ஹாய் தோழமைகளே,

அமிர்தாவின் பிரச்னையில் அவளது தவறு என்ன என்று பேசினோம். அமிர்தா மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் நமக்கான தேவையைப் பற்றிப் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களைத் தவிர அனைவரிடமும் அதைப் பற்றிப் பேசுவோம். ஏன் இந்தத் தயக்கம் நமக்கு? கூச்சமா? ஆரம்ப கால உறவில் வேண்டுமானால் கூச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால் உறவோ, நட்போ மனதளவில் நன்கு நெருங்கிய பின்னும் நம் விருப்பத்தைச் சொல்லாதிருப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள்.

  1. மறுத்து விடுவார்களோ என்கிற பயம் (Fear of rejection)

எனது தேவை இதுதான் என்று பேசாதவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையும், அதனால் அவர்கள் மறுத்து விட்டால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மனம் மிகவும் பலவீனமாக இருப்பதும்தான் முக்கியக் காரணங்கள்.

இந்தப் பயத்தின் காரணமாக நமது தேவையைக்கூடப் பேசத் தயங்குகிறோம்.

சுய நேசம் உள்ள ஒருவர் நிச்சயம் தனது தேவைகளைப் பற்றிப் பேசத் தயங்க மாட்டார். ஏன் மற்றவர்தான் தனக்காக மெனக்கெட வேண்டும் என்றும் காத்திருக்க மாட்டார். தன் தேவையை, ஆசையை மனதாரக் கொண்டாட்டமாகத் தானே நிறைவேற்றிக் கொள்வார்.

அமிர்தா தனக்குப் பிடித்ததைச் செய்தோ வாங்கியோ சாப்பிட்டாலோ, பிடித்த உடையை வாங்கிக்கொண்டாலோ ராகேஷ் அதை மறுத்திருக்கப் போவதில்லை. ஆனால் அதை ராகேஷ்தான் செய்ய வேண்டுமென்கிற பிடிவாதம்தான் அவரை மன உளைச்சளுக்கு ஆளாக்கியது.

ஆகவே தோழமைகளே, மனத்தடையை விட்டு வெளியில் வாருங்கள். உங்களை நீங்கள் முதலில் நேசியுங்கள், நீங்கள் தனித்தன்மையான, இயற்கையின் மற்ற படைப்புகளைப் போல ஒரு சிறந்த படைப்பு, உங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை.

  • தன்னைப் புரிந்து கொள்வதைவிட மற்றவருக்கு வேறென்ன வேலை இருக்க முடியும என்கிற அலட்சியம்.

இது தன்னைப் பற்றி மிக அதிகமாக, உயர்வாக நினைப்போருக்கு வரும் எண்ணம். என்னை மற்றவர் எதுவும் சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும், உச்சபட்ச மரியாதையைத் தர வேண்டும், இந்த உறவில் எனது முக்கியத்துவம் அதிகம், எனக்காக மற்றவர்தான் மெனக்கெட வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவருக்கு வரும் இயல்பான எண்ணம். சமீபத்திய நீயா நானாவில் பேசிய ஒரு கணவர் அழாத குறையாகப் பேசியதைக் கேட்டிருப்பீர்கள்.

“ஒவ்வொரு விஷேச தினத்திற்கும் பரிசு வாங்கித் தருவேன், என்ன வேண்டுமென்று அவளும் சொல்ல மாட்டாள், பரிசையும் குறை கூறுவாள், சரி என்று அவளையே கேட்டால், அதை நீதான் கண்டுபிடிக்கணும் என்றும் சொல்வாள்“ என்ற அந்தக் கணவனின் நிலை சற்றுப் பாவம்தான்.

அந்தப் பெண்ணுக்குப் பிடித்த பரிசு தருவது அப்படி ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை, அவளைச் சற்றுக் கூர்ந்து நோக்கினால் எந்த மாதிரி உடுத்துகிறாள், எதை விரும்பி அணிகிறாள், அவளது படிப்பு தேர்வு என்ன, வேறென்ன பொழுது போக்கு விருப்பம் என்பதை நிச்சயம் அந்தக் கணவனால் புரிந்து கொள்ள முடியும். தினமும் அவர்களது உரையாடல் வீட்டு விஷயங்களைத் தாண்டி அவரவர்களைப் பற்றிப் பேசும் போது எப்போது அவள் முகம் ஆர்வமாகிறது, கண்கள் பளிச்சென்றாகிறது என்பதெல்லாம் புரிந்தால் நிச்சயம் அவள் மனம் விரும்பும் பரிசை அவனால் வாங்க முடியும். அதற்கு நிறைய நேரமும் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உறவில் நெருக்கமும் தேவை. ஒரு வேளை இதற்கெல்லாம் நேரமில்லாத கணவர் எனில் நிச்சயம் அந்தப் பெண் தன் தேவைகளைத் தானே நிறைவேற்றிக்கொள்வாள். பாவம் அந்தக் கணவர்தான், ஏன் என்றே புரியாமல் மன உளைச்சளுக்கு ஆளாவார்.

இதை நிச்சயம் சரி செய்ய முடியும். ஆனால் அதற்கு நிறைய நேரமும் காதலும் தேவை. இது அந்தப் பெண் கணவனுக்கு விடும் செல்ல சவால். நானும் என் மகிழ்ச்சியும் உனக்கு முக்கியமென்றால் கொஞ்சம் மெனக்கெடேன் என்கிற சவால். உங்களுக்கு அப்படி ஒரு துணை அமைந்தால் கொஞ்சம் மெனக்கெட்டுதான் பாருங்களேன்.

நீங்கள் மெனக்கெட மெனக்கெட நீங்களும் அவர்களுக்கு முக்கியமானவர்கள் ஆவீர்கள். உங்களுக்காக அவர்கள் மெனக்கெடுவார்கள்.

இதில் ஒரே ஒரு பிரச்னைக்கான சாத்தியக்கூறு உண்டு. காலப்போக்கில் அவர்கள் நான் மட்டும்தான் முக்கியம், மற்றவர்கள் என் விருப்பத்தை நிறைவேற்றவே இருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில் முரட்டுதனமான மனிதராக (aggressive behavior) ஆகிவிடும் சாத்தியக்கூறும் உண்டு. இதைப் பற்றி பிறிதொரு விவாதத்தில் காண்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.