அருள்மொழி வர்மன் யானைப் பாகன் வேடமணிந்து பூங்குழலியுடன் யானையில் பயணிக்கிறார்.

“உன் படகை எங்கே நிறுத்தியிருக்கிறாய்?” – இளவரசர்.

“ஆனையிறவுத் துறைக்குச் சமீபமாக என் படகு நிற்கிறது” – பூங்குழலி

“இக்கரையிலா, அக்கரையிலா?”

“அக்கரையிலேதான் படகை நிறுத்தத் தனி இடம் கிடைத்தது. அங்கேயே படகை நிறுத்திவிட்டு வந்தேன்.”

“யானை இறவுத்துறையை எப்படிக் கடந்து வந்தாய்?”

“நான் வரும்போது கடல்நீர் மிகவும் குறைவாயிருந்தது. ஆகையால் பெரும்பாலும் நடந்து வந்தேன், கொஞ்சம் நீந்தியும் வந்தேன்.”

யானையுடன் கடலைக் கடக்க முடிவு செய்த இளவரசர், யானையின் காதுகளில் ஏதோ சொல்ல, யானை மதம் கொண்டது போல பாய்ந்தோடுகிறது. பூங்குழலியின் முகத்தில் பயப்பிராந்தியின் அறிகுறி தோன்றியது. பூங்குழலி பயங்கரமான கடல் சுழலில் அகப்பட்டுக்கொண்டாள். அதே சுழலில் அகப்பட்டுக்கொண்டு இளவரசரும் சுற்றிச் சுற்றி வந்தார். யானையும் அப்படியே சுழன்று சுழன்று வந்தது. பூங்குழலி கண்களை இறுக மூடிக்கொண்டாள். புயற்காற்றினால் தள்ளப்பட்டு ஓடும் கரிய மேகத்தைப்போல் யானை போய்க்கொண்டேயிருந்தது. கடைசியில் யானை இறவுத்துறையை அடைந்தது. அங்கே இலங்கைத்தீவின் கீழ்ப்புறத்துக்கடலும் மேற்புறத்துக் கடலும் ஒன்றாகச் சேர்ந்தன. அந்த ஜலசந்தியின் மிகக் குறுகலான இடத்துக்குதான் யானை இறவு என்று பெயர். இலங்கைத் தீவின் வடபகுதியையும் மத்திய பகுதியையும் ஒன்று சேர்த்த அக்கடல் துறையில் யானை இறங்கியது. அனுமார் தூக்கி எறிந்த மலை கடலில் விழுந்தது போல விழுந்தது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ‘யானை மிரண்டது’ 44 வது அத்தியாயம் மனத்தில் ஊடாடிக்கொண்டிருந்தது. தோழியுடன் ஆனையிறவுப் பிரதேசத்தைப் பார்க்க வந்த இடத்தில்தான் கல்கியின் மந்திர எழுத்துகளின் நினைவால், ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போயிருந்தேன். கனவிலிருந்து மீண்டு, சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த தோழியை நோக்கிச் சென்றேன்.

“ஆனையிறவு எம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு” என உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக்கொண்டிருந்த தோழியை இமைக்காது பார்த்துக்கொண்டிருக்கிறேன். கண்ணீர் இல்லை, ஆனால் அந்தக் குரலில் ஆறாத துயரம் இருந்ததை உணர முடிந்தது. கைகளைப் பற்றிக்கொண்டேன். அதே குரலில் தொடர்ந்தார். “யாழ்ப்பாணத்திலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு, ஒன்று பூநகரி, மற்றொன்று ஆனையிறவு. பூநகரி, மன்னார் மாவட்டத்துக்குச் செல்வது. பிறபகுதிகளுக்குச் செல்வதற்கான ஒரே பாதை ஆனையிறவு மட்டுமே. அங்கிருக்கும் ராணுவ சோதனைச் சாவடி எனும் நரகத்தைக் கடந்துதான் வெளியே செல்ல முடியும். சிங்கள ராணுவ அதிகாரிகளின் அன்றன்றைய மனநிலைக்கேற்ப அங்கு சோதனைகள் நடக்கும். சுட்டெரிக்கும் வெயிலில், செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு தமிழர்களை நடக்கச் செய்து வேடிக்கை பார்ப்பதில்தான் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! சமயங்களில் அவர்களின் பிடிகளில் சிக்கிக்கொண்டவர்கள் காணாமலேயே போகும் சம்பவங்களும் சகஜம். ஈழப்போர் முனைப்புற்ற காலத்தில் இதன் கோரமுகம் மேலும் அகோரமானது, சித்திரவதைக்கூடமானது, கொலைக்களமானது. 1990இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தீவிரமடைய, யாழ்ப்பாணத்திற்கும் வெளியுலகுக்குமான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. ஆனையிறவும் பூநகரியும் தங்கள் பாதைகளை மூடிக்கொண்டன. யாழ்ப்பாணத்தைக் கடப்பதற்கு கிட்டத்தட்ட 5 மைல்கள் நீருக்குள்ளே செல்லும் பாதைவழியேதான் எங்கள் பயணம் இருந்தது, எவ்வளவு கடுமையான நாட்கள் அவை?” ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும், நேற்றுதான் நடந்ததுபோன்ற வலி அவரது குரலில்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் நுழைவாயிலில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆனையிறவு. பறவைகள் சரணாலயம், மிகப்பெரிய உப்பு வயல், முக்கியமான ராணுவத்தளம், உள்நாட்டுப்போரில் ஓய்வெடுக்காத தொடர் போர்க்களம் என வரலாற்றில் இதன் முக்கியத்துவம் அதிகம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ள ஆனையிறவு, யுத்தத்திற்கு முன் சிறந்த பறவைகள் சரணாலயமாகவும் உப்பும், ரசாயனப் பொருள்களும் தயாரிக்கப்பட்ட இடமாகவும் இருந்தது. 1938இல் ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்ட உப்பளம் 1946 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமானதாக இருந்திருக்கிறது.

ஆனையிறவு, Elephant Pass என்றே அழைக்கப்படுகிறது. கல்கியின் எழுத்துகளின்படி யானையிறவின் பெயர்க் காரணம் பார்த்தால்,        இலங்கையின் வடக்கு முனைப் பகுதிக்கு அந்நாளில் நாகத்வீபம் என்று பெயர் வழங்கியது. அந்தப் பகுதியையும் இலங்கையின் மற்றப் பெரும் பகுதியையும் இருபுறங்களிலிருந்தும் கடல் உட்புகுந்து பிரித்தது. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும்படியாகக் கடற்கழி மிகக் குறுகியிருந்த இடத்துக்கு ‘யானை இறவு’த்துறை என்று பெயர். சில சமயம் இத்துறையில் தண்ணீர் குறைவாயிருக்கும். அப்போது சுலபமாக இறங்கிக் கடந்து செல்லலாம். மற்ற சமயங்களில் அதைக் கடப்பது எளிதன்று. படகுகளிலேதான் கடக்க வேண்டும். யானை மந்தைகள் இந்த இடத்தில் கடலில் இறங்கிக் கடந்து செல்வது வழக்கமானபடியால் ‘யானை இறவு’ என்ற பெயர் வந்தது. முற்காலத்தில் இவ்விடத்தில் யானைகளைக் கப்பலில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த இடத்தைத்தான் இளவரசரும் பூங்குழலியும் யானையின் மீதேறி நீருக்குள் கடந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால், ஒருகாலத்தில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இப்பிரதேசத்தின் வாயிலாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்படிக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவு நேரத்தில் தங்கவைக்கப்படும் இடமாகவும் இருந்ததே இப்பெயர் வரக் காரணம் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். தேசத்தை ஆக்கிரமித்த அந்நியர்கள் ஆனையிறவில் கோட்டையை அமைத்து வரி அறிவித்ததாகவும், பண்டாரவன்னியன் வரி செலுத்த மறுத்து ஆங்கிலேயர் கோட்டையைத் தாக்கியதாகவும் ஒரு செய்தியுண்டு. வன்னிப்பிரதேசத்தில் அதிக அளவில் காணப்படுகின்ற மரங்கள், யானைகள், மான் தோல்கள் போன்றவற்றை வன்னியை ஆட்சி செய்த சிற்றரசர்களிடமிருந்து திறையாகக் கேட்டதாகப் பேராசிரியர் புஸ்பரட்னம் தனது ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Elephants on Sri Lanka

1760இல் போர்த்துகீசியர்கள் Bascula என்ற பெயரில் இங்கு கோட்டை கட்டியதிலிருந்து, இந்த இடம் ராணுவத்தளமாக செயல்பட்டு வருகிறது. 1776இல் டச்சுக்காரர்களால், பின்னர் ஆங்கிலேயர்களால் எனத் தொடர் ஆக்கிரமிப்பால் கோட்டைகள் கைமாறிக்கொண்டே இருந்தன. சுதந்திரத்திற்குப் பின் சிங்கள அரசு, 1952 இல் இலங்கை ராணுவத்தளம் ஒன்றை இங்கு நிரந்தரமாக உருவாக்கியது. அதைத் தொடர்ந்து, இனக்கலவரங்களின் போது இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மூன்று சமர்கள் இங்கு நடைபெற்றன. 1991இல் ‘ஆகாயக் கடல்வெளிச் சமர்’ எனப் பெயரிட்டு புலிகள் ராணுவத்தளத்தை அழிக்கும் நோக்குடன் தாக்கத் தொடங்கினர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த கடுமையான போரில் கிட்டத்தட்ட 600 புலிகள் பலியானார்கள். ராணுவம் ஆனையிறவு படைத்தளத்தை தக்க வைத்துக்கொண்டது.

பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை ராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது ஆனையிறவு படைத்தளம். ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை இலங்கைப்படைகள் நிலைகொண்டிருந்தன. இலங்கை அரசு மட்டுமின்றி, உலக ராணுவ வல்லுநர்களும் ‘யாராலும் வீழ்த்தப்பட முடியாத தளம்’ என்றே கருதினார்கள். 2000இல் ‘ஓயாத அலைகள் 3’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் ஆனையிறவு சண்டையின் போது விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக நீண்டதும், கடினமானதுமான சமர் அது. 35 நாட்களுக்குப் பின் ஏப்ரல் 22 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமானது கோட்டை. ஆனால், இறுதி யுத்தத்தின்போது, 2009 ஜனவரி 10 ஆம் நாள் இலங்கை ராணுவம் மீண்டும் இப்படைத்தளத்தைக் கைப்பற்றியது. ஆனையிறவுக்கான ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாக வெளி உலகுக்குத் தோன்றியது.

யாழ்குடா நாட்டுக்கும் இலங்கையின் பெருந்தீவுக்கும் அன்றைய ஒரே சாலைவழி ஆனையிறவு மட்டுமே. ஆனையிறவை முற்றுகையிட்டால் ஈழமே தவித்துப்போகும். அப்படிப்பட்ட முற்றுகைகளால் தவித்துப்போகும் ஈழத்துக்குக் கைகொடுத்தது தமிழக உறவுகள்தாம் எனக் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர் தோழியர் பலரும். கோடியக்கரை, ராமேசுவரம், மண்டபம், தேவிபட்டினம், மேல்குடி, கீழக்கரை சாயல்குடி, திருப்பாலைக்குடி, தோப்புவலசை, ஏர்வாடி போன்ற ஊர்களிலிருந்துதான் உணவு போய்ச் சேர்ந்திருக்கிறது. “எங்கள் மனம் மறக்கவியலா, மறக்கவிரும்பா ஊர்கள் அவை” என்று குரலில் நன்றி தெறிக்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.