பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.
எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன் பஸ், பணம் பந்தியிலே, முதலாளி போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர்.
கதை வசனம் ஏ.பி. நாகராஜன்
பின்னணி பாடியவர்கள்
TM சௌந்தராஜன், MS ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ஜிக்கி, SC கிருஷ்ணன், P லீலா, UR சந்திரா, P கனகா
நடிகர்கள்
நால்வர் நாகராஜன் எம்.என். நம்பியார்
பி.எஸ். வீரப்பா பி.எஸ். வெங்கடாசலம்
ஈ.ஆர். சகாதேவன் வி.எம். ஏழுமலை
அ. கருணாநிதி ஆர். பக்கிரிசாமி
எஸ்.எம். திருப்பதிசாமி OAK தேவர்
எம்.ஏ. கணபதி TM சௌந்தரராஜன்
J லக்ஷ்மணராவ் G K சௌந்தரராஜன்
M S மணி
நடிகைகள்
P. கண்ணாம்பா
P R. சுலோச்சனா
M சூர்யகலா
E V சரோஜா
C D ராஜகாந்தம்
P. கனகா
M K விஜயா
ஸ்டுடியோ: சென்ட்ரல் ஸ்டுடியோ கோயம்புத்தூர்
இணையத்தில் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத் திரைப்படம்தான் இருக்கிறது. அதனால் பல தகவல்கள் விடுபடலாம். என்னால் முடிந்தவற்றை எழுதி இருக்கிறேன்.
இக்கதையில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல என்ற சொற்றொடர் வருகிறது.
டைரக்ஷன் K சோமு.
மகேந்திரபுரியின் தளபதி விக்ரமன், சொர்ணபுரியின் படையை வெற்றி கொண்டுவிட்டு நாடு வருகிறார். அரசி, மற்றும் தளபதியின் காதலி மஞ்சுளாவிடமிருந்து பலத்த வரவேற்பு அவருக்குக் கிடைக்கிறது. மஞ்சுளா நாட்டின் முதலமைச்சரின் மகள்.
மகேந்திரபுரியின் அமைச்சர் விஜயசிம்மன், சொர்ணபுரியின் ஆளுமை மிக்க மார்த்தாண்டனின் ஆள். நடனக் கலைஞர் ஜீவாவும் இவர்களின் ஆள் தான். இவர்கள் அனைவரும் இணைந்து சொர்ணபுரியின் மன்னரைக் கொன்றுவிட முடிவு செய்கின்றனர். மன்னரிடம், “மகேந்திரபுரி மீது போர் தொடுக்க வேண்டும்.” என மார்த்தாண்டன் சொல்கிறார். மன்னரோ, அவர்களின் உரிமையான இடம் தான் அது. இதுவரை நம்மிடம் இருந்தது. இப்போது மீட்டுச் சென்று இருக்கிறார்கள். அதனால் எதுவும் செய்ய வேண்டாம்” என்கிறார்.
மக்களிடம் அதே கதையை மாற்றிச் சொல்கிறான் மார்த்தாண்ட வர்மன். மக்களின் மீது வரி கூடக்கூடாது; போரில் வீரர்கள் இறக்கக் கூடாது என்பதற்காக, தானே மன்னரைக் கொன்றதாகச் சொல்லி மக்களை நம்பவைக்கிறான்.
விஜயசிம்மன், மகேந்திரபுரியின் அரசி பெண்ணரசியை அழித்து விட்டுத் தான் அரசராக நினைக்கிறான். இது இறந்துபோன அவனின் அப்பாவின் ஆசையும் கூட. விஜயசிம்மனின் அப்பா, தான் யாரோ ஒரு மகுடபதியை அடைத்து வைத்து இருப்பதாகவும், அவரிடம் இருந்து ரகசியத்தைப் பெரும் வரை அவரை வெளியில் விடவோ கொல்லவோ செய்யாதே; அவரிடம் உண்மையை வரவழைக்க உன்னால் ஆன அத்தனையும் செய். எப்போதும், பெண்ணரசி, முதலமைச்சர், தளபதி மூவரிடமும் மிகக் கவனமாக நடந்து கொள்” எனச் சொல்லியிருக்கிறார்.
இந்த காலகட்டத்தில் மார்த்தாண்டனிடமிருந்து, விஜயசிம்மன் தன்னைச் சந்திக்க வரவேண்டும் எனத் தகவல் வருகிறது. இவர் செல்கிறார். சந்திப்பு நடக்கிறது.
இங்கே முதலமைச்சர், நாட்டின் நிலைமை சரியாக இல்லை என விளக்கமாகச் சொல்ல, பெண்ணரசிக்கு அது பிடிக்கவில்லை. விஜயசிம்மன் ஜீவாவை அழைத்து வருகிறான். அதில் மகேந்திரபுரியின் அரண்மனையில் யாருக்கும் விருப்பம் இல்லை. ஆனால் பெண்ணரசி அவரை சேர்ப்பதில் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அரண்மனையின் முதன்மை நடனக் கலைஞராக ஆக்குகிறார். பாவம் ராகம் தாளம் இவற்றின் முதலெழுத்துக்கள் தான் பரதம். பரத முனிவர் செய்த பரதநாட்டிய… (இந்த சொல் என்னவென்று விளங்கவில்லை) … இப்படி 108 கேள்விகள் ஜீவாவிடம் கேட்கப் படுகின்றன. பல கேள்விகளுக்குப் பதில் சொன்னாலும் பல கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் பெண்ணரசி பிடிவாதமாக ஜீவாவை அரசவையில் வைத்துக் கொள்கிறார்.
முதலமைச்சர் சொல்லும் எதையும் பெண்ணரசி கேட்கும் நிலையில் இல்லை. ஒருகாலகட்டத்தில் முதலமைச்சரின் குடும்பம் நாட்டை விட்டே வெளியேற்றப் படுகிறது. மஞ்சுளாவை விக்கிரமன் சந்திக்கிறார். தான் வெளியேற்றிய குடும்பத்தின் உறுப்பினரைச் சந்தித்தது தவறு என விக்கிரமனைக் கைது செய்யப் பெண்ணரசி ஆணையிடுகிறார். விக்கிரமன் மட்டுமல்ல முதலமைச்சரும் கைது செய்யப்படுகிறார். விக்கிரமன் தப்பித்து, மீண்டும் சிறைப்படுகிறார்.
ஜீவா தனது நாட்டிற்குப் போகிறார். இந்தக் காலகட்டத்தில் பெண்ணரசியைக் கைது செய்வதற்குக் கூட முயற்சி நடக்கிறது. சிறையில் பல ஆண்டுகளாக, விஜயசிம்மனின் அப்பா மற்றும் விஜயசிம்மனால் சிறை வைக்கப்பட்டு இருக்கும் பெரியவர் பெண்ணரசி முன் வருகிறார். அவர் வேறு யாருமல்ல, விக்கிரமனின் தந்தை தான். அவர் இறந்து விட்டதாகத் தான் இவர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விக்கிரமனின் அப்பா, தான் வளர்ப்புத் தகப்பன்தான் என்றும் உண்மையில் பெண்ணரசியின் இறந்து போனதாகச் சொல்லப்படும் சிறுவன் தான் இப்போது வளர்ந்துள்ளான் என்றும் சொல்கிறார்.
விஜயசிம்மனின் அப்பாவின் ஏற்பாட்டின் படி இறந்த ஒரு குழந்தை அரசியிடம் காட்டப்பட, மகுடபதி, குழந்தையுடன் சென்றவனைக் கொன்று குழந்தையைக் காப்பாற்றி இருக்கிறார். விஜயசிம்மனின் அப்பா மன்னரைக் கொல்கிறான். இதைப்பார்த்த மகுடபதி, மன்னரின் வாரிசு உயிருடன் இருக்கிறது என்கிறார். அது யார் எனத் தெரிந்து கொள்ளத்தான் இவ்வளவு காலமும் சிறையில் வைத்திருக்கிறார்கள். மன்னர், பெண்ணின் அரசாட்சி பிடிக்காமல் யாத்திரை சென்று விட்டதாகக் கதை கட்டி இருக்கிறார்கள். இதுதான் முன்கதை.
மார்த்தாண்ட வர்மன் தன்னை மன்னராக அறிவிக்கிறான். விஜயசிம்மன் ஏமாற்றப் படுகிறான். நாட்டில் புரட்சி உருவாகிறது. விக்கிரமன் விடுவிக்கப் படுகிறார். ஒரு பெரிய குளத்தினுள் கட்டுண்டு பெண்ணரசி நிற்கிறார். தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள். மகன் விக்கிரமன் வந்து காப்பாற்றுகிறார். எதிரிகள் அனைவரும் மடிகிறார்கள்.
‘பொறாமை கொண்ட கூட்டத்தைத் தீர்த்துக்கட்டும் வரையில் பொம்பளைங்களே பொறுமை என்ற வார்த்தையையே மறந்திடுங்க. ஒரு பொம்பள வந்து அரசாங்கத்தையே மாத்திட்டானா (ஜீவாவைக் குறித்து) இத்தனை பொம்பளைங்களும் சேர்ந்து விடுதலைக்காக போராடப்போறோம்!’
‘நான் சொல்லும் பாடத்தை மட்டுமே சொல்லும் உனக்கு ஆட்சி செய்யும் திறன் ஏது?’
‘கூட்டத்தோடு வந்து ஒருவரைக் கொல்லும் வழக்கம் எனக்கில்லை மார்த்தாண்டா! முன்னால் செல்லும் மறவனைப் பின்னால் மறைந்திருந்து சாகடிக்கும் வழக்கம் எங்கள் வம்சப் பரம்பரைக்கே இல்லை.’
இப்படி உரையாடல்கள் அனல் தெறிக்க உள்ளன. ‘யார் தச்ச சட்டை ; எங்க தாத்தா தைச்ச சட்ட’ போன்ற நகைச்சுவைகளும் உண்டு.
பெண்ணரசியாக வரும் கண்ணம்மாதான் நாயகி. அறிவு செறிந்த அரசியா அல்லது யார் சொன்னாலும் கேட்கும் அரசியா அல்லது யார் சொன்னாலும் கேட்காத அரசியா என குழப்பமாகவே அவரது பாத்திரம் இருக்கிறது. விக்கிரமன்தான் உங்கள் மகன் எனச் சொல்லும் போது கூட அப்படியா என எந்த உணர்வும் இல்லாமல்தான் அவரின் முகபாவனை இருக்கிறது. அவரின் உச்சரிப்பு, நன்றாக இருந்தாலும் பல உரையாடல்கள் தேவையற்றவை போன்றே உள்ளன. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ ‘மனோகரா’வின் தாக்கம் இருப்பது போலத் தோன்றுகிறது.
மன்னர், பெண்ணின் அரசாட்சி பிடிக்காமல் யாத்திரை சென்றுவிட்டதாகக் கதை கட்டி இருக்கிறார்கள். அரசிக்குப் பிறந்த மகனைக் கொல்ல ஏற்பாடு செய்யும் விஜயவர்மனின் அப்பா, ஏன் பெண்ணரசிக்குப் பிறந்த பெண் குழந்தையை விட்டு வைத்தார்? ஏற்கனவே ஒரு பெண் இருக்கும் பதவிக்கு அவரின் மகள் வரமாட்டாரா? இல்லை வரத்தான் முடியாதா? இப்படிக் கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள்.
நாயகனாக வரும் AP நாகராஜன். சிறிது கரகரத்த, கொஞ்சம் SSR அவர்களின் சாயல் கொண்ட குரலாகத் தோன்றியது. பெரியவர் போன்றே தோற்றமளிக்கிறார்.
P R சுலோச்சனா பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். அவர் நடனக்காரப்பெண்ணாக வருகிறார். மிகவும் அழகாக நடனம் ஆடுகிறார்.
ஆனால், A P நாகராஜன் அவர்களின் காதலியாக வரும் சூரியகலா அவர்கள் தான் நாயகி. மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அந்த நாள் போன்ற பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், நாயகியாக சூரியகலா நடித்துள்ள படம் என இதைச் சொல்லலாம். பிற்காலத்தில் பல திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் tape சுந்தரியாகக் கலக்கியிருப்பார்.
கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். பாடல்களை ஏ. மருதகாசி மற்றும் கா. மு. ஷெரிப் எழுதியுள்ளனர். பின்னணி டி.எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், எஸ்.சி. கிருஷ்ணன், எம்.எஸ். ராஜேஸ்வரி, ஜிக்கி, பி. லீலா, யு.ஆர். சந்திரா மற்றும் பி. கனகா பாடியுள்ளார்கள்.
மருதகாசி எழுதிய பாடலை எஸ்.சி. கிருஷ்ணன், கனகா இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.
நெத்தியிலே நீலநிறப் பொட்டு – உடம்பைச்
சுத்தியே ஜரிகைக் கரைப் பட்டு
கொத்துதடி என் மனசைத் தொட்டு – சிட்டுக்
குருவியே உன்னுடைய பகட்டு
புத்தியுள்ள ராசாவே வாங்க – இனிப்
பொறுக்காது என் மனசு தாங்க
முத்துப் பல்லைக் காட்டி ஆசையை மூட்டிப்
பித்துக் கொள்ளச் செய்திட்டீங்க நீங்க – என்னை
பூத்தது நிலவு வானத்திலே
பொன்னான இந்த நேரத்திலே
ஆத்தங்கரையின் ஓரத்திலே
ஆடிடலாமே பெண் மயிலே
விளையாடிடலாமே பெண் மயிலே
காத்திருக்கேனுங்க என்னை நீங்க
கல்யாணம் செய்திட வேணுங்க
இத்தனை நாளாப் புத்தி கெட்டுப் போயி
இருந்ததை மன்னிக்கணும் நீங்க – வீரனை
மறந்திட்டேன் சத்தியமாத் தாங்க
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது -ஜீவ
சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது -வாழ்வில்
துணை தேடுது
அந்திவரும் நிலவைக் கண்டு அல்லி முகம் சிவக்குது
போதையூட்டும் தேனைச் சிந்தி ஜாதிமல்லி சிரிக்குது
சிந்து பாடி வண்டு தேன் தேடும் காட்சி கண்டு
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுதே
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
அன்பு மயமான இந்த உலகிலே ஓ…
பலரறிய அரசன் அரசியாவோம் விரைவிலே ஆ…
உலவும் தென்றலிலே உல்லாசம் காணுவோம்
நிலவும் வானும் போல குலவி மகிழுவோம்
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
எனையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே
கா மு செரீப் இயற்றிய இப்பாடலில், டி எம் சவுந்தரராஜன் பாடுவது மட்டுமல்லாமல் நடித்தும் இருக்கிறார்கள்.
வென்றது சூழ்ச்சி என்று எண்ணாதேடா – நீ
வீணாக கர்வம் கொண்டு அழியாதடா
நன்மைக்கு எதிர் பேசும் உன் போன்றோரை -நாடு
மறப்பது இல்லையடா
பெண்ணரசி இசை பாடும் பித்தனென்றே
எண்ணி என்னைப் பாடச்சொன்னார்
மறுத்துரைத்தேன்
வன் சிறையில் அடைத்திட்டார்- அதனால் எந்தன்
மனம் மாறுமென்றே நினைத்தார் அறிவில்லாரே
பெரும்பதவி காரர் என்றால் கும்பிட வேண்டுமா?
பெண்ணரசி தனைக் கண்டால் வணங்க வேண்டுமா?
உண்மை சொல்ல அஞ்சி உயிர் வாழ வேண்டுமா?
உலகினில் கொடுங் கோன்மை நிலைக்க வேண்டுமா?
மருதகாசி எழுதிய பாடலை பி. லீலா பாடுகிறார்.
உலகம் செழிப்பது பெண்ணாலே
கலை உலகம் சிறப்பது என்னாலே !
திலகம் போல் இந்த நாடு மண்மேலே திகழ்வது
பெண்ணரசி ஆளுக் திறத்தாலே
மலரும் உனது நல்ல ஆட்சியிலே–என்றும்
மாதருக்கே சுதந்திரம் மனம் போலே
களவுக் கொலை, காமப் பேய்களெல்லாம்–ஆண்களே
கடுக் தண்டனையடைவார் இனிமேலே
கலையின் வடிவமாம் என்னாலே–சகல
கலையும் வளரும் இங்கு மென்-மேலே
கவி கா மு ஷரீப் எழுதி என் சி கிருஷ்ணன் U R கவி கா மு ஷரீப் இணைந்து பாடிய பாடல் இது.
பெண்ணை பெத்த ஆம்புளே
பேசறதொண்ணும் நல்லல்லாலே,
என்னைக் கொஞ்சம் பாத்திடு–நான்
சொல்றதைக் கேளு
பெண்ணைப் பெத்தா என்னாடி
புத்தி கெட்ட பொம்பளே
எண்ணங் கெட்ட பயலுக்கா–என்
பொண்ணைக் கட்டச் சொல்லுறே
வாயை ரொம்ப நீட்டாதே
வக்கணையா பேசாதே
தாளி மூஞ்சி பொண்ணுக்கு என்
தம்பி கெட்டுப் போகலே
அங்கமெல்லாம் தங்கமடி
எங்க பொண்ணு ரஞ்சிதம்
அனுமாருக்கு அண்ணன்தானடி-உன் தம்பிதான்
-உன் தம்பியின் அழகை நீ நினைச்சுப் பாரடி.
ஆனை கருப்பானாலும்
ஆயிரம் பொன் தானையா
பானை பிடித்திடும் உந்தன் -பெண்ணுக்கு
பத்தாதோ என் தம்பி சொல்லுமையா !
ஆயிரம் சொன்னாலும்
அசையாது எந்தன் மனம் -உந்தன்
தம்பிக்கு நானே–என்
பெண்ணை தந்திட மாட்டேன். |
கவி கா. மு. ஷெரீப் எழுதி, திருச்சி லோகநாதன், M. S. ராஜேஸ்வரி, S. C. கிருஷ்ணன், கனகா இணைந்து பாடிய பாடல் இது.
சந்திரன் மதியம் வந்தும்
சுந்தரன் வரக் காணேனே
சந்தேகம் எழுவதாலே
சஞ்சலம் அடைகின்றேனே
சந்தேகம் எதுக்கு சஞ்சலம் எதுக்கு
சந்தோஷமாய் என்னைப் பாரு
கொஞ்சம் பாரு என்னைப் பாரு
சத்தியமாய் சொல்லுகிறேன் கேளு –காக்க
வைக்க மாட்டேன் இனியொரு நாளும்
சத்தியங்கள் செய்யிரதும்
தாசா பண்ணுறதும்
தயிரும் பழையதும் போலே-ஆம்பளைக்கி
தயிரும் பழையதும் போலே—ஒங்க
சங்கதி யெல்லாம் எனக்குத் தெரியும்–தளபதி
ஏன் வரவில்லை இது வரையும்
வருவாரா? சொல்லு வீரா
இளவரசியாலே இடையூறு நேர்ந்ததோ
எனதன்பர் வரும் வழியில்
தடையேதும் சூழ்ந்ததோ
பாதையின் மேலே விழியை வைத்துப்
பார்த்திருப்பாளங்கே –அந்தப்
பாவையின் உள்ளம் பரவசமடைய
பாய்ந்து செல்லு அங்கே
கண்ணின் கருமணியே வா வா வா
காதல் கனிரசமே வா வா வா
கருத்தைக் கவர்ந்தவரே கண்ணாளா
கவிதை மொழி பேசும் குணசீலா
இரவைப் பகலாக்கி இன்றே நாம்
இனிக்கும் கதை பேசி மகிழலாம்
தென்னை மரத்தருகே பார் பார் பார்
சிங்காரக் காட்சி ரொம்ப ஜோர்ஜோர் ஜோர்
கண்ணை மூடிக்கொண்டு வா –வீண்
காலம் கழிக்காதே வா
மருதகாசி எழுதி, P G கிருஷ்ணவேணி பாடிய பாடல் இது.
தேனமுதாம் திகட்டாத திராட்சையைப் பார்
தெய்வீக அழகினிலே இனிமையைப் பார்
காண்போரின் மனங்கவரும் கனியைப் பார்
கொஞ்சங்கூட குறி தவறாது
என்னைப் போலறிவுள்ள மாது
எதிலும் அபஜெயம் அடைவது ஏது ?- இதை
எண்ணி யெந்தன் மனம் இன்பம் கொண்டாடுது
கலையென்னும் வலை வீசி
கலையெனும் வலை வீசி
கண்ஜாடையால் கதை பேசி
உலகையே வெல்லும் முகராசி
கொண்ட எழிலரசி
அறிவாற்றல் தன்னைத் துணையாய் கொண்டு
அரசாளுவோர் தம்மை ஆளுவேன்
மரியாதைக் குறைவாய் எவரேனும் நடந்தால்
மண்ணைக் கவ்வும் வண்ணம் செய்து பழிவாங்குவேன்
மதி மயக்கிடும் மங்கை நான்
அழகில் ரதியும்கூட என் தங்கைதான்
அறிஞரும். கலைஞரும் -இந்த
ஆட்டக்காரியின் ரசிகர்தான்
அங்கந்தன்னிலே பசுந் தங்கம் மின்னுதே !
என்னைப்பார் என் கண்ணைப் பார்
இன்பம், செல்வம், அன்பு, கல்வி
எதற்கும் இங்கே ராணி நான்.
கவி கா. மு. ஷெரீப் எழுதி S. C. கிருஷ்ணன், கனகா இணைந்து பாடிய பாடல் இது.
தொடாதே தொடாதே தொடாதே
தொட்டாலே கோபம் வரும் தொடாதே
என்னைத் தொடாதே
ரோஷம் உள்ள ஆம்புள்ளேன்னா தொடாதே
தொடுவேன் தொடுவேன் தொடுவேன்
சும்மா கொஞ்சம் தொட்டுப் பாக்கறேன்– உன்
கையை நான் சொகுசா புடிச்சி பாக்கறேன் ஏ ரஞ்சிதம்
அழகு மம்முதா என்னை நினைவிருக்குதா
உனக்கு வழி புரிஞ்சுதா- இங்கே
வர முடிஞ்சுதா தெரியும் புரியும்
உனது வேஷமெல்லாமே இங்கே செல்லாது
சத்தியமா வேஷமில்லே நம்பிடு–என்மேல்
தயவுனக்கு இல்லையின்னா சொல்லிடு
அப்புறம் நீ பாரு இங்கே நின்னா கேளு
எனது உடலும் உயிரும்- உனதுதானே
கோபம் கொண்டாலும்
ஆனந்தம் பொங்குமினி வாழ்விலே
நமது வாழ்விலே
யாரு நம்மைப் போலே இந்தப் பாரிலே
மருதகாசி எழுதிய பாடலை டி எம் சவுந்தர ராஜன் பாடுகிறார்.
சீர்வளர, மறைவளர, செந்தமிழும் வளர
திரு நாட்டில் வாணிபத்தால் செல்வ நிலை வளர
ஏர் வளர திறம் வளர இசை வளர–பெண்ணரசி
பேர் வளர செங்கோலும் பெருமை பெற அருள்வாயே
பாரளந்தான் சோதரியே பராசக்தி தாயே
பதம் பணிந்தே துதி புரிந்தேன் பைரவி மாயே
உண்மை இங்கே என்றும் உயர்ந்திட வேண்டும்
உயிர்களெல்லாம் இன்பம் அடைந்திட வேண்டும்
பெண்மையைப் போற்றியே பெருமை தந்து -நாட்டின்
நன்மையே நாடிடும் நல்ல மனம் வேண்டும்
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.




