.

நண்பர்கள் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடிவதில்லை. நம் பிரச்னைகளை யாரிடம் பகிர்வோம்?அதைப் பொறுமையாகக் கேட்டுத் தீர்வு தரவோ, இல்லை அதை வெளியில் கொட்டித்தீர்க்கவோ வடிகால் இல்லாமல் என்ன செய்வோம்? நம் ரகசியங்களை யார் தங்களுடையதாகக் கருதி பாதுகாப்பார்கள்? மனதார நம் மகிழ்ச்சியை நம்மைவிட அதிகம் கொண்டாடும் ஒரு சில உறவுகளில் முதல் வரிசையில் நிற்கும் அவர்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வோம்? நாம் செய்யும் நல்லதைப் பாராட்டவும் தவறுகளை உரிமையுடன் கண்டித்து நம்மை நல்வழிப்படுத்தும் நண்பர்கள் கிடைப்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனை இன்றியமையாத ஒன்று! அத்தகைய நல்ல நண்பர்கள் அவளுக்கும் பலர் உண்டு.

சிறுவயதிலிருந்தே தன் பக்கத்து வீட்டில் தொடங்கி, பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், தங்கும் விடுதி என எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் அவளுக்குத் தோள் கொடுக்கும், துவழும் நேரங்களில் தட்டிக் கொடுக்கும் நண்பர்களை வாழ்க்கை அவளுக்கு அளித்திருக்கிறது. இந்த எல்லாக் காலகட்டங்களிலும் அவளுக்கு உறுதுணையாக இருந்த இன்று வரை அவள் இன்பம் துன்பம் எதிலும் அவள் முதலில் தேடி ஓடும் ஒரு தோழி என்கிற பெரிய பரிசையும் அவள் பெற்றிருக்கிறாள்.

விளையாட்டுத் தோழியிலிருந்து இன்று அவள் வாழ்க்கை குறித்து மனம்விட்டு பேசமுடியும் உடன்பிறவா மூத்த சகோதரி. அவள் கவிதைக்கு கிடைத்த முதல் ரசிகர்கள், விமர்சகர்கள் அவள் பள்ளித் தோழிகள். அவர்கள் இல்லாமல் அவளின் அந்தத் திறமை மெருகேறியோ, அவள்

நாட்குறிப்பைத் தாண்டி வெளியுலகையோ கண்டிருக்காது. வெளியுலகை அவளுடன் சேர்ந்து ஆராய்ந்து அவளுடன் காலடி எடுத்து வைத்த வைத்த சக வழிப்போக்கர்கள் அவர்கள் அல்லவா?

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தொடர்பில் இல்லாமல் போன பலரும் எல்லாம் கடந்தும் நட்பைக் தொடர்ந்து கொண்டிருக்கும் சிலரும் என்றும் அவள் மனதளவில் நண்பர்களே. அவளுக்குப் பிடிக்கும் என்று பாடல்களையும் அவள் வாசிப்பு ஆர்வம் அறிந்து அது சார்ந்த எதையும் அவளிடம் பகிர்ந்துகொள்ளும் தோழிகளின் அன்பு சித்திரையில் மண் நனைக்கும் மழை.

கல்லூரி நாட்களில் விடுதி சாப்பாட்டில் நாக்கு செத்த அவளுக்கு வீட்டு உணவு என்கிற அமிர்தத்தைக் கொண்டு வந்து பகிர்ந்துகொள்ளும் தோழிகள். புத்தகப் புழுவாக படிப்பைத் தவிர வேறு உலகம் இல்லை என்று இருந்த அவளை அதையும் தாண்டி வாழ்க்கையில் வாழ, தெரிந்து கொள்ள பல இருக்கின்றன என்று எதார்த்த வாழ்வை அவளுக்கு அறிமுகம் செய்த அறைத் தோழிகள்.

படிக்க உதவும், அறிவுரை கூறும், அவள் அதிகப் பொழுதுகள் கழித்த கல்லூரி அக்காக்கள். அவளைப் போல் வெளியுலகைக் காண விரும்பும், சக உணவு விரும்பியும் குறைந்த காலத்தில் அதிகமான நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக்கிடைத்த , வாழ்க்கை அளித்த எல்லா சவால்களையும் தன் நகைச்சுவை உணர்வால் கடந்து, அவள் கவலையையும் மறக்க வைக்கும் விடுதி தோழி.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி, பின்பு நேரில் சந்தித்த, அவள் வாசிப்பு உலகில் சஞ்சரிக்கும் சக புத்தகப்புழுவான தோழர்கள், தோழிகள். வாசிப்பால் பிணைக்கப்பட்ட உலகெங்கிலிருந்தும் கிடைத்த நண்பர்கள்.

படிப்பு, வேலை என்று பல காலமாக மறந்துவிட்ட அவள் கவிதைகளை மீண்டும் எழுத, தமிழ் புத்தக விமர்சனங்கள் எழுத ஊக்கப்படுத்திய கவிஞனான தோழன்.

நடு இரவிலும் அவள் கவலைகளைக் கேட்டு, ஆறுதல் அளிக்கும் தோழிகள். இன்று பாஷை தெரியாத ஊரில் அவளைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அவள் வாழ்க்கையை எளிதாக்கும் தோழிகள்.

இவர்கள் அவள் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்றியமையாதவர்கள். ஆனால், இந்த எல்லாக் காலகட்டத்திலும் அவள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் தூக்கிச் சுமக்கும் அவளைவிட அவளை நன்கறிந்த, அவளை அவளுக்காக நேசிக்கும், அவள் ஏற்ற இறக்கங்களை அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பகிர்ந்து, அவர்களை மீண்டும் தன்னிலையடையச் செய்யும் அவள் சாயும் தோள்கள் அவளுக்கு தோழி என்கிற பெயரில் வாழ்க்கை அளித்த தலைசிறந்த ஆசிர்வாதம்.

நண்பர்கள் நாம் விரும்பி நமக்காகத் தேர்ந்தெடுத்த சொந்தங்கள், அன்பால் சொந்தமானவர்கள். அந்த நாலு பேரின் இந்த நாலு பேர் நம் வாழ்க்கையைத் தன் வண்ணங்களால் அழகாக்குபவர்கள். பயணத்தை எளிதாக்குபவர்கள். அவளை அவள் அறிந்துகொள்ளும் கதையைப் பகிர்வார்கள் காத்திருங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

rbt

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.