சமீபத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் செய்த ஆய்வின் விவரம் செய்தித்தாளில் வந்துள்ளது. அதன் சாரம் இது தான் , சென்னை அரசுப் பள்ளிக் குழந்தைகளில் 5% மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். தங்கள் வீடுகளில், பக்கத்து வீடுகளில், உறவினர் வீடுகளில் என அவர்களின் நெருங்கிய உறவுகள், நண்பர்களாலேயே தங்களுக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளதாக அந்த ஆய்வில் கூறியுள்ளனர். குறிப்பாக 9 முதல் 11 வகுப்புகள் வரை பயிலும் 300 மாணவிகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறது செய்தி. கலந்துகொண்ட மாணவிகளில் 78% பேர் தாங்கள் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். 44% மாணவிகள் பாலியல் ரீதியாகத் பாதிக்கப்பட்டுள்ளதைக் கூறியுள்ளனர். 18% குழந்தைகள் உடல் ரீதியான துன்புறுத்தல்களும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுமாக இரு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

வீட்டின் அறைக்குள் வைத்துப் பூட்டப்படுதல் (7%), உதைத்தல் (32%), அறைதல் (82% ), கீழே தள்ளுதல் (14%) எனப் பொதுவான, உடல் ரீதியாகத் துன்புறுத்தல்கள் குறித்துத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 25% மாணவிகளின் பதில், மாதத்திற்கு ஒரு முறையாவது தங்களுக்கு இது போன்று நடந்துவிடுகிறது என்பதே. பெரும்பாலும் தந்தை, தாய், சகோதரர், அத்தை, மாமா, உறவினர்களால் உடல் ரீதியான துன்புறுத்தல்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர்.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் மாணவிகள் அடிக்கடி அந்தப் பிரச்னையைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர். தங்கள் தந்தை, உடன் பிறந்தவர்கள், சகோதரர்களின் நண்பர்கள், பக்கத்து வீடுகளில் வாழ்பவர்கள், உறவினர்கள் என இவர்களே பெரும்பாலும் பாலியல் சீண்டல்களுக்குக் காரணமாக இருக்கின்றனர். மிகக் குறைந்த சதவீதம் புதியவர்களால் ஏற்படுகிறது என்பதும் அறியப்பட்டது.

94% குழந்தைகள் தங்கள் மீதான இப்படிப்பட்ட வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வுடன்தான் இருக்கின்றனர். ஆனால், இது பற்றி வெளியே சொல்வதைத் தவிர்த்துவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. காரணம் இதை மூன்றாம் நபரிடம் சொல்வதால் விளைவுகள் ஏதும் நிகழ்வதில்லை. ஆகவே நாங்கள் வெளிப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளனர். மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய இடம் இது.

இந்த ஆய்வின் முடிவுகளை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஒரே ஒரு பள்ளியில் படிக்கக்கூடிய 300 குழந்தைகளை எடுத்து ஆய்வு செய்யும்போது, இத்தனை பிரச்னைகள் வெளிவருகின்றன. பெண் குழந்தைகள் என்றாலே இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இந்தச் சமூகம் முழுமையுமே பெண் குழந்தைகள்  மீதான வன்முறையை இயக்குவதாகக் கட்டமைக்கப்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய குழந்தைகளிடம் இது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டால், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண் குழந்தைகள், இந்தச் சமூகத்தில் படும் துயரங்களும் ஒடுக்குமுறைகளும் நமக்கு நன்கு அறிய வரும். கல்வியால் நாம் உயர்ந்து நிற்கிறோம், பெண் கல்வியில் நாம் முன்னோக்கி வளர்கிறோம் என்று உரக்கக் குரல் கொடுக்கிறோம். ஆனால், அந்தக் கல்வி தரக்கூடிய அறிவுதான் என்ன?

வகுப்பறைகளிலும் இந்தச் சமூகத்திலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் பாங்கு குறித்து நாம் வெளிப்படையாகப் பேசுவது ஏன் தவிர்க்கப்படுகிறது? இது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளின் நீட்சிதான் பெண் குழந்தைகளது அடுத்தடுத்த நகர்வுகள், திருமண உறவில் வன்முறை, குடும்ப வன்முறை என அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.

பெரும்பாலும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான சிக்கல்களுக்கு ஆளாகின்றனர் என்றால் அதன் அடிப்படை வீட்டிலிருந்தே தொடங்குகிறது. உடல் ரீதியான துன்புறுத்தல், மன ரீதியான துன்புறுத்தல், பாலியல் வன்முறைகள் என அனைத்து வகையிலும் வீடுகளிலிருந்தே தொடங்குகின்றன. காலம் காலமாக இந்த ஒடுக்குமுறைகள் தங்களுக்கு நிகழ்வதும் இதற்கான தீர்வுகள் கிடைக்காததும் பெண்களை விரக்தி மனநிலைக்கு அழைத்துச் செல்கின்றன.

யாரிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்ற மனநிலையால் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழும் மனோபாவம் பெற்றுவிடுகின்றனர்.

பெண் குழந்தைகள் பள்ளியில் படித்தாலும் சரி, கல்லூரியில் படித்தாலும் சரி, எந்த வயதிலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது குரல்வளைகள் நெறிக்கப்படுவது போலவே இருப்பதால் தங்களுக்கான பிரச்னைகளை வெளியில் பேச மறுக்கின்றனர்.

இவற்றையெல்லாம் கடந்துதான் ஒரு பெண்குழந்தை இந்தச் சமூகத்தில் அதன் பாதையை அமைத்துக்கொள்கிறது. ஓரிடத்தில் வந்து தன்னை நிரூபித்துக்கொள்கிறது. ஒரு வேலையிலோ அல்லது ஒரு துறையிலோ சிறந்த பெண்ணாகத் தன்னை வளர்த்துக்கொள்ள, மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்த பிறகுதான் இயலுகிறது.

எனில் அதற்கான நம்பிக்கையும் மன உறுதியையும் வாழ்வியல் திறன்களையும் தரக்கூடிய கல்விமுறை நம்மிடம் இருக்கின்றனவா? அதை நாம் திரும்பத் திரும்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்று எழுதிய கட்டுரையின் ஒரு தொடர்ச்சியாகவே இதை நாம் பார்க்கலாம். பெண் குழந்தைகளுக்கு இங்கு தொடர்ந்து பாதுகாப்பு மறுக்கப்பட்டு வருகின்றது. மறைமுகமாகவும் நேரடியாகவும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு  நிராகரிக்கப்படுகிறது. அது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் வீடுகளிலிருந்து, சமூகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது எனில், நாம் திரும்பக் கேட்பது பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு எங்கே? அவர்களுடைய பிரச்னைகளை அவர்கள் எங்கு சொல்லித் தீர்வு காண்பார்கள்? அரசு எடுக்கக்கூடிய முயற்சிகளும் தாமரை இலை தண்ணீர் போலவே இருப்பதால் தான் இன்று பல பெண் குழந்தைகளுக்கு மரணம் நிகழ்கிறது. பள்ளியும் பாதுகாப்பு இல்லை, வீடும் பாதுகாப்பில்லை. சமூகமும் பாதுகாப்பு இல்லை. இந்தச் சூழல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நீடிக்கும்? பெண்கள் சார்ந்து இயங்கக் கூடிய அமைப்புகளும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் சற்றுக் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம் இது.

போக்சோ இருந்தும் பயன் என்ன? 14417 பெண் குழந்தைகளால் அழைக்கப்பட்டால் தமிழ்நாடு தாங்குமா? குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள் முழு வீச்சில் இயங்குகின்றனவா? இப்படிப் பல கேள்விகள் இருந்தாலும் நடைமுறை சாத்தியக்கூறுகளை நோக்கி நகர வேண்டும் .

அதற்கான தீர்வு, பள்ளிக் கல்வி முறையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. பெண் குழந்தைகளிடையே அவர்களை இந்தச் சமூகம் நடத்தும் விதம், அவர்களுக்கான உடல் ரீதியான துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளிப்படுத்த வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆகவே இப்படியான வாய்ப்புகளை உருவாக்கும் களங்களாக வகுப்பறைகள் மாற வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு விதை போடும் இடமே பள்ளியாக இருக்க முடியும். அப்படியான பாதுகாப்பு என்பது வேலை வாய்ப்புகள் மட்டுமல்ல, அதற்கான கல்வி அறிவு மட்டுமல்ல. சுய மரியாதை, தற்காப்பு, தன்னை உணர்தல், தனக்கு இழைக்கப்படும் அநீதியைக் கேள்விக்குட்படுத்துவது என இவற்றை உள்ளடக்கியக் கல்வி தரப் பட வேண்டும். எனில், முதலில் அவர்களுக்கான பிரச்னைகளை உரையாட, விவரிக்க வாய்ப்புகள் உருவாக்குவதும் இணைந்தது தான் கல்வி முறை.

அரசும் பெற்றோரும் கல்விச் செயல்பாட்டாளர்களும் இவற்றை கவனத்தில்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.