நாகத்தீவு நோக்கிப் படகில் செல்லும்போது பூங்குழலி, வந்தியத்தேவனுக்கு மாதோட்டம் செல்லும் பாதையை இப்படிக் கூறுகிறாள்: “மாதோட்டம் (நாகத்தீவிலிருந்து) இங்கிருந்து ஐந்து ஆறு காத தூரம் இருக்கும். வழியெல்லாம் ஒரே காடு, கோடிக்கரைக் காடு மாதிரி இருக்கும் என்று நினைக்காதே. வானை எட்டும் மரங்கள் அடர்ந்த காடு, பட்டப்பகலில்கூட சில இடங்களில் இருட்டாக இருக்கும். யானைக் கூட்டங்களும் வேறு பல துஷ்ட மிருகங்களும்கூட உண்டு. நீ ஜாக்கிரதையாகப் போய்ச் சேர வேண்டும்.” வாசிக்கும்போதே கடற்புறத்தை ஒட்டிய அந்த அடர்ந்த காடுகள் மனதில் நிழலாடி அச்சமூட்டுகின்றன.
நாகத்தீவிலிருந்து அடர்ந்த காடுகளைக் கடந்து வரும் வந்தியத்தேவன், ஈழத்துக் கடற்கரையோடு நடந்து சென்று, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பாலாவி நதிக்கரையில் இருந்த மாதோட்ட மாநகரை அடைகிறான். அங்கு ஆழ்வார்க்கடியானை மீண்டும் சந்திக்கிறான். இந்த மாதோட்ட எழிலையும் இயற்கை சூழலையும் ரசித்து ரசித்து வர்ணித்திருப்பார் கல்கி.
“அம்மாநகரம், திருஞான சம்பந்தர் காலத்திலும், சுந்தரமூர்த்தியின் காலத்திலும் இருந்ததுபோலவே இப்போதும் பசுமையான மரங்கள் அடர்ந்த சோலைகளினால் சூழப்பட்டுக் கண்ணுக்கு இனிய காட்சி அளிக்கிறது. மாவும் பலாவும் தென்னையும் கமுகும் கதலியும் கரும்பும் அந்தக் கரையைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களில் வானரங்கள் ஊஞ்சலாடின, வரி வண்டுகள் பண்ணிசைத்தன, பைங்கிளிகள் மழலை பேசின. அந்நகரின் கோட்டை மதில்களின் மேல் கடல் அலைகள் மோதிச் சலசலவென்று சப்தம் உண்டாக்கின. மாதோட்ட நகரின் துறைமுகத்தின் பெரிய மரக்கலங்கள் முதல் சிறிய படகுகள் வரை நெருங்கி நின்றன. அவற்றிலிருந்து இறக்கப்பட்ட பண்டங்கள் மலை மலையாகக் குவிந்துகிடந்தன. இவையெல்லாம் சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இருந்தது போலவே இருந்தாலும் வேறு சில மாறுதல்கள் காணப்பட்டன. மாதோட்ட நகரின் வீதிகளில் இப்போது கேதேஸ்வர ஆலயத்துக்குச் செல்லும் அடியார்களின் கூட்டத்தை அதிகம் காணவில்லை. பக்தர்கள் இறைவனைப் பாடிப் பரவசமடைந்த இடங்களிலெல்லாம் இப்போது போர் வீரர்கள் காணப்பட்ட்னர். கத்தியும் கேடயமும் வாளும் வேலும் கையில் கொண்ட வீரர்கள் அங்குமிங்கும் திரிந்தார்கள். சென்ற நூறு ஆண்டுகளுக்கு அதிகமாக அந்த நகரம் ஒரு யுத்த கேந்திரஸ்தலமாக விளங்கிவந்தது. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துப் போருக்கு வந்த படைகள் பெரும்பாலும் அங்கேதான் இறங்கின. திரும்பிச் சென்ற படைகளும் அங்கேதான் கப்பல் ஏறின. நகரம் பலதடவை கைமாறிவிட்டது. சில சமயம் இலங்கை மன்னர்களிடமும் சில சமயம் பாண்டிய அரசர்களிடமும் அது இருந்தது. பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்தது. அத்தகைய யுத்த கேந்திர நகரத்தின் கோட்டை மதில் வாசலில் ஒருநாள் வந்தியத்தேவன் வந்து நின்றான்.” பொன்னியின் செல்வன் நாவல் வாசித்த பதின்பருவத்திலேயே இலங்கை மீது கொண்ட காதல், நாற்பது வயதில் நேரில் பார்க்கும் போது சிலிர்ப்பூட்டியது.
கல்கியின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பார்த்தாலும், சோழ, சேர, பாண்டிய, பல்லவ சக்கரவர்த்திகளும் அவர்களுக்கு முன்னதாக, சுந்தரரும் திருஞான சம்பந்தரும் அதற்கும் முன்னதாக புத்தபிரானும் நடமாடிய வரலாற்றுப் பூமியாகத்தான் இருக்கிறது மாதோட்டம். இலங்கைக் கரையெங்கும் காணக்கிடைக்கிறது அந்த அதிசய தேசத்தின் வரலாற்று எச்சங்கள். இன்று மன்னார் மாவட்டமாக உருவெடுத்திருக்கும் பகுதியில்தான் எத்தனையெத்தனை வரலாறுகள் பொதிந்து கிடக்கின்றன? மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக இருக்கிறது மாதோட்டத் துறைமுகம். பாளி மொழியில் எழுதப்பட்ட பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிட, தமிழ் நூல்கள் மாந்தை அல்லது மாதோட்டம் என அழைக்கின்றன.
வரலாற்றுக்காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்துசென்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியிருக்கிறது மாதோட்டம் என்னும் நகரம். இலங்கைத்தீவின் வடமேற்குக் கரையில் இன்றைய வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில், மல்வத்து ஓயா என அழைக்கப்படும் ஆற்றின் கழிமுகத்தை ஒட்டி அமைந்திருந்தது. அன்றையத் தலைநகரமான அனுராதபுரத்துடன் சிறப்பான போக்குவரத்து வசதிகளைக்கொண்டிருந்தது. மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதி இன்றும் மாந்தைப் பற்று என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் கூப்பிடு தூரத்திலேயே இருந்ததால் தென்னிந்தியாவுடனான வணிகத் தொடர்பு இயல்பாக மலர்ந்தது. இங்கு தென்னிந்தியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. அருகில்தான் திருக்கேதீஸ்வரம் என்னும் புகழ்பெற்ற சிவன்கோவில் உள்ளது. ராமர், அகத்தியர், அருச்சுனன் ஆகியோர் மாந்தோட்டத் துறைமுகத்தின்மூலம் கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தார்கள் என்கிறது புராணங்கள். சுந்தரரும் திருஞான சம்பந்தரும் நடமாடிய பூமி என்கின்றன இலக்கியங்கள். சோழர் காலத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற இடம் என்ற செய்தியை புனைவு கலந்து ரசிக்கத்தருகிறது பொன்னியின் செல்வன்.
இந்நகரம் கம்மாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்டதாகவும், பலம் பொருந்திய அவர்கள் பன்னெடுங்காலமாக இப்பகுதியை ஆட்சி செய்தார்கள் எனவும் ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த பற்றலொக்கு என்பவர் எழுதிய ‘இலங்கை’ என்னும் நூலின் வாயிலாக அறிய முடிகிறது.
கொள்ளா நரம்பினிமிரும் பூசல் இரைதேர் நாரை யெய்திய விடுக்கும் துறைஎகழு மாந்தை யன்ன” – நற்றிணை
நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் பணிதிரை கொணர்ந்த பாடு சேர் நன்கலம் – அக நானூறு
வண்டு பண்செய்யும் மாமலர் பொழில் மஞ்சை நடமிடும் மாதோட்டம் – திருஞான சம்பந்தர்
வாழையாம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம் பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய மாதோட்டம் மானமும் பூகமும் கதலியும் நெருங்கிய மாதோட்டம் நன்னகர் – தேவாரம்
இப்படி அத்தனை இலக்கியங்களும் மாய்ந்து மாய்ந்து மாதோட்டத்தை வர்ணிக்கின்றன.
தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல, பாளி மொழியின் மகாவம்சமும் மாதிட்டை என்று அழைக்கப்படும் மாதோட்டத்தை எண்ணிலடங்காத மரக்கலங்களின் புகலிடம் என்றும், அங்கு மாட மாளிகைகள் நிறைந்திருந்ததாகவும், பூம்பொழில்கள், பழத் தோட்டங்கள் வயல்கள் சூழ்ந்திருந்ததென்றும் கூறுகிறது. மாதோட்டம் மூலம் வந்த முத்துகளையும் பட்டாடைகளையும் அணிந்து வாசனைப்பொருள்களைப் பாவித்து, ரோமர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர் என்று பெரிபுளுஸ் என்ற அயலக நூல் சற்றே வயிற்றெரிச்சலுடன் வியக்கிறது.
மாந்தோட்ட துறைமுகம் பாலாவி ஆற்றுமுகத்தில் இருந்தது. மலையளவு அலைகள் எழுந்தும் விழுந்தும் ஆர்ப்பரித்தன. ஆற்றின் தெற்குக்கரையில் அலைவாய்க்குரடுகளும் (piers) கிடங்குகளும் அமைந்திருந்தன. இப்பொழுது அக்கிராமம் வங்காலை (வங்கக்கலங்கள் கலக்குமிடம்) என்று அழைக்கப்படுகிறது. எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வாணிகம் அக்காலத்தில் நடந்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழையின் சீற்றத்திலிருந்து மாதோட்டத் துறைமுகம் புகலிடமளித்து அவர்களைக் காத்தது. காரணம் மன்னார்தீவும் ராமர் அணையும்தான். அக்காலத்தில் மன்னார் தீவுக்கும் இலங்கை நிலத்திற்கும் இடையேயுள்ள நீர்ப்பரப்ப்பு இரு பருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல் தட்டாமல், கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமான மன்னார் கடற்கால் எப்படிச் சதுப்புநிலமானது? மிகச் சிறந்த மாந்தோட்டத்துறைமுகம் எப்படி மணல் மேடுற்றது? அலைமோதிய பாலாவியாறு எப்படி ஒரு சிறு வாய்க்காலானது? அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதி எப்படித் தரிசு நிலமானது? இயற்கையின் விந்தையை யாரறிவார்?
அன்றொரு நாள், மாதோட்டத்தின் பொற்காலத்தில் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமின்றி தென்னிந்திய கடல் வணிகர்கள் தங்கள் சரக்குகளை சீனாவுக்குக் கொண்டு செல்லும்போதும் இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகத்தான் மாதோட்டம் விளங்கியது. மிகச் சிறந்த வர்த்தக நகரமாக உருவெடுத்தது. ஈழத்து உணவு வகைகள், முத்து பவளம், நவரத்தினங்கள், யானை, யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, கறுவாய், ஏலம் போன்ற பொருள்கள் மாதோட்ட துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட்டத்தில் வந்து குவிந்தன. செல்வம் பெருகியது, மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறார் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இண்டிக்கோ பிளஸ்தேஸ் தனது நூலில்.
அச்சமயத்தில் இந்தியாவின் ராமேஸ்வரம் கோயிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோயில் சிறப்புப் பெற்றிருந்தது. ஆனால், அது இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்துவரும் ராணுவத்தின் வழியில் இருந்ததால், அதிகம் தாக்குதலுக்கு உள்ளானது. ஒருகட்டத்தில் அந்த ஆன்மிகக் கேந்திரம் யுத்த கேந்திரமாகவே மாறிப்போனது. சோழர்கள் பொலன்ருவையிலிருந்து இலங்கையில் ஆட்சிபுரிந்தபோது மாதோட்டமும் திருக்கேதீஸ்வரமும் புகழின் உச்சியை அடைந்தன. ராஜராஜேச்சுரம் என்றுகூட மாதிட்டை அழைக்கப்பட்டது. உலகளாவிய வணிகத்திலும் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக, பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும் போசலின் பாண்டங்களும் மற்றும் பல வணிகப் பொருள்களும் அகழ்வாய்வுகள் மூலம் இப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் தீவுக்கு அமைக்கப்பட்ட சாலைப் பாலமும் ரயில்வே பாலமும் கடல் நீரோட்டத்தை முற்றிலுமாக நிறுத்தியிருக்க வேண்டும். அதன்பின் மாதோட்டத்திற்குப் பதிலாக தலைமன்னார் இந்தியாவுக்கு அருகாமையான துறைமுகமாக உருப்பெற்றது. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அருகிலிருந்த பொலநறுவைக்கு மாற்றப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் துவங்கி போர்ச்சுகீசியரின் வருகைக்குப்பின் மாதோட்ட துறைமுகத்தின் சிறப்புக்குன்றி, வடக்கிலிருக்கும் கேட்ஸ் துறைமுகம் சிறப்புப் பெற்றது. நாளடைவில் மாதோட்டம் தனது முக்கியத்துவத்தை முற்றாக இழந்தது.
இன்றைய மன்னார் பகுதி மாதோட்டத்தை உள்வாங்கிய பகுதியே. பாலாவி ஆறு பரந்து பாயும் நிலை தடுக்கப்பட்டு, பெருங்குளமாக மாறியுள்ளது. ஈழ நாட்டின் மிக உயர்ந்த நிலையில், ஈழத்தின் கலாச்சாரத்தைக் கடல் கடந்து பரப்பிய மாதோட்டம் இன்று புதைபொருள் ஆய்வின் மையமாகியுள்ளது. சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் களணி பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை ஆராய்ச்சி பிரிவு இணைந்து மன்னார் மாதோட்டத்தின் வரலாற்று பழமைமிக்க துறைமுகத்தில் விசேட ஆய்வுகள் நடத்தவுள்ளனர் என்கிறார் தொல்லியல்துறை திணைக்களம் பணிப்பாளர் பேராசிரியர் பீபி மண்டாவல. பார்க்கலாம், இந்த ஆய்வுகள் இன்னும் எத்தனையெத்தனை வியப்புகளை, தமிழர் வாழ்வியலின் அதிசயங்களை, தமிழரின் பண்பாட்டுப் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றப்போகுதென்று!
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.