ஹாய் தோழமைகளே,

இன்று உறவாடலின் இன்னொரு முக்கிய அம்சத்தைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்.

அமிர்தா இன்று அலுவலகத்தில் இயல்புக்கு மாறாக இருந்ததாக அவளது தோழி இன்பாவிற்குத் தோன்றியது. அதைப் பற்றி மதிய உணவு நேரத்தில் கேட்ட போதும் மழுப்பலான பதில்தான் வந்தது.

அலுவலக மீட்டிங்கில்கூட அவளது கவனம் பதியாமல் தடுமாறியதையும் இன்பா கவனித்தாள்.

அமிர்தாவிற்கு எப்போதும் சிரித்த முகம், கூடவே சிரிக்கும் கண்கள். ஆனால் இப்போதெல்லாம் எதையோ பறி கொடுத்ததைப் போல சிரிப்பையே மறந்து விட்டிருந்தாள். 

இன்னொரு நாள் கீழே வேலை பார்க்கும் அலுவலர் செய்த சிறிய தவறுக்காக அவரை வறுத்து எடுத்த அமிர்தா அனைவருக்குமே புதிதாகத் தெரிந்தாள். எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் பார்த்துக்கலாம் என்று புன்னகையோடு எதிர்நோக்கும் அமிர்தாவா இது என்று அனைவருக்குமே அதிர்ச்சி, ஆச்சரியம்.

இரண்டொரு நாள் பார்த்து தோழிக்கு ஏதோ பிரச்னை எனப் புரிந்த இன்பா வாரக் கடைசியில் அவளைச் சந்திக்க வீட்டிற்குச் சென்றாள். அங்கும் அமிர்தா அவ்வாறே இருந்ததாகத் தோன்றியது. டீ போட அவள் உள்ளே போன நேரத்தில் அவளது கணவன் ராகேஷிடம் கேட்ட போது, சிறிது காலமாகவே அமிர்தா வீட்டில் அப்படித்தான் இருக்கிறாள் காரணமே தெரியவில்லை என்று வருத்தப்பட்டான்.

மறுநாள் அமிர்தாவிடம் பேச முயன்ற இன்பாவிற்கும் தோல்விதான் கிட்டியது. இப்படியே ஓடிய ஒரு வாரத்திற்குப் பின் இடி போல ஒரு செய்தி வந்தது, அமிர்தா தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள் என்று. நல்ல வேளை, சந்தோஷமான குடும்பம், பின் என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு எனக்  குழம்பிய இன்பா இதை இப்படியே விடக் கூடாது என ஒரு மன நல ஆலோசகரின் உதவியை நாடினாள்.

அவரின் ஆலோசனைப்படி அவளை எதுவும் கேள்வி கேட்டுத் துளைக்காமல், தனியாகவும் விடாமல் பார்த்துக் கொண்டனர். பின் ஒரு மாதம் கழித்து  ஆலோசகரிடம் அவளை அழைத்துச் சென்றனர். அதுவும் ஒரு நண்பரைப் பார்க்கப் போகிறோம் என்று கூறியே சென்றனர்.

சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த ஆலோசகர் அமிர்தாவைப் பார்த்து, “உங்களுக்குப் பிடித்த உணவு எது என்றார்?“ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளிடம், மறுபடியும் கேட்டார், “உணவு பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன மேடம்?“ என்று அலுத்துக்கொண்டாள். புன்னகைத்தவாறே, “வேறென்ன பிடிக்காமல் நடக்கிறது?” எனக் கேட்டார்.

சிறிது அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அமிர்தாவை, “மனம்விட்டுப் பேசும்மா, இங்கே எல்லாருமே உன் நலம் விரும்பிகள்தாம். ஆனாலும் நாம் தனியாகப் பேசுவது உனக்கு இன்னும் வசதியாக இருக்கலாம்“ என்றவாறே ராகேஷையும் இன்பாவையும் வெளியில் காத்திருக்குமாறு சொன்னார்.

பின் அமிர்தாவிடம், “சொல்லும்மா வேறென்ன உனக்குப் பிடிக்காமல் நடக்கிறது?“ எனக் கேட்டார்.

பிடிகொடுக்காமல் பேசியவளிடம், மெது மெதுவாகப் பேச்சு கொடுத்து, சகஜ நிலைக்குக் கொணர்ந்து அவளைப் பேச வைத்தார்.

அமிர்தா, “எல்லாமேதான், கல்யாணத்திற்குப் பார்க்கும் போதே எனக்குப் பெரிய சாய்ஸ் இல்லை. வீட்டிலேயே எல்லாம் முடிவு செய்துவிட்டு என்னிடம் சொன்னார்கள். திருமண விஷயமே மிகுந்த வருத்தம்தான். ஆனாலும் ராகேஷ் மிகவும் நல்லவர், என்னிடம் மிக அன்பாக இருப்பதால் அந்த வருத்தம் மெல்ல மறைந்தது.

அவர் நல்லவர் அன்பானவர் என்பதில் ஒன்றும் குறையில்லை. ஆனாலும் வீட்டில் எப்போதுமே அவருக்குப் பிடித்த சமையல், ஏன் நான் போடும் உடைகூட அவர்கூட வந்து தேர்ந்தெடுத்து வாங்கித் தருகிறார். பிறந்த நாள், திருமண நாள் போன்ற சிறப்பான நாட்களைக்கூட அவரே திட்டமிடுகிறார், பரிசுகள் வாங்கிக் குவிக்கிறார். அது எனக்கு தேவையானது தானா என்கிற எண்ணமே இல்லை. அவ்வளவு ஏன், என்றைக்கு உறவு என்பதைக்கூட அவர் வசதிக்குத் தேர்ந்தெடுக்கிறார். நான் ஒரு மனுஷியாகவே மதிக்கப்படவில்லையோ என்று கோபம் வருகிறது. இந்த எரிச்சல் என் ஒவ்வொரு செயலிலும் எதிரொளிக்கிறது. என் மனம் சம நிலையில் இல்லை“ என்றவாறே அழ ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் அவளை அழவிட்ட ஆலோசகர், “சரிம்மா, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். உங்கள் கணவருக்குச் சில தெரபி தேவைப்படலாம். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அவரிடம் கொண்டு வரலாம். அதற்கு முன்பு எனக்குச் சில விஷயம் தெரிய வேண்டி உள்ளது. உன்னிடம் கேட்கலாமா

அமிர்தா?” “கேளுங்கள், எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.”

ஆலோசகர், “உனக்கு மாப்பிள்ளை பார்த்தபோது எனக்கு இப்படிபட்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என வீட்டில் எப்போதாவது சொன்னாயா அல்லது இவர் வேண்டாம் என்று சொன்னாயா?”

“இல்லை, சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று அமைதியாக இருந்து விட்டேன்.“

“சரி, எப்போதாவது உன் கணவரிடம் உனக்குப் பிடித்த நிறம், உணவு, வேண்டிய பொருட்கள் பற்றிப் பேசி இருக்கிறாயா?”

“இல்லை மேம்.”

“என்றாவது உறவுக்கு அழைக்கையில் இன்று வேண்டாம் என்றோ, இல்லை மற்றொரு நாள் நீயாகவே ஏதாவது முன்னெடுத்து சொன்னதுண்டா?”

அமிர்தா மிகவும் இறங்கிய குரலில், “இல்லை மேம்” என்றாள்.

“உன் கணவர் வாங்கித் தரும் பரிசுகள், ஆடைகள் போன்றவை எப்போதாவது உனக்குப் பிடிக்காமல் போனதுண்டா?“

“பல முறை…“

“நல்லது, இதுவரை எத்தனை முறை இதெல்லாம் உனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவருக்குச் சொல்லி இருக்கிறாய்?”

“சொன்னதில்லை மேம், அது அவ்வளவு சுலபமாக இல்லை.“

“சரி, உன்னைப் பற்றி நீ எதுவுமே சொல்லாமல், மற்றவர்கள் உன்னைப் புரிந்து நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பது என்ன நியாயம்?”

“நியாயம் இல்லைதான்.“

“எந்த உறவாக இருந்தாலும் அதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய இரண்டு விதிகள் உண்டு.

  1. அந்த உறவில் உனது தேவையை நீ எடுத்துச் சொல்வது. மற்றவர் அதை மதிக்கிறாரா இல்லையா என்பதைவிட முதலில் உன் தேவையை நீ மதித்து அதைப் பற்றிப் பேச வேண்டும்.
  2. எப்போதுமே உனக்கு அசௌகரியமாக உணரும் விஷயத்தில் உனது கருத்தை வெளிபடுத்துவது. நீ No சொல்லாதவரை மற்றவருக்கு அது எப்படித் தெரியும்?”

“புரிந்தது மேம், ஆனாலும் என்னைப் பற்றித் தவறாக நினைப்பாரோ என்கிற தயக்கத்திலேயே அதைச் செய்வதில்லை.”

“இப்போது மட்டும் என்ன? எரிந்து விழும், எல்லாவற்றிற்கும் கோபப்படும், எதையோ பறிகொடுத்தது போலுள்ள உன்னைச் சரியாகவா புரிந்துகொள்வார்கள்?”

“ஆமாம் மேம், நான் பேசுகிறேன்.“

“நீ பேசத் தயாராகிவிட்டது மகிழ்ச்சியே, ஆனாலும் அது உன் பக்கம் சரியாகிவிட்டதற்கான அறிகுறி. அதைக் கேட்கும் அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் புரிதல், வளர்ந்த விதத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஆனாலும் அவர்களை அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கக் கற்றுக்கொள். கொஞ்சம் கொஞ்சமாக நீ விரும்பிய மாற்றம் உன் வாழ்வில் வரும்“ என்றார் ஆலோசகர்.

“நன்றி மேம், நான் இன்றிலிருந்து முழு மனதோடு முயற்சிக்கிறேன்” என்று மகழ்ச்சியோடு சொன்னாள்.

தோழமைகளே, இந்தக் கதையைப் பற்றிய விவாதத்தை வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.