுகுவது எப்படிச் சரியாகும்? இந்தக் கேள்வியைக் கேட்டால் பெண்கள் விடாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார்கள் என்று புகார் வருகிறது. சட்டெனப் புரிந்துகொள்ளும் அறிவில்லாதவர்களிடம் அதிகம் பேசித்தான் புரியவைக்க முடியும். யார் குற்றம் அது?
என்னதான் நன்றாகப் படித்தாலும் கல்யாணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டே பெண்களின் கல்லூரிப் படிப்பு முடிவாகிறது. பள்ளிக்கல்வியில் அதிக சதவீதத்தில் மதிப்பெண் எடுக்கும் மாணவிகள் அலுவலகத்தில் தலைமைப் பதவிகள் வரை வர முடியாமல் போவது எதனால் என யோசித்ததுண்டா?
ஹார்வர்டு கணிதத் துறை பொது அறையில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தார் கணிதத் துறை மாணவியான அமெண்டா கே க்ளேசர். அங்கு வந்த நிர்வாகி இங்கு கணிதம் படிப்பவர்கள்தாம் இருக்க முடியும். நீ எப்படி இங்கே உட்கார்ந்திருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பினார். ஒரு மாணவன் கணிதச் சமன்பாடுகளை நிரூபித்தால் செய்தால் போதும். ஒரு மாணவி கணிதச் சமன்பாடுகளுடன், தான் கணிதம் படிக்கும் மாணவிதான் என்பதையும் சேர்த்து நிரூபிக்க வேண்டும். அந்த நபர் அங்கிருந்து சென்ற பிறகும் வேறு யாரேனும் வந்து தம்மை இங்கிருந்து போகச் சொல்லலாம் என்ற யோசனையுடன்தான் உட்கார்ந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார் அமெண்டா. 20க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படியான அனுபவங்களைச் சந்தித்தை உறுதி செய்தார்கள். பின்னர் விசாரணை நடந்து சூழல் மேம்பட்டுள்ளது. இப்போது அமெண்டா அந்தப் பொது அறையைப் பயன்படுத்துவதில் எந்தத் தொல்லையும் இருக்காது. ஆனால், அமெண்டா சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தும் பெண் என்ற முன்முடிவுடன் அணுகப்படுவார். அடிப்படைவாதம் பேசும் ஒரு பேராசிரியர் நிச்சயம் இதை நினைவுகூர்ந்து ஒன்றிரண்டு மதிப்பெண்களைக் குறைத்துப் போடுவார். இதன் காரணம் அவர் கேள்வி கேட்டதுதான் என்பதை நிரூபிக்கவே முடியாது. அமெண்டாவுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட பெண்கள் வாய்மூடி இந்தப் பாகுபாட்டைக் கடந்து சென்றதன் காரணம் என்ன என்பதை இன்னும் விளக்க வேண்டுமா?
இளம் வயதில் இருந்தே அனைவரையும் ஒருங்கிணைத்த சமூகமாக வாழப் பழகிக்கொண்டால் பாகுபாடுகளைக் களைவது சாத்தியம்தான். ஹாலிவுட்டில் சிறார் படங்களில்கூட இந்த மாற்றத்தைக் காணலாம். டிஸ்னி பிக்சார் படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் டைவர்சிட்டியுடன் இல்லை. பின்னர் பலவித நிறம், குணம், நாடுகளைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் கதை நாயகர்களானார்கள். என்கான்டோ (encanto) படத்தின் முதன்மை பாத்திரமான சிறுமி கண்ணாடி அணிந்திருப்பாள். கொக்கோ படம் மெக்சிகன் கலாச்சாரத்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும். ப்ரின்ஸஸ் அன்ட் தி ஃப்ராக் படம் ஆப்பிரிக்க அமெரிக்க கலாச்சாரத்தை ஒட்டிய கதை. ப்ரேவ் படத்தின் நாயகியான இளவரசி அபாரமான வில்வித்தைத் திறமையுடன் அடங்காத சுருட்டை முடியுடன் இருப்பாள். என்ன, சுருட்டை முடியெல்லாம்கூடவா இன்க்ளூசிவ்னஸ் என்று மலைக்காதீர்கள்.
வெள்ளை முகம் அழகு என்பது போல முடி நேராக இருந்தால்தான் அழகு என நம்பிய ஒரு தலைமுறை இருந்தது. முடியை அயர்ன் செய்து தேய்த்து, தீய்த்து காசைக் கொட்டி பல மணி நேரம் பியூட்டி பார்லரில் தவம் கிடந்தார்கள். நிமிர்த்த முடியாத நாய்வால் போல சில மாதங்களில் புதிதாக முளைத்த முடி சுருண்டும், அயர்ன் செய்த பழைய முடி குச்சி போல நீண்டும் விநோதமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள் பலர். உடலை, நிறத்தை, முடியை எனத் தன்னைப் பற்றிய ஏதோ ஒன்றை வெறுக்கும் பெண்கள் நிறைய. ஐந்தாறு கோட்டிங் அடித்து அவர்கள் மறைப்பது கரும்புள்ளிகளை அல்ல, தாழ்வு மனப்பான்மையை. பெண் அழகாகவும் பர்ஃபெக்டாகவும் இருக்க வேண்டும் என்கிற ஸ்டீரியோடைப் எண்ணங்களின் நீட்சி அது. இன்றைய தலைமுறையில் அது வெகுவாகக் குறைந்திருக்கிறது. ட்ரோல் செய்தாலும் பரவாயில்லை என மேக்கப் இல்லாத முகத்தை நடிகைகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டது ஒரு காரணம். டாப்சி மாதிரி சுருட்டை முடி நாயகிகள், விளம்பரங்களில் வரும் சுருட்டை முடிப் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்ததும் ஒரு காரணம். பெண்கள் மட்டும்தான் அழகு படுத்திக்கொள்வார்கள் என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்தது முக அழகு க்ரீம் ஒன்றின் புள்ளிவிவரம். இந்தியாவில் அவர்களின் க்ரீமை அதிக ஆண்கள் பயன்படுத்தியதை அறிந்ததும் ஆண்களுக்கென தனியாக அழகு க்ரீம்களை அறிமுகப்படுத்தினார்கள்.
கேத்தரின் காஃப்மென் ஆய்வொன்று இந்தப் பாகுபாட்டின் வேறு கோணத்தைச் சொல்கிறது. ஆண்கள், பெண்கள் நிறைந்த குழு விவாதங்களில் ஆய்வு நடந்தது. பேசுபவர்கள் ஆண்களா பெண்களா என்பதை அறிந்த குழுக்கள் சில, பேசுபவரின் பாலினம் அறிய முடியாமல் மறைக்கப்பட்ட குழுக்கள் சில. இந்தக் கலந்துரையாடலில் பாலினம் அறிந்த குழுக்களில் பெண்களின் யோசனைகள், வாதங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. ஆனால், யார் பேசுகிறார்கள் என்று பாலினம் அறிய முடியாத குழுக்களில் இந்தப் பாகுபாடுகள் இல்லை. அனைவரின் பங்களிப்போடு அந்த விவாதங்கள் நடந்தன.
மற்றோர் ஆய்வில் கணிதம், அறிவியல், பொது அறிவு தொடர்புடைய கேள்விகள் கேட்கப்பட்டன. எத்தனை பதில்கள் சரியாகச் சொன்னீர்கள் என்று யூகிக்கும்படி பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது. பெண்கள் 10 பதில்களைச் சரியாகச் சொல்லி இருந்தாலும் 8தான் சரியாக இருக்கும் என்றே யூகித்தார்கள். ஆண்கள் தங்கள் பதில்களைப் பற்றிக் குறைவான நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. முதல் சுற்றின் விடைகளைத் தெரிவித்துவிட்டு, இரண்டாவது சுற்றில் கேள்வி கேட்டபோதும் பெண்கள் தங்களின் சரியான பதில்களைக் குறைத்தே சொன்னார்கள். ஆண்கள் வெற்றிகரமாகச் செயல்படும் துறைகளில் பெண்கள் தம் திறமையின் மீது வைக்கும் நம்பிக்கை குறைவாகவே இருந்தது என்பதுதான் அவர் ஆய்வில் கண்டறிந்தது. தன் திறமையைத் தானே நம்புவதற்கே பொதுமைப்படுத்துதல்கள் தடையாகின்றன.
ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பார்த்ததும் நம் மனதில் ஆயிரம் உணர்வுகள் தோன்றலாம். லைக், இதயம், கோபம் என அவர்கள் வைத்திருக்கும் ஏழு உணர்வுகளைத்தாம் நாம் வெளிப்படுத்த முடியும். நாம் அதிகம் இந்த உணர்வுகளைப் பயன்படுத்துவதால் இவை விருப்பத் தேர்வுகளாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இவைதான் இருக்கிறது என்பதால் நம் உணர்வுகளை இந்த ஏழுக்குள் வகைப்படுத்த நாம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். ஒரு கட்டத்தில் அதை நாம் பழகிக்கொள்வோம். அப்படியும் பழகாதவர்களை, ‘ஃபேஸ்புக்கில் ரியாக்க்ஷனைப் பயன்படுத்துவது எப்படி?’ என வகுப்பெடுத்தாவது பழக்கிவிடுவார்கள். இப்படித்தான் பாலினப் பாகுபாடுகளுக்கும் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.
சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கும் பொதுமைப்படுத்தல்கள் பெண்களுக்கு எதிரான மனப்போக்கை விஷமாக மனத்தில் சேர்க்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெரிதாக வெளிப்படுகின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்தில் அந்தப் பெண் வல்லுறவுக்கு ஆளாகியதன் காரணம் விதிவிலக்கான சில ஆண் வன்முறையாளர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். உடன் சென்ற நண்பர் சிறு கீறலும் இல்லாமல் பிழைத்ததும், பெண் இரும்புப் பைப் உடலில் செலுத்தப்பட்டு உள் உறுப்புகள் சிதைந்து மரணம் எய்தியதும் எப்படி? கேவலம் ஒரு பெண் ஆணை எதிர்க்கலாமா என்ற எண்ணம்தான் அந்தச் சம்பவத்தின் அடிப்படை. பட்டர்ஃபிளை எஃபெக்டைப் போல இந்த ஸ்டீரியோடைப் எண்ணங்கள் எங்கோ, யார் வாழ்விலோ பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் வீடு கிடைக்காமல் கஷ்டப்படுவதாகச் சொல்கிறார்கள். உங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நபர் மூலம் தனிப்பட்ட முறையில் மோசமான அனுபவம் இருந்தால்கூட அதைப் பொதுவெளியில் சொல்வதைப் தவிர்ப்பீர்கள்தானே? தலித் பற்றிய ஸ்டீரியோடைப் கருத்தையும் அப்படித்தானே கையாள்வீர்கள்? சட்ட நடவடிக்கை பற்றிய பயமோ அல்லது அவர்கள் பல காலமாக அடக்குமுறைக்கு ஆளானவர்கள் என்ற புரிதலோ காரணமாக இருக்கும். இந்தத் தயக்கம் அவர்கள் வாழ்வில் மிகச் சிறிய அளவிலேனும் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமல்லவா? அதைப் போலத்தான் பெண்களும் தாங்கள் இத்தகைய ஸ்டீரியோடைப் கருத்துகளால் தங்கள் தினப்படி வாழ்வில் சவால்களைச் சந்திப்பதாகக் கூறுகிறார்கள. பல ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்பதால், சந்தேகத்தின் பலனைப் பெண்களுக்கு அளிப்பதில் என்ன பிரச்னை? மொக்கை பகடிகள், பதிவுகளால் நீங்கள் சாதித்தது என்ன? அதை நிறுத்தினால் உங்களைச் சுற்றியுள்ள மனைவி, மகள் உள்ளிட்ட பல பெண்களின் வாழ்க்கையில் சிறிதளவு மாற்றம் வரும் என்றால் அதைச் செய்யாமல் பிடிவாதம் பிடிப்பதன் காரணம் என்ன?
பெண்கள் காலகாலமாக ஆண்கள் நலனுக்காக நோன்பிருக்கிறார்கள். அதைப் போல ஸ்டீரியோடைப்களை உருவாக்குபவர்கள், பரப்புபவர்கள் எல்லாரும் நோன்பிருக்கலாம். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும்தாம் ஸ்டீரியோடைப்களால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் மகள்களுக்காக மகன்களுக்காக அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக இதைச் செய்யலாம். பொத்தாம் பொதுவாக எதையும் பேசவோ எழுதவோ மாட்டேன் என ஆண்டுக்கு மூன்று மாதம் கடைப்பிடித்தால் போதும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்றை ஆறாக்கி, அதைப் பன்னிரண்டாக்கி திருந்திவிட முடியும். முயன்று பாருங்கள்.
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்