கொரானாவைவிடச் சென்னை மக்களைத் தற்போது அதிகம் பாதித்திருப்பது தண்ணீர்த் தட்டுப்பாடுதான். கொரானாவைப் போல் இது திடீரென்று தோன்றிய பிரச்னை அல்ல. பல ஆண்டுகளாக நாம் சந்தித்து வரும் விஷயம் தான். ஆனாலும் இதற்கான தீர்வை நாம் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. சென்னைக்கு நீர் வழங்கும் நான்கு முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகள் கோடைக்கால ஆரம்பத்திலேயே நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மழைக் காலங்களில் சரியாகத் தூர் வாரப்படாத ஏரிகளிலிருந்து உபரி நீர் வீணாக வெளியேற்றப்படுகிறது. கோடைக்காலங்களில் மட்டும் தான் நீர் தேவையைப் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. மழைக் காலங்களில் நாம் மழையை ரசிக்கச் சென்று விடுகிறோம்.
வெறும் ஏரிகளைத் தூர் வார்வதால் மட்டும் சென்னையின் தண்ணீர்த் தட்டுப்பாடு தீர்ந்து விடாது. நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும், பருவநிலை சார்ந்திடாத நீர் வளங்களான கடல் நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி போன்றவற்றை விரிவு படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும் புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் இத்திட்டத்தைக் கட்டாயம் செயல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். கழிவு நீர் மறுசுழற்சி பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் மறுசுழற்சி நீரைத் தயக்கமின்றிப் பயன்படுத்துகிறார்கள். மேலும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் நீரின் அளவு கணக்கிட்டு முறைப்படுத்த வேண்டும். குறிப்பாகத் தொழிற்சாலைகளில் அதிக அளவில் மறுசுழற்சி நீரைப் பயன்படுத்த வேண்டும். புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு காட்டும் ஆர்வத்தை அவற்றிக்கு நீர் தேவை எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சமானது வரும் காலங்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சந்திக்கப்போகும் முக்கியச் சவாலாக இருக்கப்போகிறது.
சென்னைக்குக் குடிநீர் வழங்க 150 எம்.எல்.டி மற்றும் 400 எம்.எல்.டி திறன் கொண்ட மேலும் இரண்டு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது சற்று மகிழ்ச்சியளிக்கிறது.
ஏரி பராமரிப்பு மற்றும் நகர்ப்புற நீர்நிலை மேலாண்மைக்கென்று தனித் துறையை அரசு அமைத்திட வேண்டும். சாய் கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து நமக்கு வரவேண்டிய 12 டி.எம்.சி. நீரும் வரவில்லை. மேலும் பல கிணறுகள் இப்போதே வற்றிவிட்டன. இந்த ஆண்டு கோடைக்காலம் சென்னை மாநகர மக்களுக்குச் சற்றுக் கடினமானதாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
படைப்பாளர்
ரம்யா சுரேஷ், Mphil ஆங்கில இலக்கியம் பயின்றவர்.