ஆணோ பெண்ணோ ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் அனைவரும் சட்டப்படி அவர்களின் வாரிசாகக் கருத்தில்கொள்ள வேண்டும். இதில் என்ன புதுமை இருக்கிறது? நான் பெண்ணாக இருப்பதால் என் பெற்றோருக்கு நான் வாரிசு இல்லை என்று ஆகிவிடுமா என்று கேள்வி கேட்கிறீர்களா? ஆம். 1956க்கு முன்பு வரை சட்டம் அப்படிதான் சொன்னது, இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 இந்தியப் பெண்கள் தங்கள் பேரில் சொத்துகளை வாங்கவும், விற்கவும், வாரிசுரிமையின் அடிப்படையில் அவற்றை முழுமையாகக் கையாளவும், அனுபவிக்கவும் அதிகாரம் வழங்கியது.
இந்த அதிகாரத்திற்குப் பின் இருக்கும் வரலாற்றையும், அதை அழித்தொழிக்க நடக்கும் முயற்சிகளையும் சற்றே விவரித்துப் பார்க்கலாம்.
சென்ற வருடம் வெளியான மெய்யழகன் திரைப்படம் வணிகரீதியில் பெரிய வசூலைப் பெறாவிட்டாலும் ஓடிடியில் வெளியான பிறகு பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்ஸ்டா முழுக்க மெய்யழகன் ரீல்ஸ்களே நிறைத்திருந்தன. 60ஸ் கிட் முதல் 90ஸ் கிட் வரை எல்லாரும் தங்கள் பரம்பரை வீட்டைப் பிரிந்த கதையை நாஸ்டால்ஜியாக நினைத்துப் பார்த்து கண்களில் ஜலம் வைத்துக் கொண்டனர். பாட்டியாகிவிட்ட அத்தைப் பெண்கள், “நான் உன்னையே கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம், மச்சான்” என்று சொல்வதாகக் கற்பனை செய்து கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர்.
சாமான்கள் ஏற்றப்பட்ட வண்டியில் இளவயது அரவிந்த்சாமி உட்கார்ந்து கொண்டு செல்லும் காட்சிக்கும், பின்னணியில் வரும் ’போறேன்.. நான் போறேன்’ என்கிற பாடலுக்கும் கண்ணில் நீர் துளிர்க்காதவர்களை மனிதர்கள் வகையறாவில் இருந்து நீக்கிவிட்டார்கள். பொதி மாட்டு மூட்டை போல வண்டியில் தூக்கிப்போட்டுக் கொண்டு போன பொன்னுத்தாயிகளுக்கு வராத கண்ணீர் அருள்மொழிகளுக்கு மட்டும் வந்ததுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நின்றுகொண்டு அரைப்பதற்கு ஏதுவாக மேடை மீது பொதியப்பட்ட அம்மிக்கல்லைக் கடப்பாரை கொண்டு பெயர்த்து எடுக்கும்போது, அருள்மொழியின் அம்மா முந்தானையை வாயில் வைத்தபடி விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பார். ஆம், எப்பேர்பட்ட அம்மிக்கல் அது, அந்த அம்மிக்கல்லில் எத்தனை தலைமுறை பெண்களின் வாழ்வு அரைபட்டிருக்கும். ஆசியராகவோ, வழக்கறிஞராகவோ , மருத்துவராகவோ ஆகத் தலைப்பட்ட பெண்களின் ஆசைகளை எல்லாம் பரம்பரைக் கெளரவம் என்கிற ஒற்றைக் கல்லில் வைத்து அரைத்து தேய்க்கப்பட்ட அம்மிக்கல் அல்லவா அது. பெண்களையும் அம்மிக்கல்லையும் இணைத்து எத்தனை பழமைவாத சிந்தனைகளைக் கடந்து வந்திருப்போம். பெரும்பாலும் மிக்சிகள் அம்மிக்கல்லை இடமாற்றம் செய்த 90களில்தான் அம்மி அழுத சம்பவங்கள் நடைபெற்றன. அம்மியைப் பெயர்த்து எடுக்கும் இடத்தில் பெண்மணியை நிறுத்தி, முந்தானையை வாயில் வைத்து அழ வைத்து அம்மிக்கல்லுக்கும் பெண்களுக்குமான உறவை உணர்வுபூர்வமாகக் கடத்துவதுதான் ராஜதந்திரம். நல்லவேளை அந்த அம்மிக்கல் அருள்மொழியின் மனைவியான ஹேமா கைகளுக்கு வந்து சேர்வதாகக் காட்சிப்படுத்தவில்லை.
பரம்பரை வீடு பெண் வாரிசுகளின் கைகளுக்குச் சென்றதால் வீட்டைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகிறது நாயகனின் குடும்பம். மூன்று தலைமுறைகளுக்குச் சொந்தமான வீட்டைத் தனக்கு மட்டுமே உரியதாக இவர் எண்ணிக்கொள்வதே தவறு இல்லையா? தனக்கு ஓர் அண்ணன் இருப்பதாகவும், அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் ஒரு காட்சியில் அருள்மொழி பஸ் கண்டக்டரிடம் சொல்கிறார். அப்படி என்றால் அவர் அண்ணனுக்கும் அந்த வீட்டில் பங்கு உண்டுதானே? உடன் வளரும் சித்தப்பா பெண்ணிற்கு அந்த வீடு சொந்தம் இல்லையா? அந்த வீடு தனக்கு மட்டுமே உரிமையுடையது என்று நினைப்பதே ஆண்மைய சமுதாயத்தின் காரணத்தினால்தானே? பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சட்டத்தின் துணைகொண்டு அத்தைகள் நிறுவ முயலும்போது அருள்மொழிக்குக் கோபம் வந்துவிடுகிறது. இந்தக் கோபத்தில் சொந்த ஊருக்கே வராமல், சொந்தபந்தங்களில் இருந்து தள்ளி நிற்கிறார். நாயகனின் இந்தக் கோபம்தான் படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளிக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
1941இல் பி.என். ராவ் தலைமையில் உருவான Hindu code Bill கூட்டுக் குடும்பச் சொத்து முறையை ஒழிக்கப் பரிந்துரைத்தது. மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் வாரிசுரிமை, கலப்பு திருமணங்கள், விவாகரத்து ஆகியவற்றை நடைமுறைப்படுத்த சட்ட முன்வரைவை அறிமுகம் செய்தது. இந்த முதல் வரைவு 1 ஜனவரி 1948இல் சட்டமாக மாற வேண்டும் என்கிற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டது. 1948இல் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்தச் சட்டமுன்வரைவில் சில திருத்தங்களை மேற்கொண்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மசோதாவை அந்தக்கால மெய்யழகன்களும் அருள்மொழிகளும் நிறைவேற்றவிடாமல் தோற்கடித்தனர். அம்பேத்கர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு இதுவே காரணமாக இருந்தது. இந்தச் சட்ட மசோதாக்கள் மீதான விவாதங்களின் போது, இந்து மக்களில் பெரும் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து மசோதாக்களுக்கு எதிராகப் பேரணிகளை நடத்தினர். மசோதாக்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் பெண்களும் பங்கேற்று இருந்தனர். நேரு தன் சொந்தக் கட்சியில் இருந்தே மிகப் பெரிய எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மனைவிகளுக்கும் மகள்களுக்கும் சொத்தில் பங்களித்தால் அது குடும்பத்தில் மோதலை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்றத்தில் வாதிக்கப்பட்டது.
1951-52இல் முதல் பொதுத் தேர்தலின்போது நேரு, காங்கிரஸ் வெற்றி பெற்றால் இந்து கோட் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவேன் என்று அறிவித்தார். நேரு மீண்டும் பிரதமரானவுடன், இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசு சட்டம், இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் என நான்காகப் பிரிக்கப்பட்டு 1952 மற்றும் 1956 ஆண்டுகளுக்கு இடையில், ஒவ்வொன்றாகப் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
சமுதாய முன்னேற்றத்திற்குப் பெண்களுக்குச் சொத்துரிமை மிக முக்கியம் என்கிற நோக்கத்துடன் கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலத்திற்கு முன் கொண்டுவந்த இந்தச் சட்டம் இன்றளவிலும் பெயரளவில்தான் இருக்கிறது. இந்தியப் பெண்கள் தங்கள் பெற்றோரின் சொத்துகளையோ அல்லது பாரம்பரியச் சொத்துகளையோ அடைவதற்காகச் சட்டத்தின் உதவியை நாடுவது பெரும் பாவமாகவே பார்க்கப்படுகிறது. அண்ணன் தம்பிகள் வாழ்வில் மண் அள்ளிப் போடுகிறாள் பார் என்று ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர். சில அருள்மொழிகளின் கோபத்திற்கும் காரணமாகின்றனர்.
ஒருவேளை இதே வீட்டில் அருள்மொழி இருந்து, அவரது தங்கை, திருமணத்திற்குப் பிறகு இப்படிச் சொத்தில் பங்கு கேட்டு இருந்தால், இதே போல் பாதங்களை மடிமேல் வைத்துக் கொலுசு அணிவிப்பாரா? அல்லது சொத்தில் பங்கு கேட்ட காரணத்திற்காக முகத்தைக்கூடப் பார்க்காமல் வாழ்நாளைக் கழிப்பாரா?
பிறந்த ஊர், வாழ்ந்த இடம், பழகிய நட்புகள், வீடு, வாசல், சைக்கிள், மாடு, நாய் இப்படி நாஸ்டால்ஜியா எல்லா மனிதர்களுக்கும் உண்டு. உறவுகள் மீதான கோபங்களும் எல்லா மனிதர்களுக்கும் உரித்தானவையே. 90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா படம் எடுக்க வேண்டுமென்றால் இன்னும் இரண்டு மணிநேரம் சேர்த்து எடுத்தால்கூட ஓடும். ஆனால் எத்தனையெத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளின் மீது சேறள்ளி் வீசுவது அநீதிக்கு உடந்தை.
அருள்மொழியின் கோபம் நியாயமற்றது என்று தோன்றவில்லையெனில் நாம் இன்னும் ஒரு நூறாண்டு பின்னோக்கிச் சென்றுவிடுவோம். அண்ணல் அம்பேத்கரின் சட்டப் போராட்டம், நேருவின் தொலைநோக்குப் பார்வை அனைத்தையும் துச்சமாகக் கருதும் அருள்மொழியின் கோபம் அபாயகரமானதே. நியாயமற்றுப் போன அந்தக் கோபத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் படம் வெறும் திருமணமான இரு 90ஸ் கிட்ஸின் ஓர் இரவு நேர நாஸ்டால்ஜியா கொண்டாட்டமாக மட்டுமே முடிந்துபோகிறது.
பெண்கள் சொத்தில் பங்கு கேட்பது ஆண் வாரிசுகளுக்குச் செய்யும் அநியாயம் என்கிற கருத்தைத் தூக்கிப்பிடிக்கும் இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள் அனைவரும் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல குரூப்பைச் சேர்ந்தவர்கள்தாம். பெண்களைக் கீழானவர்களாகவும், ஒடுக்கப்படுவதற்கும், ஆண்களின் அடக்குமுறைகளை தாங்கிக் கொள்ளவும் மட்டுமே பிறந்தவர்கள் என்கிற கருத்தைக் கொண்டிருந்த நம் முன்னோர்கள் அனைவரும் முட்டாள்களே. இந்த முட்டாள்தனத்தை ஒழித்து மெல்ல முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய திரைமொழிகளின் மூலம் பின்னோக்கித் தள்ளும் வேலையைத் திறம்படச் செய்யக் காத்திருப்பவர்கள் பாலினச் சமத்துவத்தை விரும்பாத அடிப்படைவாதிகளே.
பாலின இடைவெளிகளைக் குறைத்து அரசியல், பொருளாதாரம், சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை இப்படி எல்லாத் தளங்களிலும் பாலினச் சமத்துவம் என்னும் மேன்மைத்துவத்தை அடையும் முயற்சியில் ஒரு மைல் கல்தான் பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கு என்பது. அதற்குத் தடை ஏற்படுத்தும் அருள்மொழிகள் என்றென்றும் ஆபத்தானவர்களே.
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.
Excellent read…