பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ பதின்ம வயதில் அவர்களை நாம் அக்கறை கலந்து அன்புடன், தோழமையாகவும் கைப்பிடித்து கூட்டிச் சென்றுவிட்டால், அதன் பின் அவர்களைப் பற்றி நாம் நம் வாழ்க்கை முழுவதுமே கவலைப்பட வேண்டாம். அன்பால் நம்மைப் பின்தொடர்ந்து வரும் அவர்கள், ஒரு கட்டத்தில் நம் கையைப் பிடித்து அவர்கள் உலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

டீன் ஏஜ் என அழைக்கப்படும் பதின்ம வயது என்பது குழந்தைகளின் 13 வயது தொடங்கி 19 வயது வரை உள்ள காலகட்டம். ஹார்மோன்களின் சேட்டை ஆரம்பித்து உச்சம் தொடும் அந்தக் காலகட்டத்தில்தான் கல்வியிலும் அதீத கவனம் குவிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிடும்.

ஆண் குழந்தைகளுக்கு டெஸ்ட்டோஸ்டீரானும் (Testosterone) பெண் குழந்தைகளுக்கு ஈஸ்டிரோஜன் (Estrogen), புரொஜஸ்டீரான் (Progesterone) ஹார்மோர்ன்களும் சுரக்க ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டத்தில் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அப்போது குழந்தைகளுக்குத் தனது உடல் குறித்தும் குறிப்பாக தங்களது அந்தரங்க உறுப்புகள் குறித்த சந்தேகங்களும் முகத்தில் வாரி கொட்டும் பருக்களால் தங்கள் அழகு போய்விடுவதான கவலையும் பிற கவலைகளைவிட அதிகம் ஆக்கிரமிக்கும். எதிர்பாலினத்தவர் குறித்துத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பும் ஆர்வமும் அவர்களையும் அறியாமல் அவர்களை ஆட்டுவிக்கும். நட்பா, ஈர்ப்பா, காதலா என வகைப்படுத்த முடியாமல் திணறுவார்கள்.

பாலியல் கல்வி என்பது பெருங்குற்றமாகக் கருதப்படும் நமது சமூகத்தில் பதின்பருவக் குழந்தைகளுக்கு இதனைப் பற்றித் தெளிவாக யாரும் எடுத்துக் கூறுவதில்லை. எனவே இவர்கள் தங்களுடன் பயணிக்கும் சக தோழர்களிடம்தாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள முனைவார்கள். அதனால் பலரும் பெற்றோர்களைவிட, தோழமைகள்தாம் உலகம் என்று வளைய வருவர். அவர்கள் மூலம் தவறான வழிகாட்டுதல் கிடைத்தால், வாழ்க்கையே திசை மாறிப்போய்விடும் வாய்ப்புகள் அதிகம். எனவே நம் குழந்தைகளின் தோழமைகளுடனும் நாம் நட்பு பாராட்ட வேண்டியது அவசியம்.

தற்போது பதின்பருவக் குழந்தைகள் சோஷியல் மீடியாவிற்குள்ளும் வலம் வருவதால், அவர்களின் நட்புகள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஹார்மோர்ன்கள் தாறுமாறாகச் சுழன்று ஒரே நேரத்தில் தங்களை குழந்தைகளாகவும் பெரியவர்களாகவும் இருமுனைகளுக்குமிடையில் நிலைகொள்ள முடியாமல் தடுமாறச் செய்யும் அவர்களை கரிசனத்துடனும் அதேநேரம் பொறுமையுடனும் அணுக வேண்டும். ஏனென்றால் ஆண் குழந்தை தன்னை ஆணாகவும் பெண் குழந்தை தன்னைப் பெண்ணாகவும் வெளி உலகுக்கு நிறுவ பயங்கர பிரயத்தனம் செய்வார்கள்.

இதில் ஆண் குழந்தைகள் ஆண் என்பதற்கான அளவீடாகவும், ஆண்மை என்பதற்கான குறியீடாகவும் இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கும் அபத்தமான காரியங்களைச் செயல்படுத்த முனைவார்கள்.

புகை பிடிப்பது, தண்ணியடிப்பது, பெண்களை டீஸ் செய்வது அனைத்தையும் ஹீரோயிஸமாகக் காட்டும் சினிமாக்கள் சுண்டி இழுக்க இவை அனைத்தும் தவறு என்று கற்பிக்கப்படும் ஏட்டுக் கல்விக்கும் இடையில் பிள்ளைகள் விழி பிதுங்குவார்கள். பெண் குழந்தைகளும் சக ஆண்களை டீஸ் செய்வது, காதல் வயப்படுவது என அந்த வயதிற்கு உரிய தத்துபித்துகளில் சிக்கி படிப்பைக் கோட்டை விடுவதும் நடக்கும்.

கையடக்க போனில் இன்று அனைத்துமே குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. இதைத் தவிர்க்கவே முடியாது. இதற்காகப் பிள்ளைகளின் கண்களைக்கட்டி மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கவும் முடியாது, அது சாத்தியமுமில்லை.

என்னதான் செய்வது?

எக்கசக்க ஆற்றலுடன் இருக்கும் நம் குழந்தைகளை படிப்பு, படிப்பு என ஒரே பக்கமாக அழுத்தாமல் அவர்களுக்கு ஆர்வமிருக்கும் ஒரு விளையாட்டில் சேர்க்கலாம். மூளைக்கு மட்டும் வேலை கொடுத்து உடலுக்கு அதிகம் அசைவு கொடுக்காமல் இருப்பதால், சிறுவயதிலேயே ஒபிஸிட்டியில் ஆரம்பித்து பல்வேறு பிரச்னைகளை இந்த வளர் இளம் பருவத்தினர் சந்திக்கின்றனர். அதனைத் தவிர்க்கவும் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கவும் பிஸிக்கல் ஆக்டிவிட்டிஸ் இருக்கும் கால்பந்து, ஷட்டில், டென்னிஸ், வாலிபால், பேஸ்கட் பால், நீச்சல், கிரிக்கெட் போல ஏதோ ஒன்றை தினசரி ஒரு மணி நேரம் விளையாட அனுமதிக்கலாம்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நம் பிள்ளை சச்சினைப் போல, லியாண்டர் போல பெரிய ஆளாக வேண்டும் என்று படுத்தாமல் விளையாட்டை விளையாட்டு போல அணுகச் செய்தல். விளையாட்டில் அவர்கள் தீவிரமாக இறங்கும்போது, மனதில் அநாவசியமான எண்ணங்கள் தலையெடுக்காது. Their energy converted into positive things.

சில பிள்ளைகள் பிஸிக்கல் ஆக்டிவிட்டிஸில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், அவர்களை மடைமாற்ற வாசிக்கும் பழக்கத்தை (பாடப் புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்கள்) மிகப் பொறுமையாக, அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் உண்டாக்கும் அளவுக்கு உண்டாக்க வேண்டியது பெற்றோரின் கடமை. முன்பெல்லாம் லைப்ரரி வகுப்பு என்ற ஒன்று அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கும். ஆனால், இப்போது அப்படி ஒரு வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

பிள்ளைகளை வாசிப்பை நோக்கித் திருப்புவது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. எப்போதும் அலறிக்கொண்டு இருக்கும் டிவியை நாம் கொஞ்சம் தியாகம் செய்துவிட்டு, அவர்களுடன் சேர்ந்து வாசிக்க வேண்டும். சுவையான விஷயங்களை வாசித்துக் காட்டி, பின் அவர்களை வாசித்துக் காட்டச் சொல்லி என்று மெல்ல மெல்ல அவர்களை வாசிப்புக்குப் பழக்கலாம். என் பிள்ளை டீன் ஏஜ் வந்தபோது இப்படிதான் வாசிப்பை அறிமுகப்படுத்தினேன். (அப்போது இணையம், மொபைல் இந்த அளவு வாழ்வில் ஊடுருவவில்லை).

நம் பிள்ளைகளை பரிபூரணமாக நம்ப வேண்டும். அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நாம் பக்கபலமாக இருப்போம் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். எது என்றாலும் உங்களிடம் மனம்விட்டுப் பேசலாம் என்ற நிலையை உருவாக்கினாலே பிள்ளைகள் பாதை மாறி போக மாட்டார்கள் இதுவும் என் அனுபவம்தான்.

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.

என்னதான் படிப்பு விளையாட்டு என நாம் அவர்களை மடைமாற்றினாலும், எதிர்பாலின ஈர்ப்பும் காதலும் நாம் தடுக்க முடியாது. சில குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்/மாணவி மீது காதல் வயப்படக்கூடும். உங்கள் குழந்தை காதலிப்பதாகத் தெரியவந்தால் முதலில் பதற்றப்படுவதை நிறுத்துங்கள். யாரைக் காதலிப்பதாகக் கூறுகிறார்களோ அந்தப் பையனையும் / பெண்ணையும் வீட்டுக்கு அழைத்துவந்து பொறுமையாகப் பேசுங்கள்.

நீங்கள் இருவரும் காதலிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இந்த வயதில் காதலிப்பது கொலை குற்றமும் இல்லை. ஆனால், காதலில் கவனம் சென்றால் படிப்பு சிதறும். காதலிப்பதை சாகும் வரை செய்யலாம். ஆனால், படிப்பதை இந்த வயதில்தான் செய்ய முடியும். படித்து, வேலை தொடர்பாக உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, பிறர் உதவியின்றி உங்களை நீங்களே கவனித்துகொள்ளும் அளவு சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், காதலில் நீங்கள் இதே உறுதியுடன் இருந்தால் நானே முன்னின்று உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று கூறுங்கள்.

அது காதலாக இல்லாமல் வெறும் ஈர்ப்பாக இருக்கும் பட்சத்தில் இருவரும் படித்து முடிக்கும் முன்பே அதை உணர்ந்து நகரத் தொடங்கி இருப்பார்கள். காதலாக இருக்கும் பட்சத்தில் தங்கள் காதல் நிறைவேற வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பின் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னும் அவர்கள் முடிவில் அவர்கள் தீவிரமாக இருந்தால் சந்தோஷம்தானே! தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் முதல் உரிமை சம்மந்தப்பட்டவர்களுக்குத்தானே! பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரை வழிகாட்டி மட்டுமே என்பதை உணரத் தலைப்படுங்கள்.

துணை தேடல் குறித்த ஒரு சுவராசியமான தகவல்,

முப்பது வயது ஆன பிள்ளைகளுக்கு வரன் தேடி பெற்றோர் அலைந்துகொண்டிருக்க, கம்போடியாவில் பெண் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கு வரும் பருவத்தில், அப்பெண் குழந்தையின் தந்தையே அவளுக்கு என்று தனியாக ஒரு குடிசை கட்டித் தந்துவிடுவாராம். தனக்குப் பிடித்த ஆணைக் கண்டடையும் வரை அந்தப் பெண் அந்தக் குடிசையில் தங்கிக்கொள்ளலாம். அவளுக்குப் பிடித்த ஆணைக் கண்டடைந்த பின் அவள் தனது பெற்றோரிடம் கூறினால் அவனையே திருமணம் செய்து வைத்துவிடுவார்களாம். தொன்றுதொட்டு இந்தப் பழக்கம் இன்று வரையும் தொடர்கிறது.

இன்றைய சூழலில் நம் சமூக அமைப்பில் அதெல்லாம் சாத்தியப்படாது எனும்போதும், பதின் பருவத்தில் ஹார்மோர்ன்கள் ஆட்டத்தினால் எதிர்பாலின ஈர்ப்பு, காதல் என்று தடுமாறும் குழந்தைகளைத் தாங்கிப் பிடித்து அவர்களுக்கு நல்லதொரு வழியைக் காட்ட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு தானே!

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.