இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு வரவர மோசமாகிக் கொண்டிருக்கிறது. ’நள்ளிரவில் ஒரு இளம்பெண் உடல் முழுவதும் நகைகளை அணிந்துகொண்டு தனியாக வெளியே செல்லும் நாளே உண்மையான சுதந்திர தினம்’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால், பகலிலேயே வீட்டைப் பூட்டிக்கொண்டுகூட ஒரு பெண் இருக்க இயலவில்லை. நாட்டைத் தாய்நாடு என்றும், மொழியைத் தாய்மொழி என்றும் சொல்லிக்கொண்டு, நதிகள், குளங்களுக்குப் பெண் பெயர் வைத்து ஆராதிப்பதால் மட்டும் இந்தத் தேசத்தில் பெண்களின் நிலை உயர்ந்துவிடவில்லை.

பெண்கள் இன்னும் ஒரு பாதுகாப்பு வளையத்திலேயே இருக்க வைக்கப்படுகிறார்கள். ஆண்களின் ஆதிக்க மனநிலையும் பெண்கள் குறித்த அவர்களின் கண்ணோட்டத்தில் மாறுதலும் இம்மியளவும் ஏற்படவில்லை. எத்தனையோ பெண்கள் வன்புணர்வு செய்யப்படுவது இன்னும் குறைந்தபாடில்லை.

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி சபியா என்ற 21 வயது பெண் காவலர் ஐந்து பேர் கொண்ட வக்கிரக் குழுவால் வன்புணர்வு செய்யப்பட்டு, மனம் பதைக்கும் வகையில் கொடூரமாக அங்கங்கள் அறுக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இதை எந்த ஊடகமும் சொல்லக் காணோம். அந்தப் பெண்ணின் நிலையை அவரது உறவினர் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணின் வாய்வழியாகச் செலுத்தப்பட்ட கத்தி கழுத்து வழியாக வெளியே வந்திருக்கிறது. இன்னொரு கத்தியால் நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள். கழுத்து முழுவதும் அறுபட்டு சிறிதளவே இருந்திருக்கிறது. அந்தப் பெண் இதைத் தடுக்கப் போராடிய போது அவரது கைகளிலும் கத்தியால் வெட்டியிருக்கிறார்கள். அவரது மார்பகங்கள் அறுக்கப்பட்டு இருக்கின்றன. அவரது பிறப்புறுப்பும் சிதைக்கப்பட்டிருக்கிறது. அவருடன் இருந்த ஆண் நண்பன் என்று சொல்லப்படுபவனைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

அவன் கொடுத்த வாக்குமூலத்தில் தானும் அந்தப் பெண்ணும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்தப் பெண்ணின் நடத்தை சரியில்லாததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்ததாகவும் சொல்லியிருக்கிறான். ஆனால், அந்தப் பெண்ணின் சகோதரர் இந்தக் கல்யாணச் செய்தியை மறுத்திருக்கிறார். இந்த வழக்கு பற்றிய மேலதிக விவரங்கள் தெரியவில்லை.

நிர்பயா கொலைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இந்த வழக்கிற்கு இல்லாமல் போனதின் வெறுப்பரசியல் என்ன? அந்தப் பெண் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலா?

வன்புணர்வு என்பது கண நேரத் தூண்டலில் பாலியல் செயலில் ஈடுபடுவது என்று சொல்லப்பட்டாலும் பெண் என்பவள் வெறும் உடலாக மட்டுமே பார்க்கப்படுகிறாள் என்பதையே காட்டுகிறது. அந்தப் பெண் ஒருவேளை நடத்தை சரியில்லாதவராகவே இருந்தாலும் அதற்குத் தண்டனை என்பது கூட்டுப் பலாத்காரம் தானா? அப்படியென்றால் ஒரு பெண்ணை இத்தகைய வன்புணர்வுகள் மூலமாக அடக்கி விடலாம் என்று நினைப்பது எத்தகைய கீழ்த்தரமான உணர்ச்சி வெளிப்பாடு?

அந்த மிலேச்சத்தனமான ஆண்களின் வக்கிரம் புனிதமான, கண்ணியமான, பெண்களை மதிக்கும் தேசம் என்று வெளியே வேஷம் போடும் புண்ணிய பூமியில் இருக்கும் ஒட்டுமொத்த ஆணாதிக்க மனோபாவத்தைத்தான் எதிரொலிக்கிறது. ஓர் உயிர் தன்னிடம் இறைஞ்சுவதை ரசிக்கும் குரூர மனப்பான்மை தான் இங்கு புரையோடியிருக்கிறது. ஓர் உயிரின் கண்களில் தெரியும் கெஞ்சலை மதிக்காமல் போகும் குணத்தைத் தான் இந்தச் சமுதாயம் அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

பெண் என்பவள் தாய், தெய்வம், தேவதை என்று ஆண்களால் உயரத்தில் ஏற்றி வைக்கப்படும் அதே நேரத்தில் கீழே ஒரு படுபயங்கரமான பாதாளம் தான் இருக்கிறது என்பதை அதே ஆண்கள் உணர்த்திவிடுகிறார்கள். இது புரியாத பெண்கள் தான் நமது சமூகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் கத்தினாலும் கூப்பாடு போட்டாலும் இன்னும் பாலியல் கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை இது போன்ற சம்பவங்கள் நெற்றியில் அடித்துச் சொல்லி வருகின்றன.

நமது சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். நிர்பயா சம்பவத்தில் எல்லா ஊடகங்களும் அதையே உயர்த்திப் பிடித்தன. அந்தக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிலர் தூக்கு தண்டனை அடைந்து, சிலர் தையல் மிஷினோடு வெளியே வந்தார்கள். அதே சமயத்தில்தான் புனிதா, வினோதினி என்று சில பல மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்தன. ஆனால், அவையெல்லாம் எந்தக் கவனமும் பெறவில்லை.

ஊடகப் போராளிகளும் சமூக வலைதளப் போராளிகளும் அப்போதைக்குப் பொங்கினார்களே தவிர, அதன் பின் அடுத்தடுத்த பிரச்னைகள் தலைதூக்கவே அவற்றுக்குப் போராடப் போய்விட்டார்கள். அதேபோல இந்த சபியா வழக்கும் பகிர்வு செய்யப்பட்டு சில நாள் பொங்குதலோடு மறைந்துவிடும். அதன் பின்னர் வேறொரு பெண் வேறொரு பெயரில் வன்புணர்வு செய்யப்படும் வரை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். இந்தியா இப்போது சபிக்கப்பட்ட தேசமாகிவிட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பெண்ணை மதிக்காத எந்தவொரு நாடும் வல்லரசும் ஆகாது. நல்லரசும் ஆகாது. ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மையான பெயரையும் புகைப்படத்தையும் பகிரக் கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தச் சமூக வலைத்தளங்களில் இந்தப் பெண்களின் புகைப்படத்தோடுதான் செய்தி பகிரப்படுகிறது. இந்த விஷயத்தை முதலில் மனசாட்சியோடு அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் மனப்பிறழ்வு என்பது எக்கச்சக்கமாகப் பரவியிருக்கிறது. நன்கு படித்த நாகரீகமான ஆட்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மிருகங்கள் தான் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுகின்றன. ஆனால், மனிதனுக்கு ஆறாவது அறிவு ஒன்று இருக்கிறது. அது பொதுவெளியில் எப்படி நடந்து கொள்வது என்று வழிநடத்தும். ஆனால், இப்போதெல்லாம் பொதுவெளியில் தான் மனிதரின் ஆபாசங்கள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அரங்கேறுகின்றன.

அந்த ஐவர் குழுவில் ஒருவனுக்குக்கூட அந்தப் பெண்ணின் மீது இரக்கம் வரவில்லை என்பது எத்தகைய வேதனையான செய்தி. இப்படிப்பட்ட இளைஞர்களை நம்பியா இந்த நாடு வல்லரசுக் கனவைக் காண்கிறது? காலக் கொடுமை. அவன்களின் வீடுகளிலும் பெண்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த நேரத்தில் ஏன் அந்தப் பெண்களின் முகம் ஒரு கணமேனும் அவன்களின் நினைவுக்கு வரவில்லை? அப்படியென்றால் இத்தகையவர்களைச் சுற்றியுள்ள சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

வன்புணர்வோடு நிறுத்தாமல் அந்தப் பெண்ணை அணுஅணுவாகச் சித்திரவதைச் செய்ததில் விளங்குகிறது அவன்களின் வக்கிரமான மனநோய். வேறு எங்கோ இருக்கும் கோபத்தை, தன்னிடம் கிடைத்த ஒரு பொருளைஅக்கக்காகப் பிரித்துப் போடும் ஒரு மனச்சிதைவு கொண்ட வெறிநாய்க் கூட்டம் அது.

இத்தகைய மனப்பிறழ்வு கொண்டவர்களை உருவாக்கியதில் இந்தச் சமுதாயத்திற்கும் பெரும் பங்குண்டு. ஆதிகாலம் தொட்டே பெண்களை வெறும் பண்டமாக மட்டும் பார்க்கும் போக்குதான் பிறழ்வடைந்த உள்ளத்திற்குத் தைரியத்தை அளித்து இத்தகைய படுபாதகத்தைச் செய்ய வழி வகுத்திருக்கிறது. அரசர் காலத்திலும் போரில் தோற்ற அரசரின் அரண்மனைப் பெண்களும் நாட்டுப் பெண்களும் அயலாரின் ‘உடைமையாகவே’ கருதப்பட்டார்கள். ஆடு, மாடு, கோழி, குதிரை, யானை மாதிரி அவளும் ஓர் அஃறிணை என்று தான் நடத்தப்பட்டாள். அவளும் ஒரு சக உயிர். அவளுக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறது என்ற சிந்தனை கடுகளவுகூட இல்லாத இந்த இளைஞர்களின் ஆணுறுப்புகளை அறுத்து வீசவேண்டும். காலமெல்லாம் தான் செய்த பாதகத்தை எண்ணி எண்ணி வருந்தி நொடிக்கு நொடி இறக்க வேண்டும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தொன்பது வயது இளம்பெண் இதேபோல் ஒரு சம்பவத்தில் நாக்கு வெட்டப்பட்டு, எலும்புகள் நொறுக்கப்பட்டு இறந்தார். அவரது சடலத்தைக் காவல்துறை அவசர அவசரமாக எரித்தது.

இந்திய ஆண்களின் ஆழ்மன ஆளுமையில் ஏதேனும் குறைகள் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் ஒன்றை வெற்றிகொண்டு தன்னை யாருக்கோ நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அது பெரும்பாலும் எதிர்பாலினத்தைத் தேர்ந்தெடுத்து இம்சைக்கு உள்ளாக்குகிறது. பெண்களை ஒருபோதும் ஆண்களால் படுக்கையில் வெல்ல முடியாது என்ற எண்ணத்தின் விளைவாக அது பெண்ணை ‘அடக்கி’ வைக்கத் துடிக்கிறது. ஆழ்மன வேட்டை வெறி தலைதூக்கும் போது அது பெண்ணின் மீது முடிகிறது. என்னதான் பெண்களை நான் மதிக்கிறேன்… ஆராதிக்கிறேன்… சம உரிமை கொடுக்கிறேன் என்று சொல்பவனின் ஆழ்மனதை ஆராய்ந்தால்கூட அங்கும் பெண்ணின் மீதுள்ள வன்மம் பசுத்தோல் போர்த்திக்கொண்டு படுத்துறங்கிக் கொண்டுதான் இருக்கும். தக்க சமயத்திற்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கும்.

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆண் தனது குடும்பப் பெண்களை எவ்வாறு நடத்துகிறான் என்பதை அங்கிருக்கும் ஆண் குழந்தைகள் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். அவன் பெண்களிடம் எந்தவிதமான வார்த்தைப் பிரயோகங்களால் பேசுகிறான் என்பதையும், பெண்கள் இல்லாத நேரத்தில் அவர்களைப் பற்றிய அவனது கருத்துகளையும் அவர்கள் கவனித்து தங்களது மனதில் இருத்திக்கொள்கிறார்கள். எனவே தனக்கு அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆண் தனது பார்வை, பேச்சு, செயல் எல்லாவற்றையும் சரியான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

பெண் தன்னை வலிமையாகக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். உடலிலும் மனதிலும் உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னிடம் அத்துமீறுபவர்களைத் தண்டிக்கும் அளவு துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணின் பிரச்னை பொதுவெளியில் ஆரோக்கியமாகப் பேசப்பட வேண்டும். தன்னைவிட ஆண்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்த வேண்டும்.

பெண் எந்த நாட்டிலும் பெண்தான். அதேபோல் அவள் எந்த நாட்டிலும் வெறும் போகப் பொருளாகத் தான் இருக்கிறாள். இன்னும் அவளது பாதுகாப்புக்கு, உரிமைக்கு, சுதந்திரத்திற்கு என்று போராடிக் கொண்டுதான் இருக்கிறாள். இந்தப் போராட்டங்கள் நிச்சயம் ஒரு நாள் அவளுக்கு உள்ள உரிமைகளை இயல்பாகப் பெற்றுக் கொடுத்து விடும். ஆணின் கண்ணோட்டத்தில் இருக்கும் இந்த உலகத்தின் பார்வை பொதுமைப்படுத்தப்படும்.

பாலியல் தொல்லைகள், வன்புணர்வுகள், பலாத்காரங்கள் என்று இருக்கும் நிலை மாறி ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அவரவர் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளும் நிலை வரும். அதற்காகப் பயணிக்கும் தொலைவு தூரம் தான். என்றாலும் பெண்களின் பயணம் துவங்கி விட்டது.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.