வடசென்னையின் மிகப் பெரிய வணிக மையமாக இருந்தது மூர்மார்கெட். மோர் மார்கெட் என்று மக்கள் அழைப்பர். ஊசி முதல் யானை வரை இங்கு வாங்கலாம் என்றும் அம்மா, அப்பா தவிர எல்லாம் கிடைக்கும் என்றும் பெருமையாகப் பேசப்பட்ட மூர் மார்கெட் எரிந்து சாம்பலான கதை உலகம் அறிந்ததே. இன்று வரை டெல்லியின் மீனா பஜார், கொல்கத்தாவின் பாரா பஜார், மும்பையின் சோர் பஜார்கள் பழமையும் பாரம்பரியமுமான இடங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் போது மூர் மார்கெட் மட்டும் எரிந்தது ஏன்? முதல் முறையாக நான் பார்த்து வியந்த வணிக மையம், சில தினங்களில் கருகி சாம்பலாக மாறியது. இன்றும் அதன் ஜுவாலைகள் என் இமைகளைச் சுடுகிறது, கருகிய வாசம் என் சுவாசத்தைச் சூழ்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, பார்க் டவுன் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என்று சென்னையின் இதயத் துடிப்பாக இருக்கும் இந்த இடத்தில் இருந்துதான் வடசென்னை மக்களின் துயரம் தொடங்குகிறது என்பேன். பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் வரை செல்லும், எண் 42 என்ற பேருந்தில் சென்றால், வடசென்னை மக்களின் வாழ்க்கைத் தரம் என்ன என்பதை கண்கொண்டு காணலாம். இது நம் சிங்காரச் சென்னை!
மூர் மார்கெட்டில் உள்ள மிகப் பெரிய கட்டிடங்களின் சுற்றுச் சுவர்களைச் சுற்றியும் கூவம் நதியின் கரையிலும் எத்தனை குடும்பங்கள்… இவர்களின் வாழ்க்கை எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் மாறியது இல்லை. வெளிப்புற சுவர்களில் இரண்டு ஆணி அடித்து அதில், சாக்குப் பைகளை இணைத்து தையல் போட்டும், தார்பாய்கள் கொண்டும், கட்டத் தகுதியற்ற புடவைகளைச் சேர்த்து வைத்து தைத்து கூரையாக மாற்றியும், ஆணியின் இருபுறமும் மாட்டிவிடுவர். தரையில் இரண்டு ஆணி அடித்து, கூரையின் நுனி பகுதியைக் கட்டுவார்கள். பக்கவாட்டில் புடவை, அட்டை, தெர்மாகோல் வைத்து மறைத்தும் விடுவார்கள். அவ்வளவுதான் வீட்டின் கட்டுமானம் முடிந்தது. ஆகாயத்தை மறைக்க ஒரு கூரை, அது தானே வீடு? தெருக்களில் உள்ள காகிதம், பிளாஸ்டிக், பாட்டில் இதனைச் சேகரித்து விற்பது, ரயில் நிலையத்தின் ஓரங்களில், மருத்துவமனையின் வாசலில், பூ, பழம், காய்கறி விற்பது, சற்று வசதி உள்ளவர்கள் இட்லி கடை, மதிய உணவு கடைகளைத் தெருவில் வைத்து விற்பது, பழைய புத்தகங்கள் விற்பது அல்லது அந்தக் கடைகளில் வேலை பார்ப்பது, அனைத்து வகையான பழைய பொருள்கள் விற்பதுமே இவர்களின் முக்கியத் தொழில்.
இங்கு பிறந்து, நடைபாதை கூரையில் வளர்ந்து, காதலால், பெற்றோருக்குத் தெரியாமல் கே.பி.பார்க்கில் நான்காவது மாடியில் வசிக்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து, மீண்டும் நடைபாதைகே வந்த ஒரு பெண்ணின் கதை.
திருமணம் ஆகாத பெண்கள், அவர்கள் வீட்டின் அருகில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு தேவதையாகத் தோன்றுவாள், ஆனால் திருமணத்திற்குப் பிறகும் எல்லோருக்கும் தேவதையாக இருந்தவள் பிரபா. நல்ல நிறம், நீளமான கூந்தல், அழகான உருவம். வீடே இல்லாதவளுக்கு மாடி வீடு, அதுவும் நான்காவது மாடியில் வீடு. அதிகமாகக் குழந்தைகள் வளரும் பிரிவில் இருந்ததால் எல்லோராலும் பிரபாக்கா, பிரபாக்கா என்று செல்லமாக அழைக்கப்பட்டாள்.
400 சதுர அடிக்கும் குறைவான, ஒரு வரவேற்பரை மட்டுமே கொண்ட அந்த வீட்டில், மாமனார், மகளின் மறைவிற்குப் பிறகு பேத்தியை வளர்க்கும் மாமியார், கணவனின் அண்ணன், அவர் மனைவி, இரண்டு குழந்தைகள், இவர்களுக்கு மத்தியில் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்த புதுமணத் தம்பதியினர் பிரபாவும் அவள் கணவரும்.
இன்று பெரிய வீடு, வசதி வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் சேர்ந்து வாழ்வது எட்டாக்கனி. இன்று மருமகள் மட்டும் அல்ல, மாமியாருக்கும் தனிக்குடித்தனம் தேவைப்படுகிறது.
தெரு ஓரம் வசித்தவள், நான்காவது மாடியில் வீடு. காதல் திருமணம், வீடு, மூன்று வேளையும் உணவு, மழைக்கும் வெயிலுக்கும் பயந்து ரயில் நிலையம் ஓட வேண்டாம். இயல்பாகவே எப்பொழுதும் மகிழ்ச்சியாக சிரிக்கும் இவள், இந்த வாழ்க்கையை வரமாக நினைத்தாள். பிரபாக்காவைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியின் எல்லை இது தானோ என்று தோன்றும்.
மூர்மார்க்கெட்டில் இப்படி ஓர் அழகான பெண்ணா என்று அவளைப் பார்பவர்கள் கன்னத்தில் கை வைத்தால், விரல்கள் பதியும் வரை கைகளைக் கன்னத்தில் இருந்து எடுக்க மாட்டார்கள்.
மாமியாரின் ஆட்டம் ஆரம்பம், “ஏய் பிரபா, இங்க வாடி, ஓடி வந்த மருமகளே, இந்த வயசுல கலியாணம் பண்ணிக்கத் தெரியும் வூட்டு வேல செய்யத் தெரியாதா? இந்தப் பாத்திரத்தைக் கழுவிட்டு, துணிய கீழ இருக்குற அடிபம்புல துவச்சி கொண்டு வா” என்றாள்.
துணிகளைத் துவைத்து முடித்து, சமையல் வேலையைத் தொடங்கினாள். மூன்று வேளையும் அரிசி உணவைச் சாப்பிடும் பத்துப் பேர் உள்ள குடும்பத்தில் இரண்டு கிலோ அரிசியைப் பெரிய பாத்திரத்தில் சமைப்பாள். கொளுத்தும் வெயிலில் மாடி வீட்டில், அனல் பறக்க சாதம் வெந்ததும், அதன் மீது ஒரு வடி தட்டு வைத்து மூடி, வடிக்கும் மேடையில் வைத்து வடிப்பாள். வடிதட்டின் ஓட்டைகள் வழியே, சாதத்தில் உள்ள மிச்ச நீர், சுடு அருவி போல் வழியும், அந்த நீராவி பட்டு அவள் முகம், கைகள் ரோஜா பூவைப் போல் சிவந்துவிடும். அவள் இதழ்களைக் குவித்து தன் இரண்டு கைகள் மீதும் ஊதிக்கொள்வாள். ‘அப்பாடி இன்னைக்கு ஒரு சோறுகூட வீணாக்கல, கிழவிக்கிட்ட இருந்து தப்பிச்சேன்’ என்று சிரித்துக்கொள்வாள்.
மூன்று வேலை உண்பது நியதி என்றால் ஒவ்வொரு மனிதனும் தன் உணவைச் சமைப்பதுவும் நியதியே. தாவரங்கள்கூட நின்ற இடத்தில் இருந்தே தன் உணவை சமைத்துக்கொள்கிறது. மனிதனில் மட்டும் ஏன் இத்தனை ஆண், பெண் என்ற வேறுபாடுகள்.
சற்று நேரம் உட்கார்ந்தவளை, ‘ஏய் இன்னாடி ஒரு வேல சமச்சதுக்கே வந்து உக்காந்துகுன? போடி, போய் காஞ்ச துணிய மடிச்சி கொண்டா’ என்றாள் மூத்த மருமகள். இளையவள் வந்துவிட்டால் மூத்தவளுக்குக் கொண்டாட்டம்தான். மாமியார் வருவதைப் பார்த்ததும் இருவரும் முழித்தனர். ‘இந்தாங்கடி பூ’ என்று டிசம்பர் பூவையும், கை செலவுக்குக் கொஞ்சம் காசும் கொடுத்தார் இருவருக்கும். பல வண்ணங்களில் மலிவாகக் கிடைக்கும் பூ, ஆம் தலைநிறைய பூ வைக்க வேண்டும் என்றால், மூன்று முழம் மல்லிகை தரும் அடர்த்தியை ஒரு முழம் டிசம்பர் பூ கொடுத்துவிடும், இது ஏழைகளின் பூ.
உறவினர்களுக்காக பிரபாவைச் சமைக்கச் சொன்னர்கள், அவள் மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்து நின்றாள், நிறை மாதக் கர்ப்பிணி. இரண்டு கிலோ மீன், இறாலை, வெயிலில் சிறு மனையில் அமர்ந்து, சுத்தம் செய்தார். சமைத்து, பரிமாறி, பாத்திரம் கழுவி, அடி பம்பில் தண்ணீர் அடித்து , நான்காவது மாடிக்குத் துக்கிச் சென்றாள். கடைசிக் குடத்தைச் சுமக்கும் போது, இடுப்பு வலி வந்து, துடித்து விழுந்தாள். மூன்றாவது குழந்தையும் பிறந்தது. மாமியார், மாமனார் காலத்திற்குப் பிறகு, தனிக்குடித்தனம் ஆரம்பம் ஆனது. பிரபாவின் வாழ்க்கை திசை மாறியது.
வரவு செலவு கணக்கு பார்ப்பது, வீட்டிற்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்கள் அனைத்தையும் பிரபாவின் கணவனே வாங்கி வந்துவிடுவான். அவளின் தனிபட்ட தேவைகளுக்குகூட அவளுக்கு, அவன் காசு கொடுப்பது இல்லை. இல்லத்தரசி என்றால் அவளுக்குத் தேவைகள் இருக்காதா?.அவள் தாய் வீட்டின் இயலாமையை, வறுமையைச் சுட்டிக்காட்டி காயப்படுத்துவான். ‘போ, போய் உங்க ஆத்தால கேளு அள்ளிக் கொடுப்பா’ என்பான்.‘எல்லாம் வாங்கியாந்துதான் போடுறேன், இதுல உனக்குத் தனிய காசு வேற கேக்குதா?’ என்பான்.இதுதான் இன்று வரை அனைத்துப் பெண்களும் கேட்கும் பொதுவான வாசகம். செய்யும் வேலைக்குப் பெண்கள் சம்பளம் கேட்டால், ஆண் உலகமே உங்களால் அதைக் கொடுக்க முடியுமா?
காலையில் வேலைக்குச் செல்லும் முன்பு அரிசி, பருப்பு, காய்கறி முதல் அளந்து வைத்துவிட்டுச் செல்வான். பிரபா கொஞ்சம், கொஞ்சமாகச் சிரிக்க மறந்தாள். தன் அம்மாவிடம் சென்று ஆறுதல் தேடுவாள். சில நேரம் அவள் வீட்டிற்கு வர தாமதம் ஆனால், அவனின் சந்தேக புத்தி அவனை மிருகமாக மாற்றிவிடும். காரணம் எதுவும் இல்லை என்றாலும், தினமும் அடிக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம். அடி , உதை என்று வாழ்க்கை நரகமாக நகர்ந்தது பிரபாவிற்கு.
அடுத்த வீட்டுப் பெண்கள் கண்ணீர் வடித்தால், ஆங்காங்கே முளைக்கும் விஷக் காளானைப் போல எல்லாத் தரப்பிலும், ஆண்கள் முளைக்கவே செய்கின்றனர். பிரபாவுக்கும் அப்படி ஓர் ஆண் நண்பன் கிடைத்தான். தன் கவலைகளை அவனிடம் சொல்லி ஆறுதல் பெற்றாள்.
அவர்களின் நட்பைத் தவறாகத் திரித்து அனைவரும் பேச, ஒரு நாள் அவன் எல்லை மீறினான். பார்பவர்களின் நெஞ்சம் பதைக்க, ஒரு கண்ணில் ரத்தமும் மறு கண்ணில் கண்ணீருமாக அலறிக்கொண்டே, தரைத்தளம் நோக்கி ஓடினாள். அவளை வழிமறித்து மீண்டும் அடித்தான். மயங்கிய அவளை மீட்டு மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நலம் தேறினாள். மீண்டும் பழைய வாழ்க்கை.
‘நீ மட்டும் எனக்கு மனைவியா இருந்த நா உன்ன ராணி மாறி வெச்சி காப்பாத்துவேன். நீ வா, நாம எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று ஆண் நண்பன் தன் சுயரூபம் காட்டினான். ‘எனக்கு எ புருசனும் புள்ளய்ங்களும்தான் முக்கியம், நா அந்த மாறி பொண்ணு இல்ல, இனி இங்க வரதே’ என்று சொல்லிவிட்டு விலகினாள்.
நாளுக்கு நாள் அவனின் கொடுமைகள் எல்லை மீறியது. அவள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டாள். மீண்டும் அவள் ஆண் நண்பனின் ஆறுதலைத் தேடினாள்.
ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆண் நண்பனுடன் சென்றுவிட்டதாக வதந்திகள் பல. உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது. சில நாள்கள் வரை ‘அவ இல்லனா எ புள்ளைங்கள வளக்க எனக்குத் தெரியாதா? இவ இல்லனா இன்னொருத்தி என்று திமிறாக அலைந்தான். அவளைக் குறை சொன்ன உலகம் இவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. சில நாள்களுக்குப் பிறகு, அவளின் அருமை உணர்ந்தான். அவளைத் தேடினான்.
பிரபாவை, அவள் தாயின் வீட்டின் அருகில் ஒரு கூரையின் கீழ் பார்த்தான். அவளின் கால்களைப் பிடித்துக்கொண்டு அழுதான். அவள் மனம் கல்லாய் மாறியிருந்தது. அவள் ஆண் வர்க்கத்தை முழுவதும் வெறுத்தாள். ‘இனி மேல நா உன்ன நல்லா வெச்சிகிற , வந்துடு, கொழந்தைங்க பசியில வாடி போச்சு’ என்றான்.
‘இன்னிக்கு என் காலப் புடிப்ப, நாளைக்கு என் கைத்த புடிப்ப, புள்ளைங்க பட்டினியா இருந்தா பரவாயில்ல, அம்மா உசுரோட இருந்த போதும், நாளைக்குப் புள்ளைங்களுக்கு ஒன்னுனா நா பாக்க வேணா? என் அப்பா செத்ததுக்கே நா அழல, உன்ன கட்டிகினு அழுகாத நாளே இல்ல, போப்பா சாமி நா பொழப்ப பார்க்கணும்’ என்று சொல்லிவிட்டு, நடைபாதையின் ஓரத்தில் இருந்த கடையில் பாத்திரம் கழுவினாள். அருகில் இருந்தவள், ‘யக்கா அண்ண தா கூப்புடுதுள்ள போக வேண்டியது தானே, கொழந்தைங்க பாவம்யில்ல மாடி வூட்ட விட்டுட்டு வந்துட்ட ஐயா’ என்றாள்.
‘அடி போடி, மாடி வூடாவுது மண்ணாவுது, அவகூட வாழ முடியாது. தினமும் கூவத்துல வளந்தவ, வூடு வாசல் இல்லாதவனு திட்டுவா, நல்ல துணி கட்ட முடியாது சந்தேகப்படுவான், அவ பாக்குறா இவ பாக்குறாங்குவா, ஆசப்பட்டு எதாவது வாங்கணும் நினச்சா எத்தன தடவ கேப்ப? அவமானமா இருக்குன்டி, இப்படிப் பத்துப்பாத்திரம் தேச்சி நிம்மதியா வாழலாம். புள்ளைங்களத் தாண்டி பாக்கணும் போல இருக்கு. கூட கூட்டியாந்து என்ன பண்ண? என்னால சோறு போட முடியுமா? இல்ல வூடுதான் இருக்கா? ரோட்டோரமா நின்னு புள்ளைங்கள பாத்துகுறேன்’ என்றாள். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து, அவள் முகம் சிவந்தது.
அமைதியின் உருவமாக இருந்தாலும் சரி, கருணையில் தெய்வமாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணின் மனதில் ஏற்ப்படும் ரணங்கள் என்றுமே ரணங்கள்தாம்.
தினமும் காலையும் மாலையும் தெரு ஓரத்தில் வந்துநின்று, குழந்தைகள் வரும் வரை காத்திருந்து, பார்த்துவிட்டுச் செல்வாள். கூட்டமாக ஓடிவரும் மான் குட்டிகளுக்கு மத்தியில் தெரிந்த குழந்தைகளையும் தன் குழந்தைகளையும் பார்த்து மனம் மகிழ்ந்து நிற்பாள். பிரபாக்கா, பிரபாக்கா என்ற குரல்கள் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும், அவளின் கண்கள் அவள் குழந்தைகள் சென்ற திசையில் நிலைத்து நிற்கும்.
(தொடரும்)
படைப்பாளர்:
எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.
Best among the reads