புத்தக வாசிப்பு ஒருவருடைய நிலையை உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஜனவரி மாதம் பொங்கல் என்பது போல சென்னை புத்தகத் திருவிழாவும் மக்கள் மனத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அறிவுத்திருவிழா இந்தக் கண்காட்சி. புத்தகங்களை வாங்குவது, எழுத்தாளர்களைச் சந்திப்பது, சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களானவர்களைச் சந்திப்பது எனத் திட்டம் தீட்டிக் காத்திருந்து கொண்டாடுகிறார்கள் மக்கள். இந்த மகத்தான வரவேற்பைக் கண்டு அரசு எல்லா மாநிலங்களிலும் இத்தகைய புத்தகக் காட்சியை நடத்துகிறது. தூரம் காரணமாக வரமுடியாதவர்கள் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
புத்தகங்களை அச்சுப் பிரதியாக வாங்கி, புத்தக வாசனையுடன் படிப்பது என்பது ஒரு சுகம். அச்சுப் புத்தகங்களில் சில சங்கடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. புத்தகத்தை வாங்குவதும் அதைப் படிப்பதும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்கள். பலர் ஆர்வத்திலோ சமூக ஊடகத்தில் பெருமையாகக் காட்டவோ வாங்கிவிட்டு சும்மாவே வைத்திருப்பார்கள். பராமரிப்பு இல்லை என்றால் பாழாகிவிடும். அதிகம் படிப்பவர்களாக இருந்தால் எண்ணிக்கைக்கூடக் கூட அவற்றைச் சேகரித்து வைக்கும் இடம் அதிகம் தேவப்படுகிறது. இதனால்தான் மின்புத்தகங்கள் காலத்தின் தேவையாகிவிட்டது.
மின்புத்தகங்கள் என்றால் டெலிகிராமில் சுற்றும் சட்டவிரோத புத்தக பிடிஎஃப் கிடையாது. இபப் எனப்படும் மின்புத்தகங்கள் பிடிஎஃப் மாதிரி இல்லாமல் எழுத்துருவின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். படிக்கும் சாதனத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு மாறி படிக்க வசதியாக இருக்கும். படிக்கும் புத்தகத்தில் இருக்கும் வரிகளை அடிக்காேடிட முடியும். இப்படி இன்னும் பல வசதிகள் இருக்கிறது.
பல மின் புத்தகப் படிப்பான்கள் சந்தையில் உள்ளன. அமேசான் கிண்டில், கோபாே எலிப்ஸா, பார்ன்ஸ் அண்ட் நோபல் நூக் ஆகியவை பிரபலமானவை. இந்தப் படிப்பான்களை உபயோகிப்பதால் காகிதப் பயன்பாடு குறைந்து சுற்றுச் சூழலுக்கு நன்மை விளைகிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கைப்பைக்குள் சுருங்கிவிடுகின்றன. இடம் மிச்சம். ஒரு முறை அதிக செலவு செய்து படிப்பானை வாங்கினால் போதும். காகிதப் புத்தகங்களைவிட மின் புத்தகங்கள் விலை குறைவு என்பதால் நீங்கள் ஐம்பது புத்தகங்கள் வாங்கினால் மிச்சமாகும் பணம், நீங்கள் படிப்பான் வாங்கிய செலவை சமன் செய்துவிடும்.
எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம். நினைத்ததும் புத்தகத்தை வாங்குவதும் வாசிப்பதும் சாத்தியம். கடைக்குச் செல்ல வேண்டும், அல்லது புத்தகம் தபால் மூலம் நம்மை வந்து சேரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதில்லை. அச்சில் இல்லாத பழைய புத்தகங்கள்கூடத் தற்போது மின்புத்தகங்களாகக் கிடைக்கின்றன. புத்தகம் படிக்கும் போதே குறிப்புகள் எடுத்துச் சேமிக்க முடியும். பொருளோ விளக்கமோ தேவைப்பட்டால் இணைய உதவியுடன் உடனே அறிந்துகொள்ள முடியும்.
இந்தப் படிப்பான்கள் மின்னணுக் கருவியாக இருந்தாலும் திறன்பேசி மாதிரி ஒளிஉமிழ்ந்து கண்களை நோகடிக்காது. காகிதம், சூரிய அல்லது மின்விளக்கு ஒளியைப் பிரதிபலித்து எழுத்துகளைப் படிக்கும்படி காட்டுவது போலத்தான் இந்தப் படிப்பான்களும் காட்டும். மிகக் குறைந்த ஒளியில், எழுத்து கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மட்டும் எல்.இ.டி. விளக்குகளை ஒளிர வைத்தால் போதும். புத்தகவடிவைப் போலவும் எடை மிகக் குறைவாகவும் இருப்பது மற்றொரு சிறப்பு.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் பயன்பாட்டில் இருப்பது அமேசானின் கிண்டில் படிப்பான். திரைப்படம் பார்க்க, பொருட்கள் வாங்க என ஏற்கெனவே அமேசான் ப்ரைம் கணக்கை வைத்திருந்தால் மாதம் சில புத்தகங்கள் இலவசமாகவே படிக்கக் கிடைக்கின்றன. பன்னாட்டு நிறுவனமென்பதால் போட்டி, விளம்பரம் எனப் பல வணிக நோக்கங்களுக்காக அவ்வப்போது தள்ளுபடி விற்பனையும் நடக்கும். மிகக் குறைந்த விலையில் சிறந்த புத்தகங்களை வாங்கலாம்.
ஆங்கிலம் மட்டுமின்றி எல்லா மொழிப் புத்தகங்களும் உண்டு. காகிதப் புத்தகங்களைக் கடன் கொடுப்பது போல இந்த கிண்டில் புத்தகங்கள் சிலதையும் ஒருவர் வாங்கிவிட்டு, மற்றவர் படிக்க சில காலம் கடனாகக் கொடுக்கலாம். ஒரு கணக்கில் வாங்கிய புத்தகத்தை குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவரவர் சாதனத்தில் அதே கணக்கில் உள்நுழைந்தும் படிக்கலாம். ஆளுக்கு ஒரு மின்புத்தகம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சம் ஆறு பேர், வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
அமேசானில் வாங்காத புத்தகங்களையும் கிண்டிலில் படிக்க முடியும். வை.மு.கோதைநாயகி, ராஜம் கிருஷ்ணன், தொ.பரமசிவம் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பினருக்கும் இவர்களின் எழுத்து போய்ச் சேரவேண்டும் என்ற நல்ல நோக்கில் அரசு பணம் கொடுத்து நூல்களின் உரிமையை வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் இணையத்தில் பி.டி.எஃப், வேர்ட், இபப் எனப் பல வகையில் கிடைக்கின்றன. அச்சில் இல்லாத பழந்தமிழ் நூல்களும் ஸ்கேன் செய்யப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ புத்தகவடிவில் இணையத்தில் உலாவுகின்றன. உலக நாடுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிற மொழிப் புத்தகங்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. https://www.marxists.org தளத்தில் மார்க்சிய புத்தகங்கள் அனைத்தும் மின்புத்தகமாகக் கிடைக்கின்றன.
சட்டப்படி கிடைக்கும் இத்தகைய புத்தகங்களை நீங்கள் உங்களுடைய கிண்டிலில் படிக்க முடியும். முதலில் உங்களுடைய கிண்டில் இமெயில் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். கிண்டிலில் உங்கள் கணக்கின் செட்டிங்ஸ் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே கிண்டில் இமெயிலுக்கு அனுப்ப (send to Kindle email address) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழே இருக்கும் இமெயிலை குறித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தரவிரக்கம் செய்த எந்தப் புத்தகக் கோப்பையும் இந்த இமெயில் முகவரிக்கு அனுப்பலாம். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் உங்கள் கிண்டில் நூலகத்தில் அந்தப் புத்தகம் வந்துவிடும்.
படிப்பானுக்கு எல்லாம் பெரிய தொகையைச் செலவு செய்ய முடியாது என்பவர்கள் தங்கள் திறன் பேசியிலேயே செயலியாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அடிக்கடி திறன்பேசியில் குறுஞ்செய்தி, சமூக ஊடகச் செய்தி என வந்து கவனத்தைச் சிதறடிப்பதையும் அதிக ஒளியை நெடுநேரம் பார்க்க வேண்டி இருப்பதையும் பொறுத்துக்கொள்ள வேண்டிவரும். திறன்பேசிச் செயலி என்றால் பிரதிலிபி, பின்ஞ் போன்ற மேலும் பல செயலிகளும் இருக்கின்றன. இவர்கள் புதிதாக எழுத வருபவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். கல்கி முதல் சு.தமிழ்செல்வி வரை ஏற்கெனவே இருக்கும் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களும் இங்கே இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. மேலதிக வசதிகளுக்கு பணம் கட்டி உறுப்பினராக வேண்டும்.
அடுத்த தலைமுறையினர் அதிகம் வாசிப்பது மின்புத்தகங்கள்தாம். அதற்கடுத்து ஆடியோ புத்தகங்கள் உலகமும் விரிந்துகொண்டே வருகின்றன. ஆடிபிள், ஸ்டோரிடெல் போன்ற பல செயலிகள் இதில் கோலோச்சுகின்றன. இந்திய மொழிகளில் புத்தகங்களைக் கேட்க பெரும்பாலானவர்களின் தேர்வாக ஸ்டோரிடெல் இருக்கிறது. ஆடிபிள் செயலியில் அதிகம் இருப்பது ஆங்கிலப் புத்தகங்கள்தாம்.
வடிவம் எதுவாக இருந்தாலும் வாசிப்பு அவசியம். தினமும் சிறிது நேரமாவது வாசிப்புக்கு எனச் செலவிட்டு வாழ்வை வளமாக்குவோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.