பேனா ஒவ்வொன்றும் தீர்ந்து குப்பையில் போட்டுவிட்டு அடுத்த பேனா எடுக்கும்போதெல்லாம் ஞாபகத்தில் வந்து செல்லும் நினைவுகளில் ஒன்று, ஐந்து பைசாவிற்கு பெட்டிக்கடையில் மை நிரப்பிச்சென்ற நாள்கள்.
ஐந்து பைசாவிற்கு பேனாவை நிரப்பிக்கொள்ளலாம். பெரியப்பா பெட்டிக்கடையில் (ஊரில் இருக்கும் எல்லா பிள்ளைங்களுக்குமே அவர் பெரியப்பாதான்) மட்டுமே எல்லா வகை பேனாவிற்கும் அலுத்துக் கொள்ளாமல் ஒரே மாதிரி “டேய், படிக்கணும்டா!” என்று சொல்லிக்கொண்டே போடுவார். மற்ற கடைகளில் கொஞ்சம் நிறைய மை பிடிக்கும் பேனாவெல்லாம் போனால், ஒரு பெருமூச்சோடு அல்லது ஒரு ‘உச்’சோடு பேனா வயிறு நிறையும்.
ஒற்றை மைத்துளியை பிறருடன் பகிர்ந்து கொள்வதில், பல வகைகள் இருந்தன. நமக்கு பிடிக்காத சண்டைக்காரியாக இருந்தாலும், மை தீர்ந்து போய் பாதி வகுப்பில் மை கேட்டால், மேஜையில் ஒரு தெளியாவது தெளிக்க வேண்டும். நிப்பை அதில் தொட்டு ரெண்டு வரியாவது எழுதுமளவிற்காவது! இல்லாவிட்டால் சரஸ்வதி மன்னிக்கமாட்டாள் என்பது பி.யு.எம் ஸ்கூலில் ஐதீகம். அதென்ன பி.யு.எம் ? அதாங்க பஞ்சாயத்து யூனியன் மிடில் ஸ்கூல். இந்த மாதிரி தெளிக்கிற மையை திருப்பி வாங்கக்கூடாது. அசிங்கம். ‘உனக்கு மை தெளிச்சேன்’ என்றுகூட எந்த சண்டையிலும் சொல்லிக்காட்டக்கூடாது. சண்டையில் அப்படி சொல்லிக்காட்டி விட்டால் அப்புறம் பள்ளிக்கூடமே நம்மை,
‘ச்சீ, இவ்ளோதானா நீ’ என்று பாக்கும்.
ரெம்ப ஜிகிரிகளிடம் மட்டும் ரகசியமாக,
“சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன்” என்று சொல்லி,
“பிடிக்கவே இல்லன்னாலும் மை எல்லாம் தெளிச்சு குடுத்தேன், ஆனாலும் இப்படி பண்ணிட்டா!!!”- என்று சொல்வது தான் முறை!

நம் ஜிகிரி தோஸ்தாக இருக்கும் பட்சத்தில், பேனாவை கழற்றி கொஞ்சம் ஊற்றியே குடுத்துவிடலாம். கணக்கில்லை. திருப்பி வாங்குவது பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாத உறவு இது. அந்த மை ஒரு பெரிய தியாகக் கணக்கு. அப்படி ஒரு நண்பி நமக்கு பக்கத்துல உட்காந்திருப்பது நமக்கு ஒரு தெம்பு, வரம் என்றெல்லாம் வைத்துக் கொள்ளலாம்.
ஜிகிரி மாதிரி / ஜிகிரி-இன்-மேக்கிங்காக இருந்தால், சொட்டு கணக்கு. நம் பேனாவை கழற்றுவது போல லூஸ் செய்து அந்த பேனாவின் வயிற்றில் நிப்பை நேராக வைத்து ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எத்தனை சொட்டு வேண்டுமோ அத்தனை மட்டும் கணக்காக ஊற்றி விட்டு, நம் பேனாவை நிமிர்த்தி பேனாவை மூடிக்கொள்ளலாம். பத்து சொட்டெல்லாம் கொஞ்சம் தாராளம். 5 சொட்டு பரவாயில்லை. தோஸ்தாக இல்லாவிட்டாலும், மிகவும் நம்பிக்கையானவர்களுக்கு இது கிடைக்கும்.
மை கொடுக்கவே கூடாத ஒரு முறை ஒன்று இருக்கிறது. எச்சரிக்கை. தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு பேனாவையும் நிப் டூ நிப் வைத்து, இங்க் பரிமாறுவது. அப்போது நம் படிப்பு திறமையெல்லாம் அவர்களுக்குப் போய்விடும் என்பது நம்பிக்கை.
நம் மை தீர்ந்து போய் நிரப்பும்போது, வாத்தியார் பாடமெல்லாம் நிற்காது. முன்னாடி போய்க்கொண்டே இருக்கும். நாம்தான் பின்னால் ஓடிப்போய் சேரவேண்டும். மை கொடுக்கிறவங்களுக்கும் இது ஒரு ரிஸ்க். நாம் மை நிரப்பும்போது என்றைக்காவது வாத்தியார் பாடம் நமக்காக நின்று, நாம் சேர்ந்ததும் ஆரம்பித்தால், அது ஒரு இமாலய பெருமை! மிகவும் நன்றாகப் படிக்கிற, ஒழுக்கமாக, பணிவாக இருக்கிற நல்ல மாணவனுக்குத்தான் அந்த கொடுப்பினை.
அடுத்து இண்டெர்வல் வரும்போது, ஓடிப்போய் மை வாங்கி விட்டு வந்து அன்று சாயங்காலத்துக்குள் சொட்டு கணக்கு செட்டில் செய்து விட வேண்டும். அப்போதுதான், அடுத்தமுறை நாம் இத்தகைய சிரம திசைக்கு ஆளாகும்போது, நமக்கு உதவி கெடைக்கும்.
எல்லாரின் நம்பிக்கையுமே இழந்துவிட்ட சிலரும் இருப்பார்கள். அவர்கள் எழுதாமல் திரு திருவென முழிக்கும்போது, வாத்தியாராகக் கண்டுபிடித்து ‘யாராச்சும் மை குடுங்க’ என்று சொன்னால், வாத்தியாரின் செல்லப்பிள்ளை போட்டியில் இருக்கும் யாராவது கொடுப்பார்கள். அதுவும் காந்தி கணக்குதான்!
ஒரே தடவை வீட்டில் ‘எனக்கு ஒரு மை பாட்டில் வாங்கி குடுங்க’ என்று ஆரம்பித்தபோது, ‘கலி முத்திருச்சு’ லெவலில் பேச்சு வந்ததும், பம்மியாகி விட்டது. அப்புறம் பத்தாம் வகுப்பு போனதும், ‘கால் பரீட்சையில் நல்ல மார்க் வாங்கினால் வாங்கித்தரணும்’ என்று சொல்லி, மார்க் வாங்கி, வாங்கினேன் ‘பிரில் இங்க்(ராயல் ப்ளூ)’!

கிட்டத்தட்ட பத்தாவது படிக்கும்போது ‘ரெனால்ட்ஸ் வெள்ளை பாடி, ப்ளூ மூடி’ போட்ட அந்த பேனா பிரபலம். ஆனாலும் அதை வைத்து பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதக்கூடாது என எல்லா வாத்தியார்களும் சொல்வார்கள்.

ஹீரோ பேனா ஒரு கனவு. பளபளவென்று, தங்க நிற மூடி போட்டு, பார்க்கவே ராயலாக, ஆனால் விலை எவ்வளவு தெரியுமா? 40 ரூபாய். அடேங்கப்பா என்று ஏக்க பெருமூச்சு விட்டு கடந்து போனோம். ஒன்பதாம் வகுப்பில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால் வாங்கி கொடுப்பதாக அம்மா சொன்னதும், அந்த ஹீரோ பேனா கனவில் அருகில் வந்தது. நம்மை விட புத்திசாலியான ஒரு பையனிடம் ஃபர்ஸ்ட் ரேங்க் இழந்ததில் ஹீரோ பேனா கனவிற்கு பங்கம் வந்ததாய் பதற, வழக்கம்போல் தாயின் கருணையால் கிடைத்தே விட்டது மெரூன் மற்றும் தங்க நிற ஹீரோ பேனா.
வாங்கிச்சென்ற முதல் நாளே வகுப்பாசிரியர் ‘நல்லா இருக்கே’ என்று வாங்கி பார்த்துவிட்டு, அவர் பாக்கட்டில் இருந்த பச்சை உடல் ஹீரோ பேனாவை என்னிடம் கொடுத்தார். கனவு கண்டு வாங்கிய எனக்கு பிடித்த நிறமான மரூன் உடல் ஹீரோ பேனாவை அவர் வைத்துக்கொண்டார். துக்கம் தொண்டையை அடைக்க, திரிந்தேன் இரண்டு நாள்கள். மொத்த பள்ளியிலேயே மாணவர்களில் 2 அல்லது 3 பேரிடம் தான் இருக்குமென்றால், ஹீரோ பேனாவின் மதிப்பை உணர்ந்துகொள்ளுங்கள்.

பேனா என்பது ஒரு குதிரை வாகனம் மாதிரி. ‘போருக்கு முன்னாடி பழக்கணும்’ என்பார் எங்கள் தமிழ் அய்யா! நம் கை நடைக்கு, எந்த கோணத்தில் வைத்து எழுதுவோமோ அந்த கோணத்தில் பழகின நிப் ஸ்மூத்தாக எழுத ஆரம்பிக்கும். பப்ளிக் எக்ஸாம் வரை அந்த பேனாவை பழக்கி, கண்போல பாதுகாத்து, கீழே விழுந்து விடாமல், மூடியை திறந்து வைத்து காற்றில் மை காய்ந்து போகாமல் பாதுகாத்து, மாதம் ஒருமுறை நிப் எல்லாம் கழட்டி, கழுவி, தேங்காய் எண்ணெய் போட்டு சுத்தம் செய்து திருப்ப மாட்டி, மை ஊற்றி, வேறு யார் கைக்கும் அந்த பேனாவை கொடுத்து விடாமல், மற்ற மாணவர்கள் கேட்டால் கொடுக்க ஒரு பேனா, வாத்தியார் கேட்டால் கொடுக்க ஒரு பேனா என்று கூடுதல் பேனாக்களையும் பராமரிக்க வேண்டும்.
நமக்கே விரலில் ஒரு பிரச்சினை வந்து, எழுதும் கோணம் பாதிக்கப்படும் அளவிற்கு அந்த பிரச்னை இருந்தால், கூடுதல் பேனாவில் ஒன்றைதான் நாமே உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் ரெகுலர் பேனாவில் நிப் தேய்மானம் சரியாக இருக்கும், சில்க் ஸ்மூத் மாறாமல். தமிழய்யா அளித்த அந்த பச்சை உடல் ஹீரோ பேனா ஏற்கனவே சில்க் ஸ்மூத்தாகவும், என் எழுதுகோணத்திலும் இருந்து என் மனதை கொள்ளை கொண்டு, என் வாழ்வின் அங்கமாக மாறிப்போனது. பொதுத்தேர்வை அந்த குதிரைதான் கடக்க உதவியது.
ஒரு வழியாக பன்னிரெண்டாம் வகுப்பு வரை, மை ஒழுங்கென்று ஒன்றை கடைபிடித்து கல்லூரி வந்ததால், யார் முதுகிலாவது மை தெளித்து விளையாடுபவர்களைக் கண்டால் சுள்ளென்று கோபம் வந்தது. இப்போது பேனா பேனாவாக வாரம் இருமுறை குப்பையில் போடுவதை நினைத்தால்..!
படைப்பாளர்

காளி
இதே பெயரில் Twitter-ல் @The_69_Percent என்று இயங்கி வருகிறார். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.
நன்கு நினைவில் உள்ளது 5’ஆம் வகுப்பு முடித்ததும் 6’ஆம் வகுப்புல இருந்து பேனா உபயோகம் படுத்தப் போறோம்னு. எங்க டீச்சர் சொன்னாங்க பென்சில் தவறுகள ரப்பர் திருத்திடும் பேனா எழுத்துக்கள திருத்த முடியாதுனு. அப்போ ஒரு பயம் கலந்த சுவாரஸ்யமான கனவு அந்தப் பேனா. டியூஷன் மிஸ் 20ரூபாய் பேனா வாங்க சொல்லி அனுப்புனதும் அது ஜெல் பேனா’வ இரசித்ததும், தினம் மையூத்திப்போன இன்ங் பேனான்னு….மறக்கமுடியாத நினைவுகள்தான் இந்தப் பேனாக்கள்