நம் வாழ்வில் ஒரு மோசமான அல்லது கடினமான ஒன்று நடந்து முடிந்த பின்பு மீண்டும் மகிழ்ச்சியான, வெற்றிகரமான, ஆரோக்கியமான வாழ்விற்குத் திரும்பும் திறனே மீண்டெழுதல் அல்லது மீள்திறன் (Resilience). நிச்சயமாக எளிதான திறனல்ல, ஆனால் சாத்தியமானதுதான்.

நாம் அனைவருமே பொருள் இழப்பு, அன்புக்குரியவர்களின் விலகல் / மரணம், ஆரோக்கிய இழப்பு, விபத்தில் உடல் உறுப்பு இழப்பு, வேலை இழப்பு, தொழிலில் பின்னடைவு என ஏதாவது ஓர் இழப்பை சந்தித்து இருப்போம். இழந்ததை நினைத்து வருந்தலாம். ஆனால், முடங்கி விடாமல், முன்னோக்கி நகர்வதே வாழ்க்கை. எதையும் ஆரோக்கியமாகக் கடந்து போகும் மனநிலைதான் மீள் திறன்.

இதற்கு மற்ற பிற வாழ்க்கைத் திறனை மேம்படுத்துவது அவசியம். நம் மன முதிர்ச்சிகேற்ப காலம், மன திண்மை, நம்மைச் சுற்றி உள்ளவர்களின் ஆதரவு, சுய மதிப்பு, சுய நேசம் ஆகியவை தேவைப்படும். சில நேரம் பின்னடைவும் சகஜம்தான். விடாமுயற்சியுடன் பயிற்சி செய்யும் போது வெற்றி தொடும் தூரம்தான்.

மீள் திறன் உண்டென்றால் அவர்களைத் தோல்வியும் இழப்பும் பாதிக்காதென்பது அல்ல. இழப்பும் தோல்வியும் ஏற்படுத்திய வலியில் இருந்து அவர்களால் எவ்வளவு விரைவாக வெளிவர முடியும் என்பதுதான்.

ஒரு துயரமான சூழ்நிலையை வெற்றிகரமாகச் சந்தித்த ஒருவர், எல்லாவற்றையும் அப்படியே சந்திக்க முடியாமல் போகலாம். எல்லா நேரத்திலும் மீள்திறன் ஒரே அளவில் இருக்கவும் இருக்காது. டாக்டர் சூட் தியரிபடி இந்த 5 குணங்கள் மீள் திறனை மேம்படுத்த உதவும்.

  1. நன்றியுணர்வு
  2. பரிவு
  3. ஏற்றுக் கொள்ளுதல்
  4. வாழ்வை அர்த்தப்படுத்துதல்
  5. மன்னித்தல்

இது அனைத்தும் படிக்க எளிதாக இருந்தாலும் பயிற்சி செய்ய எளிதானதல்ல.

ஒரு பெரிய இழப்பின் பின் நன்றியுணர்வு வருவது எளிதல்ல.

என் மனமே வலியில் துடிக்கும் போது மற்றவரின் மேல் பரிவு கொள்வது இயல்பல்ல.

மன்னித்தலோ எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதோ சாதரணமாக நடப்பதில்லை.

இதையெல்லாம் இழப்பு நேர்ந்த பிறகு பயிற்சி செய்ய நினைத்தால் நம் மனம் அதற்கு எதிராகவே வேலை செய்யும். ஆனால், நாம் நன்றாக இருக்கும் நாட்களிளேயே இதையெல்லாம் பயிற்சி செய்தால், கடினமான காலத்தில் மனம் முரண்டு பிடிக்காமல் ஒத்துப் போகும்.

நாம் நல்ல மனநிலையில் இருக்கும் போதே காலை கண் விழித்ததில் இருந்து இரவு நாள் முடியும் வரை நமக்கு நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் நன்றி சொல்லப் பழகும்போது, அதுவரை taken for granted ஆக நினைத்திருந்த விஷயங்கள்கூட நமது நன்றிக்கு உரித்தானவை என்று புரிய ஆரம்பிக்கும். வாழ்வைப் பற்றிய ஒன்றிரண்டு புகார்கள் இருந்தாலும் அதெல்லாம் சிறிதாக தோன்றும்.

நாம் இதையெல்லாம் மனதார உணர ஆரம்பிக்கும் போது இயற்கை நம் மேல் காட்டும் அளப்பறிய கருணையும் அன்பும் புரியும். மனம் மகிழ்ச்சியில் நிறையும். நீங்களே இதை ஒரு 21 நாட்கள் தொடர்ச்சியாகச் செய்து பாருங்கள். உங்களுக்குள் ஏற்படும் மாற்றம் புரியும்.

நாம் இயற்கையின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள் என்ற உணர்வு வரும்போது அதற்கான முதல் தகுதியாக மற்றவரின் மேல் பரிவும் கருணையும் கூடிவிடும். அவர்கள் இடத்தில் இருந்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்துக் கொண்டால், எந்த முயற்சியும் செய்யாமலே நீங்கள் மற்றவரின் மேல் பரிவு காட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.

அன்பானவர்களின் மரணத்தைத் தவிர வேறு எந்த விதப் பிரிவோ துரோகமோ ஏமாற்றமோ பகையோ உங்களால் எதிரில் இருப்பவருக்கும் பரிவு காட்ட முடியும். அது உங்களை விரைவாக ஆற்றுப்படுத்தும்.

எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் எனக்கு இது நடந்திருக்கக் கூடாது என்று முரண்டு பிடிக்காமல் நடந்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு, அது கற்றுத் தரும் பாடத்தை மனதில் இருத்திக் கொண்டால், மறுபடியும் அப்படி ஒரு நிகழ்வு நடவாமல் தடுக்கலாம். ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் மனம் காயப்படாமலும் காக்கும்.

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அர்த்தமும் குறிக்கோளும் உண்டு. அதைக் கண்டெடுக்கும் போதுதான் வாழ்வு முழுமை அடைகிறது.

குறிக்கோளை அறிந்து கொண்ட ஒருவரின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. மற்ற துயரமோ இழப்போ நேர்ந்தாலும் அதிலிருந்து வெளிவர குறிக்கோளின் மேல் உள்ள பற்றே உந்து சக்தியாகிறது.

மற்றவரின் மேல் நாம் வளர்த்துக் கொள்ளும் பரிவு, அவர்கள் தவறிழைக்கும் போது மன்னித்தலை எளிதாக்குகிறது. மன்னித்தல் அடுத்தவரின் நன்மைக்காக அல்ல. நமது சொந்த நன்மைக்காக. ஒரு முறை முழுமையாக மன்னித்த பின், அவர் மேல் எந்தக் கசப்புணர்வும் நமக்கிருப்பதில்லை. ஆரோக்கியமான மனநிலை கைவரப்படுகிறது. ஆரோக்கியமான மனநிலையே மீண்டெழுதலைச் சாத்தியமாக்குகிறது.

முடியாதென்று உலகில் எதுவுமில்லை, எதை இழந்த போதிலும் நாம் இன்னும் மீதமிருக்கிறோம் என்கிற ஒரு காரணம் போதும் வாழ்வைக் கொண்டாட.!மீண்டு வர, உலகை ஜெயிக்க.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.