ஏன் மறுபடி மறுபடி மநு தர்ம சாஸ்திரத்தையே மேற்கோள் காண்பிக்கிறேன் என்கிற கேள்வி எழலாம்.
மநுவுக்கு முன்னும் பின்னும் எத்தனையோ தர்ம சாஸ்திரங்களும், ஏனைய நீதி நூல்களும் இயற்றப்பட்டுப் பின்பற்றப் பட்டிருக்கலாம். ஆனால் பலவும் நம் பார்வைக்கு அப்பால் போய்விட்டன. ஆனால் இந்த மநு ஸ்மிருதியானது, இன்று அதிகம் போற்றப்படுவதாகவும் கடைபிடிக்கப் படுவதாகவும் உள்ளது. நமது அரசாங்கமே இதைத்தான் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்கிறது. இதை மேற்கோள் காண்பித்து, சில பல நீதிமன்றத் தீர்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. எனவே இதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமும் அதிகம் உள்ளது.
பெண்கள் இன்றளவும் எதிர்கொள்ளும் ஒரு வேதனையான சூழலைப் பற்றி அடுத்து விவரிக்கலாம் என நினைக்கிறேன்.
புத் என்னும் நரகத்தில் வீழாமல் தந்தையை மகன் காப்பாற்றுகிறான் என்பதால் தான் அவனுக்குப் புத்திரன் என்று பெயர் ஏற்படுகிறது என்று பிரம்மதேவர் தாமே தன் திருவாக்கால் கூறியுள்ளார். (மநு 9 : 138)
என்னதான் பெண்ணுரிமை பேசினாலும், இன்றளவும்கூட தாய் / தகப்பன் / கணவன் இறந்தால், அவர்களது உடலுக்குக் கொள்ளி போடவோ / மற்ற சடங்குகள் செய்யவோ பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்பது நாம் அறிந்ததே!
விதிவிலக்காக, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதையெல்லாம் எடுத்துக்காட்டாகக் கொள்ள இயலாது. பெருவாரியாக இதை எல்லோருமே கடைபிடிக்கும் சூழல் வந்தால் மட்டுமே, சமூக மாற்றம் ஏற்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும். இன்றளவும் மயானத்தில் கூட சமதர்ம நிலை இங்கே ஏற்படவில்லை எனும் கொடும் உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இதில் பெண்கள் நிலை இன்னும் மோசம்.
பிள்ளை பெறாத ஒரு பெண்ணின் கணவன் இறந்துபோனால், அவரது உடலுக்கு யார் கொள்ளி வைப்பார்கள் எனத் தவித்து நிற்கும் அந்தப் பெண்ணின் நிலை கொடிதினும் கொடிது. ஆண்பிள்ளை பெறாத பெண்ணின் நிலைமையும் கிட்டத்தட்ட இதேதான். என்ன, தாயுடன் சேர்ந்து மகள்களும் அவதியுறுவர். இது போன்ற சமயங்களில் இறந்தவர் உடலுக்குக் கொள்ளி போடுவதில் கூட குடும்ப அரசியல் படு பயங்கரமாக வேலை செய்யும். குறிப்பாக, இறந்த அந்த நபரின் மகளுடைய புகுந்த வீட்டினர் செய்யும் வஞ்சனையை அவர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
கொள்ளி போடும் நபர் பெற்றவர்களுக்குத் தலைப்பிள்ளையாய் / ஒற்றைப் பிள்ளையாய் இருக்கக்கூடாது. மேலும் தகப்பன் உயிருடன் இருந்தால், ஒருவரைக் கொள்ளிபோட அனுமதிக்கத் தயங்குவர். காரணம், அவர்களுக்கு உடைமைப் பட்ட மகன், வேறு யாரோ ஒருவருக்குக் கொள்ளி போடும் பட்சத்தில், அவரது பெற்றவர்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்கிற ஒரு கற்பிதமும் இங்கே நிலவுகிறது.
இறந்தவர் சொத்து பத்துகளை விட்டுவிட்டுப் போயிருந்தால், ‘நீ, நான்’ என முண்டியடித்துக் கொண்டு, குழப்பம் விளைவித்து, தகுந்த பேரம் பேசி, அப்படிப்பட்ட பேரம் படிந்து வருமாயின் யாராவது ஒருவர் கொள்ளி போட முன் வருவர். இதே இறந்து போனவர் பணம் காசு எதுவும் சேர்த்து வைக்காமல் போயிருந்தால், இந்தப் பொறுப்பை யாராவது ஒருவர் தலையில் கட்டிவிட்டு சத்தம் இல்லாமல் நழுவி விடவே பார்ப்பர்.
இந்த நேரத்தில் ஒரு பெண், முதன்மையாகப் புகுந்தவீட்டு சொந்தத்தினர், வேறு வழி இல்லாமல் போனால் பிறந்த வீட்டு சொந்தத்தினர் யாருடைய கையைக் காலைப் பிடித்தாவது, இறந்தவரின் இருத்திச் சடங்குகளைச் செய்துமுடிக்க வேண்டும். இறந்த மனைவியுடைய இறுதிக்கடன்களைக் கணவர் செய்வது ஏற்புடையது என்பதை எல்லோரும் அறிந்திருப்போம்.
இதே பெண்களுக்கு அந்த உரிமை இல்லைதானே? ஆனால், நேரடியாக இல்லாமல், ‘மந்திரப் பூர்வமான’ அனுமதியுடன் வேறு யார் மூலமாகவும் தன் கணவரின் இறுதிக் காரியங்களை முழுமையாகச் செய்ய முடியும். எனவே, கையில் இருக்கும் பணத்தை வைத்து, நகைநட்டை விற்றாவது கணவனின் இறுதிக் காரியங்களைக் குறையில்லாமல் செய்து முடித்த பெண்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இதுவே, பிள்ளையில்லாத ஒரு கைம்பெண் இறந்து போனால், அவளுக்கு இறுதிக்கடன்களைச் செய்யும் பொறுப்பு அவளது பிறந்த வீட்டினரிடம் தட்டிக் கழிக்கப் படுகிறது.
காரணம் அவருக்கு இறுதிக் காரியங்களை அவரது கணவன் வழி சொந்தங்கள் செய்யவேண்டும் என்றால், அவர் அந்தப் பெண்ணுக்கு அபிமானப் புத்திரனாக வரிக்கப்பட வேண்டும். பதின்மூன்று நாள்களுக்கும், தொடர்ந்து அந்த வருடம் முழுவதும் காரியங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதில்லாமல் அவரது வருடாந்திரத் திவசங்களை அந்த நபர் செய்துகொண்டே இருக்க நேரிடும். செலவும், அலைச்சலும் மட்டுமே மிஞ்சும். இதையே பிறந்த வீட்டினர் செய்யும்போது, அது மூன்று நாட்களோடு முடிந்து போகும். அதற்கு மேல் எந்தப் பொறுப்பும் இல்லை. பொதுவாக அப்படிப் போடப்படும் கொள்ளியை ஆதரவற்றவர்களுக்கு இடும், ‘கோவிந்தா கொள்ளி’ என்று சொல்கிறார்கள்.
ஒரு பிள்ளை பெறாத பெண்ணின் மரணத்துக்கான மரியாதை இவ்வளவுதான்!
இப்படியெல்லாம் துயருற விடாமல் தானே எடுத்து செய்யும் நல்ல உறவினர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி அமைவது அவரவர் அதிர்ஷ்டம்தான். இதைச் செய்யத் தயங்குவதற்கு, மனித மனங்களை அடைத்திருக்கும், மூட நம்பிக்கைகளும் பயமும் கூட காரணமாக இருக்கிறது.
இறந்த பிறகு கொள்ளிவைக்க, ஈமக்கடன்கள் செய்ய, இறந்தவரின் ஆன்மா, நேரடியாக சுவர்க்கத்துக்குச் செல்ல, ஒரு மகன் வேண்டும் என்கிற கற்பிதத்துக்குப் பின், தொடர்ந்து பெண்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குப் பின் இருக்கும் மநுதர்ம சாஸ்திரம், சகோதரனுடன் பிறக்காத பெண்களுக்கு பாதகமாக என்னவெல்லாம் சொல்லி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
மநு தர்ம சாஸ்திரமானது தனது மூன்றாவது அத்தியாயத்தில், ஓர் ஆண் எத்தகைய பெண்களை மணக்கக் கூடாது என்ற ஒரு பட்டியலை வைத்திருக்கிறது. அதில் 11 வது ஸ்லோகத்தில் கூடப்பிறந்த சகோதரன் இல்லாத பெண்ணை மணக்கக் கூடாது, தந்தை யார் என்று தெரியாத பெண்ணையும் மணக்கக் கூடாது என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.
இதைவிட ஒரு பாதுகாப்பற்ற இழிவான இடத்தில் பெண்களை நிறுத்த முடியாதல்லவா? இதுவும் கூட யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்தாத விஷயம் என்பதால், இதற்கு முரணாகச் சில விஷயங்கள் மநுஸ்மிருதியிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவை அனைத்தும் சொத்து பாகப்பிரிவினை, ஆட்சி அதிகார உரிமை போன்ற விஷயங்களுக்காகவும், ஈமக் கிரியைகள் செய்வதற்காகவும் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. பணம் இல்லாத விளிம்பு நிலை மனிதர்களுக்கு எப்பொழுதுமே எந்த கழுவாயும் உதவாது.
புத்திரர்கள் இல்லாமல் மகள் மட்டும் இருந்தால், அவளை மணம் செய்து கொடுக்கும் போது மாப்பிள்ளையிடம், ‘இவளுக்குப் பிறக்கும் மகனை எனக்கு அளித்து விட வேண்டும்’ என்று ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்படி அப்பெண்ணுக்குப் பிறந்த மகனைத் தன் வம்சத்தவனாக வளர்த்து தன் சொத்துக்களை அவனுக்கு அளிக்க வேண்டும். அரசனாக இருந்தால் அரசாட்சியை அளிக்க வேண்டும். (மநு 9 : 127)
ஒருவனுக்கு அவனுடைய ஆத்மாவே அவனுடைய மகன். மகளும் மகனுக்குச் சமமானவள். அப்படிப் பார்த்தால் மகளும் இவனுடைய ஆத்மாவே தான் எனவே இவனுடைய தனம் மகளைத் தவிர்த்து வேறு யாருக்குக் கிட்ட முடியும்? (மநு 9 : 130)
ஒரு பெண் இறந்தால் அவளுடைய (ஸ்த்ரீதன) சீதனப் பொருள் அவள் பெண்களுக்குச் சேரும். புத்திரிகையாக மணந்தவளுக்கு இந்தச் சீதனப் பொருளும் வந்து சேரும். மேலும் இவள் மகனான புத்திரிகா புத்திரனுக்கு இவள் தந்தையின் சொத்தும் வந்து சேரும். (மநு 9 : 131)
புத்திரிகா புத்திரன் தன் தந்தையின் தனத்தையும் தாய் வழிப் பாட்டனின் தனத்தையும் அடைவான். இருவருக்குமே அவனே ஈமக் கிரியைகளைச் செய்ய வேண்டும்(மநு 9 : 132)
மகள் வயிற்றில் பிறந்த பிள்ளை, மகன் வயிற்றில் பிறந்த பிள்ளை இவர்களுக்குள் தர்மத்தின்படி வித்தியாசம் ஏதுமில்லை. மகனின் பெற்றோரும் மகளின் பெற்றோரும் அவர்களே அல்லவா? எனவே மகள் வயிற்றுப் பேரனுக்கும் மகன் வயிற்றுப் பேரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! (மநு 9 : 133)
ஒருவனுக்கு ஆண் சந்ததி இல்லாமல் இருந்து, தன் மகளை புத்திரிகையாக திருமணம் செய்து கொடுத்த பிறகு அவனுக்கு ஆண் சந்ததி பிறந்தால் என்ன செய்வது?
ஏற்கனவே பெண் வயிற்றுப் பிள்ளையை வேண்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்போது சொந்த மகன் பிறந்து விட்டான். சொத்தை யாருக்கு எவ்வளவு என்று கொடுப்பது? மூத்தவனுக்கு உத்தாரம் எனப்படும் கூடுதல் பங்கைத் தர வேண்டுமே, அது யாருக்குத் தருவது? அதுபோக மூத்தவளாகப் பிறந்த பெண்ணுக்கு உத்தார பாகம் உண்டா என்று பார்த்தால் – மூத்தவளாக பிறந்திருந்தாலும் பெண்ணுக்கு உத்தார பாகம் கிடையாது. பெண்களுக்கு இது எப்பொழுதுமே கிடையாது. அடுத்து, புத்திரிகா முறைப்படி பிறந்த பேரனான புத்திரிகா புத்திரனுக்கும் சொந்த மகனுக்கும் சமமாகப் பங்கு பிரிக்க வேண்டும். (மநு 9 : 134)
புத்திரிகையாக ஒருவனுக்கு மனம் முடித்துக் கொடுக்கப்பட்ட பெண் சந்ததிகளை அடையாமலேயே இறந்து போனால் அப்போது என்ன செய்வது? சொத்தில் யாருக்கு உரிமை?
பெண்ணை மணந்த மாப்பிள்ளைக்குச் சொத்தில் முழு உரிமையும் உண்டு. இதில் சந்தேகமில்லை. (மநு 9 : 135)
புத்திரிகையாக ஒப்பந்தம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவளின் தந்தைக்கு ஆண் சந்ததி இல்லை எனும் போது அவள் வயிற்று மகனே அவள் தந்தையின் சொத்து மொத்தத்தையும் அடைந்து அந்தத் தந்தைக்கு அதாவது பாட்டனுக்கு ஈமக் கிரியைகளைச் செய்ய வேண்டும். (மநு 9 : 136)
ஒருவன் புத்திரனைப் பெற்ற உடனே சொர்க்கம் முதலான நல்லுலகங்களை ஜெயித்தவனாகிறான். பேரன் பிறந்தவுடன் அவ்வுலகங்களில் நெடுங்காலம் வாழ்பவனாகிறான். அந்தப் பேரனுக்கு மகன் பிறந்தால் சூரியலோகத்தை வென்றவனாகிறான். (மநு 9 : 137)
மகனுடைய மகனுக்கும் மகளுடைய மகனுக்கும் பேதம் ஏதுமில்லை இருவருமே பரலோக வாசத்தைப் பெற்றுத் தருவார்கள் அதாவது புத்திரிகா புத்திரனும் ஒருவனுக்குப் புண்ணிய லோக வாசத்தைப் பெற்றுத் தருகிறான். (மநு 9 : 139)
புத்திரிகா புத்திரன் ஈமக்கடன்கள் செய்யும் போது முதலில் தன்னுடைய தாய்க்கும் அடுத்து தாய் வழி பாட்டனுக்கும் அதற்குப் பிறகு தாய் வழிப் பாட்டனின் தந்தைக்கும் பிண்டம் அளிக்க வேண்டும். (மநு 9 : 140)
அதாவது இங்கே பல விஷயங்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டிருப்பது சொத்துகளைப் பாதுகாக்க மட்டுமே. மற்றபடி, தன் தகப்பனின் சொத்துகளுக்கும் சரி, பெற்றோர்களின் ஈமச்சடங்குகள் செய்வதிலும் சரி, பெண்களுக்கு நேரடியாக எந்த உரிமையும் வழங்க, எந்த ஒரு தருமமும் தயாராகவே இல்லை.
என்னதான் இன்றைய அரசியல் சட்டங்கள், பெற்றவர்கள் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டு என்று சொன்னாலும், நடைமுறையில் நிறைய முரண்கள் இருக்கவே செய்கிறது. இன்றளவும், தங்களுக்குச் சட்டப்படி சேர வேண்டிய உரிமைகளைப் பெண்கள் போராடியே பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. காரணம் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில், பலரும் தருமத்தையும் மதிப்பதில்லை, சட்டத்துக்கும் கீழ்ப்படிவதில்லை.
நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், ‘Hindu Code Bill’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்த செய்தியை நாளிதழ்களில் பார்த்துவிட்டு பதைபதைத்தார் காஞ்சி சங்கராச்சாரியார்.
“இந்தச் சட்டம் வந்தால் ஸ்திரீ தர்மமே பாழாயிடும். ஸ்திரீகளுக்குப் பாத்தியமோ, சம்பாத்தியமோ இருக்கக் கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கிறதுதான் ஸ்திரீக்கு அழகு. இப்படிப்பட்ட தருமத்தை நேரு நொறுக்கிட்டார். நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தனும்” என்று, தன்னால் இயன்றவரை, இதற்கு எதிராகக் கூட்டம் போட்டு பெண்களை வைத்தே அதற்கு எதிராகப் போராடினார் என அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, இந்தப் போராட்டங்களை முன் நின்று ஒருங்கிணைத்த அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ‘இந்து மதம் எங்கே போகிறது’ நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார். (பக்கம் 108 – 112)
வரிசையாக, ஏழு, எட்டு, அதற்கு மேலும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் காலத்தில் நாம் வாழவில்லை. அதுவும், குடும்பக்கட்டுப்பாடு வசதி ஏற்பட்டபின், ஒரே பிள்ளையுடன் நிறுத்திக் கொண்டவர்கள் அதிகம் இருக்கும் சமூகத்தில் வசித்துக் கொண்டிருக்கிறோம். பெண்பிள்ளைகளை மட்டுமே பெற்றவர்கள், அவர்களை நன்றாகப் படிக்கவைத்து, சொந்தக் காலில் நின்று பொருள் ஈட்டுபவர்களாக ஆளாக்கி, அதன்பின்புதான் திருமணம் செய்துகொடுக்கிறார்கள். அத்தோடில்லாமல், சொத்துகள் வைத்திருப்பவராயின் அவர்களது சொத்துகளுக்கும் இந்தப் பெண்கள்தான் வாரிசாக இருக்கிறார்கள்.
திருமணம் செய்துகொள்ளும் ஆண்களும் சரி, அவர்களது குடும்பத்தினரும் சரி, இதையெல்லாம் அறிந்துதான், அந்தப்பெண்ணை மணமுடிக்கிறார்கள். சொத்து என்று வரும்போது, உரிமை கொண்டாடுவதையும், ஈமக் கிரியைகள் செய்யும் சமயத்தில், அதற்கு அவள் பெற்ற பிள்ளையை அனுமதிக்காமல் இழுத்துப் பிடிப்பதையும், இங்கே சகஜமாகப் பார்க்கலாம்.
நோய்களுக்கு எதிராக, ஒருவருடைய ஆயுளை நீட்டிக்க எவ்வளவோ மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. வயோதிகத்தில் வலி வேதனை இல்லாமல், நல்லவிதமாக அவர்களைப் பராமரிக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.
ஆனால் இறந்த பின் போகும் ஒரு கற்பனை உலகத்துக்கான பயணச் செலவுகளுக்கு என, கடன்பட்டு காசு செலவு செய்வது தும்பை விட்டு வலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.
இங்கே ஓர் உயிர் பிரிந்தால், சண்டை சச்சரவுகள் இல்லாமல் அந்த உடலை மரியாதையுடன் எரியூட்டி / நல்லடக்கம் செய்வது மட்டுமே நம் தலையாய தருமம். அதை விடுத்த மற்ற எல்லாமே அலங்கரிக்கப்பட்ட பொய்களே.
தொடரும்…
- உள்ளிருந்து ஒரு குரல்