பெண் என்பவள் உலகத்தில் இன்னும் இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறாள். நடத்தப் படுகிறாள். நாகரிகமான சமுதாயம் என்று மார்தட்டிக் கொண்டாலும் பெண் மீதான கசப்பும் தாழ்வுணர்ச்சியும் ஆண்களின் மனதில் கசடுகளாகவே படிந்திருக்கின்றன. பெண்களைச் சமமாக நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் ஆண்களும்கூட ஏதோவொரு வகையில் பெண்ணைத் தனக்குக் கீழ்தான் நடத்துகிறார்கள். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மரபணுவிலேயே ஊறி வந்த விஷயம். பாலினப் பாகுபாடு நம் ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஒன்றி விட்டது.

காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் பெண்கள் மீது எத்தகைய கீழ்மையான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வெளியாகும் விளம்பரங்கள் தெள்ளத்

தெளிவாகச் சொல்கின்றன. இந்த விளம்பரங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் எளிதில் சென்றடைந்து விடுகின்றன. விளம்பரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. பெண்கள் மீதான அவர்களது கண்ணோட்டத்தை மாற்றிப் போடும் விதமாகவும் இந்த விளம்பரங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. அண்மை காலங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக உரிமைகள், வாய்ப்புகள் போன்றவை கிடைத்து வந்தாலும், விளம்பரங்களில் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தாலும், பெண்களுக்காகவே காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டாலும், அந்த விளம்பரங்களின் அடிநாதமான பெண் அடிமைத்தனம் இன்னும் மேலோங்கித்தான் இருக்கிறது. பெண்களை மலினப்படுத்தி எடுக்கப்படும் விளம்பரங்கள் பெண்களின் ஆளுமை உணர்வையும் தன்னம்பிக்கையையும் குறைக்கும் விதமாகவே காட்சிப்படுத்தப் படுகின்றன.

ஒரு பொருளை விற்பனை செய்ய விளம்பரம் செய்பவர்கள் அந்தப் பொருளின் வண்ணம், வடிவம், பயன்பாடு, அதை உபயோகிக்கும் விதம் போன்றவற்றை மக்களிடம் விளம்பரப்படுத்துவதன் மூலமாகவே விற்பனையை அதிகரிக்க வேண்டும். ஒரு பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும், மக்களிடம் பிரபலம் செய்வதற்கும் விளம்பரம் உதவுகிறது. ஆனால், இங்கு அப்படியா நடக்கிறது? எந்த ஒரு விளம்பரத்திலும் அழகான, சிவப்பான, உயரமான, மெலிந்த, அரைகுறை ஆடை அணிந்த பெண்களோடுதானே அந்தப் பொருட்களை அறிமுகம் செய்கிறார்கள்.

குறிப்பிட்ட சோப் விளம்பரத்தில் எப்போதும் ஒரு பெண் கிளிப்பச்சை நிற பிகினி உடையில்தான் குளிப்பார். ஏன் அந்த சோப்பை ஆண்கள் யாரும் உபயோகிப்பது இல்லையா என்ன? வெள்ளையாக இருப்பவர்கள் எப்போதுமே எஜமானிகளாகத்தான் இருக்கிறார்கள். பணிப் பெண்களாக வருபவர்கள் எப்போதுமே கறுப்பாக, எண்ணெய் வழியும் முகத்தோடுதாம் இருக்கிறார்கள். கறுப்பு நிறத்தில் எஜமானிகள் இருப்பதில்லையா? இல்லை, வெள்ளை நிறத்தில் பணிப் பெண்கள்தாம் அவர்களுக்கு அமைவதில்லையா?

கழிப்பறை சுத்தம் செய்யும் திரவ விளம்பரம், “உங்க சூர்யாவே உங்களைக் கேள்வி கேட்டா?” என்று சொன்னதும், “நம்ம டாய்லெட் ஏன் இவ்ளோ யெல்லோவா இருக்கு?” என்று அந்த சூர்யா அம்மாவைப் பார்த்துக் கேட்கிறான். சூர்யாக்கள் அம்மாக்களைத்தான் எப்போதும் கேட்கிறார்கள். இதே கேள்வியை ஏன் அப்பாவைப் பார்த்துக் கேட்டிருக்கக் கூடாது?. அவ்வளவு ஏன், சூர்யாவே ஏன் சுத்தம் செய்யக் கூடாது? அவ்வாறு சுத்தம் செய்திருந்தால் அதைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் டாய்லெட் சுத்தம் செய்ய முன் வருவார்கள் இல்லையா? பணிகளைப் பகிர்ந்து செய்யும் எண்ணமும் எந்த வேலையும் தாழ்வானது இல்லை என்கிற எண்ணமும் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அல்லவா?

எத்தனை வீடுகளில் ஆண்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய முன் வருகிறார்கள்? தங்கள் வீட்டில் தானும் உபயோகித்த கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஆண்கள் யோசிக்கிறார்கள் என்பது உண்மைதானே? ஏனென்றால் கழிப்பறை சுத்தம் என்பது பெண்கள் பணி என்று ஆண்டாண்டு காலம் மூளைக்குள் பதிந்துள்ள பொதுப் புத்திதான் காரணம். ஆணும் சுத்தம் செய்யும்போது சூர்யாவின் கேள்விக்கு இடமிருக்காது அல்லவா?

ஓர் ஆணுறை விளம்பரம் வருகிறது. மூன்று பெண்கள் வந்து ஆணுறை பாக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆணுறை விளம்பரத்தில் ஓர் ஆணைக்கூடக் காணோம். இதே மாதிரி மனைவிக்கு அல்லது காதலிக்கு ஓர் ஆண் நாப்கின் வாங்கிக் கொண்டு, அதன் அருமைகளைப் பற்றி உரையாற்றுவது போல் விளம்பரப் படம் எடுப்பார்களா என்ன? ஆணுறை குறித்த விளம்பரங்கள் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை மட்டுமே ஒளிபரப்பப் படவேண்டும் என்று இந்தியத் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பகலிலும் ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஷாம்பூ விளம்பரங்கள் முடி கருமையாக, அடர்த்தியாக, நீளமாக இருப்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.மெலிந்த, நீளம் குறைவான முடி கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை அற்றவர்களாகவே காட்டப்படுகிறார்கள். முடி என்பது அவரவர் மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து வளர்வதும், அடர்வதும் நிகழும். விளம்பர எண்ணெய் அல்லது ஷாம்பூ உபயோகித்தால் எல்லார் தலையும் அமேசான் காடு மாதிரியல்லவா அடர்ந்திருக்கும்?. அவ்வளவு ஏன், அந்தப் பொருட்களை விற்பனை செய்யும் முதலாளிகள் தலையை என்றாவது நாம் கண்டதுண்டா? தலைமுடி பிரச்னை தலையாய பிரச்னை என்பது போல்தான் இத்தகைய விளம்பரங்களைக் கட்டமைக்கிறார்கள்.

அதேபோல்தான் சிவப்பழகு க்ரீம் விளம்பரங்கள். ஏழு நாட்களில் சிவந்த நிறம் பெற்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலையும் வாங்கி விடுவார்கள் இந்த விளம்பரப் பெண்கள். இண்டர்வியூவில் எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் கருநிறப் பெண்கள் தேர்வாவதில்லை. கறுப்பு தாழ்வு என்று பிறந்ததிலிருந்து மனதில் அழுத்தமாகப் பதித்துவிட்டார்கள். வெறும் சிவந்த நிறத்தால் வேலை கிடைத்தால் அந்தப் பெண்ணுக்குத் திறமையில்லையா? அல்லது நிறம் குறைவாக இருந்தால் திறமை கண்டுகொள்ளப்படாதா? எங்கே இந்த க்ரீம்களை ஆப்பிரிக்காவில் விற்றுக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். புற அழகுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அக அழகுக்கு ஒரு போதும் தரப்படுவதே இல்லை. கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. மேட்சிங் மேட்சிங் பொலிவு இல்லையென்று இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு வருத்தம் இவர்களால் அதிகரிக்கிறது. கல்வியைவிட அழகுதான் முக்கியம் என்று திரும்பத் திரும்ப மூளையில் பதிய வைக்கிறது.

செஃப் தாமு வந்து சோப் பவுடர் விற்கிறார். அதைப் பெண்களிடம்தான் விற்கிறார். ஒரு மாறுதலுக்கு ஆண்களிடம் துவைத்துப் பார்க்கச் சொல்லி விற்றிருக்கலாமே! சமையல் பொருட்கள், சமையலறைச் சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றிற்குப் பெண்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள், தொழில்நுட்பக் கருவிகள், டிஎம்டி கம்பிகள், சிமெண்ட் போன்ற விளம்பரங்களில் ஆண்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏன் பெண்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லையா என்ன?

‘எல்லாமே முறைப்படி நடக்கச் சொல்லும்’ விளம்பரத்தில்கூட பெண்கள் கோலம் போட்டுக் கொண்டும், டீ போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ஆண்கள் சாப்பிட்ட இலையை எந்தப் பக்கம் மூடுவது என்று குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு காபி போட்டுக் கொடுத்ததும் புளகாங்கிதம் அடைபவர்கள் நம் விளம்பரப் பெண்கள். கோட், டை போட்டுக் கொண்டு லுங்கி கட்டிக்கொண்டு செல்லும் ஆணைச் சுற்றி எதற்கு ஐந்தாறு பெண்கள்? அதுவும் கையில் பைலோடு. லுங்கி விளம்பரத்துக்கு எதற்கய்யா பெண்கள்? இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட வேட்டி கட்டிக்கொண்டு ஆடும் ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட LGBTQIA+ சமூகத்தினரை விளம்பரங்களில் ஏன் யாரும் பயன்படுத்த மறுக்கிறார்கள்? அவர்களையும் இயல்பாகப் பயன்படுத்தும் பொழுது இனி வரும் தலைமுறையினர் அவர்களுடன்‌ சகஜமாகப் பழகலாம் அல்லவா? இது ஒரு சமுதாய மாற்றத்துக்கான கருத்து என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டு விளம்பரத்தில் கணவரை இழந்தவராகக் காட்டப்படும் ஒரு பெண், “இந்த மாதச் செலவுக்கு அண்ணியிடம் கடன் வாங்கி விட்டேன். அடுத்த மாதம் என்ன செய்வது? நீங்கள் மட்டும் ஒரு பாலிசி எடுத்திருந்தால்…” என்று புலம்புவார். பின்னர் அந்தக் கணவரின் படம் மாலையுடன் காட்டப்படும். இது அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் பேசும் விளம்பரம். பெண் எப்போதும் தன் பொருளாதாரத் தேவைகளுக்கு ஆணையே சார்ந்து இருக்க வேண்டும் என்கிற பழமைவாதக் கருத்துக்குத் தீனி போடும் விதமாகவே இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரத்துக்கு எதிராக வலைத்தளங்களில் சில கேலியான மீம்களும் பகிரப்பட்டன. அதில் ஒன்று, “ஏன் நீ வேலைக்குப் போற ஐடியாவே இல்லையா?” என்று ஒருவர் அந்தப் பெண்ணின் படத்தைப் பதிவிட்டுப் பகிர்ந்து இருந்தார். வேலைக்குச் சென்று தன் காலில் சுயமரியாதையுடன் நிற்கும் அளவுக்கு எந்தப் பெண்ணையும் தயார் செய்ய சமூகம் முதலில் தயாராகவில்லை என்பதுதான் உண்மை. வெறும் ஆயுள் காப்பீட்டு விளம்பரம்தானே இது என்று நாம் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டம் எத்தகையது என்பதை இந்த மாதிரி விளம்பரங்கள்தாம் அவ்வப்போது நமக்குப் பறைசாற்றுகின்றன.

ஜீன்ஸ், சுடிதார், ஸ்கர்ட், புடவை என்று எதுவாக இருந்தாலும் மேக்கப் கலையாமல், வியர்க்காமல் சமைத்து அடுக்குகிறார்கள். பாத்ரூம் கழுவுகிறார்கள். உணவு பரிமாறுகிறார்கள். கிருமிகளுடன் போராடுகிறார்கள். குழந்தைகளை இவர்கள் மட்டுமே கவனித்துக் கொண்டு சிறந்த தாயாக இருக்கிறார்கள். குடும்பத்தின் ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படுகிறார்கள். கூடவே ‘சுரேஷுக்கு ஜெனரல் மேனேஜராக’வும் நடந்து கொண்டு, நேரத்துக்கு எழுப்பிவிட்டு, காலை, மதியத்துக்கு சமைத்துவிட்டு டீயுடன் ரஸ்க் மட்டும் சாப்பிட்டு ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கிறார்கள். அப்படி இருப்பதுதான் பெண்மைக்கு அழகு என்று இந்த விளம்பரப் படங்கள் எடுப்பவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இத்தகைய பிற்போக்குத் தனமான கருத்துகளை விளம்பரங்கள் தயாரிப்பவர்களும், எடுப்பவர்களும், நடிப்பவர்களும் மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. புதிய சிந்தனைகளை, நேர்மறையான விஷயங்களை விளம்பரத்தில் சொல்ல வேண்டும். ஏனென்றால் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். அதனால் அதை எடுப்பவர்களுக்குப் பொறுப்புணர்வும் அதிகம் இருக்க வேண்டும். விளம்பரங்கள் ஒரு பொருளை விற்கப் பயன்பட்டாலும் அவை ஏதாவது ஒரு விதத்தில் சமுதாயத்துக்கு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதிகம் விளம்பரங்களைப் பார்ப்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்ணுடலை நுகர்வுப் பண்டமாகக் காட்சிப்படுத்தப் போகிறார்கள்? அவளும் ரத்தமும் சதையுமான சக மனுஷி என்பதை எப்போது உணரப் போகிறார்கள்? ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களை மட்டம் தட்டுவதை ஆணாதிக்கச் சமுதாயம் கைவிட வேண்டும். அது விளம்பரமாகவே இருந்தாலும்கூட!

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.