சில மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் ஒரு குழந்தை ஓடி விளையாடிக்கொண்டிருந்த போது கீழே விழுந்தது. குழந்தையின் நெற்றியில் புடைத்துவிட்டது. புடைத்த இடம் கருநீலமாக மாறியதும் வீட்டில் உள்ள அனைவரும் பயந்து விட்டார்கள். இது எல்லா வீட்டிலும் நடக்கும் ஒரு சகஜமான நிகழ்வுதான். ஆனால், இதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் பற்றி நாம் யாரும் யோசிப்பதே இல்லை. கீழே விழுந்ததும் ஏன் வலிக்கிறது, ஏன் வீக்கம் ஏற்படுகிறது, ஏன் காயம் ஏற்பட்ட இடம் சிவக்கிறது என்பதைப் பற்றி நாம் என்றாவது யோசித்திருப்போமா?
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கும் நம் நாட்டின் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. நாட்டிற்கு எந்த ஆபத்தும் வராமல் அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவதுபோல நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கான செல்கள் அனைத்தும் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன. ஏதேனும் நுண்ணுயிரி நம் உடலுக்குள் நுழைந்தாலோ அல்லது நோயை உண்டாக்கும் கிருமிகள் நம் உடலுக்குள் நுழைய நேர்ந்தாலோ இந்த நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றைத் தாக்க தொடங்கும். அப்படி நோய் எதிர்ப்பு செல்கள் கிருமிகளோடு சண்டையிடும்போது உடல் சூடு அதிகரிக்கும். அதனால்தான் காய்ச்சல் வருகிறது. காய்ச்சலை நோயாகப் பார்க்காமல் அதை ஓர் அறிகுறியாக பார்ப்பதுதான் சரியானது. உடலில் ஏதோ ஒன்று தவறாக நடக்கும் போதும் நோய் எதிர்ப்பு செல்கள் அதன் வேலையைச் சரியாகச் செய்யும் போதும் ஏற்படும் அறிகுறிதான் காய்ச்சல்.
காய்ச்சலைப் போலவே வலி, வீக்கம் போன்றவையும் ஓர் அறிகுறிதான். உதாரணமாக குழந்தை கீழே விழுந்ததும் ஏற்பட்ட வீக்கத்திற்குப் பின்னால் ஒரு பெரிய அணிவகுப்பே நடந்துள்ளது. காயம் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் செல்கள் மூளைக்குத் தகவல் அனுப்பியதும், மூளை நோய் எதிர்ப்பு செல்களுக்குத் தகவலைக் கடத்தும். தகவல் கிடைத்ததும் நோய் எதிர்ப்பு செல்கள் உடனடியாகக் காயம் ஏற்பட்ட இடத்திற்கு விரையும். அப்படி ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் எல்லா நோய் எதிர்ப்பு செல்களும் காயம் ஏற்பட்ட இடத்தில் கூடும்போது வீக்கம் உருவாகிறது. ஒன்றாகக் கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் அனைத்தும் காயம் ஏற்பட்ட இடத்தைச் சரி செய்வதற்கான வேலையைத் தொடங்கும். காயம் ஏற்பட்டபோது சில ரத்த அணுக்கள் சேதம் அடைந்திருக்கும். அப்படிச் சேதம் அடைந்த செல்களை நீக்கும் பணியையும் இந்த நோய் எதிர்ப்பு செல்கள் கவனித்துக்கொள்ளும். சேதமடைந்த ரத்த அணுக்களால்தான் காயம் ஏற்பட்ட இடம் கருநீலமாக மாறுகிறது. காயம் ஏற்பட்ட இடத்தில் எல்லா வேலைகளும் முடிந்த பிறகு நோய் எதிர்ப்பு செல்கள் மீண்டும் தங்கள் ரோந்துப் பணியைத் தொடங்கும். அப்படி அந்த செல்கள் கலைந்து செல்லும் போது வீக்கம் வற்றிவிடுகிறது.
காயம் ஏற்பட்ட இடத்திற்கு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான செல்கள் விரையும்போது அந்த இடம் சிவப்பதோடு மட்டுமல்லாமல், வெதுவெதுப்பாகவும் ஆகிறது. மேலும் அந்த இடத்தில் இருக்கும் செல்கள் சேதமடைவதால் வலி உண்டாகிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் எறும்போ அல்லது கொசுவோ நம்மைக் கடித்த இடத்தில் சிறிய தடிப்பு ஏற்படும். அதுவும் மென் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதற்குக் காரணம் எறும்பு, கொசுவின் கூர்மையான கொடுக்குகளின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தப்பட்ட ஒருவகையான வேதிப்பொருளை எதிர்த்து நம் உடலின் நோய் எதிர்ப்பு செல்கள் செயல்படுவதுதான். அந்த நிகழ்வின் போது ஏற்படும் விளைவுகள்தாம் தடிப்பு போன்றவை. நம் உடலின் நோய் எதிர்ப்பு செல்கள் சரியாக வேலை செய்கிறது என்பதன் அறிகுறியாக இருப்பதால் வலி, வீக்கம், காய்ச்சல் இவை அனைத்தும் நல்லது.
சரி, எல்லா வீக்கங்களுக்குப் பின்னாலும் வலி இருக்குமா என்று கேட்டால், இல்லை. அப்படி இருக்கையில் வலியற்ற வீக்கங்களும் கட்டிகளும் எதைக் குறிக்கின்றன என்பதை ஆராயும்போது, நம் நோய் எதிர்ப்பு செல்களிடம் இருந்து தப்பித்து உள்நுழைந்த ஏதோ ஒன்றால் நம் உடலுக்குள் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது எந்த ஓர் அறிகுறியும் இன்றி தொடர்கிறது. உதாரணமாக, கேன்சர் போன்ற நோய்களில் ஆரம்பக் காலத்தில் ஏற்படக்கூடிய கட்டிகள் வலியின்றி இருக்கும். முதலில் கேன்சர் பற்றித் தெரிந்துகொள்வோம். மனிதனின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான செல்கள் அதன் சுழற்சி முடிந்ததும் மடிந்துவிடுகின்றன. இதை சமன் செய்ய பல லட்சக்கணக்கான செல்கள் தினமும் உடலில் உருவாகின்றன. இந்தச் சமநிலையைத் தீர்மானிப்பதும் செயல்படுத்துவதும் ஒரு குறிப்பிட்ட மரபணு குழுக்களின் வேலை. ஆனால், இந்த மரபணுக்களில் ஏதேனும் பிறழ்வு (mutation) ஏற்பட்டால் இந்த நிகழ்வின் சமநிலை குலைந்து தேவையைவிடப் பல மடங்கு அதிகமான செல்கள் உடலில் உற்பத்தியாகத் தொடங்கும். அப்படி அளவுக்கு மிஞ்சி உற்பத்தியான செல்கள் ஓரிடத்தில் கட்டியாகப் படியும் போது கேன்சர் உருவாகிறது. இந்த கேன்சர் கட்டி ஆரம்பத்தில் எந்த ஒரு வலியையும் ஏற்படுத்தாது. இந்தக் கட்டி உடலுக்கு உள்ளேயும் உடலுக்கு வெளியேயும் ஏற்படலாம். உடலுக்கு உள்ளே ஏற்படக்கூடிய கட்டியைக் கண்டுபிடிப்பது இன்னும் சிரமம். வலி ஏதும் இல்லாததால் இந்தக் கட்டியை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடிவதில்லை. மேலும் இந்த கேன்சர் கட்டிகள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குப் பரவக்கூடியவை. இந்த நிலையை அடைந்ததும் நிலைமை கைமீறிப் போய்விடுகிறது. கேன்சர் கொடிய நோயாக மாறியதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். நாளடைவில் அந்தக் கட்டிகளின் அளவு பெரிதாகிக் கொண்டே போக, அது அருகில் இருக்கும் நரம்புகள், எலும்புகளில் அழுத்தம் கொடுக்கத் தொடங்கும். அதனால் ஏற்படும் வலியை உணர்ந்து பரிசோதனைக்குச் செல்லும்போது கேன்சர் உறுதியாவதோடு மட்டுமல்லாமல் அது குணப்படுத்தும் நிலையைக் கடந்தும் விடுவதுண்டு.
சரி, இந்த மரபணு பிறழ்வுகள் எதனால் ஏற்படுகின்றன என்று பார்த்தால், உணவு பழக்கவழக்கங்கள், சுற்றுசூழல், வாழ்வியல் முறைகள், பரம்பரை போன்றவற்றால் ஏற்படுகிறது. சில மரபணு பிறழ்வுகள் முந்தைய தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவை பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவை. இதை எவ்வாறு தடுப்பது? உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். பல வருடங்களாக இருக்கக்கூடிய வலியற்ற கட்டிகள், வீக்கங்களை முறையாகப் பரிசோதித்துக்கொள்வது, வேதிப் பொருட்கள் நிறைந்த துரித உணவுகளைத் தவிர்ப்பது, தீய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது போன்றவை புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவும்.
குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருப்பின், மற்றவர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்வது அவசியம். உடலில் நடக்கும் அத்தனை மாற்றங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அந்த மாற்றங்கள் நம்மிடம் என்ன சொல்ல வருகிறது, எதனால் ஏற்படுகிறது என்பதைச் சற்று கவனித்தால் பல நோய்களை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.
வலியைக் குணப்படுத்துவது பற்றி யோசிக்காமல் வலியின் காரணத்தைக் குணப்படுத்துவதுப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம். அதுதான் நிரந்தர தீர்வும்கூட.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.