கடந்த அத்தியாயங்களில் எங்கள் அன்றாடப் பணிகள், சவால்கள் குறித்துப் பேசினோம். இந்த அத்தியாயத்தில், சமூகத்தில் பொதுவாகப் பேசத் தயங்கும், ஆனால் பேசவேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேச உள்ளேன்.
என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும் ஒரு கேள்வி, “உங்களுடைய மாதவிடாய் காலத்தை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?” என்பது.
இக்கேள்விக்கான பதிலை என்னுடைய சொந்த அனுபவங்களின் வாயிலாகவும், இன்னும் சில பார்வையற்ற பெண்களின் அனுபவங்களின் வாயிலாகவும், உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒரு பார்வையற்ற பெண் தன் முதல் மாதவிடாயை எதிர்கொள்ளும் விதம், அவள் எங்கே இருக்கிறாள் என்பதைப் பொறுத்து வேறுபடும். சிறப்புப் பள்ளிகளில் இந்தப் பிரச்னை இல்லை; ஏனெனில், அங்குப் பிரத்யேகப் பயிற்சிகள் – சானிட்டரி நாப்கின்களை எப்படிப் பயன்படுத்துவது, மாதவிடாய் காலத்தில் எப்படி தன்னை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவை சொல்லிக் கொடுக்கப்படும்.
ஆனால், வீட்டில் வளரும் பெண்குழந்தைகளுக்கு இது நிச்சயம் சவாலான காரியம்தான். பொதுவாகவே, மாதவிடாய் என்றால் அசிங்கம், தீட்டு என்ற தவறான மனபோக்குதான் நம் சமூகத்தில் உள்ளது.
இந்தப் புரிதலற்ற நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் பார்வையற்ற மகளுக்கு முதல் மாதவிடாய் வந்தவுடன், அவர்களாகவே நாப்கினை வைத்துவிடுவார்கள். குழந்தைக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், ‘இவளுக்குத் தெரியாது, நாம் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தில் பள்ளிக்கு அனுப்பிவிடுவார்கள்.
ஆனால், இரண்டாவது மாதவிடாய் வரும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது. நான் முன்னரே குறிப்பிட்டதுபோல, பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் விடுதிகளுடன் கூடியவை. இரண்டாவது மாதவிடாய் வரும்போது, அந்தக் குழந்தை ஒருவேளை விடுதியில் இருக்கலாம்.
அப்போது, நாப்கின் எப்படி வைப்பது, அதை எப்படி மாற்றுவது, என்று எதுவுமே தெரியாமல் அந்தக் குழந்தை தவிக்கும். ஏதோ தனக்குத் தெரிந்த அளவில் நாப்கினை வைத்துக்கொண்டு பள்ளிக்கு வரும். ஒரு கட்டத்தில், இரத்தப்போக்கு அதிகமாகி, அவள் அமர்ந்திருக்கும்போது, அவளுடைய உடை முழுவதும் கறைபட்டு, தரையிலும் படரும்.
அப்போது, அந்த இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டியவர்கள், அந்தக் குழந்தையை வார்த்தைகளால் எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கமாகப் பேசுவார்கள். இந்தக் குழந்தைக்கோ, தான் என்ன தவறு செய்தோம், ஏன் இப்படி ஆனது என்று புரியாமல், தான் செய்த ‘தவறு’க்காகப் பெரும் மன உளைச்சலையும் அவமானத்தையும் சந்திக்கும்.
இது அக்குழந்தையின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னை, பார்வையற்ற பெண்களின் தன்னம்பிக்கையை அடியோடு தகர்க்கும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையாகும்.
இங்கு பெற்றோரின் அறியாமையும், சமூகத்தின் மாதவிடாய் குறித்த தவறான மனப்போக்கும் ஒன்றிணைந்து, ஒரு பார்வையற்ற பெண் குழந்தைக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
என்னதான் பள்ளிகளில் நாப்கின் வைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தாலும், மாதவிடாய் என்றால் என்ன? அது ஏன் வருகிறது என்பது குறித்த எந்த விழிப்புணர்வும் பார்வையற்ற பெண்களுக்கும் இந்தச் சமூகத்தில் சொல்லித் தரப்படுவதில்லை.
பள்ளிப் பாடத்திட்டத்தில் இது குறித்தத் தகவல்கள் இருந்தாலும், பெரும்பாலும் யாரும் அவற்றை எங்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. இங்கே என் தோழர் ஒருவரின் அனுபவத்தை அவரின் அனுமதியோடு உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
என் தோழர் தன்னுடைய இருபத்தொன்றாம் வயதில், ‘பூப்படைதல் முதல் மெனோபாஸ் வரை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இணையத்தில் வாசித்துள்ளார்.
அப்போது அங்கே வந்த அவரின் தாயார், ஏதோ தெரிந்துகொள்ளக் கூடாத ஒன்றை தெரிந்துகொள்ள முனைவதுபோல அவரிடம், “இதெல்லாம் இப்பயே தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போற? உனக்கென்ன அவ்வளவு ஆசையா? கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா போதும்” என்று முட்டாள்தனமாக கூறினாராம்.
யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவும் கூடாது, தேடி ப்படிக்கவும் கூடாது என்றால், சொற்களின் மூலமே உலகத்தை அறியும் எங்களுக்கு என்ன தான் வழி?
இந்த சமூகத்தின் தயக்கத்தால், மாதவிடாய் என்றால் என்ன என்று ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தெரிவதில்லை. பார்வையுள்ள ஆண்களுக்கு, நாப்கின் விளம்பரங்களின் வழியாகவோ, பிறரை கவனிப்பதன் மூலமாகவோ மாதவிடாயை பற்றி ஒரு அடிப்படை புரிதலாவது இருக்கும்.
ஆனால், பார்வையற்ற ஆண்களுக்கு இந்த வாய்ப்பு முற்றிலும் கிடையாது. அவர்களுக்கு எல்லாம், ‘பெண்களுக்கு மாதவிடாய் என்ற ஒன்று வரும்’ என்பது மட்டும்தான் தெரியும். தங்கள் தோழியோ அல்லது மனைவியோ மாதவிடாயின் போது சிரமப்பட்டால், அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாது.
ஒருவேளை அவளுக்கு மாதவிடாய் காரணமாக ஏற்படும் மனநிலை மாற்றம் (Mood Swing) போன்ற பிரச்னை ஏற்பட்டால்கூட, அது மாதவிடாய் சம்பந்தப்பட்டது என்று அவர்களுக்குப் புரியாமல் போகலாம். இந்த நிலை மாற வேண்டும்.
மாதவிடாய் குறித்துப் பொதுவெளியில் தெளிவாகப் பேச வேண்டும். இது பேசக் கூடாத விஷயம் அல்ல. பேசாததால்தான், பார்வையற்றவர்கள் உள்படப் பலரும் இந்தச் சமூகத்தின் தவறான புரிதல்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, என் தந்தையும் பார்வையற்றவர் என்பதால், என் குடும்பத்தினருக்கு, எனக்கு எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற புரிதல் இருந்தது.
உடல் சோர்வு, வயிற்று வலி போன்ற அறிகுறிகளை வைத்து எனக்கு மாதவிடாய் வரப்போகிறது என்பதாக நான் புரிந்துகொள்வேன். மாதவிடாய் தொடங்கிவிட்டது என்றால், உள்ளாடையில் ஒருவித ஈரமான உணர்வு ஏற்படும். உடனடியாக கழிப்பறைக்குச் சென்று இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறதா என்று தொட்டுப் பார்ப்பேன். ஈரமும் பிசுபிசுப்பான உணர்வும் இருந்தால், மாதவிடாய் வந்துவிட்டது என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
சானிட்டரி நாப்கின்களைச் சரியாக உள்ளாடையில் வைப்பது என்பது முற்றிலும் தசை நினைவாற்றல் (Muscle Memory) சார்ந்ததுதான். வீட்டில் உள்ளவர்களோ அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர்களோ ஒருமுறை சொல்லிக் கொடுத்தால் போதும், அதன் பிறகு தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் அது பழகிவிடும்.
இதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. என்னுடைய இரத்தப்போக்கின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதற்கேற்ப, உறிஞ்சும் தன்மை கொண்ட நாப்கின்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவேன்.
அனைத்துப் பெண்களுக்கும் சில சமயங்களில் ஆடைகளில் கசிவதைப் போல, எனக்கும் கசிவது சகஜம்தான். ஆனால், ஒருவேளை தவறுதலாக உடையில் கறை படிந்துவிட்டால், அந்த நேரங்களில், பார்வையுள்ளவர்கள் எங்களை நடத்தும் விதத்தை எதிர்கொள்வதுதான் சவாலான ஒன்று.
ஒரு சிலர், “இந்த நேரத்தில ஏம்மா வெளிய வரீங்க?” என்று கேட்பார்கள். ஒரு சிலர், ஏதோ எங்களுக்கு மட்டும்தான் ஆடையில் கசிவதுபோல், பரிதாபமாக பார்த்துவிட்டுச் செல்வார்கள். உதவ மட்டும் முன்வரமாட்டார்கள்.
பொதுவாக, அனைத்துப் பெண்களாலும் தங்களுடைய இரத்தப்போக்கின் அளவை உணர முடியும் அல்லவா, அதே உணர்வு எனக்கும் இருக்கும். நாப்கின் கனமாகிவிட்டதை உணர்ந்தால், உடனடியாகச் சென்று மாற்றிக்கொள்வேன்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அப்புறப்படுத்துவதும் ஒரு முக்கியமான விஷயம். நான் வழக்கமாகப் பயன்படுத்தும் இடத்தில் குப்பைத் தொட்டி எங்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதனால், நாப்கின்களைக் காகிதத்தில் சுற்றி, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன்.
ஆனால், பொதுக் கழிப்பறைகளில் இது மிகவும் சங்கடமான காரியம். அங்கு குப்பைத் தொட்டி எங்கு இருக்கிறது என்று தேடுவது, அதைப் பயன்படுத்துவது, அப்புறப்படுத்துவது எல்லாம் கொஞ்சம் சவாலான விஷயம்தான்.
பொதுவாகவே எனக்கு ஒரு பழக்கம் உண்டு. மாதவிடாய் நாள்களில் நான் அடிக்கடி கழிப்பறைக்குச் சென்று, உள்ளாடையில் ரத்தம் கசிந்திருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துச் சரிபார்த்துக்கொள்வேன். தொட்டுப் பார்த்தாலே ஒருவித உணர்வு ஏற்படும் அல்லவா, அதைக் கொண்டு என் உள்ளாடையை மாற்றிவிட்டு வந்துவிடுவேன்.
இரவு நேரங்களில் எனக்கு சில சமயங்களில் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அது போன்ற சமயங்களில் காலையில் எழுந்ததும், முடிந்தவரை துணிகளைச் சற்று அதிகக் கவனம் எடுத்துத் துவைத்துப் போட்டுவிடுவேன்.
இந்தச் சங்கடங்கள் அனைத்தும் எனக்கு மென்ஸ்ட்ருவல் கப் (Menstrual Cup) பற்றித் தெரிய வரும் வரைதான். எனக்கு மென்ஸ்ட்ருவல் கப் பற்றித் தெரிய வந்த பிறகு, அதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். அது குறித்துத் தெரிந்துகொண்டதில் இருந்து இந்தச் சங்கடங்கள் எதுவும் எனக்கு இல்லை. இது மிகவும் சௌகரியமாக இருக்கிறது.
பயணங்களின்போதுகூட இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. இப்போது பொது கழிப்பறையில் குப்பைத் தொட்டி எங்கிருக்கிறது என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை.
‘பெண்களுக்கு பொதுவாக வெள்ளைப்படுதல் இருக்கும். அதற்கும் மாதவிடாய்க்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பீர்கள்?’ என்று ஒரு சிலருக்கு சந்தேகம் வரலாம், கேட்க கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும், நான் அப்படித்தான் சமாளிக்கிறேன்.
அது என்னவென்றால், தொட்டுப் பார்க்கும்போது பிசுபிசுப்பாக இருந்தால், அது மாதவிடாய். அப்படி இல்லை என்றால், அது வெள்ளைப்படுதல். அவ்வளவுதான்.
மாதவிடாய் நாட்களில் என்னுடைய உடைகளை நான் தான் துவைப்பேன். ‘அது எப்படி?’ என்று நீங்கள் கேட்கலாம். துணிகளைத் தண்ணீரில் ஊற வைத்தால்கூட, தொட்டுப் பார்க்கும்போது கறை படிந்திருக்கும் பகுதிக்கும் மற்ற பகுதிக்கும் வித்தியாசம் தெரியும். அதை வைத்து, அந்தக் கறைகள் இருக்கும் இடங்களில் சற்று அதிகக் கவனம் செலுத்தித் துவைத்து விடுவேன். அப்படி ஒருவேளை தெரியாவிட்டாலும், எங்கெல்லாம் மாதவிடாய்க் கறை படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நமக்குத் தெரியும் அல்லவா? அந்தப் பகுதிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து துவைத்துவிடுவேன்.
பார்வை என்பது இந்த உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிதான், ஆனால் அதுவே எல்லாமே இல்லை. மற்ற உணர்வுகள் மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்கிறோம்.
பார்வை இல்லாததாலேயே ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலத்தைச் சமாளிப்பது கடினம் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. சரியான பயிற்சி, புரிதல், மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் துணை கொண்டு, அனைத்துப் பெண்களைப் போலவே நாங்களும் எங்கள் மாதவிடாய் காலத்தை எவ்விதச் சிரமமும் இன்றி எதிர்கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
கேள்வி பதில் பகுதி
தோழர் சமீரா கேள்வி
உங்கள் தொடர் அற்புதம்… வாழ்த்துகள், என்னுடைய ஐயங்களில் ஒன்றை தெளிவுபடுத்துங்கள்… அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களைதான் நீங்களும் பயன்படுத்துகிறீர்களா? அல்லது உங்களுக்கென தனி வெர்சன் உள்ளதா? எப்படி ஒரு செயலியை உங்களால் செல்பேசியில் தேடி கண்டுபிடிக்க முடிகிறது?
பிருந்தா பதில்
வணக்கம் தோழர்!
உங்கள் பாராட்டுதலுக்கும், கேட்கப்பட்ட உங்கள் ஐயத்திற்கும் மிக்க நன்றி.
ஆம்., நீங்கள் அனைவரும் பயன்படுத்தும் அதே ஸ்மார்ட்போன்களையேதான் நாங்களும் பயன்படுத்துகிறோம். எங்களுக்கெனத் தனியான பிரத்யேக வெர்ஷன் எதுவும் கிடையாது. இந்த ஸ்மார்ட்போன்களில் இயல்பாகவே உள்ள சில சிறப்பம்சங்கள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கின்றன. உதாரணமாக, ஆண்ட்ராய்டு போன்களில் ‘டாக் பேக்’ (Talk Back) என்ற ஆப்ஷனும், ஐபோன்களில் ‘வாய்ஸ் ஓவர்’ (Voice Over) என்ற ஆப்ஷனும் உள்ளன. இதை ஆன் செய்துவிட்டால், நாங்கள் தொடும் ஒவ்வொரு செயலியின் பெயரையும் அல்லது திரையில் உள்ள ஒவ்வொன்றையும் போனே படித்துச் சொல்லும்.
ஒரு செயலியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், நாங்கள் திரையில் விரலை வைத்து நகர்த்தும்போது, போன் அந்தந்தச் செயலியின் பெயரைப் படித்துச் சொல்லும். உதாரணமாக, ‘வாட்ஸ்அப்’ என்று படித்தவுடன், அந்தச் செயலியின் மேல் இருமுறை தட்டினால் அது திறந்துவிடும். இப்படித்தான் நாங்கள் அலைபேசிகளை பயன்படுத்துகிறோம். உங்கள் கேள்விக்குத் தெளிவான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவுக்கும், கேள்விக்கும் மீண்டும் நன்றி!
அன்புடன்,
பிருந்தா கதிர்.
எங்கள் அன்றாட வாழ்க்கை குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா? தயங்காமல் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள் – strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘உணர்வுகளின் உலகம்’ என தலைப்பிட்டு எழுதுங்கள்!
தொடரும்…
படைப்பாளர்

பிருந்தா கதிர்
தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.




