ஒரு குடும்பம். கொடுமைக்கார மாமியார். கையாலாகாத கணவர். சமாளிக்கச் சொல்லும் உறவுகள். கையில் இரு குழந்தைகள். வளர்த்தாக வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கணவரோ, தனது அம்மா தேவலோகத் தாய் எனத் தொடர்ந்து சமூகத்தை நம்பவைக்க முயலுகிறார். மனைவி கோபத்தில், தனது மாமியார் செய்த கொடுமைகளைப் பட்டியலிடுகிறார்.

மருமகள் செய்தது சரியா தவறா?

தாத்தாக்கள் இறந்த வீட்டில், அதுகுறித்து விசாரிக்கப் போனால், பல பாட்டிகள் சொல்வது, “அம்மா அக்கா தங்கையுடன் சேர்ந்து கொஞ்சம் ஆட்டமா போட்டார்?” தாத்தா இறந்தாகி விட்டார். இனி வரப்போவது இல்லை. பின் ஏன் அவர் குறித்து அவதூறு கூறுகிறீர்கள்? என யாரும் சண்டை போடுவதில்லை. மாறாக, “சரி போனது போகட்டும்” இப்படி எதாவது நான்கு ஆறுதல் சொற்கள் தான் சொல்லுவோம்.

இதையே ஒரு பெண், அதுவும் திரைத்துறை பிரபலம் சொன்னால், இருபது ஆண்டுகள் கழித்து ஏன் சொல்லுகிறாய்? எனச் சொல்லுவது மட்டுமில்லாமல் அவர்களை அவ்வளவு இழிவாகப் பேசுகிறோம்!

மாமியார்- பாலியல் சுரண்டல் செய்த ஆண்
மருமகள்- சுரண்டப்பட்ட பெண்
கணவர்- சமூகம்

கொடுமை நடந்ததா இல்லையா எனச் சம்பந்தப்பட்ட மாமியாரும் மருமகளும்தான் சொல்ல முடியும். கணவர் குறுக்கிட்டால்? இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தாய் என கேட்கவேண்டியது கணவனை. ஏனென்றால், கணவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. அவன் கள்ள மௌனம் காக்கிறான்.

பெண் சுரண்டப்பட்டால், அருகில் இருக்கும் சமூகத்துக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. பெண் பொய் சொன்னால்கூட (எங்காவது ஒரு இடத்தில் நிகழலாம்) அருகில் இருக்கும் சமூகத்துக்குத் தெரியும். அதன் கள்ள மவுனம் இப்போது வெடிக்கிறது. சமூகம் என்பது, சக ஊழியர்கள், ஊடகங்கள், பெற்றவர்கள், உறவினர்கள்… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். திருமணம் என்றால் பெண் அடங்கிப் போக வேண்டும் என நினைக்கும் சமூகம்தான், ‘நடிகை என்றால் என்ன நடக்கும் எனத் தெரியாதா?’ எனக் கேட்கிறது. மருத்துவர் உடலைத் தொடுவதற்கும் நடிகர்கள் ஒருவருக்கொருவர் தொட்டு நடிப்பதற்கும் வேறுபாடு இல்லை எனக் கற்பிக்க வேண்டிய திரைத்துறை என்ன செய்கிறது?

PC: Samayam Tamil

திரைத்துறை தன்னை அவமானப்படுத்துவது போல வேறு ஒரு துறையும் இல்லை.

சிறு எடுத்துக்காட்டு.

நிறம் மாறாத பூக்கள் முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே பாடல் வரிகள்

‘அது யாரந்த பெண்? …

ஒரு நடிகையம்மா…

அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

ஜீனத் என் கனவில் வந்தாள் பொன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

ஜீனத் அமன் போல என்னை எண்ணி
வந்து பாட்டு பாடும் துரோகியே

ஹைய்யயோ… சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே

என்னை போல் ஒரு பெண்

இந்த உலகில் இல்லை

ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு’

திரைப்படங்களில் பல்வேறு துறையின் தனிப்பட்ட ஒருவரோ ஒரு குழுவோ எதிர்மறை பாத்திரங்களாகப் படைக்கப்படுவதுண்டு. ஆனால் நடிகை என்றால் மட்டும், அந்தத் துறையே எதிர்மறையாகக் காட்டப்படுவது ஏன்? இந்தப் பாடலிலேயே ஜீனத் அமன் என்ற தனிப்பட்ட நடிகையின் பெயரைப் போட்டது போன்று வேறு எந்தத் துறையிலேயோ அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த யார் பெயரையாவது போட்டு இருப்பார்களா?

முதலில் மாற்றம் திரைத்துறையிலிருந்து வர வேண்டும். இதுவும் ஒரு நேர்மையான தொழில் எனக் காட்டுவதற்கு அந்தத் துறையினர் முயற்சி எடுக்க வேண்டும்.

மற்ற தொழில்கள் போன்று இதற்கு இடம், நேரம், காலம் என்பது எல்லாம் இல்லை. எந்தெந்த ஊருக்கெல்லாமோ செல்ல வேண்டியிருக்கிறது. அதே போல படப்பிடிப்பிற்கும் காலவரம்பு எல்லாம் வைக்க முடியாது. அதனால் பணிப்பாதுகாப்பிற்குத் திரைத்துறை தான் உத்தரவாதம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒரு அலுவலகத்திலிருந்து சுற்றுலா செல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்; அதன் அமைப்பாளர் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யார் அறைக்கும் செல்லலாம் என இருப்பதில்லை. அதற்கென ஒரு ஒழுங்கை ஏற்படுத்தி இருப்பார். அதைத் திரைத்துறைதான் செய்யவேண்டும்.

எப்படி தவறான பெண்ணுக்கு (மாமியாருக்கு) கிடைக்கிற அதீத அதிகாரமும் ஆதரவும், மருமகள் மீது ஆதிக்கம் செலுத்தும் சிந்தனையை உருவாக்குகிறதோ அது போலத்தான், நாயகத் துதி பாடுதலும் உருவாக்குகிறது. இதில் நாயக என சொல்லும்போது அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ள அனைவரையும் சொல்லலாம். சம்பளம், புகழ் இவற்றில் கூடுதல் குறைவு எவ்ளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மனிதரைச் சமமாக நடத்தும் மனப்பான்மை இருந்தால் இதில் பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடும். யாரை வேண்டுமானாலும் சொடுக்கு போட்டுக் கூப்பிடலாம் என்ற மமதை இருப்பவர்கள் தான் இவ்வாறான தவறுகளைச் செய்கிறார்கள்.

இதெல்லாம் தெரிந்த கதைதான் என இன்று சொல்லும் ஊடகவியலாளர்கள் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும். அன்று அவர்களுக்குச் சொல்லும் துணிவு இல்லாமல் இருந்து இருக்கலாம். அது தவறு இல்லை. குறைந்த பட்சம், இவ்வாறு தவறானவர்கள் எனத் தெரிந்தால் அவர்களின் செய்திகளை, அவர்களைத் துதி பாடுவதையாவது நிறுத்தத்தானே செய்யலாம். எந்த திரையுலக பிரபலம் என்றாலும் ஊடக வெளிச்சத்திற்காகத் தானே போராடுகிறார்கள். அதை மறைக்கத் தொடங்கினால், மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டல்லவா? ஆனால் நீங்களே வீண் துதி பாடிவிட்டு இப்போது, எனக்கு அப்போதே தெரியும்; ஊரறிந்த ரகசியம் எனச் சொல்வது எல்லாம் ஊடக அறமா?

பொதுச்சமூகம் ஒரு பழமொழியைச் சொல்லும்; ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எவ்வாறு நுழையும்?’ என்று. இதைப்போன்ற தட்டையான வாதம் கொண்ட பழமொழி உலகிலேயே இருக்காது. எல்லோரும் ஊசியில் நூல் கோத்து இருக்கிறோம். நூலை நாம் வலிந்து நுழைக்காமல் சாக்கு (கோணி) தைக்கும் ஊசியாக இருந்தால் கூட கோர்க்க முடியாது. சில நேரம் கண்ணாடி போட்டுக் கொண்டுகூட நூல் கோர்க்கிறோம். எனவே இந்த பழமொழி இயல்பிற்கு முற்றிலும் புறம்பானது. புறம் தள்ள வேண்டியது.

நீச்சல் வீராங்கனை நீச்சல் உடையில்தான் வருவார். நடிப்புத் துறையிலும் அவர்களுக்குக் கொடுக்கும் ஆடையைத்தான் பெரும்பாலும் அவர்கள் சம்மதித்துத்தான் அணிகிறார்கள். அவரைக் கண்ணியமாகப் பார்ப்பது போல இவரையும் கண்ணியமாகப் பார்க்கப் பழகுவோம்.

Pc: Sakshi post

வைக்கப் படும் இன்னொரு வாதம், “இடம் சரியில்லை என்றால் வேறு இடம் போக வேண்டியது தானே!” பெரும்பாலும் படைப்புத் துறையினுள் நுழைபவர்கள் ஒரு கனவுடன் தான் வருகிறார்கள். வழக்கமான வேலை என நினைத்து வருவதில்லை. அதில் பெரும்பாலானோர் தோல்வியே அடைகிறார்கள். என்ன தோல்வி அடைந்தாலும் எழுத்தாளர் எழுதிக் கொண்டு தான் இருப்பார்; ஓவியர் வரைந்து கொண்டு தான் இருப்பார். இப்படித்தான் திரைத்துறையினுள் நுழைபவர்களும். அவர்களைக் கொச்சைப் படுத்தக்கூடாது. எந்த வேலை என்றாலும் ஒரு பணியிடம் சரியில்லை என்றால் அடுத்த இடம் செல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் திரைத்துறை அப்படி அல்ல; தமிழ்த் திரைத் துறையில் இருக்க வேண்டுமென்றால் சென்னையைத் தவிர வேறு இடம் கிடையாது. அவர்கள் அங்கு தான் போராடி ஆக வேண்டும். அதைப் பொதுச்சமூகம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

‘முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு விழுந்தாலும் சேலைக்குத் தான் சேதாரம்’ என இன்னொரு பழமொழி சொல்லுவோம். அது முள்ளாக இல்லாமல் வேட்டியாகவோ போர்வையாகவோ துண்டாகவோ இருந்தால் சேலைக்கு என்ன சேதாரம்? அப்படியான ஆண்களாக, முள்களாக இருப்பவர்களையும் மாற்ற முயற்சி செய்வோம்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.