நாம் குடும்பமாக வாழும் சமுதாய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பங்களில் மகிழ்ச்சியைப் பெரிய அளவில் குறைப்பது, குழந்தைகளின் நலன் குறித்த கவலையும் அவர்களின் எதிர்காலம் குறித்த பயமும் தான்.
வேறு பிரச்னைகளை நிதானமாகக் கையாளும் பெற்றோரால்கூட குழந்தைகள் குறித்த பிரச்னைகளை நிதானமாகக் கையாள முடிவதில்லை.
குழந்தைகள் மகிழ்ச்சியைக் கொட்டித் தரும் பொக்கிஷங்கள் தாமே? அப்படி என்றால் ஏன் குழந்தை வளர்ப்பு எப்போதும் மகிழ்ச்சியைத் தருவதில்லை?
ஏனென்றால் பல நேரத்தில் நாமாக மனமுவந்து அன்பிற்காக மட்டும் இந்தப் ‘பெற்றோராக இருத்தல்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவில்லை. திட்டமிடாத கருவுறுதல், குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு, சமுதாயத்தின் அழுத்தம், உறவினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் எனக் காரணங்கள் நீண்டுகொண்டே செல்லும்.
இதே மாதிரியான காரணங்கள் குழந்தை வளர்ப்பின் போதும் நம்மையும் அறியாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் காரணங்கள் இவ்வாறு தொடருமேயானால், அது குழந்தைகளுக்கும் சரி, நமது எதிர்காலத்திற்கும் சரி, எந்த நன்மையும் கொண்டு வரப்போவதில்லை.
இந்தக் காரணங்கள் தந்த நெருக்கடியினால், அறிந்தோ அறியாமலோ குழந்தைகளை நமது உடமையாக, நமது கெளரவத்தின் அடையாளமாகவும் கருதுகிறோம்.
அதனால்தான் குழந்தைகளாக இருக்கும்போது, பிறர் முன்னால் அடம்பிடித்தால் அல்லது தவறு செய்தால், மானம் போகிறதே என்று அங்கலாய்க்கிறோம். உங்கள் மானம் போகிறது என்று அங்கலாய்ப்பதற்கு முன்னால் சிறிது யோசியுங்கள்.
அது உங்களிடம் இருந்து, குழந்தை கற்றுக்கொண்ட குணம் என்றால் நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். வேறு எங்கிருந்தாவது குழந்தை கற்றுக்கொண்ட குணம் என்றால், அதைப் பொறுமையாகக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மானத்தை, பெருமையைத் தயவுசெய்து குழந்தைகள் மேல் வைக்க வேண்டாம்.
இந்தப் பெருமை இதோடு நின்றுவிடுவதில்லை. வாழ்க்கைத் துணை அல்லது கணவர் கொடுமை செய்தால்கூட, தன்னுடைய குடும்ப கௌரவத்திற்காகத் தங்களின் மானம் காக்க, அதைப் பொறுத்துப் போகச் சொல்கிற அவல நிலைதான் இங்கு உள்ளது .
அடுத்ததாக கல்வி. தோழி ஒருத்தி சொன்னார், “எனக்குச் சிறு வயதில் நடனம் கற்றுக்கொள்ள மிகவும் ஆசை. அதற்கான சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அமையவில்லை. எனவே, எனது குழந்தையை நான் நடனப் பள்ளிக்கு அனுப்ப விரும்புகிறேன். அவள் நன்றாக நடனம் ஆட வேண்டும்” எனத் தனது கடந்து போன கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவருடைய குழந்தையின் வயது 9.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாருக்கு நடனம் பிடிக்கிறதோ, அவர்கள்தானே நடனம் கற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக அவருடைய குழந்தையைக் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்? அவருக்குக் கால்கள் நன்றாகவே இருக்கின்றன. வயது ஒரு தடையே அல்ல. பொதுவாக நம் கடந்துபோன கனவுகளை, இப்படித்தான் குழந்தைகளிடம் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.
தன்னுடைய இளம் வயதில் சோகமே உருவாக, வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைத்து, குடும்பச் சிக்கல்களை, அலுவலகம் சார்ந்த சவால்களை, ஒருவித மன அழுத்தத்துடனும் பயத்துடனும் அணுகிவரும் காவியா சொன்னது, “என்னுடைய அம்மாவும் அப்பாவும் டாக்டர்கள். அவர்கள் பெரிய ஹாஸ்பிடல் வைத்திருக்கிறார்கள். அதற்காக என்னைக் கட்டாயப்படுத்தி மருத்துவம் படிக்க வைத்தார்கள். எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை. ஏனென்றால் நான் படிக்க ஆசைப்பட்டது ஆங்கில இலக்கியம். எனவே கல்லூரிக் காலத்தில் கல்லூரியிலோ கல்லூரி நண்பர்களிடமோ மனம் ஒட்டவே இல்லை. அதன் பின்னர் ஒரு மருத்துவரைத் தான் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது இருவரும் பிஸியாக இருக்கிறோம். என் இரண்டு குழந்தைகளிடம் செலவிட நேரம் கிடைக்கவே இல்லை. என்னுடைய வேலையிலோ அல்லது என்னுடைய மருத்துவமனையைக் கவனிக்கும் பொறுப்பிலோ எனக்கு சிறிதளவும் திருப்தி இல்லை; விருப்பமும் இல்லை. ஒவ்வொரு முறை ஹாஸ்பிடலுக்குச் செல்லும் போதும் மனம் பாரமாக உள்ளது” என்று சலனமில்லாமல் சொன்னார்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள், விருப்பமில்லாத படிப்பும் வேலையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் எப்படித் தர முடியும்? அல்லது அவர் இழந்த கல்லூரிக் காலத்தை யாராவது மீட்டுத்தர தான் முடியுமா? எனவே, குழந்தைகளின் படிப்பிலும் வேலையிலும் நம் ஆசைகளைத் திணிப்பதை விடுத்து அவர்களுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் தருவோம். ஏனென்றால் அதுதான் அவர்களுக்குத் தன் மீதான நம்பிக்கையை வளர்க்கும், வாழ்க்கையின் மீது பிடிப்பையும் உண்டுபண்ணும்.
நீங்கள் பாவம் செய்யாதவர், கர்மவினை இல்லாதவர் என்பதை நிரூபிக்கப் பிறந்தவர்கள் அல்லர் குழந்தைகள். உங்களின் சொத்துகளுக்குப் பொறுப்பேற்கும் வாரிசாகவோ நீங்கள் சம்பாதித்து வைத்த சொத்துகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்லவோ பிறந்தவர்கள் அல்லர். அவர்கள் உங்கள் வழியாகப் பூவுலகிற்கு வந்தவர்கள். அதை உங்களுக்காகவே வந்தவர்களாக தப்புக்கணக்குப் போடாதீர்கள்.
உங்கள் வாழ்வில் குழந்தைகள் ஒரு பகுதியாக இருப்பதற்கான காரணம் அன்பைக் கொடுக்க, அன்பைப் பெற என்ற காரணங்களைத் தவிர்த்து வேறு என்ன காரணமாக இருந்தாலும் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக உங்களை ஆணாக நிரூபிக்க வேண்டும் என்று காரணம் இருந்தால், ஆணழகன் போட்டிக்குச் சென்றோ ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியோ பழு தூக்கியோ அல்லது வேறு வழிகளிலோ உங்களை நிரூபிக்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் சாதிக்க முடியாத ஒன்றை அவர்கள் மூலமாகச் சாதிக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருந்தால், உங்களுக்கு கை, கால், மூளை நன்றாகவே வேலை செய்கிறது என்பதை மறவாதீர்கள்.
தான் உருவாக்கிய பிசினஸை, தான் கட்டியெழுப்பிய பெரிய அலுவலகத்தை, தன் குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகளை, அதற்குத் தயாரிப்பதற்கு முன்னால் அவர்களின் ஆர்வம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பொறுப்பாளர் என்பது வேறு; உரிமையாளர் என்பது வேறு. பெற்றோராக இருத்தல் என்பது பொறுப்பு மட்டுமே. பொறுப்பாளர்களாக இருக்கும் பெற்றோருக்குக் குழந்தை வளர்ப்பு எளிதாகவே அமைகிறது. எப்போது உரிமையாளர்களாக மாறுகிறார்களோ, அப்போதுதான் சிக்கல்களும் கவலைகளும் ஆரம்பிக்கின்றன.
இறுதியாக, திட்டமிடாத குழந்தைப்பேற்றினால் குற்ற உணர்வோடும் ஒருவித இயலாமையுடன் வாழும் பெற்றோருக்கு நான் சொல்வது இதுதான். நீங்கள் போட்ட திட்டங்களில் இந்தக் குழந்தை பிறப்பு ஒரு தொய்வு மட்டுமே ஏற்படுத்தியது என்பதை உணருங்கள். உங்கள் கனவுகளுக்கு இந்தக் குழந்தை பிறப்பு தடை எதுவும் ஏற்படுத்தவில்லை என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். ஏனென்றால் குழந்தைகள் அவர்கள் வாழ்வை வாழ வந்தவர்கள் தாம். உங்கள் விஷயத்தில் குழந்தைகள், “எதிர்பாராத ஒரு பரிசு” என எண்ணிக்கொண்டு குழந்தை வளர்ப்பை மகிழ்ச்சியாகச் செய்ய முயலுங்கள். எப்போதும் குற்ற உணர்வுக்கு இடம் தராதீர்கள்.
பெற்றோராக இருத்தல் என்பது பொறுப்பு மட்டுமே. அந்த நீண்டநாள் பொறுப்பு எந்நேரத்திலும் உரிமையாளராக, உடமையாளராக மாறாத வண்ணம், குழந்தைகளை கௌரவத்தின் குறியீடுகளாகவும் கருதும் மனப்பான்மையை விட்டொழித்து, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வைக் கொண்டாடுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.