பெரும்பாலும் எல்லோருமே பேசத் தயங்குகின்ற ஆனால் பேச விரும்புகின்ற விடயம். ”சுய இன்பம்” (masturbate ) என்பதைப் பற்றி நாம் யாரும் யாரோடும் வெளிப்படையாகப் பேசிக் கொள்வதில்லை என்பதற்காக அது பற்றி யாருக்கும் தெரியாது என்று முடிவு செய்துவிட முடியாது.
எனக்கு முப்பத்தியெட்டு வயதாகிறது. நானேகூட இத்தனை காலத்தில் யாருடனும் உரையாடியதில்லை. எழுதியதுமில்லை. எனது பதினொன்றே வயதான சின்ன மகன், ”மாஸ்டர்பேட்”(masturbate ) பண்ணுவது தப்பா மம்மீ”, என்று மிக இயல்பாகக் கேட்கிறான்.
இப்படியொரு கேள்வியைக் கேட்பதிலிருந்தே அவன் மிகத் தெளிவாகக் குற்றமற்ற மனநிலையில் இருப்பது தெரிகிறது. ஆம், சமூகம் இதுவரை காலமும் எமக்குச் சொல்லித் தந்தது போல சுய இன்பம் காண்பதொன்றும் குற்றமான செயலோ, பேசக் கூடாத இரகசியமோ அல்ல.
சுய இன்பம் தவறான விசயம் என்ற கட்டமைப்பு இருந்தாலும் இதுபற்றிப் பேசுவதோ அனுபவிப்பதோ, ஆண்களைப் பொறுத்தமட்டில் ஆகும் என்றும் பெண்களுக்குத் தான் ஆகாது என்றும் எண்ணிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சுய இன்ப உணர்வு இயற்கையானது. இதில் ஆண் பெண் பால் வித்தியாசமெல்லாம் நாமே உருவாக்கிக் கொண்டதுதான். ஆண்கள் சுயஇன்பம் அடையலாம், பெண்கள் அடையக் கூடாது என்ற விதிமுறைகளையோ, வரையறைகளையோ இயற்கை ஏற்படுத்தவில்லை. தன்னுடைய உடலை தனது கரங்கள் கொண்டு தீண்டுவதற்கு ஒரு பெண் யாரினுடைய அனுமதியையும் கோரவேண்டியதில்லை.
நம் பிள்ளைப் பருவ காலத்தில் உடலுறுப்புகள் குறித்தோ, சுய இன்பம் குறித்தோ பெற்றோர்கள் நம்மோடு உரையாடியதில்லை. நம்மை உரையாட அனுமதித்ததுமில்லை. எதுவுமே சொல்லித் தந்ததில்லை. கேட்டதுமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் உடலைத் தீண்டிக் காணும் இன்பம் மிகப் புனிதமானது. புனிதத்தை மீறிய இன்பம் அது எதுவாக இருந்தாலும், எந்த வழியில் அடைந்தாலும் குற்றம்.
பதினொரு வயதில் சுய இன்பம் என்றால் என்ன என்றே தெரிந்திருக்காத ஒரு தாயிடம் தான் என் மகன் சுய இன்பம் பற்றிக் கேட்கிறான். இந்தளவு தெளிவுக்கு வந்துவிட்ட அவனிடம், ”ஐயோ, அதெல்லாம் ஆகாது, கூடாது, குற்றம்”, என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது முறையா? சாத்தியமா?
நான் அப்படியொரு தாயாக இருக்க விரும்பவில்லை. இருக்கப் போவதுமில்லை. உங்களிடம் உங்கள் மகனோ, மகளோ இப்படியொரு கேள்வியைக் கேட்பார்களா? அப்படிக் கேட்கும் இடத்தை நீங்கள் அவர்களுக்குத் தந்திருக்கிறீர்களா? எதையும் உங்களோடு பேசலாம், கேட்கலாம் என்ற நம்பிக்கையை நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு ஏற்படுத்தி இருக்கிறீர்களா?
மாஸ்டர்பேட் (masturbate ) என்ற சொல்லை எப்படிக் கற்றான், எங்கிருந்து கற்றான், யாரிடமிருந்து கற்றான் என்பதை அறிய விரும்பினேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக அதனை கேட்கவும் செய்தேன். நான் எவ்வளவு இயல்பாகக் கேட்டேனோ, அதைவிடவும் இயல்பாக அவன் பதிலளிக்கவும் செய்தான். விடுதியில் தங்கியிருந்த சொற்ப காலத்தில் அவனை விடவும் வயதில் சற்றுப் பெரிய பையனொருவன் ஆணுறுப்பை கையினால் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து முதலில் அதிர்ச்சியும் கூச்சமும் அடைந்து, பார்த்ததை தனது சகபாடிகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறான். இதற்குப் பெயர்தான் மாஸ்டர்பேட் என்று இன்னொரு பையன் தெளிவாகத் தானும் தனது சகோதரர்கள் வழியாக அறிந்ததாகச் சொல்லியிருக்கிறான்.
பத்துப் பதினொரு வயதிலேயே இதுபோன்ற விடயங்களை ஆண் பிள்ளைகள் பேசிக் கொள்ளத் தொடங்குகிறார்கள். பெண் பிள்ளைகளும் பேசிக் கொள்வார்கள். இந்தத் தொழில்நுட்ப உலகில் பதினொரு வயதுப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைப்பதே அறியாமை.
”உங்க கிளாஸ் பசங்க யாரும் மாஸ்டபேர்ட் பண்றதில்லையா?”, என்ற கேள்விக்கு அவன் நமட்டுச் சிரிப்புடன் ஒரு பதில் சொன்னான். ”போங்க மம்மீ, அது பெரிய அண்ணாங்க பண்றது…”
பெரிய அண்ணன்களோ, சின்னத் தம்பிகளோ யார் செய்தாலும் அது குற்றமோ தவறோ இல்லை என்பதைத்தான் அவனுக்கு வலியுறுத்த விரும்பினேன். யாராவது மாஸ்டபேர்ட் செய்தார்கள் என்று தெரியவந்தால் அவர்களைப் பொதுவெளியில் கேலி பேசுவது கூடாது. அவர்களைப் பார்த்துச் சிரிக்கவோ, அதைப் பற்றி கொசுறு பேசவோ வேண்டியதில்லை. அது யூரின் போவதுபோலச் சாதாரணமான இயல்பான விசயம். இப்படிச் செய்வதால் உடலுக்கோ மனதுக்கோ எந்தக் கெடுதலுமில்லை.
ஆனால் அந்த விடுதியில் நடந்த விடயங்கள் மிகுந்த வருத்தத்திற்குரியவையாக இருந்தன. குறிப்பிட்ட அந்தப் பையனைப் பற்றி விடுதி முழுவதும் பேச்சு பரவியிருக்கிறது. விடுதிக் காப்பாளர் தொடங்கி, பள்ளி ஆசிரியர்கள், அதிபர்கள், தலைவர்கள் என்று எல்லார் கவனத்திற்கும் சென்றுவிட்டிருக்கிறது. இந்த பொறுப்பான பதவிகளில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அந்தப் பதினோறாம் வகுப்பில் படிக்கும் மாணவனின் வயதைக் கடந்தவர்கள். குளியலறையிலோ, போர்வைக்குள்ளோ – யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சுய இன்பம் அனுபவித்தவர்கள். அந்தப் பையனை விடுதியில் தங்கியிருந்த அத்தனை மாணவர்கள் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி ”இந்தக் கையால்தானே”, என்று கேட்டுக் கேட்டு அவனை அடித்துத் துன்புறுத்திவிட்டார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் மகன் இது பற்றி என்னோடு பேசத் தொடங்கியது நடந்தது. ”அந்த அண்ணா செய்தது தப்பு”, என்றே அவனும் நம்பிக் கொண்டிருந்தான். ஒரு விடுதியில் பிரைவசி மிகவும் குறைந்த ஒரு சூழலில், மற்ற மாணவர்கள் குறிப்பாக வயது குறைந்தவர்களும் இருக்கையில் அவன் செய்யாதிருந்திருக்கலாம். ஆனால் நடந்துவிட்டது. இந்த விடயத்தில் பள்ளி நிர்வாகவும், விடுதிப் பொறுப்பாளர்களும் எவ்வளவு பொறுப்புணர்வுடன் நடந்திருக்க வேண்டும்! அவனைத் தனியாக அழைத்துப் பேசியிருக்கலாம். ஏனைய விடுதிப் பிள்ளைகளுடன் ஒரு உரையாடலை நிகழ்த்தி, அந்த மாணவனைத் தனிமைப்படுத்திவிடாத ஒரு இயல்பு நிலையை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
பால், பாலியல், பாலுறவு பற்றி நம் பிள்ளைகளோடு சாதாரணமாக உரையாடத் தொடங்கினாலே பெரும்பாலான குற்றச் செயல்கள் காணாமல் போய்விடும். பாலியல் தொடர்பான புனிதங்கள் தான் பெரும் கறைகளும், இந்த சமுதாயத்தின் மிகப் பெரிய குறையுமாக இருக்கிறது.
வளரிளம் பருவத்தில் ஆணோ, பெண்ணோ உடலில் நிகழும் மாற்றங்களால் ஒரு விதக் குழப்பத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாகியிருப்பது இயல்பானது. இந்தப் பருவத்தில் உடலில் நிகழும் ஹோர்மோன் மாற்றங்களால் உணர்வு நிலை மாறிக் கொண்டேயிருக்கும். நாம் மூடிவைத்திருக்கும் விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அது திறந்து பார்த்துவிடுகின்ற வரைக்குமான ஆர்வம்தான்.
பெரும்பாலானவர்கள் இதைப் பற்றி பேசாவிட்டாலும், எந்தவொரு பாலினத்தவராக இருந்தாலும், எந்தவொரு வயதினராக இருந்தாலும் பாலின்பம் பொதுவானது. பருவமடைவதற்கு முன்பே, குழந்தைகள் சில சமயங்களில் தங்கள் பிறப்புறுப்புகளைத் தொடுவதை கண்டுபிடிப்பார்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்கள் அவர்களது பிறப்புறுப்புகளைத் தொடுவதைக் கவனித்தால், குற்றவுணர்வடையச் செய்யாமல், தண்டனையளிக்காமல் இது முற்றிலும் சாதாரணமானது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டிய ஒன்று என்பதையும் புரியவையுங்கள்.
நபர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக சுயஇன்பம் செய்கிறார்கள். பெரும்பாலான ஆண், பெண்கள் ஆற்றுகை உணர்வைப் பெறுகிறார்கள். சுயஇன்பம் அடையும் வளரிளம் பருவத்துப் பிள்ளைகளைக் கவனித்தால், அவர்கள் உடலை நன்கு புரிந்து கொள்ள விரும்புகிறார்கள், பாலியல் பதற்றத்தை வெளியிட விரும்புகிறார்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். காரணம் எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் சுயஇன்பம் செய்கிறார்கள். சுயஇன்பம் என்பது, ஒரு பாலியல் கூட்டாளர் அல்லது இணை இல்லாதபோது செய்யும் ஒன்று என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒற்றை நபர்கள் மட்டுமல்ல உறவுகளில் உள்ளவர்கள் இருவரும் சுயஇன்பம் செய்கிறார்கள்.
சிலர் அடிக்கடி சுயஇன்பம் செய்கிறார்கள், சிலர் அரிதாகவே இருப்பார்கள், சிலர் சுயஇன்பம் செய்வதில்லை. இவ்வாறு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு காரணங்களுக்காக சுயஇன்பம் செய்கிறார்கள். சுயஇன்பம் என்பது முற்றிலும் தனிப்பட்ட முடிவு.
ஏதோ காரணங்களால் திருமணமே ஆகாத சிலர் நம்மோடு வாழ்கிறார்கள். அது அவர்களது தெரிவு. சுதந்திரம். அந்த அடிப்படை நாகரீகம் நம் சமூகத்திடமில்லை. அவர்களைப் பற்றி முதுகுக்குப் பின்னால் உலவும் கதைகளில் அவர்கள் பாலுறவுக்குத் தகுதியற்றவர்கள் என்பது, அது ”கையடிக்கும் கேஸ்” என்று கேலி செய்வதுமெல்லாம் மிக எளிய விசயங்களாக இருப்பதைக் காணுகிறோம். கேட்கிறோம். உலகிலேயே அவர்கள் மட்டும்தான் சுய இன்பம் காணுவதுபோலவும் மற்றவர்களெல்லாம் தங்கள் பாலுறுப்புகளைத் தீண்டா புனித கரங்களைக் கொண்டவர்களைப் போலவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒருவரைச் சுய இன்பம் அனுபவிக்கிறவர், அனுபவிக்காதவர் என்று வகைபிரிப்பதற்கான எந்தக் கருவியும் இங்கில்லை. ஒருவரது தோற்றத்தை , நடத்தையை வைத்து முடிவு செய்கின்ற விடயமுமில்லை இது. இன்னும் சொன்னால் இது பேசப்படவேண்டியதோ, இரகசியமானதோ இரண்டும் இல்லை. இவை எதுவாக இருந்தாலும் அது இயல்பாக நிகழவேண்டும்.
முந்தைய கட்டுரைத் தொடர் இங்கே:
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.
Great writing , need of the even matured people don’t know how to handle it.Bold and beautiful writing hats off.
இது எல்லோராலும் புதைக்கப்பட்ட ஒரு உடலியல் சார்ந்த தீர்வு. இங்கு யாரும் உத்தமரில்லை, அடுத்தவரைக் கைநீட்ட. நடிப்பதில் தேர்ந்தோரால் விகல்ப்பமாக்கப்படும் நிதர்சனம்.
Enakku ungalai munnadi arimugam illai.. but ur words are true. Society iruka frame ah vittu velila neraya per waranum and as a writer oru website or blog maintain pandradum romba periya visayam. Consistently articles podunga and i wish ur all the best. Hindujan from Srilanka.
அறிவியல் பூர்வமாக யதார்த்தமானது என எளிய நடை மூலம் புரிய வைத்துள்ளீர்.
பதின் வயது பிள்ளைகள் வைத்துள்ள என்னைப் போன்ற பெற்றோர்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று மிக அழகாக புரியும் படி சொல்லி விட்டீர்கள்.
நன்றிகள்.
மாஸ்டர்பேட் குறித்து மகனுடன் விவாதித்ததைப் பொதுவெளியில் பகிர்வதற்கு நெஞ்சுரமும் நேர்மையும் வேண்டும். அவை இரணடும் உங்களிடம் உள்ளது.
அந்த விடுதி மாணவனின் நிலையை எண்ணினால் நெஞ்சம் பதறுகிறது. பாலியல் செயல்பாடுகளுக்காக அந்த இளம் வயதில் தண்டிப்பதெல்லாம் வன்முறையை விதைப்பதற்குச் சமம். இப்படி மாஸ்டர்பேட் பண்ணியதற்காக தனது விடுதி நாட்களில் தண்டிக்கப்பட்ட ஒருவன் பின்னாளில் சைக்கோவாக மாறிய மிஷ்கினின் திரைப்படம் (சைக்கோ) நினைவுக்கு வந்து இன்னும் அச்சமூட்டுகிறது. மாஸ்டர்பேட் பாலியலில் ஒரு ‘genre’ தான் என்பதை இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான முன்னெடுப்பாக உங்கள் கட்டுரை உள்ளது .வாழ்த்துகள்..
Really great article mam, it reminds sex education series from Netflix. Really good one.