இணைந்தே இருப்பது ரத்த சோகையும் பெண்களும் என்ற நிலையில் நமது இந்தியப் பெண்களின் உடல்நிலை உள்ளது. அந்த அளவிற்கு ரத்தசோகை உள்ள பெண்களை நாம் அன்றாடம் காணமுடிகிறது. ரத்தசோகை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான் என்றாலும் பெண்களுக்கு அதிகளவில் ஏற்படக் காரணம் மாத சுழற்சி உதிரப்போக்கின்போது 30மி.லி. முதல் 80மி.லி. ரத்தத்தை அவர்கள் ஒவ்வொரு மாதமும் இழப்பதுதான். இழக்கும் இந்த ரத்தத்தை ஈடுசெய்யாமல் இருப்பதால் ரத்தசோகை ஏற்படுகிறது.

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா? இது பிற்போக்குத்தனமான பெண்ணடிமை சிந்தனை. மாதசுழற்சி உதிரப்போக்கானது நல்ல உதிரமே. ஆனால், ஆரோக்கியமான உடல்நிலையைத் தக்கவைக்க மாதசுழற்சி உதிரப்போக்கானது குறிப்பிட்ட சீரான இடைவெளியில் நடைபெற வேண்டும். இல்லையேல் கர்ப்பபையின் அகப்படலம் தடிமனாகும். இது பல்வேறு கர்ப்பபை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால்தான் மாதசுழற்சி இயற்கையாகவே மாதம் ஒருமுறை நடைபெறுகிறது. ஆனால், இந்த உதிரப்போக்கால் இழக்கும் உதிரத்தை மீண்டும் ஈடுசெய்யும் அளவிற்குப் பெண்கள் இரும்புச் சத்து உள்ள உணவை உண்ண வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கீழ்க்காணும்வாறு ரத்தசோகையை வகைப்படுத்துகிறது.

ஆரம்ப நிலை ரத்த சோகை

10.9 -12கிராம் ஹீகு

இடைநிலை ரத்தசோகை 7-10.9கிராம் ஹீகு

தீவிரநிலை ரத்தசோகை

4-6.9கிராம் ஹீகு

மிகத் தீவிரநிலை(அபாயநிலை) ரத்தசோகை

<4கிராம் ஹீகு

(ஹீகு=ஹீமோகுளோபின்)

ரத்த சோகையின் காரணங்கள்

1 இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாடு

2 அதிக பிள்ளைபேறு

3 அதிக கருச்சிதைவு

4 பேறுகாலத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கு

5 கொக்கிப்புழு தொற்று மற்றும் மலேரியா நோய் தொற்று

6 அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுதல்

7 வலிப்புநோய்க்கு எடுக்கும் மாத்திரைகள் (இம்மாத்திரைகள் ரத்தசோகை உருவாக்கும்.)

8 அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுதல்

9 கடினமான மலச்சிக்கல் மூலம்

10 வயிற்றுப்புண்

ரத்தசோகையின் அறிகுறிகள்

1 உடல்சோர்வு

2 மூச்சு வாங்குதல்

3 படபடப்பு

4 வெளிரிய நாக்கு

5உடல்வீக்கம்

6 ஆர்வமின்மை

ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள்

1 நோய்த்தொற்று உருவாதல்

ரத்தசோகையினால் நோய்எதிர்பாற்றல் குறையும். அதனால் எளிதில் நோய்த்தொற்று உருவாகும்.

2 குறைமாத பிரசவம்

ரத்தசோகையினால் ரத்தஓட்டம் சீராக இருக்காது, உடலுறுப்புகள் வலு இழக்கும். அதனால் கர்ப்பப்பையும் வலு இழக்கும். இது குறைமாத பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

3 பிரசவகால அதிக உதிரப்போக்கு

ரத்தசோகை கர்ப்பப்பையை வலு இழக்க செய்வதால் கர்ப்பப்பை அதன் உறுதித்தன்மையை இழக்கும். குழந்தை பிறப்பிற்குப் பின் வலுவான கல் போல இருக்க வேண்டிய கர்ப்பப்பை இதனால் உறுதியிழந்து பஞ்சுபோல் ஆகும். இதனால் ரத்தப்போக்கு ஏற்படும். இது தாயின் மரணத்திற்க்கே வழிவகுக்கும்.

4 எடைகுறைவான குழந்தை பிறத்தல்

தாயிடம் இருந்துதான் ரத்தமும் இதர சத்துப் பொருட்களும் குழந்தைக்குச் செல்கின்றன.

ஆரோக்கியமில்லா தாயிடம் பிறக்கும் குழந்தைகள் எடைகுறைந்து, நோஞ்சானாக இருப்பர்.

5 தாய்ப்பால் சுரப்பு குறைதல்

தாய்ப்பால் சுரப்பு பாதிக்கப்படும். அதனால் தாய்ப்பால் சுரப்பு குறைந்து, குழந்தைக்குப் போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும்.

6 குழந்தை மரணம்

எடை குறைவான குழந்தை பிறத்தல், போதிய தாய்ப்பால் கிடைக்காமை, எளிதில் நோய்த்தொற்று ஏற்படுதல் போன்றவை பச்சிளம் குழந்தையின் மரணத்திற்குக் காரணம்.

7 தாய் மரணம்

ரத்தசோகை உடைய பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையிலும், குழந்தை பெறும் நிலையிலும், குழந்தை பிறந்த முதல் 42நாட்கள் வரை ஆபத்தான நிலையில்தான் இருப்பர். ரத்தசோகை இருதயத்தை பாதிக்கும். நோய்எதிர்பாற்றலைக் குறைக்கும். கர்ப்பப்பையின் உறுதியைத் தகர்க்கும். இவை அனைத்துமே தாயின் மரணத்திற்கு காரணமாகும்.

அரசின் செயல்பாடுகள்

1

கொக்கிப்புழு நீக்க மாத்திரை

வளர்இளம் பெண்கள் அனைவருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இலவசமாக தமிழக அரசு கொக்கிப்புழு நீக்க மாத்திரையைத் தருகிறது. கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர் இப்பணியைச் செய்கின்றனர். கருவுற்று இருக்கும் பெண்களுக்கு நான்கு மாதங்கள் நிறைவடைந்தபின் ஒரு கொக்கிப்புழு நீக்க மாத்திரை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

மனிதக் குடலில் கொக்கிப்புழு இருந்தால் என்ன நினைக்கிறீர்களா?கொக்கிப்புழுக்கள் கூட்டமாகவே வாழும் மற்ற விலங்குகளைப்போல.

உயிரினங்களில் மனிதன் மட்டுமே கூட்டமாக வாழ்ந்த கலாச்சாரத்தைத் தவிர்த்து தனிக்குடும்பம் எனக் குறுகி வாழ்கிறான். இப்படிக் கூட்டமாக வாழும் கொக்கிப்புழுக்கள் ஒவ்வொன்றும் அதாவது ஒரு புழுவானது ஒருநாளைக்கு 0.05மிலி ரத்தத்தை மனித ரத்த ஓட்டத்தில் இருந்து உறிஞ்சுகிறது. ஆகையால், கொக்கிப்புழுக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த இழப்பு அதிகமே. அவற்றைத் தவிர்க்கவே தமிழக அரசு இந்தக் கொக்கிப்புழு நீக்க மாத்திரையை இலவசமாக வளர்இளம் பருவம் முதலே கொடுக்கிறது.

2

இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் வளர்இளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை(வியாழக்கிழமை) தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது.

ரத்தசோகையில் இருந்து விடுபட்டதற்கான அறிகுறிகள்

1 உடல் சுறுசுறுப்பு

2 பசி எடுத்தல், வயதிற்கேற்ற உணவு உட்கொள்ளுதல்.

3 ஆரோக்கியமான முகப்பொலிவு

4 வேலையில் ஈடுபாடு அதிகரித்தல்

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த உணவுப்பொருள்கள்

1கீரை வகைகள்

முருங்கைகீரை,பொன்னாங்கன்னி கீரை,மணத்தக்காளி கீரை, முளைக்கீரை, அரைக்கீரை.

2 காய் வகைகள்

கொத்தவரை, சுண்டைக்காய், பீன்ஸ்

3தானிய வகைகள்

கேழ்வரகு, பொட்டுக்கடலை, சோயா, பீன்ஸ்

4 கனி வகைகள்

பேரீட்சை, உலர்ந்த திராட்சை, மாதுளை, தர்பூசணி

5 அசைவ உணவு

மீன், ஈரல், இறால்

6 இனிப்பு வகைகள்

பனைவெல்லம்

இரும்புச்சத்து உள்ள உணவுகளைச் சிறுவயது முதலே அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சோகை தவிர்ப்போம்!

வாகை சூடுவோம்!

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.