வாழ்க்கை என்பது எப்போதுமே போராட்டம்தான். Struggle for existence survival of the fittest என்று சார்லஸ் டார்வின் கூறியுள்ளார். இயற்கையில் போராட வலு உள்ள உயிர்களே பிழைக்கும் என்பது பரிணாமத்தில் கண்டறிந்த உண்மை. புற்றுநோயில் இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. பயந்தால் யாருமே வாழ முடியாது.

வாழ்நாள் முழுவதும் நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எப்போதும் வெளியில் உள்ள கிருமிகளிடம் போராடி போராடியே நம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன. வெள்ளை அணுக்கள் போராடவிட்டால் நாம் யாரும் உயிருடன் இருக்கவே முடியாது.

அப்படி இருக்கும்போது புற்றுநோயில் மட்டும் என்ன புதிய வகையான போராட்டம் வந்துவிடப் போகிறது? கொஞ்சம் அதிகமாகப் போராடுகிறோம் அவ்வளவுதான். போராடினால்தான் நாம் பிழைக்க முடியும். போராடுவதற்கான மன உறுதியை நாம் கொள்ளவேண்டும். இது ஒரு தொடர் போராட்டம். அதற்கு மாறாக பொதுப்புத்தியில் புற்றுநோய் வந்தால் இறந்துவிடுவார்கள், பிழைக்க மாட்டார்கள் என்று பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதன் விளைவாகவே புற்றுநோய் வந்தாலே எல்லாரும் பயந்துவிடுகிறோம். பலர் புற்றுநோய் வந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை.

மருத்துவம் குறித்து அறிந்தவர்கள்கூடப் புற்றுநோய் வந்தால் தகுந்த சிகிச்சைக்குச் செல்வதில்லை. அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்று ஏதேதோ மருத்துவம் பார்த்து, வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள்.

புற்றுநோய் வந்தவர்களின் பயமே இறப்பதற்கு 50 சதவீதத்துக்கு மேல் காரணம். பயம் இல்லை என்றால் நிச்சயமாக புற்றுநோயை வென்றுவிட முடியும்.

அகில இந்திய அறிவியல் இயக்கத்தில் என் நண்பர் ஒருவர் அறிவியல் அறிஞர். அவருக்கு வயது 65க்கு மேல். ஆனால், அவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோய் இருக்கிறது. பொதுவாக குழந்தைகளுக்கு என்றால், ரத்தப் புற்றுநோய் நான்காம் நிலையில் இருந்தால்கூட முழுமையாகக் குணப்படுத்திவிடலாம் என்பார்கள். அப்படி ஏராளமான பேர் குணமாகி, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்களுக்கு என்றால் குணமாக்குவது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவத்தையும் பொய்யாக்கும் விதமாகவோ அல்லது மருத்துவத்திற்கு ஒரு சவாலாகவோ இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருப்பவர் டெல்லி நண்பர். 15 ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டு, நன்றாகச் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தினமும் அதற்காக ஒரு தனி மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட காலத்தில் செக்கப் சென்று வருகிறார். தன்னுடைய மன தைரியத்தில்தான் தனது வாழ்க்கையின் நாட்களை நீட்டித்துக்கொண்டிருக்கிறார்.

கோவையில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய். பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வருகிறார். லீவு எடுக்க முடியாத சூழலில் லீவு எடுக்க வேண்டாம் என்று வைராக்கியத்துடன், அறுவை சிகிச்சை முடிந்தபின் வேதி சிகிச்சை எடுத்துக் கொண்டே அலுவலகத்துக்கும் சென்று, பணிபுரிந்து வருகிறார். வேதிசிகிச்சை கண்டு பெரிதாக அவர் அலட்டிக் கொள்வதே இல்லை. அவரைப் போன மாதம் சந்தித்தபோது மிரண்டுவிட்டேன் அவர் தைரியத்தைப் பார்த்து. எவ்வளவு துணிச்சல் உள்ளவர். 38 வயதுதான் அவருக்கு.

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் துணிச்சலுடன் மன தைரியத்துடன் இருந்தால் தான் நீண்ட காலம் வாழ முடியும் என்று மருத்துவமும் மருத்துவர்களும் அறிவியலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையிலும் அதுதான் உண்மை. அப்படித்தான் நான் நெஞ்சுரத்தோடு புற்றுநோயை எதிர்கொண்டேன்.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர் வழக்கம்போல் அறிவியல் இயக்கப் பணிகளுக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். மார்பகப் புற்றுநோயின் மூன்றாவது நிலைக்குப் பின்னர் ஒருவர் சாதாரணமாக செயல்பட முடியுமா என்று.

6 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு செக் அப் சென்றபோது, அவர்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தனர். காரணம் புற்று நோயிலிருந்து மீண்டு வந்து மிக மிக நன்றாகச் செயல்படுவதால், எனக்குச் சிறப்பு செய்ய விரும்பினர். புற்றுநோயை எதிர்கொண்டு எப்படி மீண்டேன் என்பதை அவர்களிடம் தெரிவித்தேன்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.