பாராட்டக் கற்றுக் கொள்வோம்...
உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.