உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடம் போய்க் கேட்டாலும், “இதென்ன கேள்வி? இயற்கை என்பது அன்னைதான்” என்பார்கள். “ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?” என்ற அடுத்த கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். அவரவரின் நாடு, மரபு, பாலினம், அரசியல் பின்புலம் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு காரணிகளை பதிலாகத் தருவார்கள்.

இது சமகாலத்தில் வந்த புதிய கருத்து அல்ல. சீனா, வியட்நாம், கிரேக்கம், தென் அமெரிக்கா, ரோம் போன்ற பல்வேறு இடங்களின் நாட்டார் மற்றும் பண்டைய மரபுகளில் இயற்கையும் பூமியும் பெண்பால் கொண்டே குறிக்கப்படுகிறது. குறிப்பாக ஆண்டிஸ் மலைத்தொடரில் வசிக்கும் தொல்குடி மக்களின் பச்சமாமா எனப்படும் பூமி/இயற்கைக் கடவுள் மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழிலும் பூமித்தாய், இயற்கை அன்னை என்றுதானே எழுதுகிறோம்?

‘தாய்’ என்ற நிலை ஏன் வந்தது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக, இயற்கைக்குப் பெண் பால் ஏன் அளிக்கப்பட்டது என்பதற்கான பதிலைத் தேடலாம். மானுடவியல் அறிஞர்கள், உலகளாவிய சமூகவியல் ஆய்வுகளில் இருந்து பல காரணிகளைத் தொகுத்து அளித்திருக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

  • முதலாவதும் மிக முக்கியமானதுமான காரணம் பெண்களின் உடல் இயக்கவியல். பெண்ணைப் போலவே இயற்கையும் புதிய உயிர்களை உருவாக்குகிறது.
  • தனது வீட்டில் உள்ள உயிர்களைப் பேணுவது, பிறந்த புதிய உயிர்களை வளர்த்தெடுப்பது, உணவளிப்பது ஆகியவை பெண்களின் சமூகக் கடமைகளாகக் கருதப்படுகின்றன, இயற்கையும் அதையே செய்கிறது.
  • உயிரின் சுழற்சிக்கு நாம் பெண்களை நம்பியிருப்பது போலவே இயற்கையையும் நம்பியிருக்கிறோம். மாதாந்திர சுழற்சி, வாழ்க்கை சுழற்சி என இயற்கைக்கும் பெண்களுக்கு இந்த சுழற்சி அமைப்பு பொருந்துகிறது.
  • பெண்களைப் போலவே இயற்கையும் ஓர் உணர்வுபூர்வமான அம்சம்.
  • பெண்களைப் போலவே இயற்கையும் பொறுமைசாலி.
  • பெண்களைப் போலவே இயற்கையும் தன்னலமற்றது.

இதற்குப் பிறகு இந்தப் பட்டியல் இது போன்ற குணாதிசயங்களையே குறிப்பிடுகிறது என்பதால் நாம் இந்த அளவில் இதை நிறுத்திக்கொள்ளலாம். உயிரியல் கூறுகள், சமூகக் கூறுகள், உணர்வுரீதியான கூறுகள் ஆகியவற்றில் பெண்களுக்கும் இயற்கைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக நினைத்தவர்கள் இயற்கையைப் பெண்பால் ஆக்கிவிட்டனர். அதன் ஒரு நீட்சியாக உயிர் கொடுத்து, உணவளித்து, தன்னலமின்றி அனைவரையும் பாதுகாக்கும் பண்புகளை அடிப்படையாக வைத்து இயற்கை என்பது ஓர் அன்னையைப் போன்றது என்ற நம்பிக்கைக்கும் வந்துவிட்டனர். “இயற்கைத்தாய் தன்னுடைய எல்லா குழந்தைகளுக்காகவும் உணவு தருகிறாள்” என்ற கோத்தேவின் சொற்கள் இந்த அடிப்படையில்தான் வருகின்றன.

இயற்கையைத் தாயாக உருவகிப்பதற்கான காரணங்கள், இந்தப் பார்வையின் வரலாறு ஆகியவற்றைப் பேசிவிட்டோம். இது சரியா, தவறா என்று கேட்டால், அதற்கான பதில் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. யார் அந்தப் பார்வையை முன்வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது சரியாகவும் தவறாகவும் மாறுகிறது. ஆகவே அந்தக் கேள்விக்குப் போகாமல் முதலில் இதன் சாதக, பாதகங்களைப் பார்க்கலாம்.

இயற்கையைத் தாயாக உருவகிப்பதன் மூலம் ஒரு நம்பிக்கை கலந்த பிணைப்பு உருவாகிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த சிறு குறு மீனவர்கள், கடலை ஓர் அன்னையாக பாவிப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்குத் தனக்குக் கிடைக்கும் மீனின் அளவை, ஒரு தாய் குழந்தைக்குத் தரும் உணவோடு அவர்கள் ஒப்பிட்டுப் பேசுவார்கள். அதுவே தங்களுக்குப் போதும் என்பார்கள். காடுகளில் சென்று உணவு சேகரிக்கும் தொல்குடியினரின் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது. ஒருவகையில் அந்தச் சூழலைத் தேவைக்கு அதிகமாக சுரண்டாமல் இருக்கவும் அந்த உருவகம் ஓர் அரணாக அமைகிறது.

சில ஆராய்ச்சியாளர்கள், இதை ‘Comforting analogy’ என்கிறார்கள். அதாவது, இந்த உருவகம் ஏதோ ஒரு வகையில் சிலருக்கு ஆறுதல் அளிக்கலாம் என்று கூறுகிறார்கள். இயற்கையைப் பாதுகாப்பதில் எந்தத் தடையையும் ஏற்படுத்தாத வரை இந்த ஓர் ஆறுதலை யாரிடமிருந்தும் நாம் பறிக்கத் தேவையில்லை. ’ ‘இயற்கை அன்னை’ என்பதை ஒரு கொள்கையாக, முழக்கமாக முன்னெடுக்காமல், ஒரு தனிமனிதப் பிணைப்பாக அதை ஒருவர் பார்க்கிறார் என்றால் அதில் பெரிய ஆபத்தில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இது தனிமனித அளவில் நின்று போய்விடுவதில்லை. சிலர் இதைக் கோட்பாட்டு ரீதியாகவே மாற்ற முயற்சி செய்கிறார்கள். இந்தச் சூழலில், இதை ஆறுதலளிக்கும் ஓர் உருவகமாகப் பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள்கூட நொந்து போய்விடுகிறார்கள். இந்த உருவகத்தை முன்வைத்து அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம். இயற்கையைத் தாயாக உருவகிக்கும்போது, சில முக்கியமான பிரச்னைகள் முளைக்கின்றன.

முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.

இரண்டாவது முக்கியமான பிரச்னை இயற்கைப் பேரிடர்களைப் பற்றியது. குறிப்பாகக் காலநிலைப் பேரிடர்கள் பெருகிவரும் இந்தக் காலத்தில், இயற்கை அன்னை உருவகத்தை நாம் பற்றிக்கொண்டிருந்தால், ‘இயற்கை அன்னையின் கோபம் இது’ என்ற ஒரு வாக்கியத்தோடு இது முடிந்துவிடும். இயற்கைக்கு முன்னால் நாம் எதுவும் செய்ய முடியாது என்றும் நாம் விலகிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவுதான் இது என்ற புரிதலை நோக்கி நாம் நகர்வதை இது தடுக்கும்.

குடும்ப அமைப்புகளில் தாய்மார்கள் மீது இருக்கும் அதீத எதிர்பார்ப்புகளும் உழைப்பு மற்றும் உணர்வுரீதியான சுரண்டல்களும் இயற்கை மீதும் ஏற்றி வைக்கப்படலாம். இது ஆபத்தானது. ‘இயற்கை தனது எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுக்கிறாள்’ என்பது கேட்க இதமாக இருக்கலாம். ஆனால், ‘நானும் இயற்கையின் பிள்ளைதான்’ என்று சொல்லிக்கொண்டு ஒரு பெருநிறுவனம் வளங்களைச் சுரண்டலாம், ‘இந்த இயற்கையைச் சுரண்ட எனக்கு உரிமை உண்டு’ என்று சொல்லிக்கொண்டு பலம் படைத்தவர்கள் விளிம்பு நிலை மக்களைக் காடுகளிலிருந்து விலக்கலாம். ‘அம்மாவின் அன்பு பொதுவானது’ என்பதான தேய்வழக்குகளின் பின்னால் ஒளிந்துகொண்டு ஒரு வனத்தையோ கடற்கரையையோ யார் வேண்டுமானால் சொந்தம் கொண்டாடலாம். இது ஆபத்தானது. ‘அம்மக்களின் உழைப்பை அங்கீகரிக்காத நாம், இயற்கையை எப்படித் தாய் என்று அழைக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்புகிறார் அலெக்ஸ் ஜான்சன்.

தொல்குடிகளாக இல்லாதவர்கள் இந்த உருவகத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை அரசியல் பார்வையில் அணுக வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோல, இந்தப் பார்வை பெருநிறுவனங்களுக்கு இருக்கும்போது அது சுரண்டலுக்கு ஒரு கவசமாகிறது. ஆனால், இயற்கையை அன்னையாக பாவிக்கும் தொல்குடிகள் சூழலைப் பாதுகாக்கிறார்கள். ஆக, ஒரு குறிப்பிட்ட பார்வை யாருக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விளைவு மாறுபடுகிறது. பெருநிறுவனங்களும் மேலை நாடுகளும் தொல்குடியினரின் மரபுக்கூறுகளைத் தொடர்ந்து கைப்பற்றுகின்றன, அதன் ஒரு நீட்சிதான் இந்த நம்பிக்கையை எடுத்துக்கொள்வதும். தனது சொந்தத் தேவைகளுக்காகவும் லாபத்துக்காகவும் அடுத்தவர்களின் மரபை இவ்வாறு எடுத்துக்கொள்வதை Appropriation என்பார்கள். மேலை நாட்டவர்கள் இயற்கை அன்னை பற்றிப் பேசும் பல விஷயங்கள் இவ்வாறான கைப்பற்றுதல் முயற்சிகளாகவே இருக்கின்றன. ஆகவே யார் இந்தப் பார்வையை முன்வைக்கிறார்கள், அவர்களது மரபில் இது இருக்கிறதா, இந்தப் பார்வையால் அவர்களுக்கு லாபம் உண்டா என்று கவனிக்கவேண்டும்.

இதை அப்படியே வேறு கோணத்திலிருந்து பார்த்தால், பெண்கள் மீதான சுரண்டலை நியாயப்படுத்தவும் இந்த உருவகம் உதவும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். இயற்கையைப் போலப் பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பையும் இது தருகிறது. ஏற்கெனவே பாலின ஏற்றத்தாழ்வு நிலவும் சமூகத்தில் இது கூடுதல் விரிசலை ஏற்படுத்துகிறது.

இந்த நம்பிக்கையை ஒட்டிய விவாதங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ‘Fertile Land’, ‘Virgin Forest’,‘Barren Land’ போன்ற சொற்கள் இயற்கை அன்னை சார்ந்த விவாதங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறும் பெண்ணியவாதிகள், இவை பெண்களை இழிவுபடுத்துபவையாக இருக்கின்றன என்கிறார்கள். இதில் உச்சகட்டமாக, சூழல் சீர்குலைவைப் பற்றிப் பேசிய சில சூழல் பெண்ணியவாதிகளே, ‘நிலம்/இயற்கை வன்புணர்வு செய்யப்படுகிறது’, ‘இயற்கை அன்னை வன்புணர்வு செய்யப்படுகிறாள்’ என்று கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயற்கையைப் பெண்ணாக பாவிப்பது சரியா, தவறா என்ற அளவிலேயே விவாதம் இன்னும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், வன்புணர்வு போன்ற சொற்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பது வேதனைக்குரியது என்று சில செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர். ஓர் உருவகத்தின் நீட்சி என்றாலும், சூழல் சீர்குலைவை வன்புணர்வு என்று வர்ணிப்பது கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.

ஆக, இந்த எல்லா விமர்சனங்களையும் வைத்துப் பார்த்தால், இயற்கையைத் தாயாக உருவகிப்பதில் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்பதை உணர முடியும். இது சூழலைப் பாதுகாக்கும் ஒரு தொல்குடியின் நம்பிக்கையாக இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சூழல் மாநாடுகளிலும் ஒப்பந்தங்களின்போதும் இது பேசப்படும்போது, ஒரு கோட்பாடாக இது முன்வைக்கப்படும்போது பிரச்னைக்குரியது. இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் பேசவேண்டும். பல சூழல் செயற்பாட்டாளர்களின் ஆரம்பகட்ட நம்பிக்கையாகவும் உந்துசக்தியாகவும் இந்த உருவகம் இருக்கிறது. நானும் ஒரு காலத்தில் ‘இயற்கை என்பது அன்னையைப் போல’ என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அரசியல் ரீதியான ஒரு புரிதலை நோக்கி நகரும்போது உணர்வுரீதியான இந்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு சூழல் செயற்பாட்டை அணுகுவதே சரியானது. காலப்போக்கில் இந்த எண்ணத்தைக் கைவிடும் பாதையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

அந்தப் புரிதலுக்கு வரும்போது கோட்பாட்டு ரீதியாக இயற்கை அன்னைக் கருத்தாக்கத்தை முன்வைப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்பவேண்டும், ‘அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வார்’ என்று நாம் நினைக்கிறோம், உரிமை எடுத்துக்கொள்கிறோம், தன்னால் இயலாத நிலையிலும் தாயுள்ளம் நம்மைப் பாதுகாக்கும் என்று நினைக்கிறோம். எந்த ஒரு நிலையிலும் தாயானவள் தனது நலத்தை யோசிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையையும் அப்படியே அணுகலாமா என்று கேட்க வேண்டும். பெற்ற பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து தன்னையே மெழுகாக உருக்கிக்கொள்ளும் தாய் பற்றிய சித்தரிப்புகள் இருக்கும் மனித சமூகத்தில் இயற்கையின் மீதும் அந்தப் பிம்பத்தை நாம் ஏற்றி வைப்பது ஆபத்தானது என்பதை நாம் உணரவேண்டும்.

இயற்கையைப் பெண்ணாக உருவகிப்பதிலும் இயற்கையுடனான பெண்ணின் தொடர்பை ரொமாண்டிசைஸ் செய்வதிலும் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. அந்தப் பிரச்னை சமகாலத்தில் பூதாகரமாக மாறியிருக்கிறது. அது என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!