அத்தியாயம் 14

ஜன்னல் வழியாக வெளிச்சக்கீற்றுகள் அந்த அறைக்குள்  நுழையவும் குணாவின் உறக்கம் கலைந்தது. அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தபோதும், அவனால் எழ முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. உறக்கமா மயக்கமா என்று தெரியாத ஒரு மாதிரி குழப்பமான நிலை.

‘எழுந்து என்னத்த கிழிக்க போறோம். சத்த நேரம் தூங்கலாம்’ என்று எண்ணி மீண்டும் கண்கள் மூடினான். ஆனால் உறக்கம் வரவில்லை.

ஈனஸ்வரத்தில், ‘ம்ம்ம்மா…’ என்று எங்கோ தூரமாக ஒரு குரல் அழைத்தது. தாய்மடிக்காக ஏங்கும் தவிப்பு அந்தக் கதறலில். ஆனால் அந்தச் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

 அசாதாரணமான ஓர் அமைதி அங்கே நிலவியது. அந்த அமைதி அவனைத் தூங்கவிடாமல் செய்தது.

‘ஈஸ்வரி எங்க..? விடியறதுக்கு முன்னாடியே எழுந்து பாத்திரத்தை எல்லாம் உருட்டிட்டு கிடப்பா. எங்க போய்த் தொலைஞ்சா இவ?’

கண்களை நன்றாகத் திறந்தான். பாய் ஒரு பக்கமும் தலையணை மறுபக்கமுமாகக் கிடந்தது. இரண்டிற்கும் இடையில் அலங்கோலமாக அவன் கிடந்தான். கைலி இடுப்பிற்குக் கீழே சரிந்திருந்தது.

‘சை என்ன இப்படி படுத்துட்டு கிடக்கோம்!’ என்று எழுந்து கைலியைச் சரி செய்தவனின்  உடல் அப்படியும் இப்படியுமாகத் தள்ளாடியது. மீண்டும் தலை பின்னுக்கு இழுத்தது.

‘இது ஒண்ணும் வேலைக்காவாது’ என்று தள்ளாடியபடியே எழுந்து வெளியே வந்தான். வாசலிலிருந்த இரும்பு வாளியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அதனை வாரி எடுத்து முகத்திலடித்தான்.

அந்தக் குளுமையான நீர் முகத்தில் பட்டதுமே அவனுடைய மயக்கம் கொஞ்சமாகத் தெளிந்தது. கொடியில் காய்ந்து கொண்டிருந்த துண்டால் முகத்தை துடைத்தபடி, “ஈஸ்வரி… ஏ ஈஸ்வரி” என்று அழைத்தான். பதிலில்லை. ஆள் அரவமே இல்லை.  

அப்போதுதான் எதிரே இருந்த விளக்கேற்றும் சாமி மாடம்  ஒருபக்கமாக சரிந்து தொங்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தான். ஈஸ்வரி பளபளவென்று துலக்கி விளக்கேற்றும் காமாட்சி அம்மன் விளக்கு கீழே கிடந்தது. தரையெங்கும் எண்ணெய் சிதறியிருந்தது. கூடவே விபூதி குங்குமத் தட்டும் குப்புற விழுந்து கொட்டிக் கிடந்தன.

 ‘ஏன் இப்படி விழுந்து கிடக்கு… எங்க போனா இவ. நான் வேற இராத்திரி என்ன எழவு சரக்க குடிச்சு தொலைச்சனு தெரியலையே. இப்படி தலை சுத்தது. என்ன நடந்ததுன்னு ஒண்ணும் நெனப்புக்கு வேற வர மாட்டேங்குது’ என்று புலம்பியவன், பின்பக்கம் சென்று பார்த்தான். மாட்டுக் கொட்டகையில் கன்றுக்குட்டி பாலுக்காக அல்லாடிக் கொண்டிருக்க, தாய்ப்பசு மறுபுறம் தவித்துக் கொண்டிருந்தது.

 “எங்க போனா இவ? எங்க போனாலும் மாடுங்கள கவனிக்காம போக மாட்டாளே” என்று எண்ணியவன் கன்றுக் குட்டியைக் கழற்றிவிட்டான். அது தாயிடம் பாய்ந்தோடியது.

அந்தக் காட்சியைப் பார்க்க மனதை என்னவோச் செய்ததது. மாடுகளுக்கு தீவனத்தை போட்டுவிட்டு முன்புறம் செல்ல, டீக்கடை மூடியிருந்தது.

இடி, புயல் என்ற எது வந்தாலும் ஈஸ்வரி கடையைத் திறக்காமல் இருந்ததில்லை.வ்ஏதோ தவறாகப்பட்டது. அப்போதுதான் சாலையில் நின்ற யோகேஷின் வண்டி முன்கண்ணாடி உடைந்து சாலையில் சிதறி கிடந்ததைக் கண்டான். அவனுக்கு பகீரென்றது. 

‘அடப்பாவமே’ வீட்டிற்குள் வந்து தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனுக்கு, நேற்றைய இரவின் ஞாபகங்கள் எல்லாம் மண்டைக்குள் குறுக்கே மறுக்கே ஓடி கபடி ஆடின…  

 ‘சை குடிச்சிருக்கவே கூடாது… எல்லாம் இந்தக் குடி எழவாலதான் வந்துச்சு’ என்று தலையில் ஓங்கி அறைந்தவன் அதே கலவரத்துடன் எழுந்து, தன் செல்பேசியைத் தேடி எடுத்தான்.

ஈஸ்வரி எண்ணிற்கு அழைக்க, மணிச் சத்தம் அலமாரிக்குள்ளிருந்து கேட்டது.

‘போனை கூட எடுத்துட்டு போகாம எங்கன போயிருப்பா இவ?’ உள்ளம் பதறியது. 

நிகாவல்லி பிறந்த சமயத்தில் அவனிடம் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்று தங்கினாள். அதுதான் முதலும் கடைசியும். அதன்பிறகு அவள் எந்த பிரச்னைக்கும் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டில் சென்று உட்கார்ந்ததில்லை.

“என் வூட்டை விட்டு போடி” என்று அவன் ஆத்திரத்தில் சொன்னாலும், “நான் ஏன் போவணும்… நீ போ” என்று திமிராகப் பேசுவாளே ஒழிய, வீட்டைவிட்டு எல்லாம் அவள் செல்ல மாட்டாள். 

அதே மனநிலையுடன் ஈஸ்வரியின் அம்மாவின் அலைபேசியை அழைத்தான். அவர் எடுத்ததுமே, “ஈஸ்வரி… சொல்லு” என்றார். அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அழைப்பைத் துண்டித்துவிட்டான். 

அம்மா வீட்டிற்கும் போகவில்லை என்றால் எங்கே போனாள்? அதுவும் நிகாவையும் வேறு கூட்டிக் கொண்டு போயிருக்கிறாள். 

இரண்டு வாரம் முன்பு, வீட்டின் பின்பக்கம் யோகேஷும் ரேகாவும் சண்டை போட்டுக் கொண்டதை அவன் கேட்காமலிருந்திருந்தால் இந்த பிரச்னைகள் எதுவுமே நடந்திருக்காது. 

 “எங்கிருந்து எடுத்தங்குறது இப்போ முக்கியம் இல்ல. இந்த நோட்டுல எழுதி இருக்க பேர், ஈஸ்வரி… நம்மூட்டு பக்கத்துல டீக்கடை வைச்சுருக்க அக்காதானே அது?” என்று ரேகா கேட்க,  

“சீ…  நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு உளறாதடி” என்று கடுகடுத்தான் யோகேஷ்.  

“யாரு நான் கற்பனை பண்ணிக்கிட்டு உளறனா? அப்புறம் எதுக்கு அந்த அக்கா உன்னைய பார்த்தாலே எண்ணெய்ல போட்ட கடுக்காட்டாமா பொரியுது”

“அதுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்ல… நீயா எதாவது யோசிச்சுட்டு பேசாத. முத அந்த நோட்ட இப்படி கொடு”

“எதுக்கு பத்திரமா பொட்டிக்குள்ள பூட்டி வைச்சுக்கவா?”

“ரேகா” என்று அவன் பல்லை கடிக்க, 

“எனக்கு தெரியும் மாமா. உன்னால உன் காதலை மறக்க முடியல. அதனால்தான் நீ அவ வூட்டு பக்கத்துலயே வூடு பார்த்து குடி வந்திருக்க. நான்தான் பைத்தியம். சரியான பைத்தியம், நீதான் உலகம் நெனச்சு வாழ்ந்துட்டு கிடக்கேன். சின்ன வயசுல இருந்தே உன்னைய என் புருசனு மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டேன்” என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

“சத்தியமா நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்ல ரேகா, இந்த வூட்டுக்கு குடி வரும் போது ஈஸ்வரி பக்கத்து வீட்டுல இருக்குறது எனக்கு தெரியாது” என்றான். அந்த நொடி குணாவின் தலையில் இடி இறங்கியது. 

அவனை அப்போதே இழுத்து போட்டு அடிக்க வேண்டுமென்று வெறி கிளம்பியது. ஆனால் அந்த சமயத்தில் அங்கே வந்த ஈஸ்வரி, “மாட்டு கொட்டாய்ல நின்னுட்டு இன்னாய்யா பன்ற நீ. நேராமவலயா, வந்து படு” என்றாள். அவனும் தன் மனச்சஞ்சலத்தைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டான்.

ஆனால் மூளை பாட்டுக்கு ஏதேதோ யோசித்தது. காரணமே இல்லாமல் யோகேஸ்வரனிடம் ஈஸ்வரி சிடுசிடுத்தது  எல்லாம் நினைவுக்கு வந்தது.

இப்போது யோசித்துப் பார்த்தால் அது எதுவும் காரணமில்லாத கோபம் இல்லை என்று புரிந்தது. அப்படியெனில்  திருமணத்திற்கு முன்பு இருவரும் காதலித்திருப்பார்களா? இந்த யோசனையே அடிவயிற்றை பிசைந்தது. 

‘ச்சே ச்சே ஈஸ்வரி அப்படி எல்லாம் பண்ணி இருக்காது… அவனைக் கண்டாலே அவளுக்கு பிடிக்கல’ என்று தன்னைத்தானே தேற்றி கொண்டான். ஆனாலும் மனதின் ஒரு மூலையில் சந்தேக விதை விழுந்துவிட்டது.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவன் எண்ணத்திற்கு தூபம் போட்டன.  ஒரு நாள் அவன் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது, மலர்விழி ஒரு பெரிய தூக்குடன் அவன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

“ஏய் பாப்பா நில்லு. என்ன எடுத்துட்டு போயிட்டு இருக்க”

“இந்த தூக்கை எங்க அப்பா உங்க வீட்டுல கொடுக்க சொன்னாரு”

“எதுக்கு… அதுல அப்படி என்ன இருக்கு?” என்று அவசரமாகப்  பிடுங்கி அதனைப் திறந்துப் பார்த்தான்.

“அதுல ஒண்ணும் இல்ல” என்றாள். அவள் சொன்னது போல அது காலியாக இருந்தது.

“அப்புறம் எதுக்கு இதை உங்க அப்பா கொடுத்துவிட சொன்னாரு?”

“ஏன்னா இது உங்களோடது அங்கிள். அதான் எங்க அப்பா கொடுக்க சொன்னாரு” என்று சொல்லிவிட்டு அவள் ஓடிவிட்டாள். அந்த தூக்குடன் வீட்டிற்குள் நுழைந்தான் குணா.

 நிகாவல்லி அப்போது மும்முரமாக டிவியில் மூழ்கி இருந்தாள். ஈஸ்வரி சமையலறைக்குள் இருந்தாள். அந்த தூக்கை கொண்டு வந்து மேடையில் டம் என்று வைக்க, அவள் பதறித் திரும்பினாள்.

“நீதானாயா… நான் என்னவோனு பயந்துட்டேன். எப்போ வந்த? ஆமா தூக்கை யார் கொண்டு வந்து கொடுத்தது?” என்று கேட்க, “அந்தப் பக்கத்துவூட்டு பொண்ணு” என்று முகத்தைச் சுருக்கியவன், “ஆமா நம்ம தூக்கு எப்படி அவங்க வீட்டுக்கு போச்சு?” என்று வினவினான்.

“அந்த மலரோட அம்மாவுக்கு பாவம் உடம்பு சரியில்லயாம். அதான் கஞ்சி பண்ணி கொடுத்துவுட்டேன்” 

“அந்த பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“உங்க பொண்ணு அந்த மலர்விழியும் பிரண்டு இல்ல… அப்படிதான் எனக்கு விசயம் தெரியும்… நமக்கு எதுக்கு வம்புன்னுதான் பார்த்தேன்…

  கைக்குழந்தையை வேற வைச்சு இருக்காளா..? அதான் போய் என்னவோ ஏதோன்னு பார்த்துட்டு வந்தேன். பாவம் ரொம்ப உடம்பு முடியாமதான் கிடக்குது. இதுல பிள்ளதாச்சியா வேற இருக்கா. மனசு கேட்கல. அதான்  கஞ்சி செஞ்சு கொடுத்துவுட்டேன்”

“ஏன், அவ புருசன்காரன் இல்லையா?”

“நான் போவும் போது அந்த ஆளு வூட்டுல இல்ல. அந்த பொண்ணு பாவம் தனியாதான் படுத்து கிடந்துச்சு”

“தூக்கு அவங்க அப்பங்காரன்தான் கொடுத்து வுட்டான்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சு”

“இப்ப வந்திருப்பானா இருக்கும். ஆமா நீ ஏன் சட்டையைக் கூட மாத்தாம நிற்குற?” 

“மாத்துறேன் மாத்துறேன்… பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லாத சமயத்துல எங்க போயிருந்தானாம் அந்த பொறம்போக்கு?” என்று குணா முனகியபடி சட்டையை கழற்ற,  அத்தனை நேரம் சாதாரணமாக பதில் சொல்லிக் கொண்டிருந்த ஈஸ்வரி, “இப்ப என்ன சொன்ன?” என்று திரும்பி அவனைத் தீவிரமாக முறைத்தாள்.

“இல்ல, அவன்தானே அவன் பொண்டாட்டியை பொறுப்பா பார்த்துக்கணும்னு…” என்று இழுத்தான். 

“ஓஹோ… நீ எம்புட்டு முற அப்படி எனக்கு பார்த்துட்டு இருந்திருக்க, சொல்லேன். கஞ்சி எல்லாம் கூட வேணாம். உடம்பு சரியில்லன்னு கூடவாச்சும் இருந்திருக்கியா? ஹ்ம்ம்… அப்பவும்கூட முழுசா போட்டுன்னுதனே வருவ வூட்டுக்கு” என்றவள் திருப்பிக் கேட்டதில் அடுத்த வார்த்தை பேசாமல் வெளியே வந்துவிட்டான்.

அதேநேரம் யோகேஷிற்காக அவள் பரிந்து பேசுகிறாளோ என்ற எரிச்சல் உண்டானது. இந்த நிலையில்தான் அந்த வாரக் கடைசியில் அழைப்பிதழ் கொடுக்க ஈஸ்வரியின் தாய்மாமன் குடும்பத்தினர் அவள் வீட்டிற்கு வந்தனர்.

“நான் ஆஸ்பத்தரிக்கு மாத்திரை வாங்க வந்தேன்… பார்த்தா மாமாவும் அத்தையும் இப்பதான் சீமந்த நோட்டீஸ் வைக்க வர்றேன்னு சொல்லி பேசுனாங்க. நீ கொஞ்சம் வூட்டுக்கு சீக்கிரம் போயேன். நான் வர கொஞ்ச நேரம் ஆவும்” என்று கணவனுக்குத் தகவல் கூற, அவனும் விரைவாகச் சென்றான். 

அவர்கள் வீட்டு சாலையில் ஈஸ்வரியின் தாய்மாமன் மகன் குமாருக்கும் யோகேஸ்வரனுக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர்கள் கார் வரும் வழியில் யோகேஷின் வண்டி நின்றதால் பிரச்னை என்று அக்கம்பக்கத்தினர் பேசிக் கொண்டனர். 

குணா அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்து வந்து அமர வைத்தான். 

அப்போது குமார், “அந்த பொறம்போக்கு இந்த வூர்ல என்ன பண்றான்?” என்று அவசரத்தில்  வார்த்தையை விடவும், ஈஸ்வரியின் தாய்மாமன் திரும்பி மகனை அடக்கினார். ‘அவனை பற்றிப் பேசாதே’ என்று ரகசியமாக சைகை செய்ய, அனைத்தையும் குணா கவனித்தான். 

ஈஸ்வரி வந்ததும் அவர்கள் அழைப்பிதழை வைத்துவிட்டுக் கிளம்ப, குணா தீவிரமாக யோசித்தான். யோகேஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையில் அப்படி என்ன பழக்கம் இருந்திருக்கும் என்று தெரிந்து கொண்டே தீர வேண்டுமென்று ஆவல் அதிகரித்தது.  

உடனடியாக குமாருக்கு அழைத்துத் துருவ, அவன்  இதுதான் சமயமென்று மொத்த விஷயத்தையும்  ஒப்புவித்தான். 

கடைசியாக, “அண்ணே! அந்தப் புறம்போக்கை முத அந்த வூரை வுட்டு துரத்திவுடு. இல்ல உனக்குதான் பிரச்னை சொல்லிட்டேன்” என்று தூண்டி வேறு விட, குணாவின் கோபம் தலைக்கேறியது. கூடவே போதையும். 

தள்ளாடியபடி வீட்டிற்குச் சென்ற குணா செய்த முதல் காரியமே ஓரமாக நின்ற யோகேஷின் வண்டி கண்ணாடியை நொறுக்கியதுதான். சத்தம் கேட்டு ஓடி வந்த யோகேஷ் தன் வண்டியின் நிலையைப் பார்த்ததும் கொதித்துப் போனான். அதற்குக் காரணமான குணாவை அடித்து, கீழே தள்ளினான்.

இருவரும் மாறி மாறி தாக்கிக் கொள்ள, அக்கம் பக்கத்தினர் அவர்களை ஓடி வந்து தடுத்துப் பிடித்தனர்.

விஷயமறிந்து ஈஸ்வரி அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தாள்.

அவர்கள் இருவரும் வசைப்பாடிக் கொள்வதைக் காதால் கேட்க முடிவில்லை. சண்டையிட்டது என்னவோ அவர்கள் இருவரும். ஆனால் அவர்கள் நிந்தித்தது என்னவோ அந்தந்த வீட்டுப் பெண்களை. 

கடுப்பான  ஈஸ்வரி, கணவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்தாள்.

“இப்ப எதுக்கு குடிச்சிட்டு வந்திருக்க? அதுவும் அறிவுக்ககெட்டத்தனமா அந்த ஆளு வண்டி கண்ணாடியை வேற ஒடைச்சு வைச்சுருக்க… பைத்தியமாயா நீயி?” என்று மானாவாரியாகத் திட்ட, 

“ஆமாண்டி பைத்தியம்… பைத்தியம்தா” என்று வெறிபிடித்தவன் போலக் குணா சத்தமிட, ஈஸ்வரி அரண்டு போனாள். கூடவே நிகாவும் மிரண்டு விழித்தாள். 

மகள் முகத்தை பார்த்த ஈஸ்வரி அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல்,“குடிச்சிட்டு வந்து போதையில ஏதாவது உளறிட்டு கிடக்காத. பாயை போடுறேன். படுத்துத் தொலை” என்றபடி பாயை விரிக்க, அவன் குடிபோதையில் குழறியபடி ஏதேதோ பேசினான். 

“கம்னு படுயா” என்றாள். 

“நீ சொல்றது எல்லாம் நான் கேட்கணுமா. பெரிய இவளா நீ” என்ற அவன் சீற்றத்துடன் அவள் தலைமுடியை கொத்தாகப் பிடித்தான். 

“யோவ்…  முடியை விடுய்ய்ய்யா வலிக்குது” என்று அவள் கதறினாள். 

“அம்மா பாவம் ப்பா… விடுப்பா” மகளின் அழுகையையும் அவன் காதில் வாங்கவில்லை. அரக்கத்தனமாக ஈஸ்வரியைப் பிடித்து முன்னே தள்ளிவிட, எதிரே இருந்த சாமி மாடத்தில் சென்று மோதிக் கொண்டாள்.

அதன் கூர்மையான பாகத்தில் அவளின் நெற்றி இடித்ததில் குருதி பெருகியது. அவள் வலியுடன் தலையைப் பிடித்துக் கொள்ள, “அம்ம்ம்ம்ம்ம்மா…” என்று நிகா பயந்து அலறினாள்.

(தொடரும்)

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.