என் முன்னால் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அபர்ணாவின் வயது முப்பத்தி எட்டு. வீட்டில் கணவர் மற்றும் கணவர் வீட்டார் மரியாதை குறைவாக நடத்துவதாகவும் மதிப்பதே இல்லை என்றும் பேச அனுமதிப்பதே இல்லை எனவும் விம்மலுடன் கூறி, அழுகையை நிறுத்தவே சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். மிகுந்த சிரமப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், உணர்வு ரீதியாகத் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் சொன்னார். அடித்துவிட்டதாகச் சொல்லி கன்னத்தைக் காட்டினார். சிவந்திருந்த கண்களைப் பார்த்து இப்படி அடிக்கடி அடிப்பாரா என்று கேட்டேன். ஆழ்ந்த பெருமூச்சுடன், ஆமா நான் எதிர்த்துப் பேசும் போது, நான் எதிர்த்துப் பேசுவது பிடிக்காததால், கோபத்தில் அடித்துவிடுவார். குடிப் பழக்கம் எல்லாம் இல்லை.சிலநேரம் அவரை மீறிக் கோபப்படும் போது என்னை அடித்து விடுகிறார் என்று சொன்னார்.
அவரிடம் நான் கவனித்தது, கணவர் கோபத்தில் அடிப்பது அவருக்கு அவ்வளவு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. உணர்வுப்பூர்வமாக அவரை மரியாதை குறைவாக நடத்துவதுதான் அவருக்குப் பெரிய மனக்குறையாக இருக்கிறது. ஆனால், இரண்டுக்கும் இருக்கிற தொடர்பை இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. ரொம்பக் கோபம் வந்தால் தான் என்னை அடிக்கிறார் மற்றபடி பரவாயில்லை, என்பதன் பொருள், இந்தக் கோபம், இந்த உடல் சார்ந்த துன்புறுத்தல் எல்லாம் அவர்கள் இருவருடைய அன்பின் ஒரு பகுதி, அவர்களுக்கிடையேயான புரிதலின் வெளிப்பாடு என்பதே.
ஒரு முறை தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கையில், தோழியின் நட்பு வட்டாரத்தில் இருந்து, 20 வயது நிரம்பிய, வேலைக்குப் போய்க்கொண்டு சுயமாகச் சம்பாதித்துக்கொண்டிருக்கும் இளம்பெண் இப்படிப் பேசிக்கொண்டிருந்தார். “அம்மாவுக்குக் கோபம் வந்தால் எல்லாக் கோபத்தையும் என்மீது காட்டுவார்; அடித்துவிடுவார்; நன்றாக அடித்துவிடுவார்” என்று சொன்னார்.
உன் அம்மா உன்னை அடிப்பதற்கு ஏன் அனுமதிக்கிறாய் என்று பதறிய என்னைப் பார்த்து அவர் வீசிய பார்வை, “உங்களுக்கு என்ன பிரச்னை?” என்பது போலிருந்தது. மேலும் அவர் சொன்னது இதுதான், “என் அம்மாதான் என்னையும் என் அக்காவையும் மிக கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். இப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். என் அம்மா என்னை அன்பு செய்கிறார், எனவே அடிக்கிறார்.”
இவர்கள் இருவருமே அன்பிற்கும் உடல் ரீதியான துன்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரவில்லை.
சிறு குழந்தைகளுக்கு விவரம் புரியாத வயதில், எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திருந்த வயதில், பெற்றோர்களிடமிருந்து தான் அன்பும் கிடைக்கும். அவர்களிடமிருந்தே தான் அடியும் கிடைக்கும். அப்போது இந்தப் பிஞ்சு மனங்கள் அன்பிற்கும் அடிக்கும் வித்தியாசம் தெரியாமல் அடியையும் அன்பாகவே பாவிக்கத் தொடங்கிவிடும். குழந்தைப்பருவத்தில் பதிந்த அந்த நம்பிக்கை வளர்ந்த பிறகும் தொடர்வதை, இந்த நிகழ்வுகளில் காணலாம்.
மேலும், இருவரிடமும் சுய மதிப்பு குறைவாக இருப்பதைக் காணலாம். ‘சுயமதிப்பு என்பது இந்த வாழ்வின் அடிப்படையான சவால்களைத் திறமையோடு கையாள்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதுவது ஆகும்’ என சுய மதிப்பு குறித்த தத்துவங்களுக்குப் பெயர்பெற்ற நத்தானியல் பிராண்டன் சொல்லுவார்.
இங்கு இருவருமே தாங்கள் அடி வாங்குவதற்குத் தகுதியானவர்கள் என்று கருதுகிறார்கள். அது ஒரு பிரச்னையாக இல்லை.
விமல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். கல்லூரித் தேவைகளுக்கு அதிகமாகவே வீட்டில் பணத்தை வாங்கிக்கொண்டு இருந்தார். அவருடைய பதினான்கு வயதில் தந்தை இறந்துவிட்டார். வீட்டில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார். தன் அம்மா, தன் முன்னால் உட்கார்ந்து கண்ணீர்விட்டு அழும்போதுகூட அவனால் அனுதாபத்துடன் நடந்துகொள்ளவோ தன் தாயின் கண்ணீருக்கான காரணத்தை உணர்ந்துகொள்ளவோ முடியவில்லை. மீண்டும் மீண்டும், நான் நன்றாகத்தான் இருக்கிறேன், அம்மா தேவையில்லாமல் அழுகிறார், நான் பாடங்களை ஒழுங்காகப் படித்து வருகிறேன். இதுவரை அரியர் பேப்பர்ஸ் எதுவும் வைக்கவில்லை என்று சொன்னாரே ஒழிய, தன் அம்மாவுடைய கவலையையோ கண்ணீருக்கான காரணத்தையோ புரிந்துகொள்ள முயற்சிகூட எடுக்கவில்லை.
அந்த மாணவருடைய இளமைப் பருவத்தைப் பற்றிப் பேசுகையில், தந்தை இருந்தவரை மிகுந்த கண்டிப்போடு வளர்த்ததாகவும், அவர் கொடுக்கும் தண்டனைகளுக்குப் பயந்து வளர்ந்ததாகவும், இப்போது பயம் இல்லை எனவும் அவருடைய அம்மா குறிப்பிட்டார்.
“முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும் புள்ளய அடிச்சு வளர்க்கணும்” என்ற இந்தப் பழமொழியை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பான்மையான மக்கள் அதை நம்பி வருகிறார்கள்.
உளவியல் கூறுவது இதுதான். குழந்தைகளை வளர்க்கும் போது அல்லது குழந்தைகளின் தவறுகளைத் திருத்துவதற்காக , உடல் சார்ந்த தண்டனைகள் வழங்கப்படும் போது, பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.
- அன்பிற்கும், துன்புறுத்தலுக்கும் (abuse) வித்தியாசம் தெரிவதில்லை.
- சுயமதிப்பு (self esteem) பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
- பெரும்பாலும் தன்னுடைய சந்தோஷத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்வார்கள்.
- மற்றவர்கள் மீதான புரிதலும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பதும் குறைவாகவே காணப்படுகிறது.
- தன்னுடைய அங்கீகாரத்திற்குப் பிறரைச் சார்ந்து, எப்போதும் பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்கு முயன்றுகொண்டிருப்பர்.
- இவர்களும் அன்பென்ற பெயரில், தாங்கள் நேசிப்பவர்களுக்கு வலியையும் துன்பத்தையும் கொடுப்பதற்குத் தயங்குவதில்லை.
- பெரியவர்கள் ஆகும்போது நன்மை தராத உறவுகளில் (abusive relationships) இருந்து வெளிவரத் தயங்குகிறார்கள்.
எனவே, குழந்தைகள் தவறு செய்தால் அவர்களுக்கு உடலளவில் தண்டனை வழங்குவது அல்லது அடிப்பது என்பது கண்ணாடியின் மீது விழுந்த கறையை கத்தியால் சுரண்டுவது போலத்தான். உடனே ஒரு சிறிய மாற்றத்தை அந்தக் குழந்தையிடம் உண்டு பண்ணினாலும், நீண்ட நாட்களுக்கு அவை கண்ணாடியில் விழுந்த கீறல்கள்தாம்.
அலுவலகத்தில் நமக்கு மேல் வேலை செய்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளைக்கூட எவ்வளவு மென்மையாகப் புரிய வைக்கிறோம். பொறுமையுடன் நடந்துகொள்கிறோம். அதே பொறுமையை நம் வீட்டுப் பிஞ்சுகளிடமும் காட்டுவோம். ஏனென்றால் அவர்கள் செய்யும் சின்னஞ்சிறு தவறுகளுக்குக் காரணம் அவர்களின் அறியாமை மட்டுமே.
சரி, குழந்தைகள் தவறு செய்தால் என்ன செய்யலாம்? எவ்வாறு நல்வழிப்படுத்தலாம்? இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
இறுதியாக எப்படிப் பார்த்தாலும் அன்பையும் தண்டனையையும் சமமாகக் கருத முடியாது. எனவே, குழந்தைகள் தவறு செய்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதும் அன்பின் வெளிப்பாடு என்பதை மறந்துவிட்டு, அன்பை அன்பாக மட்டுமே வெளிப்படுத்தி, கைகளினால் அணைப்பென்ற இதம் மட்டுமே கொடுத்து, வளமான எதிர்காலத்தை உருவாக்க துணை நிற்போம். நம் வீட்டுக் கண்ணாடி அரும்புகளுடன் வாழ்வைக் கொண்டாடலாம் வாங்க!
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
//சிறு குழந்தைகளுக்கு விவரம் புரியாத வயதில், எல்லாவற்றிற்கும் பெற்றோரையே சார்ந்திருந்த வயதில், பெற்றோர்களிடமிருந்து தான் அன்பும் கிடைக்கும். அவர்களிடமிருந்தே தான் அடியும் கிடைக்கும். அப்போது இந்தப் பிஞ்சு மனங்கள் அன்பிற்கும் அடிக்கும் வித்தியாசம் தெரியாமல் அடியையும் அன்பாகவே பாவிக்கத் தொடங்கிவிடும். குழந்தைப்பருவத்தில் பதிந்த அந்த நம்பிக்கை வளர்ந்த பிறகும் தொடர்வதை, இந்த நிகழ்வுகளில் காணலாம்//
உண்மை தோழர்! அழகாகச் சொல்லி விட்டீர்கள் ❤️ தொடர்ந்து எழுதுங்கள் 😍
நன்றி தோழர்💝💝💝