ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

சமீபத்தில் நான் படித்ததில் என்னுள் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய புத்தகம் இது. சென்னையில் நடந்த புத்தகக் காட்சியில் பல புத்தகங்களை வாங்கினேன், பல புத்தகங்களைப் பரிசாக பெற்றேன். ஆனால், இந்தப் புத்தகம் இரண்டிலும் வராது. ஆமாம் குறளோவியன் என்ற தோழரைச் சந்தித்தபோது அவர் கையில் இந்தப் புத்தகம் இருந்தது. தலைப்பால் ஈர்க்கப்பட்டு அந்தப் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதைக் கவனித்த அவர், “படித்துவிட்டுக் கொடுங்கள், அடுத்த சந்திப்பில் வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.

வீட்டில் எத்தனை புத்தகம் இருந்தாலும் இன்னும் புத்தகம் வாங்க வேண்டும், பல புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றே மனம் அலையும். அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்ற மறுநாள் இரவு 11 மணிக்கு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். பாதி முடித்து அதிகாலை 4 மணிக்கு மூடிவைத்தேன். அழுது அழுது வீங்கிப் போன கண்களுடன் அடுத்து படிக்க முடியாத நிலையில்…

பாலியல் தொழிலாளிகளை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வெளியானால் கைத்தட்டல்களும் விசிலும் பறக்கும், அடுத்து வரும் படங்களில் அவர்களை ஓர் அலங்காரப்பொருளாகவும் நகைச்சுவைப் பாத்திரமாகவும் பணம் பிடுங்குபவர்களாகவும் சித்தரித்து ரசிப்போம். இதைத்தானே காலம் காலமாகச் செய்து வருகிறோம்?

திரைப்படங்கள் என்ன புத்தகங்களிலும் பாலியல் தொழிலை மிகவும் எளிமையான பணம் சம்பாதிக்க பெண்களுக்கான வழி என்றுதானே பார்க்கிறோம். ஜெயமோகனின் அறம் நூலில், “பொட்டச்சியா இருந்திருந்தா வேசியா போயிருப்பேன். ஆம்பளையா போயிட்டனே” என்ற ஒரே வரி எனக்கு அவர் மீது வெறுப்பை வரவைத்தது. ஆண்களும் பாலியல் தொழிலுக்குச் செல்லலாம் என்பதை அவர் அறியவில்லை போல.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று வரலாம் தவறில்லை. ஆனால், ஒரு பெண் பாலியல் தொழிலுக்குச் சென்றால் தவறு. குடும்பத்திற்கே இழுக்கு. அவர்கள் சென்றுவருவதால் எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை. அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பான்! என்ன ஒரு நியாயம்?

நளினி. வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாகச் சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்படுகிறார். பள்ளிப் படிப்பைக் கைவிட்டு 9 வயதில் இருந்தே வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கும் இவருக்குச் சிறுவயதிலேயே திருமணம் ஆகிறது. சில ஆண்டுகளில் 2 குழந்தைகள் பிறக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் கணவன் இறக்கிறான். வருமானம் போதாமல் வறுமை நீடித்ததால் தனது இருபத்தி நான்காவது வயதில் பாலியல் தொழிலுக்குள் வருகிறார். நளினி எப்படி நளினி ஜமீலாவாக மாறுகிறார், இந்தத் தொழிலில் அவர் சந்தித்த ஆண்கள், கடந்து வந்த இன்னல்கள், போராட்டங்கள் பற்றியதே இந்தச் சுயசரிதை.

பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குநரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமிலா தன் வாழ்வில் நடந்தவற்றையெல்லாம் 7 அத்தியாயங்களாக எழுதி இருக்கிறார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். மலையாளத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் கேரளத்தில் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளானது. இதனை தமிழில் குளச்சல் மு. யூசுப் ர் மொழியாக்கம் செய்து கொடுத்துள்ளார்.

பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய கங்குபாய் பற்றி நாம் அறிவோம். அதே அளவிற்கு முனைப்பும் போராட்டமும் செய்துள்ளார் நளினி ஜமீலா. இவர் சந்தித்த ஆண்களைப் பற்றி படித்தபோது எப்படி இன்னும் ஆண்களை நம்பி நட்பு பாராட்டுகிறார் என்றுதான் தோன்றுகிறது.

பாலியல் தொழில் செய்வதில் என்ன பிரச்னை வரப்போகிறது என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். நளினி இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த சில விஷங்களைப் பாருங்கள்.

ஒருவர் மட்டும் என்று சொல்லி அழைத்துச் சென்று கும்பலாக பலர் சேர்ந்து புணர்ந்து சித்திரவதை செய்த கதைகள் மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

எல்லாம் முடித்த பின்பே பணம் வாங்கும் பழக்கம் உடைய நளினியை விலை பேசி அழைத்துச் சென்று எல்லாம் முடித்தவுடன் பணத்தை சரியாகக் கொடுத்து விடுவர். ஆனால், பாலியலை அனுபவிக்க வேண்டிய இடத்தில் அவர்கள் பேசும் பேச்சுகளும் செய்யும் செயல்களும்… நினைக்கும் போதே கோபத்தில் கண்ணீர் கசிகிறது. உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? உன் மகளை அனுப்புகிறாயா? சிறுவயது பெண்கள் இருகிறார்களா என்று கேட்டு கோபத்தை வரவைத்து அவர்களை அடித்து துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சிலர்.

இதையும் தாண்டி, “திருமணம் செய்துகொள்கிறேன்… உன்னை உண்மையாகக் காதலிக்கிறேன்” என்று வாக்குக் கொடுத்து சில நாட்களில், மாதங்களில் அப்படியே விட்டுச் செல்லும் சிலர். இவர்கள் எல்லாம் உண்மையில் மனிதர்கள்தாமா?

இப்படிப் பல கேவலமான செயல்களைச் செய்த பின்பும் அவர்கள் தூய்மையானவர்கள். ஆனால், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் கேவலமானவர்கள் என்று எப்படித்தான் மனசாட்சியின்றி பேசுகிறார்களோ புரியவில்லை .

இவர்கள் கொடுக்கும் இன்னல்களிலும் ஒரு பாலியல் தொழிலாளி உயிர் இழந்தால்கூட அவர்களுக்கு நீதி கிடைக்காத சூழ்நிலையில்தான் அன்று இவர்கள் வாழ்ந்து வந்தனர். இந்த அநீதிகளை எதிர்த்துதான் நளினி போராடினார்.

கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வந்த இவர், பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுத்து வந்ததுடன் நிறுத்திவிடாமல் ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

பாலியல் தொழிலைத் தவறு என்றும் அது சமூகத்திற்கு இழுக்கு என்றும் சொல்பவர்களுக்கு, “இரண்டு பேர் மனம் ஒத்து உடன்பட்டு உறவுகொள்கிறார்கள். அதனால் முன்றாவது ஒரு நபருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்கிறபோது பாலியல் தொழிலைக் கேள்விக்குட்படுத்துவது சரியல்ல’ என்று மிகவும் எளிமையாகப் பதில் அளித்துள்ளார்.

மேலும் பாலியல் உறவு மிகவும் உன்னதமான ஒன்று, அது ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய உணர்வு. அதனை எப்படி விற்கலாம் என்று கேட்பவர்களுக்கு, “கல்வி கற்பிப்பதும் உன்னதமான விஷயம்தான் அதற்கு நாம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதில்லையா? இசையும் உன்னதமான கலைதான், அதற்காகப் பாடும் ஜேசுதாசிற்கு நாம் பணம் கொடுப்பதில்லையா? எல்லாருக்கும் தங்கள் வாழ்வை வாழ பணம் தேவை. எல்லாத் தொழிலிலும் பிரச்னைகள் இருக்கும். பாடுபவன் எப்படித் தன் குரலுக்குப் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்கிறானோ அதேபோல் இந்தப் பாலியல் தொழிலிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று பதிலளித்துள்ளார்.

பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையையும் வலிகளையும் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் நளினி ஜமீலா: ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை. அடுத்தவர்களை ஏமாற்றாமல், புண்படுத்தாமல் செய்யும் எந்தத் தொழிலும் இழிவானதல்ல. பாலியல் தொழிலாளிகளையும் மதிப்போம், அவர்களுக்குப் பிடித்தவாறு அவர்கள் பறந்து செல்லட்டும்!

படைப்பாளர்:

யோகலட்சுமி வேணுகோபால்

பி.காம் முடித்துவிட்டு சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைந்தெறிய வேண்டும் என்ற பேராசையோடு முதுகலை இதழியல் படித்து வரும் வளரும் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர்.