பேரிரைச்சலுடன் நுரைத்து எழும் பேரலை ஒன்று ஒரு சாண் வட்டத்திற்குள் புரண்டு எழுந்துகொண்டிருந்தது.
அரைத்த உளுந்தை மெல்ல மெல்ல மேலே உயர்த்திக் கொண்டிருந்தது அந்த க்ரைண்டர்.
மாவு பொங்கி வந்துகொண்டே இருந்ததைக் கண் சிமிட்டாமல் பார்த்தவாறே கொல்லை வாசற்படியோரம் நிலைக்கு முட்டுக் கொடுத்தாற்போல் தலையை அணைப்பாக வைத்திருந்தாள் சுந்தரம்.
சுந்தரேஸ்வரிக்குத் திருமணத்திற்குப் பின் பிறந்த பெயர் அது. மாதவன் அவளை சுந்தரம் என்றுதான் முதலிரவில் அணைத்திருந்தார்.
“ஏய் சுந்தரம், மாவு பறந்து செவுத்துல அடிக்குது பாரு. இப்படி உட்காரும் இடமெல்லாம் உறக்க நிலைக்குப் போய்ட்டா எல்லாம் சரியாகிடுமா? எழுந்து வேலையைப் பாரு, இல்ல நானே அள்ளிடவா?” என்று மாதவன் கைலியை மடித்துக்கட்டி நெருங்கினார்.
“வேணாம் வேணாம், நீங்க கையை வைக்காதீங்க, உங்க கைக்கு மாவு உடனே புளிச்சிடும்”.
சுந்தரத்திற்கு ஐம்பதைத் தொட்டு விட்டதற்கான அடையாளம் அரிதாகத் தென்படும். அவளின் சுறுசுறுப்புக்கு அந்தப் பக்கத்து பெண்கள் கும்பிடு போடுவார்கள். இடது கையில் வைத்திருந்த வாளியில் வலது கை வாரி அள்ளும் மாவை நிரப்பிக்கொண்டே மீண்டும் யோசனைக்குள் மூழ்கினாள்.
நெருப்பில் இருந்த பால் நல்ல பாம்பு போல் சீறி விளிம்பிற்கு ஓடி வந்தது. இம்முறை சுந்தரம் பாலை முந்திவிட்டாள். அது அடுப்பை அணைப்பதற்குள் பாலை சூட்டிலிருந்து தூக்கிவிட்டாள்.
பாலில் ஏதோ வெள்ளையான பொடியை ஒரு கரண்டி போட்டு அடித்து ஆற்றினாள். பாலை எடுத்துக்கொண்டு அடுப்படியை அடுத்த சிறிய அறைக்குள் நுழைந்தாள்.
கட்டிலுக்கும் அலமாரிக்கும் இடையேயான ஒன்றரை அடி இடுக்கில் வெறும் தரையில் கிடந்தாள் பூவழகி.
“அடியே பூவு, இந்த இடுக்குல ஏன் கெடக்குற? வெளில வாடி.”
அசைவில்லை.
“இந்தா குடி, நானே வவுத்தெறிச்சலா கெடக்கேன். என் பாவத்தை இன்னும் கொட்டிக்காத. இந்தா இந்தப் பாலைக்குடி.”
அசைவில்லை.
“என்னடி சுந்தரம் கத்திக்கிட்டு கெடக்குற” என்றபடியே அறைக்குள் மாதவனும் வந்தார்.
“இங்க பாருங்க, எங்க கெடக்குறான்னு…”
“ஏய் பூவு, வெளில வா. அங்க காத்தே வராது. இந்தா இதைக் குடி. காலைலயும் சாப்டல” என்று மாதவன் அதட்டினார்.
வாசலில் யமஹா ஒன்று வந்துநின்றது.
“இங்கேருடி, சின்னண்ணன் வந்துட்டான். அவனைப் பத்தி தெரியும்ல?” சுந்தரம் எச்சரித்தாள்.
அசைந்தாள் பூவழகி. மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். அழுதோடிய கண்ணீரின் கடைசி சொட்டு ஒன்று காது மடலினின்று சொட்டுவதற்குத் தயாராக நின்றது.
“என்னம்மா நடக்குது?” சரவணன் அந்த அறைக்குள் அவன் குரலை மட்டும் அனுப்பினான்.
“ஒன்னுமில்லடா.”
“அப்பா எங்க?”
“ஏன், இங்கதான் இருக்கேன்.”
“இங்க வாங்க, இந்த அப்ளிகேசனை நிரப்புங்க.”
“நீயே பண்ணுடா. எப்பப் பார்த்தாலும் என்கிட்டயே கொடுக்குறது. இதுக்காடா படிக்க வச்சேன்?”
“இந்த மாதிரி சாதாரண வேலையெல்லாம் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிதான் பண்ணணும். வெளில வாப்பா.”
“கிழிச்சி போட்ருவேன் பார்த்துக்க” என்று அறைக்குள் இருந்தவாறே மாதவன் கத்தினார்.
“எழுதிக் கிழி வா” என்று பரிகாசம் செய்தான் சரவணன்.
“என் உசுரை வாங்கறத்துக்குன்னே இவனைப் பெத்தியாடி?” இம்முறை சுந்தரத்திடம் விழுந்தார் மாதவன்.
“இங்க பாரு மாதவா, நான் வெளிநாடு போகப்போறேன். வந்து நிரப்பு. இதுதான் உனக்குக் கடைசி வேலை” என்றான் சரவணன்.
அறையிலிருந்து பேனாவுடன் வெளிப்பட்டார் மாதவன்.
“பாரேன். அவ்ளோ பாசம் புள்ள மேல” என்று சரவணன் அவர் காதைக் கிள்ளினான்.
“வாயை மூட்றா” என்று குறுமேசை மீது அவன் வைத்திருந்த படிவத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
புல்லட் ஒன்று பொறுமையாக வந்துநின்றது. அது நின்றது, ஆனால் அதன் சத்தம் ஒரு நிமிடம் நீடித்துதான் செயலிழந்தது.
“அம்மா… அம்மா…”
வீட்டு வாசலிலிருந்தே அம்மா என்று அழைத்தவாறேதான் நுழைவான் மூத்தவன் பிரபு.
அறைக்குள் நுழைந்தான். “அம்மா என் ப்ளூ ஜீன்சு துவைச்சிருக்கா இல்லியா?”
கையில் பால் டம்ளருடன் வெளிச்சமான அறையிலும் இருட்டாக நின்றாள் சுந்தரம்.
“என்னம்மா, அப்படியே நிக்குற?” பிரபு சுந்தரத்தைத் தொட்டான்.
“இவ ஒன்னுமே சாப்டலடா. இந்தப் பாலையாச்சும் குடின்னு கெஞ்சுறேன் காதே கொடுக்க மாட்றாடா” என்று அழுதாள் சுந்தரம்.
கூடத்திலிருந்த மாதவனும் சரவணனும் ஓடிவந்தனர்.
இடுக்கில் இருந்தவளை வெளியே இழுத்தான் சரவணன். சரவணன் அவ்வீட்டின் கடைக்குட்டி. பொறுமை என்றால் எந்த ஊர் வானம் எனக் கேட்பான்.
“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.
“டேய் காட்டான் பயலே, அது சின்னப் புள்ளடா பயந்துடும். இங்க வாடா.”
சரவணனைப் பின்னே இழுத்தான் பிரபு.
“பூவு, இங்க பாரு எதுவும் ஆகல. நீ சாப்டு இப்ப உன் உடம்பைக் கவனிப்போம். உனக்கு இப்ப சத்தான சாப்பாடு தேவைன்னு டாக்டர் சொன்னாங்கல்ல? சாப்டு பூவு.” கீழே அமர்ந்திருந்த பூவிடம் பாலை நீட்டினான் பிரபு.
வாங்கி வாயில் வைத்தாள். செரும ஆரம்பித்தாள். மெல்ல அது ஓலமாக மாறியது.
“அம்மா, எனக்கு எதுவுமே தெரியாதும்மா. என்னை மன்னிச்சிடுங்கம்மா.” பால் டம்ப்ளரைப் பாலுடன் கீழே விட்டுவிட்டு சுந்தரத்தின் கால்களைப் பிடித்து அவற்றில் தன் தலையை முட்டி முட்டி அழுதாள் பூவு.
மாதவனின் கண்கள் நீர்கோத்தது. தாய்வயிறு போலச் சுருக்கென்றது அவருக்கு. சுவற்றில் சாய்ந்து மெல்ல சரிந்தவாறே கீழே உட்கார்ந்தாள் சுந்தரம்.
“பச்ச மண்ணுடி நீ. என்னா வயசுடி உனக்கு? பதினாலுகூட இன்னும் ஆரம்பிக்கல. உன் வயித்துல எவன்டி புள்ளயக் கொடுத்தது?
என் வயிறெல்லாம் பத்தி எரியுது. ஐயோ கடவுளே… நீயெல்லாம் இருக்கியா? உனக்கெல்லாமா நான் விரதமா கெடந்தேன். இந்தத் தாயில்லா புள்ளய இப்படித் தவிக்க விட்ருக்கியே.”
“அம்மா நிறுத்து. நீ இப்படிக் கத்துனின்னா பக்கத்து வீட்டு நீலா காதுல விழும். அப்பறம் உனக்கு வேற வினையே வேண்டாம்” என்று சரவணன் சுந்தரத்தைச் சுதாரிக்க வைத்தான்.
“அம்மா, நைட்டு அக்கா வந்துடும். பொறுமையா இரு அக்கா பார்த்துக்கும் எல்லாத்தையும். அப்பா, நீ அம்மா பக்கத்துலேயே இரு” என்று வெளியேறினான் பிரபு. அவன் தெருவைத் தாண்டி சென்றதை புல்லட்டின் தூரக் கதறல் சொன்னது.
கடந்த சித்திரையில் தன் பிறந்த ஊர்த் திருவிழாவிற்குச் சென்ற சுந்தரத்தின் கண்ணில் கிணற்றடியில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த பூவழகி பட்டாள். அங்கே கிணறு மட்டும்தான் இருந்தது. அதில் தண்ணீர் இப்போது இல்லை. மின்சாரம் தள்ளி குழாய்கள் வழியே மேலே வந்துகொண்டிருந்தது தண்ணீர்.
தாயை இழந்து குடிகார அப்பனின் சாராய நெடி வீச்சுடன் மீந்திருக்கும் புட்டிகளின் குவியலில் சிக்கித்தவித்த பூவழகி பச்சைப் பூத்திருந்த வெண்கலப் பானையைப் புளி கொண்டு பொலிவாக்கி வைத்தாள்.
எட்டாம் வகுப்பு படிக்க வேண்டியது. பள்ளிக்கூடம் போகாமல் இங்கே கிடப்பதை சுந்தரத்தால் சகிக்கவே முடியவில்லை. எல்லார் பேச்சையும் எதிர்த்துவிட்டு, அந்த ஊரிலிருந்து பூவழகியை சுந்தரம் தன்னுடன் கொண்டுவந்துவிட்டாள் .
ஆரம்பத்தில் ஒதுங்கி ஒதுங்கி நின்ற பூவழகி மெல்ல எல்லோருடனும் பேசிப்பழக ஆரம்பித்தாள். அருகிலுள்ள அரசுப் பள்ளியில் அவளை சேர்த்தாயிற்று.
சுந்தரத்தின் முடிவை எதிர்க்கும் துணிவு அவள் மகள் மணிமொழிக்கு மட்டுமே உண்டு. அவளோ காதல் கணவனோடு சென்னையில் இருக்கிறாள். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகப் பதவி பெற்றும் சுந்தரத்தின் மடிக்காக ஏங்கும் சராசரி பெண்பிள்ளை.
“அம்மா, யாரோ ஒரு பொண்ணை வீட்டுக்கு கொண்டு வந்துருக்கியாம்?” அன்றிரவே போனில் விசாரித்தாள் மணி.
“ஆமா மணி. அவ பேரு பூவழகி. நல்ல புள்ளையா இருக்காடி. அந்தக் காட்டுல காஞ்சி கெடக்குறா. எனக்கு மனசே வரல அவளை அப்படியேவிட. அவ அப்பன்கிட்ட சொல்லிட்டுத்தான் கொண்டாந்தேன்.”
“உனக்கு ஏன்மா இந்த வேலை?”
“நான் என்னடி தப்பா பண்ணிட்டேன். பொங்குற சோத்துல ஒரு பிடி கூட வைக்கப்போறேன். படிச்சி அவ பொழப்பை ஓட்டிப்பா”.
“முன்பின் யோசிக்காம முடிவெடுக்காதம்மா.”
“தப்பு செய்யத்தான்டி யோசிக்கணும்.”
“சரி, போ. புடிச்ச முயலுக்கு ரெண்டே முக்கால் காலுன்னு சொல்லுவ.”
பூவழகி வந்த ஐந்து மாதங்களுக்குப் பின் அன்று இரவுதான் பூவழகியைப் பார்க்கப் போகிறாள் மணி. மணி வருவதாக இருந்தால் வீடே பலம்கொண்டிருக்கும். ஆனால், அன்று வீடு அவ்வளவு அப்படி இல்லை. தெருவிற்குள் நுழைந்த மணியின் கார் அதைக் கண்ணுற்றது. காருக்குப் பின்னே பிரபுவின் புல்லட் தன் இயல்பைக் குறைத்து வந்து சேர்ந்தது.
வீட்டு வாசலில் கார் நின்றது. மாதவன் கதவைத் திறந்தார். தூங்கிக் கிடந்த பிள்ளைகளை மாதவனும் சரவணனும் ஆளுக்கொன்றாகத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றனர்.
மணி வந்தாலே வாசற்படிக்கு ஓடிவரும் சுந்தரம் தன் இடத்தைவிட்டு அசையாமல் இருந்தாள். அவள் மடியில் பூவழகி.
மணியைக் கண்டதும் பொங்கி அழுதாள் சுந்தரம்.
“நான் நல்லதுதான் நெனச்சேன் மணி.”
“ஆமா, நல்லா நெனச்ச. இவதானா அவ?”
“ஆமாடி, இந்தப் பச்ச மண்ணுதான்.”
“எது இவளா? போம்மா நீ வெளில. நான் பேசிக்குறேன். லலிதா எல்லாத்தையும் சொல்லிட்டா. ஏதோ என் பிரெண்டு ஒருத்தி ஊருக்குள்ள டாக்டர்னு இருந்தது நல்லதாப் போச்சு.”
“மணி, இவளை ஒன்னும் பண்ணிடாதடி. பாவம்டி புள்ளைக்கு அவ்ளோ வெவரம் இல்லைடி. அதுக்குதான் வயசுக்கு வந்தோமா வரலியான்னே சொல்லத் தெரியலடி.”
“அம்மா, எல்லாம் எனக்குத் தெரியும். நீ போ. டேய், சரவணா அம்மாவை வெளில அழைச்சிட்டு போடா.”
இரண்டு மணி நேரத்திற்குப் பின் கதவைத் திறந்து வெளியே வந்தாள் மணி.
“தலையை வலிக்குதும்மா ஒரு டீ தாயேன்.”
“என்னடி ஆச்சு, அவளை என்ன பண்ண?”
பதறினாள் சுந்தரம்.
“நான் என்னம்மா அவளைப் பண்ணப்போறேன்? அவ தூங்கிருப்பா பாரு.”
சுந்தரம் பூவழகியைத் தொட்டு எழுப்பினாள். “பூவு சாப்ட்டு தூங்குடி.”
எழுந்து சென்ற பூவு தட்டில் சோறும் குழம்பும் தானாகவே போட்டு முழுவதுமாக உண்டு முடித்து தட்டைக் கழுவி வைத்தாள்.
அம்மா எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்குறேன் என்று அறைக்குள் சென்று தூங்கியேவிட்டாள்.
“அக்கா என்ன பண்ணலாம் இப்ப?” பிரபு ஆரம்பித்தான்.
“இங்க வச்சுக்க முடியாதுடா. கலைக்கவும் கூடாதுன்னு லலிதா சொல்லிட்டா. வயித்துப் புள்ள வளர்ந்துட்டு அது இவளுக்கும் நல்லதில்ல.”
“என் மேல, பிரபு மேல மட்டும் பழி வரும்னு நினைக்காத மாதவா! உன்னையும் சேர்த்துதான் கட்டம் கட்டும் உலகம்” என்று சொல்லி சரவணன் சத்தமாகச் சிரித்தான்.
“அறிவில்லயாடா உனக்கு?”
“அவன் சொல்ற மாதிரி எல்லா விதமாகவும்தான் உலகம் பேசும்.” மாதவன் அவனை வழிமொழிந்தார்.
சுந்தரம் தலையில் அடித்துக்கொண்டு குமுறினாள். அவிழ்ந்த முடி மொத்தமும் முகத்தில் விழுந்தது. மணி ஓடித் தாங்கினாள்.
“அம்மா அழாத, இதைச் சரிபண்ணிடலாம். அவ இங்க வரும்போதே கருவோடத்தான் வந்திருக்கா. நீ சரியா கவனிக்கல.”
“ஐயோ… நான் எப்படி ஒரு குழந்தையைச் சோதிச்சுப் பார்ப்பேன். அவளுக்கு அவ்வளோ வெவரம் இல்லைடி. வீட்டுல எல்லா வேலையும் பார்க்க நிப்பா. அம்மா அம்மான்னு கூடவே நிப்பா. சின்ன அண்ணன் வந்துட்டாங்க, பெரியண்ணன் கெளம்பிட்டாங்க, அப்பா எழுந்துட்டாங்கன்னு அவ உலகம் இங்க இருக்குது”.
“நான் இங்க யாரும் எதுவும் பண்ணாங்களான்னு கேட்டேன்” என்றார் மாதவன்.
சரவணனும் பிரபுவும் அதிர்ந்துதான் போயினர்.
“அப்பா!” என்றான் பிரபு.
“இல்லடா உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல. அந்தப் புள்ளகிட்ட கேட்காம இருக்கக் கூடாதுல்ல.”
“எனக்கு எதுவுமே தெரியாது.” இதுதான் பூவின் பதில் எல்லாவித கேள்விகளுக்கும்.
“அதுக்குக் காரணம் யார்னு தெரிஞ்சு கட்டி வைக்கப்போறீங்களா?” என்று கேட்டாள் மணி.
“அந்தக் கொலைகாரன் யார்னு தெரியணும்ல” என்று
சுந்தரம் கத்தினாள்.
“அது அவளைப் பெத்த அப்பனேதான்…”
மணி சொன்னதும் பேரமைதி.
“ச்சைக்” என்று சரவணன் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“அந்தக் குடிகார நாய்தான் இந்த வேலையைப் பார்த்துருக்கு. அவனுக்குத் தெரிஞ்சிதான் உன்கூட அனுப்பி விட்டுட்டான்னு நினைக்கிறேன்.”
“அவனை ஊருக்குள்ள வச்சி முடிச்சி உட்ரணும்” என்று சரவணன் முடிவெடுத்தான்.
“விசயம் எதுவும் வெளிய வரக்கூடாது சரவணா. அந்த மிருகம் இனி நடமாடக்கூடாது” – மணி.
“நான் பார்த்துக்குறேன் அக்கா.”
சுந்தரத்திற்கு யார் பேசுவதும் கேட்கவில்லை. சோஃபாவிற்கு முன்னிருந்த பூந்தொட்டியை இல்லை இல்லை பூந்தொட்டியின் மாதிரியை வெறித்துக்கொண்டிருந்தாள்.
“அம்மா, ரெண்டு நாள்ல நான் கிளம்புறேன். உடம்புல சதைப்பத்தா இல்லாததால பூவுக்கு வயிறு தெரியல இத்தனை நாளா. இனி தெரிய ஆரம்பிச்சிடும். அவளை சென்னைக்குக் கொண்டு போய்டுவோம்.”
மணியின் கைகளில் பூவை மாற்றியவளாக, “சரி” என்றாள் சுந்தரம்.
சென்னைக்குப் பயணப்பட்டார்கள். பிரபுவும் சரவணனும் செல்லவில்லை. நிறைமாதம் என்று தேதி காட்டியது. பூவைப் பார்த்தால் சிறு தோண்டியைத் தூக்குபவளாகத்தான் இருந்தாள்.
வீட்டுப்பாட ஏட்டின் மீதே தூங்கிவிட்டோம் என்பதை உள்ளூர உணர்ந்து, எழுதி முடித்தே தூங்குவோம் என எழுந்தவளின் கால்களில் கூதலின் சிலிர்ப்பு தடவிக்கொண்டிருந்தது. கழுத்துவரை வந்திருந்த பாவாடையைக் கீழே இறக்கி, சாரலை கால்விரல் வழியே வடியவிட்டாள். அன்று இரவு அப்பா அவள் பக்கத்தில் போதையில் களைத்திருந்தான். பூவின் நினைவில் மிஞ்சிய கசப்பின் துணுக்குகளை மணி முடிந்த அளவு ஒற்றி எடுத்திருந்தாள். தன் அப்பனின் பிள்ளைதான் வயிற்றில் நெளிகிறது என்பதைக் கூடுமான தன் அறிவைக் கொண்டு எழுதிக்கொண்டாள் பூவு.
“அக்கா, எனக்குப் பொறக்கப் போவது தம்பியா, தங்கையா” என்று கேட்ட பூவின் நெற்றியில் முத்தமிட்டாள் மணி.
பூவுக்கு ஆண் குழந்தை. அந்தக் குழந்தைக்கான பெற்றோர் பிரசவ அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். பதினைந்து ஆண்டுகளாகக் குழந்தையில்லாத தாரணியும் விக்னேஸும். தாரணி, மணியின் உயிர்த்தோழி.
சுந்தரம் திகைப்பில் உறைந்திருந்தாள். “பூவு புள்ள எங்கன்னு கேட்டா?”.
“உயிரோட இல்லைன்னு டாக்டர் சொல்லிடுவாரு” என்று காபியைக் குடித்தவாறே மணி சொன்னாள்.
“பாவம்டி பூவு. என்னடி மணி இப்படிப் பண்ற? நாய்க்கூட தன் குட்டியைத் தேடும்டி”
“அப்றம் என்னம்மா பண்ணச் சொல்ற? அவ அம்மாவா இருந்து புள்ள வளர்ப்பாளா? என்ன ஏதுன்னு புரியாத வயசுல அவளுக்கு நடந்த விபத்து இது. வலி கொஞ்ச நாள்தான். வடுவே இல்லாம ஆத்திவிட்றணும்.”
சுந்தரத்திற்கும் மாதவனுக்கும் எண்பது கல்யாணம் விழாக்கோலமாக இருந்தது. எல்லோரும் தண்ணீர்க் குடம் எடுத்தாச்சா என்று அமுதவல்லி பாட்டி கேட்டாள்.
“சின்னக்குட்டி எங்கடா?” சுந்தரம் பரபரத்தாள்.
“அதோ லேட்டா வந்துட்டு உன் கண்ணுல படாம மணியக்கா பின்னாடி நிக்குறா பாரு” என்றான் சரவணன்.
சுங்க இலாக்காவின் உயர் அதிகாரி பூவழகியும் வெள்ளிக் குடத்துடன் வரிசையில் நின்றிருந்தார். மணியின் தோள்பட்டையில் தாடையை வைத்து சுந்தரத்தைப் பார்த்துக் கண்சிமிட்டினாள் பூவு.
சுந்தரம் கைகூப்பி கடவுளை நினைக்க, மஞ்சள் நீரால் குளிர குளிர நனைக்கப்படிருந்தாள்.
படைப்பாளர்:
அருணா சிற்றரசு
ஆங்கிலமொழி ஆசிரியர் . அரசு உயர்நிலைப்பள்ளி எடகீழையூர், திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்தவர். 2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்றவர். நாவல்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ் புதினங்கள் படித்து கருத்துக்களை தன் நடைக்கு வளைத்துக்கொள்பவர்.பாவ்லோ கோலோ , கொலம்பிய எழுத்தாளர் மார்க்கீஸ் மீது தீராக் காதல் கொண்டவர். தன்னுடைய யூட்யூப் சேனலில் மாணவர்களுகள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான காணொலிகளை வழங்கி வருகிறார்.