காமம் என்பது ஆபாசமும் அல்ல; அருவெறுக்கத் தக்கதும் அல்ல.

அது பசி, தாகம், கோபம் போல ஒரு இயல்பான உணர்வே. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான உணர்வு அது. ஆனால் அது கட்டுப்பாடின்றிப் பாயக்கூடாது என்றுதான் குடும்பம் என்று ஒரு கரையை முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். காமம் என்பது ஆசை, விருப்பம் என்று வேறு பொருள் தந்தாலும், உடல்ரீதியான உணர்வு என்றே நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.

நம் இந்தியா காமத்திற்குப் பெயர்போன நாடு. காமக்கடவுள்களாக மன்மதன், ரதியை உருவகப்படுத்தி, கஜுராஹோவில் காமக்கோயில் கட்டியவர்கள் நாம். வள்ளுவர் கூட திருக்குறளின் முப்பாலில் ஒன்றாக காமத்துப்பால் எழுதினார். கொக்கோக முனிவர் எழுதிய வடமொழி நூலாம் கொக்கோகத்தைத் தமிழில் தந்தார் அதிவீரராம பாண்டியன். காமசூத்திரம் எழுதியவர்கள் நம் முன்னோர். கோயில்களில் கூட காமச் செயல்களைக் கல்லில் வடித்து காமத்தின் வழி பக்தியை அடைய முனைந்தனர்.

கஜுராஹோ, LiveHistoryIndia

இத்தகைய இந்தியர்கள்தான் இன்று பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாலியல் கல்வியை மறுக்கிறார்கள்!

ஒரு இந்தியக் குடிமகன் பாலியல் குறித்த அறிவைச் சரிவரத் தெரிந்து கொள்வதில்லை. தவறான வழிகாட்டிகள், தவறான சேர்க்கைகள் மூலம் வழி தவறித்தான் போகிறார்கள். ஆண்களின் நிலை இவ்வாறிருக்க, வீட்டை விட்டு வெளியே போகாத பெண்களின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. தனது தேவை என்ன என்று புரிவதற்குள்ளாகவே, நிறையப் பெண்களுக்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.

வெளிப்படையாக இது குறித்துப் பேச பெண்கள் அச்சப்படுகிறார்கள். எங்கே தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்று பலர் இது குறித்துப் பேச முன்வருவதில்லை. மீறிப் பேசுபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களது நண்பர்களின் வாழ்க்கை போன்றவை ஆராயப்படுகின்றன. இதுதான் இன்றைய இந்தியப் பெண்களின் நிலை.

இன்றைக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் இல்வாழ்க்கையில் திருப்தியில்லாமல் தான் இருக்கிறார்கள். பாலியல் குறித்த தெளிவான செயல்பாடுகளை அறியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். படிக்காத பெண்கள் மட்டுமல்ல…படித்த பெண்களும் இதில் அடக்கம். ஆணாதிக்க மனோபாவம் படுக்கையறையையும் விட்டு வைக்கவில்லை. நமது இந்திய சமூகத்தில் தனது பாலியல் வேட்கையை ஒரு பெண் வெளிப்படுத்தி விட முடியாது. அப்படியே வெளிப்படுத்தினாலும், “என்ன இப்படி அலையுற?..” என்ற கேள்வியையே பெரும்பாலும் எதிர்கொள்ள நேர்கிறது. அதற்குப் பயந்தே நிறையப் பேர் தங்களது உணர்ச்சிகளைப் புதைத்துக் கொள்கிறார்கள். படுக்கையறை செயல்பாடுகள் என்னென்ன என்பதைக் கூட இன்னும் நிறையத் தம்பதியர் புரிந்து கொள்ளவில்லை.

காமத்தை ஆராதிக்கும் பண்பாட்டுப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் நாம் என்பதை எல்லோரும் மறந்து தான் போய்விட்டார்கள் போல. காமத்தை அடக்குவது இங்கு பெண்மையின் இலக்கணமாகக்(?) கருதப்படுகிறது. புனிதமாகப் (?) போற்றப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் தனது இருபத்தெட்டு வயதில் கணவனை இழந்தார். இரண்டு குழந்தைகள் உண்டு. இன்றுவரை மறுமணம் செய்து கொள்ளாமல் பூ,பொட்டு வைத்துக் கொள்ளாமல் வேலைக்குச் சென்று சம்பாதித்து தனியே குழந்தைகளை வளர்த்து வருகிறார். அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்திருக்கலாம். அல்லது வராமலும் போயிருக்கலாம்.

அதற்கான புறக்காரணி இரண்டு குழந்தைகளோடு இருப்பதால் மணம் செய்து கொள்ள முடியாது என்றுமாக இருக்கலாம். நான் எவ்வளவோ சொல்லியும் பொட்டு வைத்துக் கொள்ள மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “பெரியவங்க திட்டுவாங்கக்கா..வேணாம்..” என்பதுதான். அவருக்குள் பொட்டு வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறது. ‘பெரியவர்களுக்கு’ பயந்துதான் அதைத் தவிர்த்து விட்டார். அதுபோலவே அவருக்குள்ளும் உணர்வுத் தூண்டல் இருந்திருக்கும். இல்லையென்று சொன்னால் அது நிச்சயமாகப் பொய்தான். ஊர் வாய்க்குப் பயந்துதான் மறுமணத்தையும் தவிர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.

பெண்கள் காமத்தை (வேறு வழியின்றி) அடக்கி வைப்பது போல் ஆண்கள் அடக்குவது இல்லை. அவர்கள் இஷ்டத்துக்கு வெளியே வடிகால் தேடிக்கொள்வார்கள். கேட்டால், வீட்டில் சாப்பாடு சரியில்லை என்பார்கள். (சார்.. மொதல்ல நீங்க ஒழுங்கா சமைக்கக் கத்துக்குங்க!) இதிலும் சில பிரகஸ்பதிகள் உண்டு. அவர்களுக்கு வீட்டுச் சாப்பாடு நன்றாக இருந்தாலும், வெளியே ‘வெரைட்டி ரைஸ்’ சாப்பிடப் போவார்கள். அதைத் தட்டிக்கேட்க முடியாது. வயதான காலத்தில் ஒடுங்கிய பாத்திரத்தோடு வந்து சேருவார்கள்.
“நீதான் என் தெய்வம்..” என்று கண்ணீர் வடிப்பார்கள். தாலி கட்டிய பாவத்துக்கு (?) அதைச் சகித்துக் கொண்டு பணிவிடை செய்யத்தான் இந்தச் சமுதாயம் பெண்களைப் பழக்கி வைத்திருக்கிறது.

கணவன் இப்படி செய்கிறானே என்று மனைவி மனதுக்குள் மருகிக் கொண்டு, அழுது புலம்புவதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கிறது. அவளது உணர்வுகளை அவள் இலேசாக வெளிப்படுத்தினால் கூட ‘பட்டம் கட்டி’ விடுவார்கள். மனைவியை விடுத்து வெளியே போவதற்கு படுக்கையில் எதிர்பார்ப்புகளை அவள் பூர்த்தி செய்வதில்லை என்பார்கள். அப்படி பூர்த்தி செய்தாலும் “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?..” என்று புருவத்தை உயர்த்துவார்கள்.

முதலிரவில் பெண்ணுக்கு ஒன்றும் தெரியாமல் இருப்பதையே இந்திய ஆண்கள் விரும்புகிறார்கள். உறவு சம்பந்தமாக ஏதாவது ஒன்றைச் சொன்னால் கூட முன்அனுபவம் ஏதேனும் இருக்குமோ என்று மனம் கலங்கிப் போகிறார்கள்.

அப்புறம் நரகமான இரவுகள் தான். அதுவும் திருமணம் முடிந்த பிறகு அவள் உண்மையிலேயே கன்னிப்பெண் தானா என்று சோதிக்க பெருசுகள் க்ரூப் ஒன்று களமிறங்கும். அதெல்லாம் இருவரின் தனிப்பட்ட விஷயம் என்று யாரும் உணர்வதே இல்லை. இப்படி சோதிப்பவர்கள் கூட முழுமையான இன்பத்தை அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகமே. அதுவும் சிலருக்குத் தான் அனுபவிக்காத ஒன்றை அடுத்தவளும் அனுபவிக்கக் கூடாது என்ற நல்லெண்ணமும்(?) இருக்கும். காமத்தை அனுபவிக்க பெண்ணுக்கு எதிரி பெண்ணே தான்.

பாலியல் வழிகாட்டல் என்ற பெயரில் இங்கு நாலாந்தரப் புத்தகங்கள் தான் நிறைய இருக்கின்றன. பாலியல் குறித்த புரிதல்கள் இல்லாத காரணத்தினால் தான் இங்கு நிறையப் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. பெண்ணை வெறும் உடலாக, சதையாக, போகப் பொருளாகத்தான் இங்கு ஆண்கள் நோக்குகிறார்கள். அவளுக்கும் ஒரு மனம் இருக்கிறது. அதில் ஆசை, பாசம், நேசம் என்று எத்தனையோ உறங்கிக் கிடக்கின்றன என்பதை நிறைய ஆண்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

எப்போதுமே பெண்களின் முதல் தேவை பாதுகாப்பு. அது ஆதிவழி வந்தது. அதைத்தான் ஒரு ஆணிடம் இருந்து பெண்ணின் மனம் எதிர்பார்க்கிறது. அப்புறம் அன்பான பேச்சு, நேசமான செயல்பாடுகள் என்று பட்டியல் நீளும். ஆனால் ஆதி ஆணின் வழி வந்த வேட்டை மனம் இன்னும் அவனின் மரபணுக்களில் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. அவனுக்கு முதலில் தேவை இரைதான். அப்புறம் தான் கண்ணே தெரியும். இப்படி ஒரு கண்ணாமூச்சி இந்த உறவுக்குள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

அதுவும் நாற்பதைத் தாண்டிய வயதுதான் அபாயகரமானது. கிட்டத்தட்ட கடமைகளை எல்லாம் முடிக்கின்ற வயது. அந்த நேரத்தில் தான் உடல் ஓய்வுக்குக் கெஞ்சும். ஆனால் அப்போதுதான் மனம் காதலுக்கு ஏங்கும். எங்கிருந்து ஈரமான சொற்கள் வருகிறதோ அதைத் தேடி உடம்பு திறந்து கொள்ளும். இந்தப் பருவத்தை சேதமில்லாமல் தாண்டியவர்கள் பின்னால் வாழும் வாழ்க்கையில் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள். இந்த வயதில் இடறுபவர்கள் லேசான சறுக்கலோடு தப்பித்தால் உண்டு. இல்லையென்றால் புதைகுழியில் தான் மாட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் நிதர்சனம். பாலுணர்வை முழுவதுமாகப் புரிந்து கொண்டு கையாண்டவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை. ஏனெனில் அது கொரோனா போல விதவிதமான வடிவங்கள் எடுக்கும்.

ஒரு பெண்ணை அடக்கியாள வேண்டுமென்றால் அவளுடன் உடல்ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே போதும் என்று தான் நமது மூளையில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அறிவு ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஒரு பெண்ணை வெற்றி கொள்ள முடியாத ஒருவன், அவளைத் திருமணம் செய்து கொண்டு அடக்கியாளத்தான் நினைக்கிறான். அப்படித்தான் நமது ஆட்டு மந்தை சமூகம் அவனுக்குக் கற்பித்துள்ளது. நமது திரைப்படங்கள் கூட தொழிலதிபராக வெற்றிக்கொடி நாட்டிய ஒரு பெண், திருமணம் முடிந்து நோகாமல் அவனிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு, தலைக்குக் குளித்து ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டு வந்து மதிய உணவை அவன் கையில் கொடுத்து அவள் உழைப்பில் சம்பாதித்த நிறுவானத்துக்கு அனுப்பி வைப்பதாகத்தானே காலங்காலமாக இங்கே கூவுகின்றன? வெறும் உடல்ரீதியான தொடர்பு மூலமே அப்படி ஒரு பெண்ணை அடிமைப்படுத்தி தனக்குக் கீழே வைத்துக் கொள்ள முடிகிறதென்றால் நமது சமுதாயத்தை நாம் எவ்வளவு மாற்ற வேண்டி இருக்கிறது.

நாம் தாய்வழிச் சமூகம் தானென்பது வரலாறு. இன்று யார்வழிச் சமூகமென்பதே தகராறு. பழங்குடியினரிடம் இருக்கும் பாலியல் சுதந்திரம் நாகரீகமானவர்கள்(?) என்று கூறிக் கொள்ளும் நம்மிடம் இருக்கிறதா? இருக்கின்ற ஒரு வாழ்க்கையில் தேவையற்ற சென்டிமெண்ட்களைத் திணித்து நம் மூளையை நன்றாகச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள். காமத்தைப் பற்றி பேசிக்கொண்டே பெண்களுக்கு அதைத் தீர்க்கும் சுதந்திரத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். ஆண்களுக்கு ஒரு நியாயம். பெண்களுக்கு ஒரு நியாயம் என்றுதானே வகை பிரித்து வைத்திருக்கிறார்கள்.

இந்தியர்களுக்கு உரிய வயதில் முறையான காமம் மறுக்கப்படுகிறது. அதைத் தேடுவதிலேயே, அதைப் பற்றிய சிந்தனையிலேயே சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயதை இந்தியர்கள் கழித்து விடுகிறார்கள்.

கிடைத்த பின் அனுபவிக்கத் தெரியாமல் மீதி வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் கடைசி காலத்தைப் புலம்பிக் கழிக்கிறார்கள். பாலுறவில் திருப்தி பெற்ற ஒருவரால் உற்சாகமாகப் பிற செயல்களில் ஈடுபட முடியும் என்பது உளவியல் கருத்து. காமத்தை உரக்கக் கூவும் இந்த மண்ணில் தான் அதைப் பற்றி பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்படுகிறது. பாலுறவு விழிப்புணர்வு பெறாததால் தான் சிறு குழந்தைகளும், மூதாட்டிகளும் பலவந்தப்படுத்தப் படுகிறார்கள். பாலுணர்வு குறித்த தெளிவும், அதைப பற்றிய வெளிப்படையான விவாதங்களும் தான் இத்தகைய குற்றங்களைத் தடுக்கும். முறையான பாலியல் கல்வியை வரவேற்போம். அடுத்த தலைமுறை வாழ்வைப் புரிந்து கொள்ள வழிகாட்டுவோம்.

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.