மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது.

அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு ஒன்று வேகமாக வந்து இட்லித் துணுக்கின் மீது மோதிக் கொண்டு எங்கோ தலைதெறிக்க ஓடியது. இரண்டு நிமிடங்கள் கழித்து மூன்று எறும்புகளோடு வந்து அந்தத் துணுக்கை அசைத்து அசைத்து தள்ளிக் கொண்டு போயின. எத்தனை நேரம்தான் அப்படியே அமர்ந்திருப்பது? எழுந்து சென்று துடைப்பத்தையும், முறத்தையும் கொண்டு வந்து அவற்றைக் கூட்டி எடுத்து வெளியில் எறும்புப் புற்றுக்கு அருகில் போட்டாள். “நீங்களாவது வயிறு நிறைய சாப்பிடுங்க” என்றாள். கண்களில் நீர் சுரந்தது.

‘அப்படி என்ன கேட்டுவிட்டேன் மூர்த்தி அவ்வளவு கோபப்பட? சரயூ வளர்ந்து கொண்டு வருகிறாள். திடீரென்று பெரிய மனுஷியாகி விட்டால் கழுத்தில் போட்டு விட இரண்டு பவுனில் ஒரு சங்கிலி வாங்கித் தரச் சொன்னதுக்கு இப்படிக் கோபம் வரலாமா? காசில்லை என்று புலம்பல். நானாவது ஒரு வேலைக்குப் போகிறேனென்று சொன்னால் அதற்கும் தடை.’ கண்ணீர் அடக்க மாட்டாமல் சூடாகப் பொங்கியது. 

கல்யாணம் ஆன புதிதில் எவ்வளவு அன்பாக இருந்தார்கள். வாழ்க்கை இயல்பாகத்தான் நகர்ந்தது போல் இருந்தது. ஆனால் பணம்தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. அன்பு, பாசம், காதல் எல்லாமே பணம் இருந்தால்தான் வருகிறது. நாய்க்குட்டிக்குக் கூட பிஸ்கெட் போட்டால் தான் வாலாட்டுகிறது. வெறும் அன்பு தடவிய வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்க முடியாது.

மூர்த்தியின் பனியன் கம்பெனி வேலையில் சம்பளம் எப்போதுமே பற்றாக்குறைதான். கைக்கும் வாய்க்குமே போதவில்லை. சரயூவின் படிப்புச் செலவு வேறு. என்றாலும் அஞ்சனாவை அவன் வேலைக்குப் போக அனுமதித்தது இல்லை.

யாருமற்ற தனிமையில் அமர்ந்திருந்தவளுக்கு, ஒழுங்காகக் கல்வி கற்காத தன்மீது அடக்க மாட்டாத கோபம் வந்தது. ‘ஒழுங்காப் படிச்சிருக்கலாம். இப்ப இந்த மாதிரி கஷ்டப்படாம, பேச்சு வாங்காம, நல்ல வேலைக்குப் போயிருக்கலாம். பன்னெண்டாங்கிளாஸ் கூட முடிக்காம… ப்ச்… வாழ்க்கையில் என்னென்னமோ நடந்து போச்சு…’கண்ணீர் சுரந்தது. 

வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒரு முகம் நினைவில் வந்து மோதியது. அந்த முகத்தை நினைவின் அடுக்கிலிருந்து பிய்த்து எறிவது போலத் தலையை உலுக்கிக் கொண்டாள். கண்ணீர் அடக்க மாட்டாமல் வழிந்தது. 

***

பனி மூடிய மார்கழி மாதத்தில், புல்வெளி எங்கும் பனித்துளிகள் கோத்து இளஞ்சூரிய வெளிச்சத்தில் மினுக்கிக் கொண்டிருந்த காலையில், குட்டி அஞ்சனா அந்தப் பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள். 

பட்டாம்பூச்சியின் மென்மையான வெள்ளை உடம்பில் கறுப்பு கோடு தீட்டியிருக்க, இருபுறமும் இறக்கைகளில் கறுப்பு, சிவப்பு, மஞ்சளுமாய் சிதறியிருந்தது. இறக்கைகளின் ஓரங்களில் வெண்ணிறம் கரை கட்டியிருக்க, கொள்ளை அழகுடன் இருந்தது அந்தப் பட்டாம்பூச்சி. கைகளில் பிடிக்க எத்தனித்தாள். அஞ்சனா ஒரு பட்டாம்பூச்சி ப்ரியை. விதவிதமான பட்டாம்பூச்சிகளைப் பிடித்து கண்ணாடி ஜாடி ஒன்றில் போட்டு ரசிப்பாள். சிறிது நேரத்தில் அவற்றை விடுவித்தும் விடுவாள்.

வகுப்பில் டீச்சர் பாடம் நடத்தும் போதும் அவள் பார்வை வெளியில் தான் லயித்துக் கிடக்கும். பாட நோட்டில் விதவிதமான பட்டாம்பூச்சிகளை வரைந்து கொண்டிருப்பாள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது டீச்சர் அப்பாவை அழைத்துச் சொல்லி விட்டார்.

“இதோ பாருங்க சார்… நாங்க எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி தான் பாடம் சொல்லிக் கொடுக்குறோம். ஆனா எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி கத்துக்குறது இல்லை. உங்க பொண்ணு மார்க் வாங்கலைன்னு என்னைச் சங்கடப்படாதீங்க. அவ எப்பப் பார்த்தாலும் பட்டாம்பூச்சி வரைஞ்சுட்டே இருக்கா. இப்பிடியே போனா இந்த எட்டாவதே பாஸாகுறது கஷ்டம். எங்களால் முடிஞ்சதைப் பண்றோம். வீட்ல படிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு”  மேஜையில் இருந்த நோட்டை கையில் எடுத்துத் திருத்த ஆரம்பித்தார்.

அப்பா யோசனையுடன் வந்தவர், இரண்டு தெரு தள்ளி  டியூஷன் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, தன் சக்திக்கு மீறி அங்கே அவளைச் சேர்த்தார். அங்கே அவள் வகுப்பு மாணவிகள் சிலரும், வேறு வகுப்பு மாணவிகள் சிலரும் இருந்தார்கள். அஞ்சனாவும் டியூஷன் போய் வரும் பெருமையில் சேர்ந்தாள். 

தினமும் பள்ளி விட்டதும் வீட்டுக்கு வந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு டியூஷனுக்கு ஓட்டமாய் ஓடுவாள். வழியில் சில வண்ணத்துப்பூச்சிகள் சுற்றிக் கொண்டிருக்கும். அவசரமாய் ரசித்து விட்டு மனமின்றிப் போவாள்.

 ஒரு மாதம் கழிந்தது. அஞ்சனாவும் நன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். அப்போது தான் டியூஷன் வாத்தியாரின் மகன் முரளி ஊரில் இருந்து வந்தான். ஹாஸ்டலில் தங்கிப் படித்து முடித்து விட்டு வந்திருந்தான். வேலை தேடும் படலத்தில் இருந்தான். அவன் வந்தபிறகு ஒவ்வொரு வாரமும் பெண்பிள்ளைகள் ஒவ்வொருவராக டியூஷனிலிருந்து நிற்க ஆரம்பித்தார்கள். இவள் வகுப்பு எழிலரசி ஒரு திங்கட்கிழமை மாலை இவளிடம், “யேய் இவளே… நான் இன்னிலேருந்து டியூஷனுக்கு வர மாட்டேன். நீயும் போகாத” என்றாள். 

“ஏண்டி வரமாட்டேங்குற?” அஞ்சனா மாங்காய் கீற்றில் உப்பு, மிளகாய் தூள் தடவியிருந்ததை மெல்லக் கடித்தபடி கேட்டாள்.

“அது..வந்து.. நம்ம டியூஷன் சார் பையன் கண்ட இடத்துல தொட்டுத் தொட்டுப் பேசுறான்டி. எனக்கு புடிக்கலை. நான் இனிமேட்டு அங்க வரலை.” ஓடிவிட்டாள். அஞ்சனா மாங்காய் ருசியிலேயே லயித்துக் கொண்டு நடந்தாள்.

இரண்டு நாள்கள் கழித்து அஞ்சனா டியூஷன்  வகுப்புக்குச் சென்றபோது நேரமாகி விட்டிருந்தது. ‘அய்யய்யோ இந்தப் பட்டாம்பூச்சியைப் பாத்துட்டு இப்படி லேட்டாயிருச்சே. ச்சை… இனி அதைப் பராக்குப் பாக்கக் கூடாது’ மனதுக்குள் புலம்பியவாறே  மெல்ல வகுப்பு நடக்கும் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். யாரும் இல்லை. குழம்பியவாறே திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றிருந்தவள் தோள் மீது ஒரு கரம் படிந்தது. திடுக்கிட்டுத் திரும்பியவளைப் பார்த்து சிரித்தான் முரளி.

“அப்பா ஒரு விசேஷத்துக்கு போயிருக்காங்க. வந்துருவாங்க. உள்ள போய் உக்காரு.”

“யாருமே வரலீங்களேண்ணா. நானும் போயிட்டு நாளைக்கு வரேன்” அவள் நகரப் போனாள். அவள் தோளை அழுத்தமாகப் பிடித்தான் அவன். குட்டி அஞ்சனா மிரட்சியாக விழித்தாள்

“உனக்கு பட்டாம்பூச்சி பிடிக்கும்ல?” அவள் கண்களை விரித்தாள்.

“புதுசா ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். உன் ஞாபகம் தான் வந்துச்சு. உனக்காகப் புடிச்சு வெச்சிருக்கேன். உள்ளே போ. நான் எடுத்துட்டு வர்றேன்”

‘பட்டாம்பூச்சி’ என்ற வார்த்தையில் எல்லாமே மறந்து போனது அவளுக்கு. உள்ளே போய் அமர்ந்தாள். அவன் மீண்டும் உள்ளே வந்தபோது, இடது கையை முதுகிற்குப் பின்னே மறைத்திருந்தான். அஞ்சனா ஆவலுடன் அவன் கையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கதவை மூடி விட்டு அவளிடம் வந்தான். “பட்டாம்பூச்சி பறந்துரும்ல. அதான்” என்றவன் கையை முன்னால் கொண்டு வந்தான். ஒரு நீளமான சாக்லேட் பட்டைதான் இருந்தது.

அவள் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. “பட்டாம்பூச்சி எங்கேண்ணா..?” 

“அது பறந்து போயிடுச்சு. இந்தா இந்த முழு சாக்லேட்டும் உனக்குத்தான். சத்தம் போடாம இருக்கணும். இல்லேன்னா..” நாக்கைக் கடித்து கண்களை உருட்டி மிரட்டினான்.

“ம்..ம்..” அவள் தேம்பினாள். “எனக்கு பயமாருக்குண்ணா. நான் போணும். விடுங்க.” அவள் வாயைப் பொத்தினான்.

ஐந்து நிமிடங்கள் கழித்து கதவைத் திறந்து கொண்டு புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடிவந்தாள் அஞ்சனா. சுருண்டு பாயில் படுத்தவள் உடல் அனலாகக் கொதித்தது. அம்மா உள்ளே வந்து பார்த்தாள்.

“என்னடி ஆச்சு? ஏன் இப்படி ஓடிவந்தே?” மூச்சு விடாமல் கேட்டாள்.

அஞ்சனா வாயைப் பொத்திக் கொண்டு விம்மினாள். அவள் பாவாடையில் ரத்தக்கறையைப் பார்த்ததும் பதறினாள் அம்மா.

 “என்னடி ஆச்சு..? தெரண்டுட்டியா? அய்யோ நான் முதல்ல பார்க்கக் கூடாதே. இரு.. பக்கத்து வீட்டு தனம்மா பாட்டியைக் கூட்டிட்டு வரேன்.” நகரப் போன அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு விம்மி அழுதாள் அஞ்சனா. நடந்ததைத் திக்கித் திணறிச் சொன்னதும் ஓங்கி அறைந்தாள் அம்மா.

 “யாருமில்லேன்னா ஏண்டி உள்ளே போன? ஏன் போன?” தலை தலையாக அடித்துக் கொண்டு அவளையும் அடித்துப் புரட்டினாள். சற்றே ஓய்ந்ததும் அவளை மடியில் போட்டுக் கொண்டு அழுது தீர்த்தாள். ஆடைகளை மாற்றிப் படுக்க வைத்தாள். அப்பா அன்று பகல் ஷிஃப்ட் முடித்து வெகுநேரம் கழித்துத் தான் வீட்டுக்கு வந்தார். இருவரும் வாயைத் திறக்கவில்லை.

அன்றைய கனவில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி பறந்து வந்து அவளிடம் அமர்ந்தது. அதன் கையில் ஒரு பெரிய சாக்லேட் பார் இருந்தது. அவள் வேகமாக ஓடத் தொடங்கினாள். ஓட ஓட அவள் பட்டாம்பூச்சியாக மாறத் தொடங்கினாள். அவளது இறக்கைகளில் அழகான வண்ணங்களில் புது வடிவங்கள் மின்னின. செடிகளில் எல்லாம் சாக்லேட் பட்டைகள் தொங்கின. அப்போது ஒரு கரம் வந்து அவளைப் பிடித்தது. ஒவ்வொரு இறக்கையாகப் பிய்த்தது. அவளைச் சுற்றி அவளுடைய இறகுகள் உதிர்ந்து கிடந்தன. வீறிட்டலறியவாறே எழுந்தாள்.

மறுநாளில் இருந்து காய்ச்சல் என்று சொல்லி நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை போட்டு விட்டு டியூஷனுக்கும் முழுக்குப் போட்டாள் அஞ்சனா.

அப்புறம் பள்ளிக்குப் போகத் தொடங்கியவள் தனக்குள் சுருங்கத் தொடங்கினாள். பையன்களுடன் பேச மறுத்தாள். ஆண் ஆசிரியர்கள் அருகில் வந்தாலே உடம்பெல்லாம் நடுக்கமெடுத்து விடும். காத்து கருப்பு என்று சொல்லி எங்கெங்கோ அழைத்துப் போய் திருநீறு மந்திரித்தார்கள். தாயத்து கட்டினார்கள். அந்த வருடம் அவள் எட்டாவதில் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் பள்ளிக்குப் போகவும் இல்லை.

அவ்வப்போது கனவு கண்டு திடுக்கிட்டு எழுவாள். நிம்மதியான உறக்கம் இல்லை. எப்போதும் பதட்டத்துடனே இருந்தாள். பட்டாம்பூச்சி பார்ப்பது எப்போதோ நின்று விட்டிருந்தது.

சில வருடங்கள் கழித்து தூரத்து உறவினர் மகன் மூர்த்திக்கு அவளை மணமுடித்தார்கள். மூர்த்தி ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். சுமாரான சம்பளம். படிப்பு இல்லாத அஞ்சனாவுக்கு அவனைத்தான் திருமணம் செய்து வைத்தார்கள். முதல் நாளில் அவனுடன் தனிமையில் இருக்கும்போது மீண்டும் அவளுக்கு காய்ச்சல் வந்தது. வியர்த்துக் கொட்டி நடுங்கத் தொடங்கினாள். நாளடைவில் அவன் காட்டிய அன்பில், பழசையெல்லாம் மறந்து இயல்பு வாழ்க்கைக்குப் பழகினாள். 

இப்போது அவளது மகள் சரயூ ஏழாம் வகுப்பு படிக்கிறாள். நல்ல வளர்த்தி. அழகான பெண்ணாக வளர்ந்து கொண்டு வருகிறாள். அஞ்சனாவுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் வயிற்றை பய நண்டு கவ்வும். அவளை டியூஷனுக்கு மட்டும் அனுப்ப அஞ்சனா சம்மதிக்கவில்லை.

***

அன்று மாலை மூன்று மணி. பழைய நினைவுகள் வந்ததாலோ என்னவோ அவளுக்குத் தலைவலி பின்னி எடுத்தது. வயிற்றைப் புரட்டிக் கொண்டு வேறு வந்தது. வெளியே சென்றால் தேவலாம் போலிருந்தது. அஞ்சனா கைப்பையை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தாள். 

மழை வரும் போலிருந்தது. ஒரு பேருந்து கூட்டமில்லாமல் வந்தது. வேகமாக ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். முகத்தில் அறைந்த காற்று லேசாகத் தலைவலியைக் குறைத்தது. அப்படியே ஒரு தொலைதூரப் பயணம் போகவேண்டும்போல இருந்தது. ஆனால் எங்கே போவது? அம்மாவோ அப்பாவோ இல்லாத தாய்வீட்டில் என்ன செய்வது? இலக்கின்றிப் பயணித்தவள், மகள் வீடு திரும்பும் நேரம் நெருங்க, வீடு செல்லும் பேருந்தில் ஏறினாள். 

அவளது நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு நடையை எட்டிப் போட்டாள். மூர்த்தி வேலை விஷயமாக வெளியூர் போயிருந்தான். சரயூ வந்திருப்பாளா? என்று எண்ணமிட்டவாறே வீட்டுக்கு வந்தவள் கதவு திறந்திருந்ததைப் பார்த்துத் திகைத்தாள்.

உள்ளே நாற்காலியில் சரயூ அமர்ந்திருந்தாள். அவளது பார்வை ஒரே பக்கமாக நிலைக்குத்தியிருந்தது. அஞ்சனா வயிற்றைப் பிசையும் உணர்வுடன் அவளருகில் சென்றாள். 

 “ச..சரயூ. என்னடி..?” மெல்ல அவளது தோளில் கை வைத்தாள். அவள் திடுக்கிட்டுத் திரும்பி அம்மாவைப் பார்த்ததும் அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அஞ்சனாவுக்கு நாக்கு உலர்ந்தது. “எ..எ.என்னம்மா..?” அவள் எதுவும் சொல்லிவிடக் கூடாதென்று மனம் இறைஞ்சியது. 

“இன்னிக்கு மதியம் சாப்ட்டப்புறம் சயின்ஸ் சார் ரெக்கார்ட் நோட்டை எடுத்துட்டு லேபுக்கு வரச் சொன்னாரு..” அஞ்சனாவுக்கு இதயம் திடும் திடுமென்று அடித்தது செவியில் கேட்டது.

“நானும் போனேன். நோட்டை வாங்கிப் பார்த்துட்டு இருந்தவரு திடீர்னு என்கிட்ட வந்து தொட்டுப் பேச ஆரம்பிச்சாரும்மா” அஞ்சனா எந்நேரமும் மயக்கம் வரும் நிலையில் இருந்தாள். கைகள் அனிச்சையாக மகளை இறுகத் தழுவிக் கொண்டன.

“நான் அவரைத் தள்ளிவிட்டு, சார் டோண்ட் டச் மீ ன்னு சத்தமா சொன்னேன். அவர் முகமே மாறிடுச்சு. உடனே நோட்டைக் குடுத்து போகச் சொல்லிட்டாரு. யார்கிட்டேயும் சொல்லாதம்மா, சாரின்னாரு”

 “அய்யோ. என்னடி சொல்ற?” அஞ்சனாவுக்கு உடல் நடுங்கியது.

“அம்மா, கத்தாத ப்ளீஸ். எங்க பி.டி.மிஸ் இப்படி யாராவது நம்மகிட்ட நடந்துகிட்டா என்ன பண்ணனும்னு சொல்லியிருக்காங்க, இந்த மாதிரி நடந்துச்சுன்னு அவங்ககிட்ட சொன்னேன். நீ பயப்படாமப் போ. நான் பார்த்துக்குறேன்னு சொன்னாங்க” அஞ்சனாவுக்கு ஏனோ கண்ணீர் பெருகியது.

 “எங்க பி.டி. மிஸ் பொண்ணுங்க கட்டாயம் எதாச்சும் தற்காப்புக் கலை கத்துக்கணும்னு சொன்னாங்க. நானும் எதாச்சும் கத்துக்கவா..?” அம்மாவின் தாடையைப் பிடித்துக் கொஞ்சலாகக் கேட்டாள். இதற்கும் பணத்துக்கு மூர்த்தியிடம் கெஞ்சவேண்டும். சரி கேட்டுத்தான் பார்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சமையல். வேலைக்குத் தானே அனுப்ப மாட்டான். எதிர் வீட்டில் இருக்கும் வயதான தம்பதிகள்,பக்கத்தில் இருக்கும் சிறிய லேடீஸ் ஹாஸ்டலில் சென்று பேசி,  வீட்டிலேயே சமையல் செய்து அவர்களுக்குத் தந்து வருமானம் ஈட்டலாமே என்ற நினைப்பே உற்சாகம் தந்தது. சம்மதமாகத் தலையசைத்தாள் அஞ்சனா.

இருவருக்கும் தேநீர் போட்டு எடுத்து வந்தாள். முன்புறம் உடைந்த பிளாஸ்டிக் தொட்டிகளில் இருந்த பூச்செடிகளிடம் சென்று அமர்ந்து கொண்டார்கள். 

 “அம்மா அங்க பாரேன். அந்த பட்டர்ஃப்ளை… எவ்ளோ அழகா, டிசைனா இருக்கு” கண்களை விரித்த மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றிரவு அஞ்சனாவின் கனவில் வந்த பட்டாம்பூச்சி அழகான இறக்கைகளை அசைத்து சுதந்திரமாகப் பறந்து திரிந்து கொண்டிருந்தது.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.