திரைப்படங்கள் எப்போதுமே மக்களைக் கவரக் கூடியவை. நிஜமாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாத சில கற்பனைகளை நிழலாகக் காண்கையில் ஏற்படும் பரவச உணர்வை மீண்டும் மீண்டும் பெறும் அனுபவத்தை திரைப்படங்கள் அளிக்கின்றன.
ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே இருந்தன. பின்னாட்களில் வந்தவர்கள் தான் படங்களைப் பாடங்களாக எடுத்தார்கள். அதுவும் பெண்களுக்கு மட்டுமே அந்தப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பெண் என்பவள் இழுத்துப் போர்த்திய சேலையுடன் பூ, பொட்டு வைத்துக்கொண்டு இருப்பதுதான் மங்களகரமானது என்று விதவிதமாக போதிக்கப்பட்டது. படித்து நாகரீக உடை அணிந்த பெண்கள் திமிர் பிடித்தவர்களாகச் சித்தரிக்கப் பட்டார்கள். கிராமப்புற பகுதிகளில் இதனாலேயே பெண்களைப் படிக்க அனுப்ப யோசித்தார்கள். மீறிப் படித்தவர்கள் எது பேசினாலும் “படிச்ச திமிரைக் காட்டாதே..” என்று படிக்காத பெண்களால் அடக்கப்பட்டார்கள்.
பழைய கறுப்பு வெள்ளை படங்களில் ஆண்களுக்கு பெண்கள் அடங்கித் தான் ஆகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். ஒரு பெண்ணும் ஆணும் சபதம் செய்து கொண்டு ஒருவரையொருவர் வெல்ல முயற்சிக்கும் போது அந்தப் பெண் வில்லத்தனம் மிகுந்தவராகவே காட்டப்பட்டார். இதில் ‘பூவா தலையா’ என்ற பழைய படத்தில் கதாநாயகனும், அவரது அத்தையும் செய்து கொண்ட சபதத்தில் இறுதியில் கதாநாயகனே (வழக்கம் போல) வெல்வார். “ஒரு பொண்ணும், ஆணும் போட்டி போட்டா எப்பவும் ஆண்தான் ஜெயிக்கணும்.. பொண்ணு ஜெயிக்கவே கூடாது..” என்று அந்தப் பெண்மணியையே வசனம் பேச வைத்திருப்பார்கள்.
எம்.ஜி.ஆர் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. விவசாயி படத்தில் படித்த, நாகரீகமான உடையணிந்து வரும் கதாநாயகிக்கு, “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை.. இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டுல..” என்று பாடமெடுப்பார். அந்தப் பெண்ணும் அடுத்த ஷாட்டிலேயே கண்டாங்கி கட்டிக் கொண்டு வயலில் களையெடுப்பார். அவரது பெரும்பாலான படங்களில் படித்த பெண்கள் திமிர் பிடித்தவர்கள், அவர்களை தாலி ஒன்றைக் கட்டி விட்டு வீட்டு வேலைகளைச் செய்ய வைக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
நடிகர் திலகத்தின் படங்களும் பெண்தான் வீட்டுவேலை செய்ய வேண்டும். அதுதான் நமது பண்பாடு என்று கலாச்சார வகுப்புகள் நடத்தின. சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினி எப்பேர்ப்பட்ட திறமையான தொழிலதிபரையும் ‘அடக்கி’ விடுவார். அந்தப் பெண்ணும் தலைக்கு குளித்து துண்டு கட்டி, நெற்றியில் விபூதி இட்டு மதிய உணவை கணவன் கையில் கொடுத்து விட்டு டாட்டா காட்டிக் கொண்டு நிற்பார். அந்தப் பெண் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனத்தில் இவர் நோகாமல் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இப்படித்தான் படங்கள் பெண்களுக்கு மட்டுமேயான பாடங்கள் ஆகின.
பாபா என்ற படத்தில் உடற்பயிற்சி செய்யும் பெண்களை வேடிக்கை பார்த்து ஜொள் விடுபவர்களைக் கண்டிக்காமல், மாடியில் உடற்பயிற்சி செய்வதை விடுத்து காலையில் வாசல் தெளித்து கோலம் போடவும், தண்ணீர்க் குடத்தை இடுப்பில் சுமக்கவும், ஆட்டுக்கல்லில் மாவரைக்கவும் பயிற்றுவிப்பார். அந்தக் காட்சியில் ரசிகர் குழாம் புல்லரித்த கதைகள் அப்போது ஏராளமாக இருந்தது. ஆண்களும் வீட்டுவேலை செய்து உடம்பை ‘பிட்’டாக வைத்திருக்க வேண்டியதுதானே.
‘பாட்ஷா’ என்ற திரைப்படம். தொண்ணூறுகளில் தாறுமாறாக ஓடிய படம். அதில் கதாநாயகி, “ஒரு பொண்ணு எப்படி இருக்கணும்?..” என்று கதாநாயகனிடம் கேட்பார். அதற்காகவே காத்திருந்த மாதிரி அவரும்,”பொண்ணுன்னா புடவை கட்டிக்கிட்டு..பூ வெச்சுக்கிட்டு.. அடக்க ஒடுக்கமா இருக்கணும்..”என்பார். விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆரவாரம் தூள் பறந்தது. புடவை, பூ இவைகளை அணிந்தால் தான் பெண்ணா?.. அப்படி அணியாதவர்களுக்கு இவர்கள் சூட்டும் பெயர் என்ன?.
சம்சாரம் அது மின்சாரம் படம் அபத்தமான காட்சிகள் நிரம்பியது. நாகரீகமாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணை வேற்று மதத்தவரான கணவர் அதே கலாச்சார தர்மங்களைப் போதித்து நம்மையும் சோதிப்பார். அதே படத்தில் புதிதாகத் திருமணமான பெண் தனது பாலியல் தேவையை வெளிப்படுத்தும் போது அது என்னவோ உலகமகாக் குற்றம் போலப் பதறிக் கொண்டு அதெல்லாம் தவறு என்று பண்பாட்டை அவசர அவசரமாக முன்னிறுத்துவார். தானாகவே ஒரு பெண் தனது ஆசையை வெளிப்படுத்துவது கேவலம் என்று பிதற்றுவார். பின்னணியில், “கட்டிலுக்கு ஆசைப்பட்டு புத்தி அலைஞ்சுது.. தன்னடக்கம் வேணுமம்மா.. பெண்ணுக்கது நல்லதம்மா..காமத்துக்கும், மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா..”என்று பாட்டு வேறு. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேறுவழியின்றி(?)த்தான் இந்தக் கொடுமையை சகித்திருப்பார்கள்.
அவரது எல்லாப் படங்களுமே கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்தின. நல்ல விஷயம் தான். ஆனால் அதிலுள்ள பெண்களின் பிரச்சினைகளைப் பேசத் தொடங்கி இறுதியில் பெண்களையே சிலுவையில் அறைந்தன. பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தே இருக்க வேண்டும் என்ற கருத்து மக்களின் மூளையில் வலிந்து திணிக்கப்பட்டது.
நிறையப் படங்களில் உறையும் பனிமலையில் ஆண் கனமான ஜெர்கின், கையுறை, ஷூக்கள் என்று லேசாக ஆடுவார். பாவம் அந்தக் கதாநாயகிகளைச் சிறிய ஆடைகளில் ஆட வைப்பார்கள். கறுப்பு வெள்ளை படங்களில் நிறையப் பாடல்களில் கதாநாயகிகள் செருப்பணிந்திருக்க மாட்டார்கள். அதன் பின்னர் வந்த படங்களில் இலேசான மாற்றம் ஏற்பட்டது. என்றாலும் பின்னணியில் ஆடும் பெண்களின் நிலை இன்னும் பரிதாபம் தான்.
எந்தக் காலகட்டத்தில் வந்த நடிகராயினும் பெண்களை இரண்டாம் பட்சமாகத்தான் நினைக்கிறார்கள். அடக்க ஒடுக்கமான கதாநாயகி என்றாலும் கனவில் அரைகுறையாகத்தான் ஆட வேண்டும். ஏனென்றால் அது கதாநாயகன் காணும் கனவு. அதிலும் இந்தக் கவர்ச்சி நடிகைகள் பாடுதான் மிகக் கொடுமையானது. இவர்களைப் பார்த்து முகம் சுளிப்பவர்கள் கொஞ்சம் யோசியுங்கள். கதாநாயகிக் கனவோடு வந்தவர்கள் எத்தனையோ பேர் கயவர்கள் கையில் சிக்கி வழிதவறிப் போயிருக்கிறார்கள். பின்னணியில் பூத்தூவும் வெள்ளை ஆடைத் தேவதைகள் அத்துனை பேரும் தங்களது கலர்க் கனவுகளைத் தொலைத்தவர்கள் தான்.
திரைப்படங்கள் வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதில் பெண்கள் நிலைமை மேம்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தூள் என்ற படத்தில் விக்ரம்,”பொம்பளையா அடக்கமா இரு..சொம்மா சாமியாடாத..” என்று ஜோதிகாவுக்கு அட்வைஸ் செய்வார். சிவகார்த்திகேயன் எளிதாகப் போகிற போக்கில் பெண்களை மட்டம் தட்டிப் பேசுகிறார். சந்தானம் இதில் வேற லெவல். எல்லாப் படங்களிலும் தராதரமின்றி பெண்களைக் கீழ்மைப்படுத்திப் பேசுவார்.
ஒரு படத்தில் க்ளப்பில் மதுவை சோடாவுடன் மிக்ஸ் பண்ணத் தெரியாமல் திணறுவார். அப்போது ஒரு பெண் வந்து அளவு சொல்லுவார். அதற்கு சந்தானம் அவரிடம், “ஆழாக்கு அரிசிக்கு எவ்ளோ தண்ணி ஊத்தணும்?..” என்பார் நக்கலாக. மது அருந்துவது யாராக இருந்தாலும் அது அவரவர் விருப்பம். ஆண்கள் குடிப்பது இயல்பாகப் பார்க்கப்படும் சமுதாயத்தில் பெண்கள் குடிப்பது மட்டும் அருவருப்பாகப் பார்க்கப் படுகிறது. தவறென்றால் எல்லாமே தவறு தானே?.
எப்பொழுதும் சினிமாக்கள் ‘நாயக’ பிம்பத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்றன. நாயகியர் வெறும் ‘ஊறுகாய்’ தான். பெண்கள் இரண்டாம் நிலை கதாபாத்திரங்களில் நடிப்பது போல பெரிய ஹீரோக்கள் முன்வருவதில்லை. கதை என்ற ஒன்று நாயகனின் சாகசங்களை மட்டுமே முன்னிறுத்துகின்றது. பெண்களுக்கான கதைகளைப் பின்ன யாரும் முன்வருவதில்லை.
நடிக்க முன்வரும் அளவுக்கு இதர வேலைகளில் பெண்கள் அதிகம் பங்கேற்பதில்லை. அதற்கு அந்தத் துறையின் நேரங்காலமற்ற பணிமுறைதான் என்றாலும், பெண்களுக்கு அங்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளும் முக்கியக் காரணம். மேலும் அந்தத் துறையில் உள்ள பெண்களைத் தலையெடுக்க முடியாமல் முடக்கும் ஆணாதிக்க மனோபாவமும் ஒரு காரணமே. இப்போதுதான் மெல்ல மெல்ல திரைத்துறையின் இதர பணிகளில் பெண்கள் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் என்பதை மறுக்க முடியாது.
பெண்களை தெய்வீக நிலைக்கு உயர்த்தும் திரைப்படங்கள் தான் அவர்களைச் சகதியில் தள்ளும் வேலையையும் செய்கிறது. பெண்ணடிமைத்தனத்தை அங்கீகரிக்கும் படங்களே எடுக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான, இரட்டை அர்த்த வசனங்களே நகைச்சுவை என்ற பெயரில் ‘அவல நகைச்சுவை’ ஆகிறது. ஹீரோ தனது ‘கெத்தை’க் காட்ட வைக்கும் ‘பஞ்ச்’ டயலாக்குகளில் கூட எதிராளியின் வீட்டுப் பெண்கள் தான் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். இது போன்ற காட்சியில், இந்த மாதிரி வசனம் பேச மாட்டேன் என்று ஏன் இந்த ஆண்கள் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்? இன்னும் ஆதி மனிதனின் வேட்டை வெறி ஆழ்மனதில் ஊறிக் கிடக்கிறது. அது இப்போது வேட்டைப் பொருள் கிடைக்காமல் தன்னுடன் இருக்கும் பெண்ணினத்தையே வேட்டையாடத் துணிந்து விட்டது.
பெண்ணைப் புனிதப்படுத்தி, தேவதையாக உயர்த்தவும் வேண்டாம். கீழ்த்தரமாக எண்ணி வதைக்கவும் வேண்டாம். அவளும் நம் சக உயிர், சக மனுஷி என்று முதலில் ஆண்கள் நினைக்க வேண்டும். அவளுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தாலே போதும். அவளுடைய உரிமைகள் தானாக வந்து சேரும்.
பாடல் எழுதுபவர்கள் இரட்டை அர்த்த வரிகளால் பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறார்கள். அந்தப் பாடல்கள் கூட்டமான பேருந்துகளில் ஒலிக்க விடப்படும் போது பெண்களின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாக இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. சில ஆண் பாடலாசிரியர்களும், பெண் பாடலாசிரியர்களும்தான் அவ்வாறு எழுதுவதில்லை. பெண்கள் இயக்குநராக இருந்தால் இத்தகைய நிலை தவிர்க்கப்படும். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குச் சித்திரங்கள் மட்டுமல்ல. அவற்றிலிருந்து சொல்லப்படும் கருத்துக்கள் மக்களிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. எனவே படம் எடுப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒன்பது கொலைகள் செய்த ஜெயப்பிரகாஷ் என்ற இளைஞனைக் கைது செய்த போலீசார் கொலைக்கான காரணத்தை அறிந்த போது அதிர்ந்து போயினர். ‘நூறாவது நாள்’ என்ற திரைப்படத்தைப் பார்த்து அதன் உந்துதலில் தான் இத்தனை கொலைகளைச் செய்ததாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்திருந்தான். திரைப்படத்தின் வீச்சு எத்தகையது என்று இப்போது புரிந்திருக்கும்.
எப்போதுமே நேர்மறையான கருத்துக்களை விட எதிர்மறைச் சிந்தனைகளே அதிகம் பரவுகின்றன. திரைப்படத்தில் பெண்களை கேவலமாகச் சித்தரிப்பதை ஒரு ஆண்குழந்தை பார்க்க நேரிடும் போது பெண்ணை இப்படித்தான் கையாள வேண்டும் என்று எதிர்மறையாகப் புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. முழுக்க எதிர்மறைக் காட்சிகளை அமைத்து விட்டு, கடைசி ஒரு வரியில் கொடுக்கப்படும் நேர்மறை அறிவுரை எடுபடுவதில்லை.
இனியேனும் படம் எடுப்பவர்கள் வெறும் ‘கல்லா கட்டும்’ நோக்கத்தில் எடுத்தாலும் சரி, அறிவுரையாக எடுத்தாலும் சரி.. பெண்களுக்கு மட்டுமே புத்திமதி சொல்லாமல் எல்லோருக்குமான பொது அறிவுரையைக் கொடுத்தல் நலம்.
கட்டுரையாளரின் மற்ற கட்டுரை:
படைப்பு:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.