பண்பாட்டுப் பாரம்பரியமும் வரலாற்றுத் தொன்மையும் மிக்க தொண்டைமானாறு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சி பிரதேசங்களுள் ஒன்று. கடலுடன் கடக்கும் இந்தத் தொண்டைமானாற்றின் நீரேரி ஆனையிறவு வரை நீள்கிறது. அருகிலுள்ள கரும்பாவளியில் குப்பைகளுக்கும் பற்றுகளுக்கும் மத்தியில் மறைந்து போன பல வரலாற்றுத் தொன்மை வாய்ந்த எச்சங்கள் சமாதிகளாகவும் ஆறடி சுவர்களாகவும் தற்போது வெளிவந்திருக்கின்றன. சக்கிலியன் ஆட்சிக்காலத்துடன் தொடர்புடைய வரலாற்றின், மறைந்துபோன மிச்சங்களாக அவை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பறவைகள் வந்து செல்லும் சரணாலயமாகவும் மூலிகைச் செடிகள் நிறைந்ததாகவும் நன்னீரேரியுடன் காணப்பட்ட இந்தப் பகுதிகள், யுத்த காலத்தில் மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியின் காரணமாகப் பராமரிப்பின்றி அழிந்திருக்கலாம்.
இதன் கரையில் அமைதியாக நிற்கிறது செல்வ சந்நிதி முருகன் ஆலயம். உயர்ந்த கோபுரங்களோ தூபிகளோ கட்டிடங்களோ இல்லை. நந்தியும் அன்னதான மண்டபங்களும் மருதமரக் காடுகளுமாகக் காட்சியளிக்கிறது. முருகன் வேலை வைத்து வழிபடுகிறார்கள். பூஜை செய்பவர்கள் வாயைக் கட்டி பூஜை செய்யும் முறை பார்க்க வியப்பாக இருந்தது. அதற்கும் ஏதாவது காரணங்கள் இருக்கலாம். கேட்டபோது கண்டி கதிர்காமக் கோயில் முறையைப் பின்பற்றுவதாகக் கூறினார்கள். 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் அழிக்கப்பட்ட ஆலயம் ஒல்லாந்தர் காலப் பிற்பகுதியில் மருதர் கதிர்காமர் என்ற பக்தரால் நிர்மாணிக்கப்பட்டது. 65 ஆலம் இலைகளில் அமுது படைத்து பூஜை செய்து, அதையே பிரசாதமாக விநியோகிக்கின்றனர். இந்த ஆலயத்துக்கு அருகில் ஓடும் நன்னீரேரியே, வல்லி நதி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் கருணாகரத் தொண்டைமான் என்ற சிற்றரசனால் வரலாற்றுப் புகழ் வாய்ந்த தொண்டமானாறு கட்டப்பட்டது. இந்த வல்லி நதி தொடு வாயிலையே கருணாகரத் தொண்டைமான் வெட்டி ஆழப்படுத்தி கடலுடன் இணைத்ததால் அது தொண்டைமானாறு ஆயிற்று என்று கூறுகிறார்கள். ஆனால், பொன்னியின் செல்வனில் கல்கி கூறும் கதை இப்படி இருக்கிறது.
“முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இளவரசனாகிய மானவர்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்தில்தான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஒடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது. முகத்துவாரத்தின் அருகில் அந்த நதி வளைந்து வளைந்து சென்றது. இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தன. இதனால், கடலிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாதபடி கப்பல்கள் நிற்பதற்கு வசதியாக இருந்தது” என்கிறார் கல்கி.
இறுதியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் அருள்மொழிவர்மன் இந்தத் தொண்டைமானாற்றிலிருந்துதான் படகில் புறப்படுவார். அன்றைய தினம் ஏனோ, கடல் வழக்கத்திற்கு மாறாக வெகு அமைதியாயிருக்கிறது. கடலும் தொண்டைமானாறும் ஒன்றாகக் கலக்கும் அற்புதமான இடத்திலிருந்து கையசைக்கிறார் இளவரசர்.
இளவரசரைப் பிரிய மனமின்றி பிரியும் பூங்குழலியின் பேதை மனம் குமுறுகிறது. ஆம், அலைகடலும் ஓய்ந்திருக்க, அவளின் அகக்கடல்தான் பொங்குவதேன்? காரணம் இருந்திருக்கிறது.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.