ஹாய் தோழமைகளே,

நலம், நலம்தானே ?

நாம் கடந்த 23 வாரங்களாக EQ எனப்படும் உணர்வு சார் நுண்ணறிவு குறித்து நிறைய பேசினோம். பயிற்சி செய்ய வேண்டியவை, நம்மைப் பற்றியும், மற்றவரைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டியவை, ஒரு நிகழ்வை எந்த முன்முடிவும் இல்லாமல் நிகழ்வாக மட்டும் பார்ப்பது எப்படி என்கிற பல கதைகள்.

தனிப்பட்ட வாழ்விலும், அலுவலக, வியாபார வெற்றியிலும் உணர்வு சார் நுண்ணறிவின் பயன் மகத்தானது.

இதெல்லாம் பார்ப்பதற்கு மிகக் கடினமாகத் தோன்றினாலும், அப்படி ஒன்றும் நிஜத்தில் கடினமும் இல்லை, பயிற்சியில் கைவராததும் இல்லை. நாம் இன்று பிறந்த குழந்தையைப் போல மனதை வைத்துக் கொண்டால், மிகவும் இயல்பாகவே வந்துவிடும்.

எப்படி ஒரு குழந்தை இயல்பாகவே தனக்குத் தெரிந்ததை ஆனந்தமாகச் செய்து கொண்டு, தெரியாததைக் கேட்டுத் தெரிந்து அல்லது சில பல முயற்சியின் பின் கற்றுக் கொள்கிறதோ, அது போன்ற மனநிலை மிகவும் அவசியம்.

நம்மில் பலருக்குத் தெரியாது என்று சொல்வதில் வெட்கம். இதனால் நாம் வளரும் வாய்ப்பும் பறிபோகிறது, நமக்கு எதெல்லாம் தெரியாது என்பது மெதுவாக மற்றவருக்கும் தெரிந்துவிடும்.

எங்கிருந்து ஆரம்பிப்பது தெரிந்து கொள்வதை? நம்மிடமிருந்துதான். முதலில் உங்கள் உடல், மனம், எண்ணங்கள், நம்பிக்கைகளைth தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு நிச்சயம் ஆரம்ப அத்தியாயங்களில் வரும் பயிற்சிகள் கை கொடுக்கும். அப்படியே மற்றவரைப் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். நாம் இயந்திரங்களோடு வாழ்வதில்லை, மனிதர்களோடு வாழ்கிறோம். தவறே செய்யாத, குறைகளே இல்லாத மனிதர் எவருமே இல்லை, நீங்களும் நானும் உட்பட. பின் ஏன் மற்றவரிடம் அத்தனை எதிர்பார்ப்பு?

நீங்கள் ஒரு மனைவி, தாய், மேலாளர், கணவன், மகன், மகள் என எதுவாகினும் இருங்கள். அதெல்லாம் நீங்கள் தற்சமயம் ஏற்று கொண்டிருக்கும் பொறுப்பு அல்லது இந்த உலகத்திற்கு நீங்களாற்றும் பங்கு. ஆனால் முதலில் நீங்கள் ஒரு மனுஷி / மனிதன். அதை மறந்து விட்டு எந்தப் பங்கையும் / பொறுப்பையும் சரியாகச் செய்ய முடியாது.

ஓர் உயிராக உங்கள் தேவைகளை உணரும் போதே, மற்ற உயிருக்கும் அதே போன்ற தேவைகள் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளும் போதே, பரிவு மனதில் வந்துவிடும், முகத்தில் கனிவும் கூடிவிடும். உங்கள் செயல்களில் / பேச்சில் இயல்பாக வெளிப்படும் பரிவு எதிரில் இருப்பவரை உங்களுக்காக எதையும் செய்ய தயாராக்கும்.

உணர்வை வெளிப்படுத்துதல் தவறு, அது ஒரு வகையான பலவீனம் என்றே நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், உணர்வைச் சரியாக வெளிப்படுத்துவதற்கும், அதை உச்சத்திற்குக் கொண்டு போய் வெடித்துச் சிதறுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சரியான உணர்வை, சரியாகப் புரிந்து கொண்டு, மற்றவரைக் காயப்படுத்தாமல் வெளிபடுத்துபவரே, வாழ்வில் நிம்மதியாகவும், நிறைவாகவும் இருக்கமுடியும். நிறைவாக வாழ்பவருக்கு வெற்றியும் வளர்ச்சியும் by product, அதுவே இலக்கல்ல. நிச்சயம் தானாக நடக்கக் கூடியது.

மறுபடியும் நினைவு படுத்த விரும்பும் ஒரே விஷயம், வாழ்வு ஒரு முடிவில்லா விளையாட்டு, வெற்றியோ தோல்வியோ நிரந்தரமல்ல. நம்மை நாமே வெற்றி கொள்ளும் போது புற உலக வெற்றிக்காகக் கொஞ்சம்கூட மெனக்கெட வேண்டிய அவசியமில்லை.

வாழ்வெனும் விளையாட்டில் சோர்ந்து போகாமல் விளையாடிக்கொண்டே இருப்பதும், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் மட்டுமே நிஜமான வெற்றி.

ஆகவே தோழமைகளே, உணர்வுகளை மதியுங்கள். அவை ஒரு விருந்தாளியைப் போல, நீண்ட நாள் நம்மோடு இருக்கப் போவதில்லை. ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு வெளிப்படுத்தி, ஆற்றுப்படுத்தும் போது, அது உங்களின் உற்ற தோழமையாகி விடும்.

எப்படி இந்தப் பூமி உருண்டை 70 % நீரால் ஆனதோ, நமது வாழ்வும் 90% உணர்வுகளால் நிரம்பியது. உணர்வை ஒதுக்கி வாழும் கலை ஞானியருக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம், சாதாரண மனிதருக்கு? அதை அழகாகக் கையாள்வது மட்டுமே நமது வெற்றிக்கான மந்திரச்சாவி.

’கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.’

காதலியின் கடைக்கண் பார்வையில் என்ன ஊட்டசத்து பானமா இருக்கிறது? ஆனால், அது தரும் உற்சாகம் ஊட்டச்சத்து பானத்தைவிட பல மடங்கு பலம் தரும். நம் உணர்வுகளே நம் பலம். அதே காதலி பிரிந்துவிட்டால், அதே உணர்வுகளே அந்தக் குமரனை பலவீனமாக்கும்.  நாம் வலிமையாக உணர்வதும் சக்தியற்று கீழே விழுவதும் நம் மனதால், அது தரும் உணர்வுகளால்.

வாங்க உணர்வைக் கையாளலாம், வாழ்வைக் கொண்டாடலாம்,  முடிவில்லா விளையாட்டில் விளையாடிக்கொண்டே இருக்கலாம், ஜெயித்து கொண்டே இருக்கலாம்.

(நிறைந்தது)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.