தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பார்வையுள்ளவர்களால், தொழில்நுட்பம் இல்லாமலும் வாழமுடியும். ஆனால், பார்வையற்ற எங்களுக்கு, தொழில்நுட்பம் இல்லாத உலகத்தை  நினைத்துப் பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தொழில்நுட்பம், எங்களுக்கு இன்னொரு கண்ணாக செயல்படுகிறது.

எங்கள் வாழ்வின் அன்றாட வேலைகளைச் செய்வதற்கும் பொது சமூகத்தோடு ஒன்றி வாழவும் தொழில்நுட்பம் எங்களுக்கு அளித்த விடுதலை அளப்பரியது. ஆனால், சில நேரங்களில் இதை பயன்படுத்துவதற்கு தடை வரும்போது, எங்கள் ஆதங்கம் அதிகரிக்கவே செய்கிறது.

ஆம், இணையமும், அதில் இயங்கும் எண்ணற்ற செயலிகளும் எங்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியிருந்தாலும், இங்கும் நாங்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

ஒரு செயலியையோ, வலைதளத்தையோ பயன்படுத்த தொடங்கும்போது, நாங்கள் சந்திக்கும் தடைதான் லாகின் பேஜ்கள் (Login Pages). பயனர் பெயர், பாஸ்வேர்ட், இ-மெயில் முகவரி – இவற்றுக்கான எடிட் பாக்ஸ்கள் (Edit Boxes) வரிசையாக அமைந்திருக்கும். ஆனால், ஸ்கிரீன் ரீடர்கள் அதைப் படிக்கும்போது, வெறும் ‘எடிட் பாக்ஸ்’ என்று மட்டுமே அறிவிக்கின்றன. அது பயனர் பெயருக்கானதா, கடவுச் சொல்லுக்கானதா, அல்லது வேறு ஏதேனும் தகவலுக்கானதா என்பதைக்கூட எங்களால் புரிந்து  கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு எடிட் பாக்ஸும் எதற்காக என்பதைத் தெளிவாகக் குறிக்கும் லேபிள்களுடன் (Labels) இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பது பெரிய தவறா? பார்வையற்றவர்களாகிய நாங்கள், இந்த வெற்று எடிட் பாக்ஸ்களைக் கடந்து எப்படி உள்ளே நுழைவது? ஒருமுறைக்கு இருமுறை தவறான பாக்ஸில் தகவல்களை உள்ளிட்டு, ‘தவறான பயனர் பெயர் அல்லது கடவுச் சொல்’ என்று வரும் செய்தியைப் படிக்கும்போது, உள்ளுக்குள் எரிச்சல் எழும். இவ்வாறு முதல் படியிலேயே எங்களை தடுத்து நிறுத்தினால், இந்த டிஜிட்டல் உலகம் யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

இந்த முதல் தடையைத் தாண்டி, எப்படியோ ஒரு வழியாக லாகின் செய்ய, முயலும்போது, வந்து நிற்கும் மிகப்பெரிய அரக்கன் கேப்ட்சா (CAPTCHA). ‘நான் ரோபோ அல்ல’ என்று நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம், ஆனால் அதை நிரூபிக்க எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. பெரும்பாலான கேப்ட்சாக்கள் படம் (Image) வடிவில் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஒரு சிதைந்த இமேஜில் உள்ள கடினமான எழுத்துக்களை நாங்கள் பார்த்து, அதை டைப் செய்ய வேண்டும். பார்வையற்ற நாங்கள் எப்படி அதைச் செய்வது?

‘நீங்கள் மனிதர்தான், ஆனால் இந்த இணையப் பயன்பாடு உங்களுக்கு இல்லை’ என்று சொல்வது போலத்தான் இது இருக்கிறது. ஆடியோ கேப்ட்சா (Audio CAPTCHA) வசதி இருக்கிறதா என்று தேடினால், அது பெரும்பாலும் இருப்பதில்லை. இணையம் என்ற இந்த மாபெரும் கதவின் பூட்டைத் திறக்க முடியாமல், நாங்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்படும் வலி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை எங்களுக்கு மறுக்கப்படுகிறது.

ஆனால், சில பெரிய வெப்சைட்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தக் கேப்ட்சா சிக்கலைக் கடந்துள்ளன. அவர்கள் சிக்கலான இமேஜ் கேப்ட்சாக்களுக்குப் பதிலாக, ‘நான் ஒரு ரோபோ அல்ல’ என்று ஒரு சிறிய செக்பாக்ஸை (Checkbox) க்ளிக் செய்ய வைக்கும் ரீகேப்ட்சா (reCAPTCHA) போன்ற தீர்வுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இது ஒரு பயனரின் பிரவுசிங் நடத்தையை (Browsing Behavior) பகுப்பாய்வு செய்து, அவர் ரோபோவா இல்லையா என்று தீர்மானிக்கிறது. இந்த நுட்பம் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஒரு சில சமயங்களில் படங்கள் காட்டப்பட்டாலும், அதில் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது. எல்லா வலைதளங்களும் இந்த அணுகலைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். நாங்கள் இணையத்திற்குள் நுழையவே இப்படி தடை விதித்தால், எங்களால் டிஜிட்டல் உலகில் சுதந்திரமாக உலவ முடியாது.

கேப்ட்சா சிக்கலைக் கடந்து ஒரு பக்கத்திற்குள் நுழைந்தால்கூட, எங்கள் சவால்கள் ஓய்வதில்லை. படங்களுக்கு மாற்று உரை (Alt Text) இல்லாதது மற்றொரு பெரும் குறையாகும். நீங்கள் ஒரு அழகான புகைப்படத்தைப் பதிவேற்றி இருக்கலாம்; ஒரு விளம்பரத்தை  காட்டலாம்; அல்லது ஒரு விளக்கப்படத்தைப் பகிர்ந்திருக்கலாம். ஆனால் அதற்கு விளக்கமான ஆல்ட் டெக்ஸ்ட் இல்லை என்றால், எங்கள் ஸ்கிரீன் ரீடர்கள் அதை வெறும் ‘இமேஜ்’ என்று மட்டுமே படித்துக் காட்டும். அந்தப் படம் எதை உணர்த்துகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது எங்களுக்கு மறைக்கப்படும். ஏன் இந்தக் கட்டுரையில்கூட என்னென்ன புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள்  என்று இக்கட்டுரையை எழுதும் எனக்கே  தெரியாது. ஒரு கட்டுரையில் உள்ள முக்கியமானத் தகவல்களை நாங்கள் இழக்கும்போது, அது முழுமையான புரிதலைத் தடுக்கிறது. ஒரு அழகான காட்சியை நாங்கள் மனதால் உணரும் வாய்ப்பு மறுக்கப்படும்போது, இந்த டிஜிட்டல் உலகம் பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமேயானதா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.

ஆல்ட் டெக்ஸ்ட் என்றால் என்ன? இது ஒரு படத்தை விவரிக்கும் சிறிய உரை. பார்வை உள்ளவர்களுக்கு இந்த ஆல்ட் டெக்ஸ்ட் கண்ணுக்குத் தெரியாது. அது இமேஜின் குறியீட்டில் மறைந்திருக்கும். ஆனால் ஸ்கிரீன் ரீடர் பயன்படுத்தும் எங்களைப் போன்றவர்களுக்கு, படம் இருக்கும் இடத்தில் இந்த உரை வாசிக்கப்படும். இது பார்வை உள்ளவர்களுக்கு எந்த இடையூறும் தராது, அதே சமயம் எங்களுக்கு படத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

ஒரு நல்ல ஆல்ட் டெக்ஸ்ட் எப்படி இருக்கும்? உதாரணமாக, ஒரு கடற்கரை இமேஜிற்கு, வெறும் ‘கடற்கரை படம்’ என்று சொல்வது ஆல்ட் டெக்ஸ்ட் அல்ல. மாறாக, ‘சூரிய அஸ்தமனத்தில் ஆரஞ்சு நிற வானத்துடன், அலைகள் பொங்கி வரும் கடற்கரை’ என்று எழுதுவது, நாங்கள் அந்த காட்சியை மனதால் கற்பனை செய்ய உதவும். இன்னொரு எடுத்துக்காட்டு: ‘சிரிக்கும் ஒரு பெண் கையில் புத்தகம் வைத்துக்கொண்டு பார்க்கில் அமர்ந்திருக்கிறார்’ என்பது, வெறும் ‘பெண் படம்’ என்பதைவிட, படத்தைப் பற்றிய முழுமையான விவரத்தை எங்களுக்கு வழங்கும். ஒரு படத்தை பதிவேற்றம் (Upload) செய்யும்போது, அதற்கான ஆல்ட் டெக்ஸ்ட்டை டைப் செய்யும் வசதி (Option) கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான சமூக வலைத்தளங்கள், தனிநபர் வலைத்தளங்கள் (blog), மற்றும் உள்ளடக்க மேலாண்மை அமைப்புகளில் (Content Management Systems) படத்தை பதிவேற்றம் செய்தவுடன், ஆல்ட் டெக்ஸ்ட் சேர்க்கும் ஒரு ஃபீல்ட் (Field) அல்லது பாக்ஸ் இருக்கும். இதை கவனமாக நிரப்புவது, எங்களைப் போன்ற பலரின் டிஜிட்டல் அனுபவத்தை முழுமையாக மாற்றியமைக்கும். இது தானியங்கி பட விளக்கங்களை விடவும், (automatic description), படத்தின் நோக்கம், சூழல் மற்றும் முக்கிய விவரங்களை எங்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும். ஒரு வலைத்தளத்தை வடிவமைக்கும்போது, இந்த ஆல்ட் டெக்ஸ்ட்டை எழுதுவது மிக எளிதான காரியம்தான், ஆனால் பெரும்பாலான டெவலப்பர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை.

படங்களைப் போலவே, வலைத்தளங்களில் / செயலிகளில் உள்ள பொத்தான்கள் (Buttons) மற்றும் உருவங்கள் (Icons) எங்களுக்கு பெரும் சவாலைத் தருகின்றன. பல பொத்தான்கள் பெயரற்றவையாக (Unlabelled Buttons) ஆக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு சமூக வலைதளத்தில், ‘லைக்’, ‘கமெண்ட்’, ‘ஷேர்’ போன்ற தெரிவுகளுக்கு வெறும் உருவங்கள் மட்டுமே இருக்கும். ஸ்கிரீன் ரீடர் அதை ‘பட்டன்’ என்று மட்டுமே அறிவிக்கும். ஆனால், அது லைக் பட்டனா, ஷேர் பட்டனா என்று எங்களால் கண்டறிய முடியாது. இது வெறுமனே ஒரு ‘பட்டன்’ ஆகத் தெரிவதால், அதன் செயல்பாட்டை நாங்கள் தெரிந்து கொள்வதற்கு பிறரின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொத்தானுக்கும், உருவத்துக்கும், சுட்டிக்கும் அவற்றின் செயல்பாட்டைக் குறிக்கும் தெளிவான விளக்கங்கள் இருப்பது, அத்தியாவசியம்.

சில வலைத்தளங்கள் மற்றும் செயலிகளில் உள்ள எரிச்சலூட்டும் மற்றொன்று, ஆட்டோ ஸ்க்ரோலிங் (Auto Scrolling). விளம்பர பதாகைகளோ, தகவல்களோ, தானாகவே நகர்ந்து கொண்டே இருக்கும். நாங்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியைப் படிக்கவோ அல்லது ஒரு பொத்தானில் கவனம் செலுத்தவோ (Focus) செய்யவோ முயற்சிக்கும்போது, அந்த தானியங்கி நகர்வு (auto scrolling) எங்களின் கவனத்தை மாற்றிவிடும். இதனால், நாங்கள் படிக்க வேண்டிய தகவலை இழக்கிறோம், சில நேரங்களின் பலமுறை முயற்சித்தும் அதை அணுக முடியாமல் போகிறது. தட்டச்சுப் பலகை நேவிகேஷன் (Keyboard Navigation) மூலம் ஒரு வலைத்தளத்தை நாங்கள் அணுகும்போது, ‘Tab’ பொத்தானை அழுத்தி அடுத்த எலிமெண்ட்டிற்கு (Element) நகரும்போது, திரை தானாகவே நகர்ந்து, எங்களின் கவனத்தை மாற்றிவிடும்.

இந்தச் சவால்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு, அணுகல்தன்மை சோதனை (Accessibility Testing). ஒரு வலைத்தளம் அல்லது செயலியை உருவாக்கும்போது, அது வடிவமைப்பு (Design) முதல் விரிவாக்கம் (Development) வரை, பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அணுகக்கூடியதாக இருக்கிறதா என்று சோதிக்கப்பட வேண்டும். WCAG (Web Content Accessibility Guidelines) போன்ற உலகளாவிய தரநிலைகளைப் பின்பற்றி, அணுகல்தன்மைக்கான அம்சங்களை ஆரம்பத்திலிருந்தே கட்டமைக்க வேண்டும். இது ஒரு கூடுதல் சுமை அல்ல, ஒரு அடிப்படைத் தேவை. இந்த சோதனைகளைச் செய்ய, எங்களைப் போன்ற பார்வையற்ற டெஸ்டர்களைப் பயன்படுத்துவது, நாங்கள் சந்திக்கும் நிஜமான சிக்கல்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய உதவும். அது சரி எங்களை போன்ற பார்வையற்றவர்கள் இணையத்தை பயன்படுத்துவார்களா என்றே சிந்திக்காத உங்களுக்கு, எண்களில் டெஸ்டர்கள் முதல் டெவெலப்பர்கள் வரை இருப்பார்கள் என்று தெரியாதுதானே? தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அது அனைத்துப் பயனர்களும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததாகவே உள்ளன. அனால், அவற்றை செயல்படுத்ததான் ஒன்றிய அரசு உள்பட இங்கு யாரும் தயாராக இல்லை.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களாவது, மாற்றுத்திறனாளிகளும் இணையத்தை பயன்படுத்துவார்கள் என்பதை சிந்தித்து, மாற்றத்தை கொண்டு வருவீர்களா?

எங்கள் அன்றாட வாழ்க்கை குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா? தயங்காமல் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள் – strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘உணர்வுகளின் உலகம்’ என தலைப்பிட்டு எழுதுங்கள்!

தொடரும்…

படைப்பாளர்

பிருந்தா கதிர்

தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.