க்ரீன் டாட் தத்துவமும் பட்டாம்பூச்சி விளைவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு சின்ன விளைவு படிப்படியாக அதிர்வுகளை உருவாக்கி ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும். சக மனிதர்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ள சமூகமாக மாற்றும்.

தனி மனிதர்கள் இந்த வன்முறையை நிறுத்தும் மாற்றத்தில் ஈடுபட 5 சுயக் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

1. முதலில் பிரச்னை இருக்கிறது என நம்ப வேண்டும்.

2. நாமும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் முக்கியக் குழு அங்கத்தினர்.

3. என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்திருத்தல்.

4. எப்படிச் செய்ய வேண்டும் எனத் தெரிந்திருத்தல்.

5. அவர்கள் செய்வதைக் கையாளத் தெரிந்திருத்தல்.

பட்டாம்பூச்சி விளைவு இந்த 5 இயல்புகளையும் தன் 4 முக்கியக் கோட்பாடுகளில் பொதிந்திருக்கிறது.

அந்த 4 முக்கியக் கோட்பாடுகள் என்னென்ன?

ஒரு தனி மனிதன் அல்லது வழிப்போக்கன் எல்லாவிதமான சூழலிலும் புறக் காரணிகளாலும் அகக் காரணிகளாலும் ஆக்கிரமிக்கப்படுகிறான். அல்லது பாதிக்கப்படுகிறான்.

வழிப்போக்கன் எப்படிக் காரியமாற்றுவான் என்பதைப் பாதிக்கும் காரணிகள் பல உண்டு.

முதலாவது அவனது தொழில்ரீதியான வட்டம். ஒரு வன்முறையைத்  தடுக்கப் போகும்போது ஏதேனும் பின்விளைவுகள் ஏற்பட்டு அது தொழில்ரீதியாகப் பாதிக்குமா?

இரண்டாவது தனிப்பட்ட வட்டம். இது அவனது குடும்ப நபர்கள், அல்லது உறவு வட்டம். வழிப்போக்கர் வன்முறை நிகழ்வைத் தடுக்கச் சென்று அவருக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வருமா? இல்லை, அவருக்கு ஏதேனும் அவமானங்கள் வருமா? அவர் மீதே பழி வருமா? இப்படி எல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தால் செயல்பட முடியாது.

மார்ச் 19 ஆம் தேதியன்று நியூயார்க் பேருந்து நிலையத்தில் ஒரு நடுத்தர வயது பெண் அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்த இன்னொரு பெண், அவரை நகர்ந்து கொண்டு தனக்கு இடம் தருமாறு கேட்டுக்கொண்டார். ஏற்கெனவே அமர்ந்திருந்த பெண் நகர்ந்து இடம் விட்டும் இன்னொரு பெண் அவரைச் சரமாரியாகத் தாக்கினார். இரு வழிப்போக்கர் வந்து அவரைத் தடுத்து காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தனர். காயம் பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த வழிப்போக்கர்கள் எதையும் சிந்திக்கவும் இல்லை, தாமதிக்கவும் இல்லை. ஆனால், அவர்கள் செயல் குற்றத்தைத் தவிர்க்கவும் ஒரு பெண்ணைப் பாதுகாக்கவும் உதவியது.

மேலே சொன்ன சம்பவத்தில், முன்கூறிய 5 கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்கலாம். அதே நேரம், பார்த்த இடத்திலேயே, அங்கே ஒரு பிரச்னை என்பதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பதும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதும் தங்களை மீறி ஏதாவது நடந்தால் எப்படிச் சமாளிக்க முடியும் என்பதும் அறிந்திருந்தார்கள்.

தொடக்கத்திலேயே காவல்துறையை அழைத்துவிட்டார்கள். மருத்துவ சிகிச்சைக்கும் அழைப்பு போய்விட்டது. தடுக்க வேண்டும் என்பதும் எப்படிக் காவல்துறை வரும் வரை சமாளிப்பதென்பதும் தெரிந்திருந்தது.

அவர்களுக்குத் தங்களுடைய வேலை, குடும்பம் பற்றிய சிந்தனை அந்த நேரத்தில் இல்லை. ஏனெனில், காப்பாற்றப்பட்ட உயிரைவிட இழக்கப்போகும் சில மதிப்பீடுகள் பெரியன அல்ல, மேலும் விளங்க வைக்க முடியும், குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை.

மூன்றாவதாக, என்ன வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிந்து கொள்வது. மேலே சொன்ன எடுத்துக்காட்டில் அந்தப் பெண்ணுக்கு உதவிய நபர்களுக்கு அவசர மருத்துவ உதவியையும் காவல் துறையையும் நாடத் தெரிந்திருக்கிறது. அவையும் வளங்கள்தான். வளங்கள் எப்போதும் பொருளாதாரமாகவே இருக்கத் தேவையில்லை. அக்கம் பக்கம் இருக்கும் நபர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். கூட்டத்திற்கும் ஒரு வலு உண்டு.

இன்னொரு முக்கியக் காரணி – திறன்கள். தனிப்பட்ட முறையில் வழிப்போக்கரிடம் உள்ள திறன்கள் அல்லது கூட்டத்தில் உள்ள சிலரிடம் உள்ள திறன்கள். நம்மிடம் உள்ள சில திறன்கள் நாமே வெளிப்படுத்தத் தயக்கமோ அச்சமோ இருக்கும்.

நடந்துகொண்டிருக்கிற பிரச்னைக்கு எந்த வகையிலும் வழிப்போக்கருக்குத் தொடர்பிருந்தால் அதுகூடப் பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கும். எதிர்பாராதவிதமாக வழிப்போக்கரின் உறவினர், மகன் அல்லது மகள் அல்லது தெரிந்தவர் வன்முறையில் சிக்கிக்கொள்ளும்போது தனிப்பட்ட உணர்ச்சிகளும் சேரும். அப்போது உதவும்போது சரியாகச் சிந்திக்க இயலாது, காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும். அந்த நேரத்தில் அக்கம்பக்கம் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக உதவ வேண்டும். சில முறை இதற்கு எதிர்ப்பதமாக ஆவதும் உண்டு. எனவே பக்குவமாகக் கையாளத் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் ஏதாவது வன்முறைச் செய்திகளும் மனதைப் பாதிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆசிரியை அன்விதா ஷர்மா, ஆசிரியையாகப் பணி புரிந்தும் அவருக்கான பொருளாதாரச் சுதந்திரம் இல்லை. அவர் வங்கிக் கணக்குகள் அவர் கணவராலேயே கையாளப்படுகின்றன. அமெரிக்காவில் பணிபுரியும் பல பெண்களின் குறிப்பாக ஆசிய இனத்தவர், அதுவும் கணவரின் கடவுச்சீட்டை நம்பி வந்த பெண்கள், அல்லது புதிதாகப் பணிபுரிய அனுமதி பெற்று பணி செய்ய வந்த பெண்களின் வங்கிக் கணக்குகளை அவர்களின் கணவர்கள் கையாள்வதைக் கவனித்திருக்கிறேன்.

நகை அணிவது பெண்கள் என்றாலும் சொந்தம் கொண்டாடுவதும், நகைக்காக அம்மாவைப்                     பேசவிட்டு அம்மாப்பிள்ளைகளாக மௌனம்                     காப்பதும் ஆண்கள்தான். பெங்களூருவில் ஒரு மென்பொருள் பொறியியல் வல்லுநர் தற்கொலை, பிறகு திருச்சியில் இன்னொருவர், சென்ற வாரம் ஆசிரியை ஒருவர் அதே காரணத்திற்காக. இந்தத் தற்கொலைகள் ஒரு வாரத்தில் முடிந்து போவதில்லை. அவர்கள் மீது அன்பு செலுத்தும் குடும்பத்திற்கு அது ஆயுள் தண்டனை.

11 வயது பெண்குழந்தைகளின் மார்பகங்களைத் தொட்டால் தவறில்லை என்று ஒரு நீதிமன்றத் தீர்ப்பாம். இதற்கெல்லாம் யாரும் சீற்றமடையவில்லை. ஆனால் ஓர் அமெரிக்க மென்பொறியாளர் எழுதுகிறார், ’சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வந்ததை அவர் கணவர் வரவேற்றதாகத் தகவலே இல்லையே’ என்று. ’ஒன்பது மாதங்கள் அந்நிய ஆடவனுடன் தனியாக விண்வெளியில் இருந்திருக்கிறார். ஒன்றுமே நடக்காமலா இருந்திருக்கும்’ என. இந்தச் சந்தேகம் எழாமலா இருக்கும்? நல்லவேளை சுனிதா இந்தியாவில் இல்லை, இருந்திருந்தால், தீக்குளிக்கச் சொல்லியிருப்பார்கள். இதுபோன்ற வன்முறைகள் மென்மையாக, நகைச்சுவை என்கிற பெயரில் தொடங்கி, பிறகு உயிரிழப்பில் முடிகிறது.

தகவல்களும் எல்லா விவரங்களும் தெரிந்திருத்தல் அவசியம். எதைப் பற்றிப் பேச வேண்டுமானாலும் அல்லது எழுத வேண்டுமானாலும்  அதைப் பற்றிய முழு விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

வன்முறையை நிறுத்தும் இந்த முயற்சிக்கான மாற்றங்களை ஒருவரே செய்ய வேண்டியதில்லை. ஆனால் எல்லாரும் சிறிதளவு செய்ய வேண்டும். ‘No one has to do everything, but everyone has to do something.’

இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், பட்டாம்பூச்சி கோட்பாட்டைச் சின்ன அதிர்வுகளாகப்  பரப்ப நாம் என்ன செய்ய வேண்டும்? ஒரு சின்ன பட்டியல் தயார் செய்யுங்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் உங்களுடைய தனிப்பட்ட திறன்களைச் சிந்தித்து எழுதுங்கள். நேர்மையாகச் செய்யுங்கள். உங்கள் நிறுவனம் அல்லது குழு அமைப்பு இருந்தால் அந்த அமைப்பின் திறன்களையும் எழுதுங்கள். கீழே ஒரு பட்டியல் நிரப்பு படிவம் இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். சின்ன எடுத்துக்காட்டுகளை எழுதியிருக்கிறேன். உங்களின் தேவைக்கேற்ப நம்பிக்கைக்குரிய உறவினர் பெயர், தொலைபேசி எண்கள்கூட இட்டு நிரப்பிக்கொள்ளலாம்.

திறன் தனிப்பட்ட திறன்குழுவின் திறன்
உறவு கள்பலம்தைரியம், குடும்ப உறவுகள் வைத்தி        ருக்கும் நம்பிக்கைகுழுவினருடன் கூட்டாகப் பல காரியங்களை முன்நின்று நடத்தி வெற்றிகரமாக முடித்தல். அது ஒரு சின்ன சுற்றுலாவாகக் கூட இருக்கலாம். ஆனால் உறவுகள் மேம்படும்.
 பலவீனம்தனிப்பட்ட தடைகள்இதுவும் பல தனிப்பட்ட அங்கத்தினர்களின் தடைகள், அல்லது குழுவின் கொள்கை தடை.
 பல வீனத்தை எப்படிப் பலமாக்குவது?தடைகள் ஏன் ஏற்படும், அதை எப்படிச் சரி செய்வது என்கிற அடைப் படைக் காரணத்தை உணர்ந்து நீக்குவதுகொள்கையில் தடை எனில் கூடிப் பேசி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்
உங்க ளின் நட்பு வட்டம்/ அதிகார வட்டம்   
 பலம்நாம் சொல்வதில் உள்ள நம்பகத் தன்மை, நேர்மைகுழு அமைப்பிலும் தலைமைக் குரிய பண்புகளை வளர்ப்பது, குழு அங்கத்தினர்களுக்குப் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பது
 பலவீனம்சந்தேகம், சொல்வதைக் கேட்டு நடந்தால் நமக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என நண்பர்கள், உறவுகள் சந்தேகம் கொள்வதுசந்தேகமும் அதனால் வரும் அச்சமும்
 பலவீனத்தை எப்படிப் பலமாக்குவதுசின்ன சின்ன காரியங் களை நன்றாக முடித்து நம்பிக் கையை வளர்ப்பதுசின்ன சின்ன காரியங்களை நன்றாக முடித்து நம்பிக்கையை வளர்ப்பது
திறன் கள்பலம்பேசும் திறன், நல்ல வியாபாரத் திறன், பலரிடம் அன்போடு பழகும் திறன்தலைமைப் பண்பு, சொல்லும் செய்தியைப் பலர் மனம் கோணாமல் அழகாகச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
 பலவீனம்பிடிவாதம்கொள்கை சின்ன சின்ன மாற்றங் களுக்குகூட இடம் கொடுக்காமல் இருத்தல்
 பல வீனத்தை எப்படிப் பலமாக்குவதுவளைந்து கொடுத்து கனிவாக அதே நேரம் உறுதியாக எதனால் தான் உறுதியாக இருக்கிறோம் என்பதைச் சொல்லி தெளிய வைத்தல்மாற்றங்கள் அவசியம் என்றால் ஏற்றுக்கொள்ளுதலும், இல்லாதபோது காரணங் களைத் தெளிவாகக் கூறி விளங்க வைத்தலும்
நுண்ணறிவுபலம்ஒரு சம்பவத்தைத் தெரிந்து கொண்டு கணப் பொழுதில் முன்னெச் சரிக்கை நடவடிக்கை என்ன செய்யலாம், எதிர்வினையாக என்ன செய்யலாம் எனத் தெரிந்து கொள்வது, அதற்கேற்றார்போல முடி வெடுப்பது 
 பலவீனம்  
 பலவீனத்தை எப்படிப் பலமாக்குவது?  

(தொடரும்)

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.