தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்- 11

ஒரு விடுமுறை நாளின் மதிய வேளையில் வயிறு முட்ட சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டுக்கொண்டே “பாபிலோனின் தொங்கும் தோட்டத்தோட வரலாறு தெரியுமா உனக்கு?”ன்னு என் கணவரிடம் கேள்வியோடு ஒரு கொக்கி போட்டேன். 

“தோட்டம் இருந்தது தெரியும். ஆனா அதோட எஸ்.டி.டி எல்லாம் தெரியாது”, என்று பதில் வந்தது. 

“ நான் சொல்லவா?” ன்னு ஒற்றைப் புருவத்தை தூக்கிக் கொண்டு கேட்டேன். 

“இதுல ஏதோ விசயம் இருக்குன்னு நினைக்குறேன். சரி சொல்லு கேப்போம்”,ன்னு குழப்பமா என்னைப் பார்த்தார். 

வேணாம்ன்னு சொன்னா மட்டும் இவ விடவா போறான்னு சொன்ன அவரோட மைண்டு வாய்ஸை கண்டுக்காம  தொண்டையை செருமிக்கிட்டு உரையை ஆத்த  ஆரம்பித்தேன். 

“கிறித்து பிறப்புக்கு 500 வருசத்துக்கு முன்னால, மெதியா நாட்டு (இன்றைய அசர்பைஜான்) இளவரசியான அமித்திஸ் (Queen Amytis)  , பாபிலோனை ஆட்சி செய்துட்டு வந்த இரண்டாம் நெபுஷத்நெசர் (Nebuchadnezzar II) ராஜாவ கலியாணம் செஞ்சுக்குறாங்க. உலக வழக்கப்படி கல்யாணம் முடிஞ்சதும் இளவரசி மெதியால இருந்து பாபிலோன் அரண்மனைக்கு வந்திடறாங்க. அங்க வந்த பிறகு தான்  அவங்களுக்கு ஒரு விசயம் தெரிஞ்சதாம். அது என்னன்னா அவங்க பொறந்து வளர்ந்த மெதியா, நல்ல இயற்கை எழில் சூழ்ந்த மலைவளம் மிக்க நாடாம். ஆனால் பாபிலோன் ஒரு வறண்ட பாலைவன பூமியா இருந்துச்சாம்.  இளவரசியாவே இருந்தாலும் பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளை வீட்ட காட்ட மாட்டாங்க போல! ஹலோ….தூங்குறயா இல்ல கதை கேக்குறயா? “ ன்னு ஒரு அலர்ட் பண்ணேன். 

“ம்ம்ம்… “ ன்னு ஒரு பதில் வந்ததும், அவர் தூங்கவில்லை என்று உறுதிப்படுத்திவிட்டு மீண்டும் ஆரம்பித்தேன்.

“அரண்மனையைச் சுற்றிலும் மலை, மரம், செடி கொடிகள்ன்னு இயற்கை எழிலோட வாழ்ந்த இளவரசிக்கு தாய் நாட்டோட நினைப்பு அடிக்கடி வந்துட்டே இருந்துச்சாம்.பாபிலோன் வந்த கொஞ்ச நாள்ல இந்த நிலம் பழகிடும்ன்னு ராணி நினைச்சிருக்காங்க. ஆனா அதான் நடக்கல. அம்மா கிட்ட போன் பண்ணி சாரி…. ஓலை அனுப்பி, ‘எனக்கு இந்த ஊரே பிடிக்கல அம்மா! ஏன் இந்த பாலைவனத்துல என்னைக் கட்டிக் கொடுத்தீங்க’ன்னு பொலம்பியிருக்காங்க. வழக்கமான அம்மா மாதிரியே அவங்களும் ‘என்ன நடந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி வாழு’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. இந்தக்காலம் மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு அம்மா வீட்டுக்குப் போற வசதிகளெல்லாம் அப்போ இல்லாததால ராணி பிறந்த நாட்டுக்கும் போக முடியாம எப்போதும் சோகமாவே இருந்தாங்களாம். “ 

“இப்போ என்ன அம்மா வீட்டுக்குப் போகணுமா” என்று மேலெழும்பிய குரலுக்கு பதிலாக, “இல்லை. முழுசாக் கேளுங்க”, என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன். 

“ராணியோட மனநிலையை மாத்தணும்ன்னு நினைச்ச ராஜா, அரசவையைக் கூட்டி ஒரு ஆலோசனை நடத்தினாராம். ஆலோசனை முடிவில, ‘அரசே! ராணியின் மனம் குளிரும்படி நாம் ஏன் இந்த பாலைவனத்தையே ஒரு சோலைவனமாக மாற்றக்கூடாது’ன்னு ஒரு அறிவாளி அமைச்சன் சொன்னாராம்”. 

“ம்ம்.. அப்புறம் “, இப்போது என்னவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது போல. 

“’பாலைவனத்தில் எப்படி அமைச்சரே சோலை அமைப்பது? நீர் சரியான மங்குனி அமைச்சர்’, என்று அவரின் மீது பொறாமை கொண்ட இன்னொரு அமைச்சன் குட்டையைக் குழப்பினானாம்.” 

“’அரசே! மனிதன் நினைத்தால் முடியாதது என்ன இருக்கிறது? நாம் மரங்கள் சூழ்ந்த ஒரு வனத்தைக் கொண்ட அரண்மனையை அமைக்கலாம்.  பல அடுக்குகள் கொண்ட அரண்மனையைக் கட்டி அதில் ஒவ்வொரு அடுக்குக்கும் மரம், செடி, கொடிகள் நட்டு ஒரு சோலையை உருவாக்கி விடலாமே’, என்று ப்ளூபிரின்ட்டே அச்சிடாத ஒரு ஐடியாவைக் கொடுத்திருக்கிறார். அவரின் ஐடியாவில் மனம் மகிழ்ந்த அரசன், பாலைவனத்தில் ஒரு சோலை அமைக்கத் திட்டம் தீட்டினாராம்…” 

“கற்களால் எழுப்பப்படும் கட்டிடங்களில் மரம் எப்படி வளரும் அமைச்சா” என்று பொறாமை அமைச்சர் விடாமல் துரத்த…  

“பல அடுக்குகளால் ஆன மாளிகையின் இடையில் சிறிது இடம் விட்டு கட்டலாம். அந்த இடைவெளிகளில் மரங்கள் நட்டு செழிப்பாக்கலாம். அதில் கிடைக்கும் நிழல் மூலம் சிறிய செடிகளும் உயிர் பற்றிக் கொள்ளும்”, என்று பதில் வந்ததாம்” 

“இப்படியாக ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற பல அடுக்கு மாளிகை கட்டி, ஒவ்வொரு அடுக்கிலும் பசுமை தவழச்செய்தாங்களாம். கூடவே பல மைல் தொலைவில் உள்ள ஆற்று நீரை குழாய் அமைப்பை வைத்து நீரேற்றி, மரமெல்லாம் கூட வளர்த்திருக்காங்க. மாளிகையைச் சுற்றிலும் தடாகமெல்லாம் அமைத்து ராணியை மகிழ்விச்சாராம் அந்த பாபிலோனிய மன்னன் நெபுஷத்நெசர். “ 

“உனக்காக இந்த பாலைவனத்துல நான் தடாகத்தோட மாளிகை கட்டணுமா? அதுக்குத்தான இந்த பில்டப்பு?” என்று என்னவர் கேட்டதும், சில்லென்ற கோவையில இருந்து பாலைவனத்துக்கு வந்த எனக்கு என் மன்னவன் ஒரு பாலைவனச்சோலை கட்டிக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை வந்தது. ஒரு புன்னகையோடவே நான் அந்த கேள்வியைக் கடந்துவிட்டேன்.

அதே போன்ற மற்றொரு விடுமுறை நாளின் மதிய வேளையில் “நாம ஊர் சுத்திப் பார்க்கப் போகலாம்”, என்ற கணவரின் அன்புக் கட்டளையின் பேரில் அலங்காரம் செய்துகொண்டு கிளம்பியாயிற்று. மெதியா நாட்டு இளவரசி கதை சொன்னது இந்த பயணத்துக்காகத்தான். என் அரசன் இந்த அரசிக்காக மாளிகை கட்டவில்லைன்னாலும், பாலைவனத்தில் ஒரு சோலையைக் காட்டுவதற்குக் கிளம்பிவிட்டார். இதோ கிளம்பிவிட்டோம்…….  

இந்த ஊர்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விசயமே கார்ல போறது தான். எத்தனை தூரம் பயணம் பண்ணாலும் அலுப்பே தெரியாது. ரோடெல்லாம் சரேலுன்னு வழுக்கிக்கிட்டே போகும். நாலு மணி நேரம் தொடர்ந்து கார்லயே போனாலும் கூட சலிக்காது. அதுசரி கார் ஓட்றவங்களுக்குத்தான அந்த கஷ்டம் தெரியும்?அறுபது கிலோமீட்டர் தொலைவை அரைமணியில் கடந்து எங்களின் புஷ்பக வாகனம் பறந்து சென்று ப்ரேக் அடித்து நின்ற இடம், துபாயின் உலகப் புகழ் பெற்ற மிராக்கிள் கார்டன் (Dubai Miracle Garden) பார்க்கிங்.

பூக்கள் என்றாலே மனம் லேசாகிவிடுகிறது. பூக்களைப் பார்ப்பது எப்போதுமே ஒரு பேரானந்தம். பூக்களை வைத்து பாட்டெழுத முடியலேன்னா அவரைக் கவிஞராகவே இந்த உலகம் ஒத்துக்காது. பொண்ணுங்களை இந்த தமிழ்ச் சமுதாயம் பூக்களோட ஒப்பிடலேன்னா அது மிகப்பெரிய பாவச் செயலாகிவிடும்.

ஆரம்பத்துல மல்லிகைப்பூ இட்லின்னு சொன்னாங்க. கொஞ்சகாலம் கழித்து குஷ்பு இட்லி வந்தது. ஆனா என்னிக்காவது பிரபு இட்லி வந்திருக்கா? அட்லீஸ்ட் ஒரு யோகி பாபு நூடுல்ஸ் வந்திருக்கா?

‘பொண்ணு இருக்குற இடத்துல பூ வைக்கணும்ன்னு சொல்லுவாக’ அப்படின்னு கிராமத்துல கிழவிக ஏன் சொல்றோம், எதுக்கு சொல்றோம்ன்னு தெரியாமயே சொல்லிட்டு திரிவாங்க. அட வயசான கிழவிகதான் இப்படின்னா சின்னப் பொண்ணுக கூட ‘நீ ஏன் ரோஜாப்பூவோட ப்ரப்போஸ் பண்ணலை’ன்னு காதலை சொல்ல வர்ற பையன ரிஜெக்ட் பண்ணிடறாங்க. அது ஏன் பூக்கள் எப்போதுமே பெண்கள் சம்பந்தப்பட்டதா மாறிப் போனதுன்னு தெரியல. ஒரு ஆண் பூக்களை ரசிப்பதே இல்லயா? படைப்பாக வரும்போது மட்டும் பூக்களைத் தேர்ந்தெடுக்கும் ஆண், பூக்களைச் சூடிக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால் சங்ககாலம் தொட்டு ஆணும் பூக்களைச் சூடிக்கொண்டுதான் இருந்திருக்கிறான். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்ன்னு நினைக்குறேன். 

எது எப்படியோ எனக்கு பூக்கள் என்றால் விருப்பம். பூ மார்க்கெட் போய் கிலோ கணக்குல மல்லிகை வாங்கிக் கோத்து தலையில் வைக்கிற ஆசை எல்லாம் இல்லை. செடியிலே பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள் என்றால் கொள்ளை பிரியம். வீடு எவ்ளோ சின்னதா இருந்தாலும் கூட குட்டியா ஒரு தோட்டம் வைக்கணும்னு ரொம்ப ஆசை. துபாய் வந்ததும் அதே ஆசையில நர்சரி போய் குட்டிக் குட்டி பூந்தொட்டி வாங்கி ( நெஞ்சு வலி வருமென்பதால் விலையைக் கேட்க வேண்டாம்!) வந்து பால்கனி முழுசும் வெச்சு அழகு பார்த்தேன்.

சம்மர்ன்னு ஒண்ணு வரும், அது எல்லாத்தையும் வாரிச் சுருட்டிட்டு போயிரும்னு அப்போ எனக்குத் தெரியாது. வெளிய நிக்குற காரே எரிஞ்சு சாம்பலாகும்போது வாங்கி வெச்ச செடியெல்லாம் எம்மாத்திரம்? எல்லாச் செடியும் கருகிப் போய் கண்ணீர் விட்டு, அதைப் பார்த்து நான் கண்ணீர் விட்டு….. அத்தோட செடி வெக்குறத நிப்பாட்டுனேன். ஆறு மாசம் மட்டும் உயிரோட இருக்குற மீன் மாதிரி ஆறு மாசம் மட்டும் வளர்ற செடி ஏதாச்சும் கிடைக்குமா? 

என்னோட கார்டன் கனவோட மிராக்கிள் கார்டனுக்குள்ள என்டர் ஆனேன். உள்ள நுழைஞ்ச அடுத்த நொடி கண்ணு முன்னால ஒரு அழகிய நந்தவனம் விரிந்து கண்களுக்கு விருந்தாச்சு. கண்ணு போன திசையெல்லாம் மஞ்சள், நீலம், ஊதா,சிவப்பு,வெள்ளை, பிங்க் இன்னும் வண்ணங்கள் கண்டுபிடிக்க முடியாத அளவில் பூக்கள்! அது பூந்தோட்டம் இல்லை. பூக்காடு.

‘ஹே! மேல பாரு பட்டாம்பூச்சி, ஹே! கீழ பாரு எறும்பு, அங்க பாரு பெரிய்ய்ய்யயயய ஏரோப்பிளேன், ஹைய்யா! எவ்ளோ நீநீநீநீநீளளளளள ட்ரெயினு’ன்னு சந்திரமுகி ஜோதிகா மாதிரி கண்ணுல லைட்டு அடிச்சது. ஒத்த பூந்தொட்டியவே இந்த ஊர்ல நம்மளால காப்பாத்த முடியலயே இவங்க எப்படி ஏக்கர் கணக்குல பூந்தொட்டிய மெயின்டெய்ன் பண்றாங்கன்னு மலைப்பா இருந்தது. இந்த பூக்களெல்லாம் செடியிலிருந்து பறித்து அலங்காரம் செய்யப்படல. செடிகள் அங்கயே வளர்க்கப்படுது. ஆறு மாதம் உள்ளே ஆறு மாதம் வெளியேன்னு பார்வையாளர்களுக்கு அக்டோபர் டூ மார்ச் வரை பார்வையிட அனுமதி தர்றாங்க. சம்மர் ஆரம்பிச்சதும் கேட்டை இழுத்துச் சாத்திவிட்டு எல்லாச் செடிகளுக்கும் தனியா ஏஸி போட்டு பசுமைக் குடில் அமைத்து பராமரிக்குறாங்களோ என்னவோ. 

மலர்த்தோட்டம்னா உடனே அரசாங்கம் வைக்குற மொத போர்டு ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ என்ற பதாகைகள் தான். அந்த போர்டை பாக்குற வரைக்கும் பூவைப் பறிக்கணும்னு ஆசையே வந்திருக்காது. ஆனா அத பார்த்ததுக்கு அப்புறம் தான் மனசுக்குள்ள ஒரு குட்டி சைத்தான் ஒரே ஒரு பூ பறிக்கலாமான்னு பிராண்டும்.

‘துபாய்க்காரங்க ரொம்ப நல்லவங்க போல! அந்த மாதிரி போர்டெல்லாம் இல்லயே’ன்னு உள்ள நடக்க ஆரம்பிச்சா, அப்போதான் தெரிஞ்சது பூவை பறிக்குறதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைன்னு. பூக்களெல்லாம் அந்த எண்டுல இருந்தா நாம இந்த எண்டுல நிக்குறோம். நமக்கும் கார்டனுக்கும் நடுவுல ஒரு ராமர் பாலமே கட்டுற அளவுக்கு இடைவெளி இருக்கு. ஒருவேளை இப்படி வெச்சிருக்குறதால தான் ஆறு மாசம் பூக்களுக்கெல்லாம் சேதாரம் இல்லாம இருக்கு போல!

இத்தனை பெரிய பிரம்மாண்டத்தில் மனதளவில் மெதியா ராணியாகவே மாறிப்போன மனசை, நிகழ்காலத்துக்கு இழுத்துட்டு வந்தது கூட்டத்தில் இருந்த சலசலப்பு. இது போன்ற இயற்கை எழிலான இடமாக இருந்தால் ஓரமாக காலை மடக்கி உக்கார்ந்து ரசிக்க ஆரம்பித்துவிடுவது என் வழக்கம். அப்படி ஒரு வசதியான இடம் இங்கே கிடைக்கவில்லை.  ஒரு எட்டு வெச்சு நடக்குறதுக்குள்ள பின்னாடி, முன்னாடி, சைடுலன்னு மக்கள் ‘வாம்மா மின்னல்’ மாதிரி வேக வேகமா க்ராஸ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க.

சுத்தியிருந்த எல்லாருமே ஏதோ பரபரன்னு அலைஞ்சுட்டே இருந்தாங்க. யாருமே எந்த அலங்காரத்தையுமே நின்னு ரசிக்குற மாதிரியே தெரியல. அடேய் நானெல்லாம் மகாராணி கனவு கண்டுட்டு வந்திருக்கேன். கொஞ்சமாச்சும் ரசிக்க விடுங்கன்னு கத்தணும் போல இருந்துச்சு.

எங்க போனாலும் நாம பண்ற மொதல் விசயம் கையில செல்போனை எடுத்துக்க வேண்டியது. இப்படி நின்னு, அப்படி நின்னு, திரும்பி நின்னு, இப்படி உக்காந்து, அப்படி உக்காந்து, கையைத் தூக்கி, காலைத் தூக்கி, பல்டி அடித்து, பக்கத்துல வர்றவன் மூக்குல ஒரு குத்துவிட்டுன்னு, பாஞ்சு பாஞ்சு போட்டோ எடுத்துட்டே இருக்கவேண்டியது. ‘இதுக்கொரு எண்டே இல்லையா’ன்னு சந்தானம் மாதிரி போனை பிடுங்கி ஒடைக்குற அளவுக்கு பொது இடங்கள்ல செல்போன் பெரிய தொல்லையா மாறிடுச்சு. 

புகைப்படம் எடுப்பது எனக்கும் பிடிக்கும். ஆனால் அதே வேலையாகத் திரிந்தது இல்லை. பார்க்கும் இடங்களையெல்லாம் என் கேமாராவின் கண்களை விட என் கண்கள் தான் அதிகம் படம் பிடிக்கும். ஒரு அந்திவேளையில் இமயமலைச் சாரலின் பேருந்துப் பயணத்தில் என் கண்கள் படம்பிடித்த காட்சி தான் இப்போதும் என் மனதில் அழியாமல் இருக்கிறது. என்னை சுத்தி கேட்டுக் கொண்டிருந்த க்ளிக்…. க்ளிக்…. க்ளிக்…. சத்தத்தில் சிறிது எரிச்சல் கூட வந்தது. ‘போட்டோ எடுப்பது அவர்களை ரசிக்க. போட்டோ எடுப்பது அவரவர் விருப்பம் தானே. உனக்கேன் கோவம் வருகிறது’ என்று பராசக்தி படத்தில வர்ற வக்கீலு மாதிரி கேள்வி கேக்க தோணுதா? அது என்னவோ அவரவர் விருப்பம் தான். ஆனாலும் போட்டோ புடிக்குறேன் பேர்வழின்னு ஒரு இடத்தைக்கூட ரசிக்கவிட மாட்டாங்க இந்த போட்டோ ஃப்ரீக்ஸ்.

அந்த இடம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு போய் நிக்கலாம்ன்னு பார்த்தா அங்கயும் குறுக்கால பூந்து வந்து ‘யோ யோ’ போஸ் குடுத்து போட்டோஸ் எடுத்துட்டு இருப்பாங்க. அதுவும் இந்த பொண்ணுக இருக்காங்களே குட்டி குட்டி பாவாடையா போட்டுக்கிட்டு வழியில நின்னு காத்துல டான்ஸ் ஆடிக்கிட்டு கிடந்தா… நான் பூக்களை பார்ப்பதா இல்ல இந்த பொண்ணுகள பார்க்குறதா… நீங்களே சொல்லுங்க? ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா’ன்னு அவங்களை இனி கண்டுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன். 

அடுத்ததா நான் நகர்ந்து போனது நம்ம பாரதிராஜா பட செட்டுக்குள்ள. இங்க எப்படி பாரதிராஜா செட்டுன்னு யோசிக்கிறீங்களா. அந்த இடம் முழுக்க முழுக்க சூரியகாந்திப் பூவா பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. ஒரு சூரியகாந்திப்பூவுக்குள்ள எத்தனை ஹீரோயின் முகங்களைக் காட்டியிருப்பார்ன்னு யோசிக்கும் போதே வீட்டுல சன்ஃப்ளவர் ஆயில் தீர்ந்தது நியாபகம் வந்தது என்னுடைய துரதிர்ஷ்டம். மிராக்கிள் கார்டன்ல ஒவ்வொரு வருசமும் ஒரு தீம் இருக்கும். அந்த தீம்க்கு ஏத்த மாதிரி பூக்கள் தாங்கிய உருவங்களை வெச்சிருப்பாங்க. 

ஊர்ல பொருட்காட்சி போனோம்னா கடல் கன்னி, மரணக்கிணறு, கிரிகாலன் மேஜிக் ஷோ… ன்னு வகை வகையா வெச்சிருப்பாங்க. கூடவே டில்லி அப்பளம், காளான், பஞ்சுமிட்டாய்ன்னு சாப்பிடுற அயிட்டங்களும் தூள் பறக்கும். அதே போல் இல்லாம இங்க அந்தரத்தில் கன்னி, சுழலும் கன்னி, கல்கோட்டை, தடாகம், டெட்டி பேர், மிக்கி மவுஸ், யானை, பூனை, ஈ, எறும்புன்னு சிறுசுல இருந்து பெருசு வரை எல்லாமே பூக்களால அலங்கரிச்சு வெச்சிருப்பாங்க. ஆகாசத்துல பறக்குற நிசமான விமானமே இங்க பூக்களால் நிறைந்து வழியும். இப்படியாக கடிகாரம் முதல் கார் வரை, ஹேர்பின் முதல் ஏரோப்ளேன் வரை அனைத்துமே பார்த்து டயர்டோ டயர்டு ஆகாம இருந்தா உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கலாம்.   

ஏக்கர் கணக்குல ஆக்கிரமிச்சு இருக்குற எம்.எல்.ஏ வீடு மாதிரி, இந்த கார்டன் ரொம்ப ரொம்பப் பெருசு. வயசானவங்க எல்லாம் சுத்திப் பார்க்குறதுக்கு சின்னச் சின்னதா வாகனங்கள் இருக்கு. அதுல ஏறி ஒரு முழு ரவுண்டு வரலாம். அதெல்லாம் வேணாம் நாங்கெல்லாம் யூத்துன்னு டீசெண்டா மறுத்துட்டு சுத்திப்பார்க்க ஆரம்பிச்சா, முட்டி வலி வந்தது தான் மிச்சம். இதுக்கு மேல ஒரு அடியெடுத்து வெச்சா உடம்பு பார்ட் பார்ட்டா கழண்டுவிடும்போல இருந்தது. சாயங்கால சூரியனே டின்னர் முடிச்சு தூங்கப் போயிருச்சு.

‘கோவாலு என்னைக் கொஞ்சம் கூட்டிட்டு போடா’ன்னு பிக்கப் வண்டிக்காக வெயிட் பண்ண அக்கடான்னு ஒரு பெஞ்சைப் பிடிச்சு உக்கார்ந்தேன். சட்டசபை மாதிரி கூச்சலும் குழப்பமுமா இருந்த அந்த கார்டன், கூட்டமெல்லாம் குறைஞ்சு கொரோனா லாக்டவுன்ல இருந்த டவுனு மாதிரி ஒரு பேரமைதியோட இருந்துச்சு. ஏதோ நினைவு வந்து சக்தியெல்லாம் திரட்டி ஒலிம்பிக்ல மெடல் வாங்கப் போறவளாட்டமா ஓட்டமா ஓடி காலியாக இருந்த ஊஞ்சல்ல போய் உக்கார்ந்துட்டேன். இந்த சிச்சுவேசனுக்கு ராஜா சார் ஒரு பாட்டு வாசிச்சே ஆகணும் என்று தோன்ற, ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே….. சில்லென்ற….. ‘ ம்ம்ம்ம் துபாயில சில்லென்ற காற்றா? நோ வே… சேஞ்ச் த சாங்க்’…ன்னு ரஹ்மானை டியூன் போட கூப்பிட்டு விட்டேன். ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… நான் வந்துவிட்டேன்… நான் வந்துவிட்டேன்…’ ஆமா நான் தான். பாட்டுப்பாடுறது நான் தானே! 

ரசிக்கலாம்….. 

தொடரின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம்:

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.