இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாம் மாதம் அதாவது இறுதி மாதம் துல்ஹஜ் ஆகும் . இம்மாதத்தில்தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களால் மக்கா நகருக்கு ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது . புனிதப் பயணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் எல்லாம் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளோடு நிறைவு பெற்றவுடன், அன்றைய தினம் அங்கிருக்கும் புனிதப் பயணிகளால் ஹஜ்ஜுப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

புனிதப் பயணம் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அனைவரும் தத்தம் இடங்களிலிருந்து தியாகத் திருநாள் எனப் பொருள்படும் ஈதுல் அல்ஹாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திங்கட்கிழமை இங்கு தமிழ்நாட்டில், பக்ரீத் என்று பரவலாக அறியப்படும் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்பட்டிருக்கும். இப்பெருநாளின் முக்கியத்துவம் நபி இபுறாஹிம் (அலை) அவர்கள் தம் இறைவனுக்காகத் தம் உயிரினும் மேலான தன் மகன் இஸ்மாயிலையே பலியிட முன்வந்தார் என்பதே.

கருணையாளனான அல்லாஹ் இபுறாகிம் நபியின் தியாக எண்ணத்தை ஏற்று அவருடைய மகன் பலியிடப்படுவதைத் தடுத்து ஓர் ஆட்டினை பலியிடச் செய்தான். இபுறாகிம் நபியின் அத் தியாகத்தை நினைவு கூரும் முகமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவது இப்பெருநாளின் சிறப்பாகும். இதுதான் குர்பானி எனப்படுகிறது.

இவ்வாறு அல்லாஹ்வுக்காகப் பலியிடப்படும் ஆட்டின் இறைச்சியை மூன்று பங்குகள் வைத்து, ஒரு பங்கு ஏழைகளுக்கு, ஒரு பங்கு உறவினர்களுக்கு, ஒரு பங்கு வீட்டுக்கு எனப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இறைச்சி பங்கு வைத்தல், உரியவர்களிடம் சேர்ப்பித்தல், தங்கள் பங்கினை எடுத்து மதியத்துக்கு பிரியாணி ஆக்கி இறக்குதல், ஆட்டுத் தலை, குடல், கால் போன்றவற்றைச் சுத்தம் செய்தல், என ஆண்கள் பெண்கள் இருவருக்குமே வேலை மிக அதிகமிருக்கும் பெருநாள் இது.

அன்றைய தேவைக்குப் போக மீந்த இறைச்சியை சூட்டுக்கறிக்காகப் பதப்படுத்துவதும் இப்பெருநாளை ஒட்டி மும்முரமாக நடக்கும். கல்லுப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து விரவி, உப்பிட்டதால் ஊறி வரும் நீர் வடிய மெல்லிய துணியில் பொதியாகக் கட்டித் தூக்கி, நீர் வடிந்ததும் இறைச்சித் துண்டுகளை ஒவ்வொன்றாகக் கோணி ஊசியால் சணலில் போதிய இடைவெளி இருக்கும்படி கோத்து, நல்ல வெயில் படும் இடமாகப் பார்த்துக் கொடியில் மாலைபோலக் கட்டிக் காய வைக்க வேண்டும். சொல்லும்போதே மூச்சு முட்டுகிறதே! இந்தப் பக்குவம் தெரிந்த பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் மட்டுமே இப்போது கறி வெயிலில் காய்கிறது. மற்ற வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளின் மேலறைகளில் உறைந்து உட்கார்ந்து கொள்கிறது மூச்சுக் காட்டாமல்.

இந்த துல்ஹஜ் மாதம் முடிந்ததும் இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் பிறக்கும். முஹர்ரம் பத்தாம் நாளான ஆஷுரா தினத்தன்றுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா நாயகியின் மகன் இமாம் ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலா போரில் கொல்லப்பட்டார்கள். அந்த துக்கத்தை மதிக்கும் விதமாக, முஹர்ரம் பிறந்ததிலிருந்து இந்தப் பத்து நாள்கள் வரை திருமணமோ மற்ற சிறு விழாக்களோ இல்லங்களில் நடத்தப்படுவதில்லை. சில குடும்பங்களில் இந்தப் பத்து நாள்களும் மீன், இறால், கருவாடு, மாசி போன்ற கடல் உணவுகளைத் தவிர்க்கும் வழக்கமும் உண்டு. பத்தாம்நாள் இமாம் ஹுசைன் அவர்களுக்காக ஆலிமை அழைத்து ஃபாத்திஹா ஓதுவார்கள். பொதுவாகவே மறைந்துவிட்ட தம் குடும்பத்து முன்னோர்களை நினைத்து அவர்கள் இறந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஃபாத்திஹா ஓதுவது என்பது முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உண்டு.

அதன் தொடர்ச்சியாக இமாம் ஹுசைன்(ரலி) அவர்களைத் தம் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, அவர் இறந்த தினமான அன்று அவருக்காக ஃபாத்திஹா ஓதப்படுகிறது. ஆஷுரா தினத்தன்று எங்கள் ஊரில் கொழுக்கட்டை அவித்து ஃபாத்திஹா ஓதும் வழக்கம் உண்டு. அரிசி மாவில் வாசமெழ வறுத்த பாசிப் பருப்பு, ஏலக்காய், தேங்காய்ப்பூ முதலானவற்றைச் சேர்த்துக் கொண்டு, கருப்பட்டியைக் கெட்டியாகக் காய்ச்சி வடிகட்டி, மாவுடன் கலந்து ஊறவிட்டு கொழுக்கட்டைகளாகப் பிடித்து அவிப்போம். கருப்பட்டி மணமும் தேங்காய்ப்பூ செழிப்பும் அரிசிமாவின் இறுகலும் அவித்தெடுத்த மென்மையும் ஒருங்கே திரண்டு உருண்டு கிடக்கும் ஆசராக் (அஷுரா) கொழுக்கட்டை!

முஹர்ரத்துக்கு அடுத்த மாதமான ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையை ஒடுக்கத்துப் புதன் என்போம். இதனை எங்கள் பகுதியில் ‘ஸபுர்கழி’ என்றும் குறிப்பிடுவோம். அந்த நாளில்தான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு இறைவனிடம் மறுவுலக வாழ்வைப் பெற்றுக்கொண்டார்கள். அக்குறிப்பிட்ட புதன்கிழமையன்று மாலையில் ஏதேனும் நீர்நிலைக்குச் சென்றுவர வேண்டும் என்ற மரபு இருந்தது. அன்று காலை பள்ளிவாசல் சென்று, ஆலிம்சா வறுத்த அரிசிமாவினை நீரில் குழைத்துத் தொட்டு மாவிலையில் குர்ஆன் வசனங்கள் எழுதித்தருவதை வாங்கி வந்து நீரில் கரைத்து வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொரு மிடறு குடித்துக் கொள்வோம். மதியம் தேங்காய்ச்சோறு ஆக்கி உப்புவைத்த மீன் ஆணத்தோடு சேர்த்து உணவு.

மாலை (அதுதான் ஸபுர்கழிக்கு முஸ்லிம் மாணவர்களுக்கு மூன்றரையோடு பள்ளிக்கூடம் விட்டுவிடுமே!) வீட்டுப்பெரியவர்களோடு ஆற்றின் அக்கரையில் உள்ள சேதுக்குவாய்த்தான் என்ற சிற்றூரில் இருக்கும் ஒரு பள்ளிவாசலுக்குப் போய்வருவோம். ஸபுர்கழி மாலையில் ஆற்றில் இறங்கி கணுக்கால் தண்ணீரில் அளைந்துகொண்டே ஆத்துப்பள்ளிக்குப்போய் அங்கு கூடியிருக்கும் நண்பர்களோடு சேர்ந்து அங்கு விற்கும் பஞ்சு மிட்டாயையும் குச்சி ஐஸையும் முறுக்கு சுண்டலையும் வாங்கித் தின்று குதித்துக் கும்மாளமிட்டுவிட்டு, திரும்பும்போது ஆற்று மணலில் ஊற்று தோண்டித் தெளிந்த நீரை உள்ளங்கையில் அள்ளிப் பருகிய குளிர்ச்சி ததும்பிய நாள்கள் அவை!

முன்னோர்கள் நினைவாக ஃபாத்திஹா ஓதுதல், ஆஷுராவுக்குக் கொழுக்கட்டை அவித்தல், ஸபுர்கழிக்கு ஆற்றுக்குப் போய் வருதல் போன்ற பழக்கங்களைச் சொன்னேனில்லையா? இதைப் போன்று இன்னும் பல பழக்க வழக்கங்கள் தமிழ் முஸ்லிம்களின் பண்பாட்டில் இருந்தன. ஆம்; இருந்தன என்று இறந்தகாலத்தில்தான் குறிப்பிடுகிறேன் காரணத்தோடு.
தமிழக முஸ்லிம்கள், அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததையும் நபிகளாரின் வாழ்விலிருந்து மார்க்க அறிஞர்கள் எடுத்துரைத்ததையும் மத நெறிகளாகக் கொண்டு, இம்மண்ணுக்கேயுரிய சில பண்பாடுகளையும் வழிவழியாகப் பின்பற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் சுன்னத் ஜமாஅத்தினர் என்போம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபுநாடுகளிலிருந்து வந்து இங்கு எளிய மக்களோடு மக்களாகக் கலந்து வாழ்ந்து அவர்களுக்கு இஸ்லாமிய நெறிகளைக் கற்றுக் கொடுத்த இறைநேசர்களை மதித்துப் போற்றும் மரபு தமிழக முஸ்லிம்களிடம் உண்டு. சுன்னத் ஜமாஅத்தினர் இறைநேசர்களை மதிக்கும் மரபுடையவர்கள். 1980களில் பிழைப்பிற்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அப்படிச் சென்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சவுதி அரேபியாவில் செல்வாக்குப் பெற்றிருந்த வஹாபியிசக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டனர். அக்கொள்கையின் தாக்கம் பெற்று, தாயகம் திரும்பிய அவர்கள், இறைநேசர்களைப் போற்றும் தர்கா மரபு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் பெற்றோர், சகோதரர், மனைவி, மக்களோடு இங்குள்ள இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் அப்பிரச்சாரத்தால் கவரப்பட்டு அவர்களோடு இணைந்து கொண்டனர். இப்படி இணைந்தவர்கள் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று அழைத்துக்கொண்டனர்.

தொடக்கத்தில் இவ்வேறுபாடு பிரிவினையாக உருவெடுக்காமல், கொள்கை வேறுபாடு என்ற அளவிலேயே இருந்தது. எனினும் ஒரு கட்டத்தில் தமிழக முஸ்லிம்களிடையே சுன்னத் ஜமாஅத் , தவ்ஹீத் இயக்கம் என இரு பிரிவுகள் உருவாகிவிட்டன.

1980ஆம் ஆண்டுகளின் நடுவிலிருந்து இந்த நாற்பது ஆண்டுகளில் இவ்வாறான பிரிவினையால் முஸ்லிம்களின் மத, பண்பாட்டுத் தளங்களில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் தர்காக்களில் மக்கள் கூடி அவர்களின் நினைவாகக் கொடியேற்றம், கொட்டு முரசு சூழ யானை ஊர்வலம் என்று கந்தூரி விழாக்களை வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்தனர்.

புறையூர் கந்தூரி, நன்றி : https://www.youtube.com/watch?app=desktop&v=tnmgDaDcWwU&ab_channel=Mr.NellaiKaaran

தற்போது பெரிய தர்காக்கள், அவற்றைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் என்ற முக்கியத்துவம் மிக்க (நாகூர் ஏர்வாடி திருச்சி பொட்டல்புதூர் போன்ற) சில தர்காக்களைத் தவிர, ஏனைய சிறு பள்ளிவாசல்களில் நடைபெற்று வந்த கொட்டு, கொடியேற்றம், கந்தூரி போன்ற கோலாகலங்கள் யாவும் நின்றே போயின.

எங்கள் தெருக் கந்தூரிக்கு பொட்டல் புதூரிலிருந்து யானை வரும். முதல் நாள் மாலை யானை தெருவில் நுழையும்போதும் மறுநாள் காலை பாகன் யானையைக் குளிப்பாட்ட ஆற்றுக்குக் கூட்டிப் போகும்போதும் ஒலிக்கும் மணியோசை தரும் விழாவிற்கான எதிர்பார்ப்பு; தெருவெங்கும் கம்பங்கள் நட்டு, குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு பாயும் ஒளி; இசைத்தட்டுகளில் இருந்து பொங்கும் இ.எம். ஹனிஃபாவின் உற்சாக வெள்ளம்; நல்ல ஆடைகளை உடுத்தி, ‘சென்டு’ பூசி நடமாடுவதில் மனம் உணரும் மகிழ்ச்சி; கந்தூரி மாலையில் கோட் சூட் போட்டு தலையில் தொப்பியும் காலில் ஷுவுமாக பூமாலை அணிந்து பள்ளிவாசலின் கொடியைத் தாங்கிய தாம்பாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட யானையின்மீது அமர்ந்து அரச தோரணையில் பவனி வரும் சிறுவர்கள்; யானை ஊர்வலத்தின் முன்னே முழங்கியபடி செல்லும் கொட்டு மேளக்காரர்கள்; அவற்றோடு இணைந்து தங்கள் திறமையை வெளிக்காட்டும் சிலம்பாட்டக்காரர்கள்; தீப்பந்தம் சுழற்றுபவர்கள்; இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாலும் பின்னாலும் இடையேயும் எங்கென்று ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் சுழன்று கொண்டிருக்கும் சிறுவர்கள்; இவற்றையெல்லாம் வீட்டினுள் நின்று ஜன்னல் வழியேவோ அல்லது தட்டடியில் நின்றோ கண்கள் மின்ன ரசித்துக் கொண்டிருக்கும் குமரிகள்; குமரிகளைக் கண்டுகொண்டும் அவர்கள் தங்களைக் கண்டு கொள்வார்களா என்ற துடிப்போடும் அங்குமிங்கும் அலைபாயும் இளைஞர்கள் எனக் கந்தூரி மாலை ஆளை மயக்கும்.

சிறுத்தொண்டநல்லூர் கந்தூரி விழா, https://www.facebook.com/photo/?fbid=2268550209891839&set=a.784658858280989

மறுநாள் பகலோ பள்ளிவாசலில் சமைத்து நேர்ச்சையாக வழங்கப்படும் நெய்ச்சோறாலும் வீடுகளில் அதற்குத் துணையாகச் செய்யப்படும் கறியாணத்தாலும் மணந்து மயக்கும். அடுத்த வருடம்வரை நினைவில் நிற்கும் குதூகலத்தைத் தந்துவிட்டு அன்றிரவின் பாட்டுக்கச்சேரியோடு நிறைவு பெறும் கந்தூரிக் கொண்டாட்டங்கள். இப்படித்தான் 90களில் ஒரு முறை நிறைவு பெற்ற எங்கள் தெருக் கந்தூரி விழா, அடுத்த ஆண்டு தொடராமலே போயிற்று .

இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த மாற்றம் திருமணங்கள் நடைபெறும் முறைகளில் ஏற்பட்டது. திருமணங்களின்போது தமிழ்நாட்டின் வெவ்வேறு வட்டாரங்களில் வாழும் முஸ்லிம்கள் அவ்வவ் வட்டாரங்களுக்கேயுரிய வழமைகளைக் கொண்டிருப்பர். ஏரல் என்று எடுத்துக் கொண்டால், திருமணத்துக்கு முந்திய நாள் மாலை மணமகள் வீட்டிலிருந்து மணமகன் வீட்டுக்கு பால் சொம்பு கொண்டு போவது; திருமணத்தன்று மணமகனுக்குத் தட்டுமாலை எனப்படும் மலர்மாலை அணிவிப்பது; மாலை சூடிய மாப்பிள்ளையை ‘பைத்’ எனப்படும் பாட்டுகளைப்பாடி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்வது; மணமகளுக்கு சுமங்கலி ஒருவர் தாலி அணிவிப்பது; தாலி அணிவித்த அம் முதியவளுக்கு மஞ்சள், வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் வைத்து பெண்ணின் தாயார் மரியாதை செய்வது; நிக்காஹ் முடித்துத் தன் சகோதரியைச் சந்திக்க வரும் மச்சானை மணப் பெண்ணின் சகோதரன் கால்களில் பன்னீர் தெளித்து வரவேற்பது; அப்படி வரவேற்கும் மச்சினனுக்கு மச்சான் மோதிரம் அணிவிப்பது; மணமக்களுக்குப் பாலும் பழமும் ஊட்டுவது; கணவன் வீட்டுக்குப் பெண்ணை முதன் முதலில் அனுப்பும்போது ஒரு ஓலைப் பொட்டியில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், தேங்காய், வாழைப்பழம் எனப் பெண்ணின் தாயார் நிறைத்துக் கொடுக்க , ‘மடிமாம்பழம்’ என்று அழைக்கப்படும் அந்தப் பொட்டியைப் பெண் தன் முந்தானையில் ஏந்திய வண்ணமே கணவன் வீட்டில் நுழைவது; நுழைவதற்கு முன் மணமக்களுக்கு ஆரத்தி எடுப்பது; வீட்டில் நுழைந்து மடிமாம்பழத்தைக் கணவனின் தாயார் கையில் கொடுப்பது; கணவனின் தாயார் வீட்டுக்கு வந்த மருமகளை வரிசையாக நிறைத்து வத்திருக்கும் அரிசிப்பானை, உப்புப்பானை, தண்ணீர்ப் பானைகளுக்குள் வலக்கையை முக்கி எடுக்கச் செய்வது…

காயல்பட்டிணம் முஸ்லிம் ‘தாலிகட்டு’

இப்படி எத்தனையோ சுவாரஸ்யமான வழக்கங்கள் இருந்தன தமிழ் முஸ்லிம்களின் திருமணத்தில். திருமண இரவில் முதன்முதலாக மணமக்கள் சந்திக்கையில், மணமகன் மணமகளுக்கு பேச்சுப்பணம் பல்லாங்குழிப் பணம் என்று சிறு தொகை (100 ரூபாயோ 50ரூபாயோ) தரும் வழக்கமிருந்தது. மறுநாள் காலை வாப்புமா மூமாக்கள் தங்கள் பேத்திகளிடம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் வெட்கச் சிவப்பை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு அந்தப் பணத்தையும் அவர்கள் கண்ணில் காட்டிவிட்டு ஓடிவிடுவார்கள் பேத்திகள். பேச்சுப் பணம் சரி பல்லாங்குழிப் பணம் எதற்கென இன்று யோசிக்கிறேன்… நாங்கள் பல்லாங்குழி விளையாடிய நினைவேதுமில்லை . ஒருவேளை வாப்புமா மூமாக்கள் விளையாடினார்களா என அவர்களிடம் கேட்காமல் விட்டுவிட்டேனே!

இந்தப் பழக்கங்களில் மாப்பிள்ளைக்கு பூமாலை அணிவிப்பது, பெண்ணுக்குத் தாலி கட்டுவது – இரண்டையும் மட்டும் விடாப்பிடியாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் எங்கள் ஊரில். ஏனையவை எல்லாமே மார்க்க விதிகளுக்கு முரணானவை என்று காரணம் காட்டி வழக்கொழிந்து போயின இன்று. புது வீட்டில் பால்காய்ச்சி பால் பொங்கும்போதும் திருமணத்தில் தாலி அணிவிக்கப்படும்போதும் குழந்தை பிறந்து முதல் மாதத்தில் குழந்தையைத் தொட்டிலிடும் நிகழ்விலும் சிறுபையன்களுக்கு சுன்னத் செய்யும் விழாவிலும் பெண்கள் கூடிக் குலவையிடுவது வழமையாயிருந்தது ஊரில். குலவையொலி எழுப்ப வெட்கப்பட்டு நிற்கும் பெண்களையும் “கொல உடுங்களேம் பிள்ளைலுவோ” என்று உற்சாகப்படுத்தி உரக்கக் குலவையிட வைப்பார்கள் முதிய பெண்கள். தலையில் தங்கள் வண்ண வண்ணச் சேலைகளால் முக்காடிட்டிருந்த பெண்களிடமிருந்து எழுந்த குலவையொலியின் மகிழ்ச்சியும் உற்சாகமும் அந்தச் சிறிய வீடுகள் முழுக்க எதிரொலித்தன அன்று. இன்றைய தலைமுறையினருக்கோ குலவையென்றால் என்னவென்றே அறிவதற்கில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறைகள் இன்று மாற்றம் கொண்ட பின், சென்றது குறித்த ஏக்கமோ வருத்தமோ கொள்வதில் பொருளில்லை. காலமென்னும் தேரின் சக்கரம் முன்னோக்கியே அல்லாது, பின்னோக்கிச் சுழல்வதில்லைதான் ஒருபோதும். ஆனாலும் தேர் பதித்துச் சென்ற பாதையின் தடங்களை மணல் மூடி மறைக்குமட்டும் பார்த்துக் கொண்டிருக்கலாம்தானே!

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.