மியான்மர் வடமேற்கு எல்லையின் மலைப்பாங்கான இடத்தில் குடியேறிய தனித்துவமான சின் பழங்குடிப் பெண்கள் தங்கள் முழு முகத்தையும் பச்சைக் குத்த ஆரம்பித்தபோது, இந்தப் பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு முன்பு தொடங்கியது என்பது புலப்படுகிறது . பதினோராம் நூற்றாண்டில் தொடங்கிய வழக்கம்.
ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
பர்மிய மன்னன் ஒருவன் சின் பழங்குடி இடத்திற்குச் சென்றபோது,, பெண்களின் அழகால் கவரப்பட்டு, திருமணம் செய்துகொள்ள ஒரு சின் இனப் பெண்ணைக் கடத்திச் சென்றான். அந்தக் கடத்தப்பட்ட சின் இன மணமகள் அந்த மன்னனின் பிடியில் இருந்து தப்பித்து, வீரர்களிடமிருந்து தப்புவதற்காக ஒரு கூர்மையான வாளால் தன் முகத்தை அடையாளம் தெரியாதவண்ணம் ஆங்காங்கே வெட்டிக் கொண்டாள். அந்த வீர மங்கையைப் பெருமைப்படுத்துவதற்காக சின் இனப் பெண்கள் தங்கள் முகங்களைப் பச்சைக் குத்திக்கொள்கிறார்கள் என்று சின் புராணக் கதைகள் கூறுகின்றன.
உண்மையில் சின் மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் அழகான மகள்கள் வலிமை வாய்ந்த அரசரின் படையாட்களால் தினம் தினம் கடத்தப்பட்டார்கள். இதனால் அவர்களின் இதயங்கள் மீண்டும் மீண்டும் உடைந்தன. இந்த அநீதிக்கு எதிராக யாராலும் வெற்றிகரமாகப் போராட முடியவில்லை. ஒவ்வொரு பழங்குடியினரும் அரசரின் வலிமைமிக்க சக்தியின் முன் நசுக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்கள். இதன் விளைவாக அவர்களிடமிருந்து தப்பிக்கும் படைப்பாற்றலைப் பெற வேண்டியிருந்தது.
சின் பெற்றோர் தங்கள் மகள்களைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்கள் இளம் குழந்தைகளின் முகம் முழுவதிலும் பச்சைக் குத்த ஆரம்பித்தனர், அவளை அழகற்றவளாகக் காட்டுவதற்கு!
‘என் மகள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்வாள். இவள் மிகவும் நல்லவள்’ என்ற சின் பெற்றோரின் குரல் எங்கும் ஒலித்தது!
இந்தப் பச்சைக் குத்தல் ஊசிகள் பழங்கால நடைமுறையில், மூன்று கூர்மையான மூங்கில் துண்டுகளை ஒன்றாகக் கட்டியோ மூங்கில் முட்களாலோ செய்யப்படுகின்றன. மாட்டுப் பித்தம், புகைக்கரி, இலைகள், புல் தளிர்கள் மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் கலவையை வைத்து பச்சைக் குத்தும் மையைத் தயாரிக்கிறார்கள். இலைகள் நிறத்தைக் கொடுக்கின்றன, புகைக்கரி கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. புல் தளிர்கள் இறுதியில் சேர்க்கப்படுகின்றன. இது இயற்கையாகக் குணப்படுத்தும் முகத்தின் மறைப்பாகச் செயல்படுகிறது. கூரிய முட்களைப் பயன்படுத்தி முகத்தில் வடிவங்களை உருவாக்குகிறார்கள். இந்தச் செயல்முறை மிகவும் வேதனையானது, குறிப்பாக மென்மையான கண் இமை பகுதியில் பச்சைக் குத்தும்போது உயிரே போய்விடும். அதைச் செய்து முடிக்க ஒரு நாள் ஆகும். சிக்கலான வடிவமைப்பாக இருந்தால் இரண்டு நாட்களுக்கும் நீட்டிக்கப்படலாம்.
இந்தப் பாரம்பரியம் ஒரு கண்கவர் புரட்சியாக மாறியது. பச்சைக் குத்தல்கள் ஒவ்வொரு சின் பெண்ணுக்கும் அழகின் அடையாளமாக மாறியது. பச்சைக் குத்துவது உள்ளூர் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியது மட்டுமல்லாமல், பெரும்பாலான சின் பெண்கள் பெருமைப்படக்கூடிய ஒன்றாகவும் உருவெடுத்தது. பச்சைக் குத்தல்கள் சின் பெண்களின் மகத்தான வலிமையின் சின்னமாக விளங்குவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
புல்லாங்குழலைத் தங்கள் மூக்கால் வாசித்து, சுற்றுலா பார்வையாளர்களை மகிழ்வித்தும், கையால் நெய்யப்படும் துணிகள் மற்றும் சிற்றணிகள் செய்தும் வருமானம் ஈட்டுகிறார்கள் சின் இனப் பெண்கள்.
மியான்மரின் நூற்றிமுப்பத்துக்கும் மேற்பட்ட இனக்குழுக்களில், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சின் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு பழங்குடியினப் பெண்ணும் தனித்துவமான பச்சை வடிவமைப்புகளை அணிகிறார்கள். அதில் வழக்கமான ஒரு வடிவம் சிலந்தி வலை.
அவர்களின் முகத்தில் உள்ள சிலந்தி வலை அமைப்பு சின் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது என்பதைச் சித்தரிக்கும் விதமாகவே தோன்றுகிறது.
சின் இனப் பெண்கள் அழகான தேவதைகள்!
(தொடரும்)
படைப்பாளர்:
சித்ரா ரங்கராஜன்
கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.