படம்: சித்ரா ரங்கராஜன்

1970 முதல் 2003 வரை, வடக்கு கென்யாவில் நூற்றுக்கணக்கான சம்பூறு இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஆங்கிலேயப் படையினரால் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கணவர்களால் அடித்து, துன்புறுத்தபட்டு, கைவிடபட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் ஒன்றுகூடி, உமோஜா என்ற கிராமத்தை உருவாக்கினர். அது விரைவில் சம்பூறு இனப் பெண்களின் புகலிடமாக மாறியது. பெக்கா லோலோசோலி உமோஜா கிராமத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட சம்பூறு பெண்களுக்காக ஒரு கிராமத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. இறுதியில் பதினைந்து பெண்கள் ஒன்று சேர்ந்தனர். உமோஜா உருவாகியது.

உமோஜா என்பதற்கு சுவாஹிலி மொழியில் ‘ஒற்றுமை’ என்று பொருள். இங்கு ஆண்களுக்கு அனுமதியில்லை. பெண்கள் மட்டுமே சுதந்திரமாக ஒற்றுமையுடன் வாழும் ஓர் இடமாக விளங்குகிறது.

பதினைந்து பெண்களுக்கான சரணாலயமாகத் தொடங்கிய உமோஜா கிராமம் இன்று, ஐம்பது பெண்கள், இருநூறு குழந்தைகளின் இருப்பிடம். அங்கே வளரும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் மட்டும் பதினெட்டு வயதை அடையும் போது, கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

வன்புணர்வு, குடும்ப வன்முறை, குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் தங்குமிடம், வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் உமோஜா கிராமம் வளர்ந்துள்ளது.

உமோஜாவில் சேர்ந்த பெண்கள் தங்களுக்கான பொருளாதாரத்தைத் தாமாகவே உருவாக்கியுள்ளனர். தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு வருமானம் ஈட்டுகிறார்கள்.

உமோஜாவின் பெண்கள் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு முகாமை நடத்துகிறார்கள். மேலும் பயணிகள் கிராமத்திற்குள் நுழைய நுழைவுக் கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள். கிராமத்திற்குள் பெண்கள் வண்ணமயமான மணிகள் கொண்டு அணிகலன்கள் , வளையல்கள் போன்றவற்றை கைவினை மையத்தில் விற்பனைக்கு வைக்கின்றனர்.

உமோஜாவிலுள்ள வயதான பெண்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு பாலியல் வன்கொடுமைளைப் பற்றி இளையவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். உமோஜா கிராமத்தில் ஒரு பள்ளியையும் கட்டியுள்ளனர். மேலும் அது அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் மற்ற இனப் பெண்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.

உமோஜா கிராமத்தில் வாழும் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை நடத்துவதில்லை. அவர்கள் அண்டை கிராமங்கள், சந்தைகள், பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்தக்கூடிய பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்கிக்கொண்டனர்.

இந்த உமோஜா கிராமத்தை ஒழித்துக் கட்டும் விதமாக, சில ஆண்கள் வெவ்வேறு பெயர்களில் தங்கள் சொந்த கிராமங்களை உருவாக்கினர். இறுதியில் வெற்றி பெறவில்லை. ஆண்கள் போட்டி கைவினைத் தொழிலை முயன்றனர். உமோஜா கிராமத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைத் தடுக்க முயன்றனர். இறுதியில் ஆண்கள் ஆக்கிரமித்திருந்த நிலத்தை உமோஜா பெண்களே தாங்கள் ஈட்டிய பணத்தை வைத்து வாங்கினார்கள்.

ஊருக்குத் தேவையான முக்கியமான முடிவுகளை எடுக்க உமோஜா கிராமத்துப் பெண்கள், ‘பேச்சு மரத்தின்’ கீழ் கூடுகிறார்கள்.

உமோஜா கிராமத்தின் பெண்கள் மற்ற கிராமங்களுக்குச் சென்று பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

உமோஜா கிராமத்தின் தலைவர்களும் பெண்களே! சட்டமியற்றுபவர்களும் பெண்களே!

கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்கிறது!

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.