“நம் பள்ளில வருடாவருடம் அரச விழாவான விடுதலை நாள் அதாவது சுதந்திர நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்னு தெரிஞ்சதுதான். அந்நாள்ல பெற்றோர், ஊர் மக்கள் என அனைவரும் பெருந்திரளா வந்து கலந்துக்கறாங்க. குழந்தைகளும் பல திறன்களில் பயிற்சி எடுத்துக்கிட்டு பிரம்மாண்டமா நிகழ்ச்சிகள்ல தன்னோட திறனை வெளிப்படுத்துவாங்க. இந்த வருடம் இதுநாள் வரை இல்லாத புதுமைகள் செய்வீங்கன்னு நம்புறேன். பேச்சுப்போட்டி, கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், கராத்தே என அனைத்து ஆசிரியர்களும் பொறுப்புகளைப் பிரிச்சிக்கிட்டு வழக்கம்போலச் சிறப்பா செய்ங்க. அதுக்குத் தேவையான பொருள்கள் என்னென்ன வேணுமோ பட்டியல் கொடுங்க, வாங்கிடலாம்” என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர் கூட்டத்தில் கூறினார்.

“மகிழ்ச்சி டீச்சர். போன நிகழ்ச்சியில ஒயிலாட்டம் சிறப்பா ஆடினாங்க. பல பேர் நம் குழந்தைகளைப் பாராட்டினாங்க. இந்த முறை நம் ஆதிகலைகளில் ஒன்றான கரகாட்டம் ஆடலாம்னு திட்டமிட்டிருக்கோம் டீச்சர். அதுக்குப் பொருள்கள் வாங்கணும்” என்றார் மலர்.

“மகிழ்ச்சி டீச்சர். கரகம் சற்றுச் சிரமமான கலைதான். கவனம் குவிச்சு ஆட வேண்டியது முக்கியம். நம்ம குழந்தைகள் பண்ணிடுவாங்கனு நம்பிக்கை இருக்கு. தேவையான பொருள்கள் பட்டியல் கொடுங்க” என்றார் தலைமை ஆசிரியர்.

“சிலம்பத்துல நிறைய வெரைட்டு நம்ம குழந்தைகள் பண்றாங்க. இந்த முறை இரண்டு கப்களிலும் தேநீரைச் சிந்தாம சுத்தறதைப் பண்ணலாம்ன்னு இருக்கோம் டீச்சர்” என்றார் கலை ஆசிரியர் இளங்கோ.

இப்படியாக ஒவ்வோர் ஆசிரியரும் பொறுப்புகளைப் பிரித்துக்கொண்டு இருந்தனர். “இந்த முறை குழந்தைகளிடம் தொகுத்தல், நிகழ்வை ஒருங்கிணைத்தல் பொறுப்பை வழங்கி குழந்தைகளைத் தயார்ப்படுத்தலாம் என நினைக்கிறேன் டீச்சர் “ என்றார் சுதா.

“மிஸ் நிகழ்ச்சிக்கு நிறைய பேர் வருவாங்க, குறிப்பாகப் பெற்றோர். சிறப்பாகச் செய்யலன்னா மக்கள்கிட்ட குறிப்பாகப் பெற்றோர் கிட்ட கெட்டப் பெயர் வந்திடும் மிஸ். இந்த மாதிரி புது முயற்சியெல்லாம் எதுக்கு மிஸ்? அவங்க சின்னப்பசங்க. அவங்களுக்கு என்ன தெரியும்? நாம ஆசிரியர்களே பண்ணிடலாம் மிஸ்” என்றார் ராமு ஆசிரியர்.

“ஆமா மிஸ். சின்னப் பசங்க அவங்களுக்கு எதும் தெரியாது. விளையாட்டுப் போக்குல எதையாவது செஞ்சு சொதப்பிடுவாங்க. நீங்க வேற அவங்ககிட்ட பொறுப்பைக் கொடுக்கறேன்னு சொல்றீங்க” என்றார் கலியமூர்த்தி ஆசிரியர்.

இப்படியாக விவாதங்கள் ஆசிரியர்கள் கூட்டத்தில் அனல் பறந்தது.

“சார், குழந்தை பொறந்ததுல இருந்து மூளை அவங்களோட 25 வயது வரை வளர்ந்தே முழுமை அடையுது. அதுவரை வளர்ந்துகிட்டேதான் இருக்குது. இந்த வளரிளம் பருவத்துல மூளை முழுமையா வளர்ச்சி அடையாமத்தான் இருக்குது. இந்த வளரிளம் பருவத்துல ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்துட்டு, முழுமையடையாம இருக்க நிலைல அவங்க தனித்துச் சில பொறுப்புகளை எடுத்துச் செய்வதன்மூலம் இன்னும் அதிகச் சிந்தனைத்திறனோட வளரும். அப்போ அவர்களில் பொறுப்பை வழங்கல், தனித்துச் செயல்படுத்துதல் போன்ற வாழ்வியல் திறன்கள் வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துதல் நம் கடமைதானே?. அதைத் தினசரி வகுப்புகளிலும் நாம் செய்யணும். இதுபோன்ற நிகழ்வுகளில் அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்குது. அது மட்டுமில்லாது கலைகளில் குழந்தைகள் அதீத ஆர்வத்துடன் பங்கெடுப்பாங்க. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள்ல பொறுப்பை எடுத்துச் செய்யும்போது அவங்களுக்கான பொறுப்பினை உணர்ந்து செயல்படுவது பற்றிப் புரிதல் வரும். இது போன்ற அனுபவங்கள், வளர்ப்புகள்தாம் அவங்க மூளை வளர்ச்சில முக்கிய பங்கு வகிக்குதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. அவங்க பொறுப்புகளைப் புரிந்து வளர்வதற்கான வாய்ப்புகள், அனுபவங்கள் பெற, நாம வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும். இதைப் பெற்றோரும் குடும்பங்களில் செய்யணும். ஆனா, நம்ம குழந்தைகள் விளிம்புநிலை குழந்தைகளாகப் பெரும்பாலும் இருப்பதால் அவங்க பெற்றோர்தன் பெரும்பாலான நேரத்தைப் பொருளீட்டல்லயே செலவிட வேண்டியிருக்கு. நாம் அவங்களுக்கு அதிக கவனம் எடுத்து செய்யணும் இல்லையா?” என்றார் சுதா.

“மிஸ், நீங்க சொல்றது ஓரளவு ஏத்துக்க முடியும்னாலும், அவங்க தப்புத்தப்பா பண்ணினா நமக்குத்தான அசிங்கம்? சரியா செய்வாங்களா? ” என்றார் கலியமூர்த்தி.

“சார், நாம் செய்யும்போது தவறு நடக்கத்தான் செய்யுது. நாமளே முதல் முறை செய்யும்போது தவறுகள் இல்லாம செஞ்சிடுவோமா? அவர்களிடம் பொறுப்புகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வைத் தொகுக்கும் பொறுப்புகளைக் கொடுப்போம். என்னென்ன தவறு ஏற்பட வாய்ப்பிருக்குன்னு முன்கூட்டியே சொல்லி அந்தப் பிழை ஏற்படாம இருக்க உரையாடுவோம். நிகழ்வுக்குப் பிறகு பிழை ஏற்படின் அது குறித்து உரையாடுவோம். அடுத்த நிகழ்வுல எப்படிச் சரிசெய்யறதுன்னு பேசுவோம். இந்தப் பருவம் தனித்து அடையாளம் தேடக்கூடிய பருவம். குழந்தைகளிலிருந்தே சின்னச் சின்ன விஷயங்களைச் செய்யப் பழகி இருக்கணும். இந்தப் பருவத்துல மிக இன்றியமையாம வாய்ப்புகளை ஏற்படுத்தணும்.”

“இதுல நான் ஒன்னு யோசிக்கறேன். இதைச் செஞ்சு பார்ப்போம். கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்னு நினைக்கறேன். இதுல நல்லா படிக்கறவங்கதான் பொறுப்பா செய்வாங்கன்னு இல்லாம, பொறுப்பை வளர்க்கணும்னு நினைக்கற குழந்தைகள், விரும்பிப் பொறுப்பை ஏற்றுச் செய்யணும்னு நினைக்கற குழந்தைகள் என அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படணும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும், அதன் அடிப்படைல நாம் வாய்ப்புகள் வழங்கலாம்னு யோசிக்கறேன்” என்றார் கலியமூர்த்தி.

“மகிழ்ச்சி சார். நீங்க சொன்னது எனக்கும் உதவியா இருக்கும். நீங்க சொன்ன யோசனையையே நடைமுறைப்படுத்திடுலாம்னு நினைக்கிறேன்” என்றார் சுதா.

“டீச்சர் சோதனை முயற்சியா நிகழ்வை ஒருங்கிணைக்கறது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறதைக் குட்டிகள் கிட்ட கொடுக்கலாம், ஒட்டு மொத்த நிகழ்ச்சி தொகுத்தல் ஆசிரியர்களே பண்ணிடலாம் “ என்றார் கலியமூர்த்தி.

“சரிங்க சார். மற்ற ஆசிரியர்கள் என்ன சொல்றீங்க? அதற்காகப் பொறுப்பு கலியமூர்த்தி சாரும் சுதா டீச்சரும் எடுத்துக்கிட்டும். வேற யாராவது எடுத்துச் செய்யறதுனாலும் சொல்லுங்க” என்றார் தலைமை ஆசிரியர்.

“எடுத்துச் செய்யட்டும் டீச்சர். நாங்களும் உதவி செய்யறோம்” என மற்ற ஆசிரியர்களும் கூற, பள்ளி வளர்ச்சி, குழந்தைகள் முன்னேற்றம் போன்ற வேறு பல விஷயங்களை உரையாடி கூட்டத்தை முடித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பொறுப்பு ஆசிரியர்களான சுதாவும் கலியமூர்த்தியும் குழந்தைகளை ஒரு வகுப்பில் நிகழ்ச்சி சார்ந்து சில விஷயங்கள் கலந்து பேச ஒருங்கே அமர வைத்திருந்தனர். ஆசிரியர் கூட்டத்தில் பேசிய விஷயங்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

“நிகழ்ச்சிக்கான பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சியில இருக்கற குழந்தைகள் மட்டும் இருங்க. மத்தவங்க அவங்கவங்க வகுப்புல இருங்க. பயிற்சி நடக்க ஒத்துழைப்பு கொடுத்திங்கன்னாதான் நம்மால நிகழ்சியைச் சிறப்பா செய்ய முடியும். நீங்க என்ன சொல்றீங்க?” என்று சுதா முடிக்கும் முன்னே…

“நிச்சயம். ஒத்துழைப்போம் மிஸ்.”

“மகிழ்ச்சி. கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும், தொகுக்கும் பொறுப்பு, சிலம்பம் ஒருங்கிணைத்தல், தொகுத்தல் இதுல யார்யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ அவங்க பெயர் கலியமூர்த்தி சார்கிட்ட கொடுங்க. சிலம்பம் ஒருங்கிணைத்தல் பொறுப்பைச் சந்திரவதனா பண்ணலாம்னு நான் பரிந்துரைக்கிறேன். எல்லோரும் என்ன சொல்றீங்க?” என்றார் சுதா.

“சரிங்க மிஸ், சந்திரவதனா பண்ணட்டும். அவதான் சிலம்பத்துல பெரிய ஆர்வத்தோட இருக்கா. அவ செய்தா சரியா இருக்கு,” என ஆகாஷ் சொல்ல, ஏனைய குழந்தைகளும் அதை ஆமோதித்தனர்.

ஒவ்வொரு பொறுப்பை எப்படிச் செய்ய வேண்டும், என்ன சிக்கல் வரும்? அதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று பொறுப்பேற்ற குழந்தைகளுக்களுடன் பொறுப்பாசிரியர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? நான் ஏதோ எளிமையாக நீங்க செஞ்சிடறீங்கனு இவ்ளோ நாளா நினைச்சிட்டு இருந்தேன். இப்போதான் நாங்களே செய்யணும்னு வரும்போது எங்களுக்கும் தெரியுது” என்றாள் லீஷ்மா.

பொதுவாக எதையும் ரொம்ப நேர்த்தியாகச் செய்ய நினைக்கும் சுதா, குழந்தைகளை எப்படித் தயார்ப்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், முதல்முறை குழந்தைகள் செய்யும்போது இருக்கும் தயக்கம் சுதாவுக்குப் புரியாமல் இல்லை. நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று செயல்படுத்தும் விதம் பொறுப்பாசிரியர்களுக்குச் சவாலான பணிதான். ஆனா, சுகமான பணியும் கூட. பொறுத்திருந்து பார்ப்போம்!

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.