ஹாய் தோழமைகளே,

நலம் தானே ?

இப்போது இசையின் பிரச்னை, பிரபு தனதாக உணர்ந்தான். அதை எப்படிச் சரி செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தான். அந்தக் கால மனிதர்களான அம்மா, அப்பாவின் நம்பிக்கைகளை மதிக்கும் அதே நேரம், தன்னோடு வாழ்க்கையைப் பகிர வந்தவளின் சுமையைப் பகிர வேண்டும் என்பதும் நன்கு புரிந்து கொண்டான். ஆனாலும் இசையிடம், “எனக்குக்  கொஞ்ச நாள் டைம் குடு இசை, எல்லாத்தையும் சரி செய்றேன்” என்று வாக்களித்தான்.

நான்கு நாட்களை மகிழ்ச்சியும் கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு, ஊருக்குத் திரும்பினார்கள். மறுநாள் காலையில் எழுந்து சமையலறைக்குப் போன இசைக்கு இன்ப அதிர்ச்சி. பிரபு அங்கே காபி கலக்கிக் கொண்டிருந்தான். “ஹேய், நீ இங்க என்ன பண்ற?”

சிரித்தவாறே, “நீ இங்க இவ்வளவு நாள் என்ன பண்ணியோ, அதையேதான்” என்றவாறே அவளுக்கு காபி கொடுத்தான். இருவரும் நிதானமாக ஐந்து நிமிடம் ரசித்து காபி குடித்த பின், “இசை, எனக்குச் சமைக்கத் தெரியாது, ஆனா சீக்கிரம் கத்துக்குவேன், நீ ஸ்டவ்ல செய்யக் கூடியதெல்லாம் பாரு, நான் காய் நறுக்கி, தேங்காய் அரைக்கிற வேலை எல்லாம் செய்றேன்.”

எதையுமே நம்ப முடியாமல் பார்த்த இசை, “நானே நறுக்கிக்குவேன் பிரபு” என்றாள்.

“நீ நறுக்கிக்குவதான், ஆனா இதில் மிச்சமாகுற டைம்ல நீ கொஞ்சம் நிதானமா டிபன் சாப்பிடலாம்.”

இருவருமாகச் சேர்ந்து செய்ததில் பிறகு சத்துக் கஞ்சிக் குடிக்கவும், நாலு இட்லியைச் சாப்பிடவும் அவளுக்கு நேரம் இருந்தது.

பிறகு எழுந்து வந்த பிரபுவின் அம்மா, “இதென்னடா, நீ ஏன் இதெல்லாம் செய்ற, எல்லாம் புதுசா இருக்கு?” என்று கேட்டார்.

“அம்மா, இசை தனியா கஷ்டபடுறா, நீங்க சமையலுக்கும் ஆள் வச்சுக்க ஒத்துக்கல, அதான் நான் வேலையை ஷேர் பண்ணிக்கிறேன்.”

காலை உணவின் போது இசையிடம் பிரபுவின் அம்மா, “நீங்க உங்களுக்கு வேண்டியதை மட்டும் செஞ்சுட்டுப் போங்க, நா அப்பறமா ஏதாச்சும் குழம்பு, பொரியல் பண்ணிக்கிறேன். எனக்குக் கையும் காலும் நல்லா இருக்கும் போது சம்பாதிக்கிற ஆம்பளை பையன் சமைச்சு சாப்புடுற நிலைமை எனக்கு வேணாம்” என்றார்.

’அப்போ நா சம்பாதிக்கலையா’ என்று எழுந்த கேள்வியை பிரபுவின் பார்வையில் அடக்கிக்கொண்ட இசை, “சரி ஆண்ட்டி“ என்றாள்.

அடுத்து வந்த நாட்களில் இன்னும் வேலை லகுவானது, காலை உணவைச் செய்துவிட்டு, மதியத்திற்கு லகுவாக எதையாவது எடுத்துக் கொண்டு போவதும், அதற்கு பிரபுவின் உதவியும் இருந்ததால் இசையால், கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கவும் சிறிது உடற்பயிற்சிக்கும் நேரம் கிடைத்தது.

இரவு உணவும் பகல் அம்மா சமைப்பதையே, வைத்துக் கொண்டு தோசையோ, இட்லியோ சாப்பிடுவது, மீட்டிங் இல்லாத நாட்களில் இருவரும் சேர்ந்து சமைப்பது என இசைக்கு வேலையும் வாழ்க்கையும் லகுவாயிற்று. அதுமட்டுமல்ல இருவருக்கும் இடையே இருந்த பிணைப்பும் அதிகமானது. பின் திருமண வாழ்வு அவளுக்கு எவ்வளவு இனித்தது எனக் கூறவே தேவையில்லை.

இசை முதல் இரண்டு குணங்களில் செய்த தவறு என்ன, இப்போது எதைச் சரியாகச் செய்தாள்?

விடை மிக எளிது. முன்னர், அவள் அவளைப் பற்றி மட்டும் யோசித்தாள், அவளைத் தவிர எல்லோரும் எதிரணியில் இருப்பதாக எண்ணினாள். ஆனால், இந்த நிகழ்வில் அவள் பிரபுவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டாள். பிரபுவை அவளுக்காக யோசிக்க வைத்தாள்.  இசை எங்கேயும் பணிந்து போய் வேலையை விடவில்லை, வேலை, வீட்டு வேலை எல்லாவற்றையும் தன் தலையில் சுமந்து தியாகி ஆகவில்லை. மாறாகத் தன் நிலைபாட்டை பிரபுவிற்குக் கோபமோ கொந்தளிப்போ இல்லாமல் எடுத்துரைத்தாள். பிரபு ஒரு தீர்வைத் தரும் போது அது தான் சொன்ன தீர்வாக மட்டுமே இருக்க வேண்டுமென அடம்பிடிக்காமல் திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டாள். ஒரு வேளை இந்தத் தீர்வு சரியாக இல்லாவிடில் பிரபுவோடு சேர்ந்து மறுபடியும் வேறு யோசித்திருப்பாள். இந்த நெகிழ்வுத்தன்மையும், தனக்கென்ன வேண்டுமென்ற தெளிவும் இருந்ததால்தான் அவளால் இதைச் சாதிக்க முடிந்தது.

ஆகவே தோழமைகளே, தன்னுடைய தேவை என்ன என்கிற தெளிவும் தீர்வும்தான் இலக்கே தவிர அது தான் யோசித்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லா நெகிழ்வுத் தன்மை, எதிரில் இருப்பவரையும் சவாலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிடப் போவதில்லை என்கிற திட சிந்தனையும், அதை வெளிப்படுத்தத் தயங்காத திட மனதும் எல்லாம் சேர்ந்துதான் இசையின் வெற்றிக்குக் காரணம்.

எங்கே தேவையோ அங்கே No சொல்லப் பழகுங்கள், எங்கே முடியுமோ அங்கே விட்டுக்கொடுங்கள். நான் சொல்வது மட்டுமே சரி என்கிற ஈகோவைத் தள்ளி வைத்து விட்டுத் தீர்வை நோக்கி நகருங்கள், தனிப்பட்ட வாழ்விலும் சரி, வெளி வாழ்விலும் சரி உங்கள் வெற்றியையும், மகிழ்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. உணர்வு மேலாண்மைக்கான மிகச்சிறந்த வழி உறவை அழகாகக் கையாளுவதே.

சில அத்தியாயங்களுக்கு முன்பு தன் தேவையையும் வெளியில் சொல்லாமல், கணவன் செய்வதையும் குறை கூறும் பெண்ணைப் பற்றி பேசினோம். இது ஒரு செல்ல சவாலாக இருக்கும் வரை இருவருக்குமான உறவு மிக மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். அதுவே சிறிது எல்லை மீறிப் போகும் போது தன்னைப் புரிந்து கொண்டு நடப்பது மட்டுமே கணவனின் வேலை என அந்தப் பெண் நினைக்கத் தொடங்கும் போது அவளது நடத்தை முரட்டுத்தனத்திற்கு மாறுகிறது (Aggressive). அப்போது அவள் கணவன் உறுதியான நிலைப்பாட்டை (Assertive) கையில் எடுக்காவிடில் வாழ்வு முழுதும் அடிபணிந்து (Submissive) வாழும் நிலைக்கோ அல்லது திருமணம் கசந்து போகும் நிலைக்கோ தள்ளப்படுவர். இந்த நிலை வராது தடுக்க இருவருக்குமே உணர்வுசார் நுண்ணறிவு அவசியம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.