இங்கே புத்தகம் வாசிப்பதற்க்கு ஒரு தனிக் கூட்டமே இருக்கிறது. புத்தகம் வாசிப்பதைத் தன் அன்றாட வாழ்வியலில் ஒன்றாகக் கருதுபவர்களும் உள்ளனர். அறிவு சார்ந்த கேள்விகளுக்கும் உணர்வு சார்ந்த தேடல்களுக்கும் புத்தகம் ஒரு கடலாக இருக்கிறது.

இருப்பினும் ஏன் நீ புனைகதைகள் அல்லாத புத்தகங்களைப் படிப்பதில்லை, கற்பனை சார்ந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது போன்ற கேள்விகளை முற்போக்கு வாசிப்பாளர்கள் கேட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு தரப்பில், சமூக ரீதியான புத்தகங்களைப் படித்தால் மட்டும் என்ன மாறப் போகிறது, யாரோ ஒருவரின் எழுத்து எதை மாற்றப் போகிறது போன்ற கேள்விகளையும் பார்த்திருக்கிறேன்.

பெண்ணியம் பேசுவதற்குச் சுய சிந்தனை அவசியம். நம் உரிமைக்கான குரலுக்கு நம் அறிவே துணை. பெண்கள் உரிமைக்கு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான தேடல்களின் முழு வெற்றி கிடைக்கும் வரை போராடுவதும் அவசியம். அதற்குப் புத்தகங்கள் நமக்கு உதவி செய்யும். பல விஷயங்களைப் படித்து, தெளியும்போதுதான் தெளிவான முடிவை எடுக்க முடியும்.

சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற அனைத்துத் தரப்பினருக்காகவும் குரல் எழுப்புவதே ஒடுக்குமுறைக்குத் தீர்வளிக்கும். இதற்குப் புத்தகங்கள் பெரிய அளவில் உதவிபுரியும்.

‘சமூகத்திற்காகப் போராடுங்கள். போராட முடியவில்லை என்றால் ‘எழுதுங்கள்’. எழுத முடியவில்லை என்றால் ‘பேசுங்கள்.’ பேச முடியாவிட்டால் ஆதரிக்கவும் உதவவும் செய்யுங்கள். அதுவும் முடியாது என்றால் உங்கள் பங்கிற்குப் போராடுபவர்களைத் தடுக்கவோ வீழ்த்தவோ வேண்டாம்’ என்று கூறிய எர்னஸ்டோ சே குவேராவின் வார்த்தைகளே பதிலாக இருக்கும்.

பிடித்ததைப் படியுங்கள்; படித்ததைப் பகிருங்கள்; சமூக அக்கறையுடன் செயல்படுங்கள்.

படைப்பாளர்:

நிவேதா பாரதி. அவள் வளர்ந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளில் தன்னை விடுவிக்க நினைக்கும் முதுகலை படிக்கும் மாணவி.