சமீபத்தில் நான் படித்தறிந்து மிகவும் வியந்து போன ஒரு பெண் ஆளுமை கம்போடியா நாட்டைச் சேர்ந்த சொமலி மாம். இவர் ஒரு பாலியல் கடத்தல் எதிர்ப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர்.

பெண்களும் சிறுமியரும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவதும் விற்கப்படுவதும் உலக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருள் உலக வியாபாரம். ஆண்டொன்றுக்கு 10.39 லட்சம் பேர் இந்தப் பாலியல் சுரண்டலுக்காகவும் அடிமைத் தொழிலுக்காகவும் கடத்தப்படுகிறார்கள். அதில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுமியரும்தாம்.

கம்போடியாவின் மொண்டுல்கிரி மாகாணத்தில் பழங்குடி சிறுபான்மை இனத்தில் பிறந்தவர் சொமலி மாம் (somaly mam). பதினான்கு வயது வரை தன்னை வளர்த்த தாத்தாவால் கொடுமைப்படுத்தப்பட்ட சொமலி, பிறகு பாலியல் விடுதி ஒன்றில் அடிமையாக விற்கப்பட்டார்.

பல ஆண்டுகளாக அந்த விடுதியில் கொடுமையை அனுபவித்த சொமலி, தன்னுடன் விடுதியில் தங்கியிருந்த சக பாலியல் அடிமைப் பெண்ணின் நட்பைப்

பெற்றார். நாளொன்றுக்கு ஐந்து முதல் ஆறு பேரால் வன்புணர்வுக்கு ஆளான சொமலி மாம், அந்நியன் ஒருவனைத் திருமணம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சொமலியை விலைக்கு வாங்கிய பாலியல் விடுதியின் தலைவன், சொமலியின் நெருங்கியத் தோழியைக் கொடூரமாக படுகொலை செய்தான். அந்தக் கோர சம்பவத்தை நேரில் பார்த்த சொமலி அந்த விடுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்தக் கொடூர நிகழ்வின் தாக்கத்தில் இருந்து ஒரு வழியாக மீண்ட பிறகு, தன் வயிற்று பிழைப்பை முக்கியமாகக் கருதி வாழ்ந்து மடியும் வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

மாறாகத் தன்னைப்போல் சீரழிந்த சிறுமிகளை ஆள்கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்பதும், அவர்களுக்கு மனரீதியான விடுதலையையும் சமுதாய ரீதியான அந்தஸ்தான வாழ்க்கையையும் அமைத்துத் தருவதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளார்.

பாலியல் வர்த்தகத்தையும் பாலியல் சுரண்டலுக்கான ஆள்கடத்தல் வர்த்தகத்தையும் உலகை விட்டு அழித்தே தீருவது என்பதையே தன் லட்சியமாக வரித்துக் கொண்டுள்ள சொமலி, சொமலி மாம் அறக்கட்டளை (somali mam foundation SMF) ஒன்றை நிறுவி, அதன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளான பெண்களை மீட்டெடுக்கப் போராடி வருகிறார்.

திரட்டப்படும் நிதி, பாலியல் சுரண்டலில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது.

பாலியல் தொழிலுக்காகவும் அடிமை வர்த்தகத்திற்காகவும் கடத்தப்படும் ஆசியச் சிறுமியரை மீட்பதும் பாதுகாப்பதும், இந்த அமைப்பின் மாபெரும் கடமையாக உள்ளது.

ஏ.எஃப்.இ.எஸ்.ஐ.பி அமைப்பினர் முதன் முறையாக 83 சிறுமியரை மீட்கும் போது, அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்த கம்போடியா காவல்துறை, அவர்களை ஏமாற்றி துரோகம் இழைத்தது. அதனால் ஏ.எஃப்.இ.எஸ்.ஐ.பி அமைப்பினர் பெரும் பழிக்கு ஆளாக நேர்ந்தது.

அதன் பிறகான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சொமலியின் ஏ.எஃப்.இ.எஸ்.ஐ.பி அமைப்பினர் காவல்துறையை முழுவதுமாக நம்புவதில்லை. மீட்புப் பணிகளில் தனக்கே உரித்தான சிறப்பான உத்திகளைக் கையாண்டனர்.

பாலியல் தொழில் என்பது சில்லறை வர்த்தகமாக மட்டுமே சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஆனால், பாலியல் தொழில் மூலம் உலக அளவில் கிடைக்கும் வருமானம் என்பது, ஒரு நாட்டின் அரசாங்கத்தை நடத்த தேவைப்படும் நிதியைவிடப் பெரியது.

பணம் சம்பாதிக்க பெண்களும் சிறுமியரும், ஆண்களும், மூன்றாம் பாலினத்தவரும் கடத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறார்கள்.

கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் புனிதம் பேசும் பல நாடுகளின் இருள் உலகத்தில் இந்தப் பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது.

தெரு, விடுதி, ஆன்லைன் என்று பல தளங்களில் சக்கைப்போடு போடும் பாலியல் தொழில்களின் லாபத்தில்தான் பல நாடுகளின் அரசாங்கங்கள் வேரூன்றி நிற்கின்றன என்பது கசப்பான உண்மை.

இணையதளங்களில் பரவிக் கிடக்கும் ஆபாச வீடியோக்கள் இந்தப் பரந்து விரிந்த பாலியல் தொழிலின் அங்கம். ஆபாச வீடியோக்கள் பார்ப்பது குற்றம் என்று பரப்புரை செய்பவர்கள், இந்த ஆபாச வீடியோக்களை அரசு ஏன் தடை செய்வதில்லை என்று கேள்வி கேட்பதில்லை.

பாலியல் தொழிலை அரசு ஏன் நிறுத்தவில்லை? தடை செய்யவில்லை? பாலியல் தொழிலாளிகளை மீட்டெடுத்து, அவர்களுக்கான மறுவாழ்வு பற்றி அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது போன்ற கேள்விகளைக் கேட்கப் பெரும்பாலானோர் முன்வருவதில்லை.

இத்தகைய கேள்வியை உலக அரங்கில் கேட்டதால்தான் சொமலிமாமின் அறக்கட்டளைக்குப் பல்வேறு எதிர்ப்புகள் உருவாயின. எதிர்ப்பு அறக்கட்டளையை மூடும் வரை சொமலிமாமைத் துரத்தியது.

2014 ஆம் ஆண்டு சொமலிமாமின் மீது பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. சொமலிமாம் தன் அறக்கட்டளையை மீண்டும் ஆரம்பித்து, பாலியல் சுரண்டலை ஒழிக்கப் போராடி வருகிறார்.

பாலியல் அடிமையாக விற்கப்பட்டு, பல ஆண்டுகளாகச் சீரழிந்த நிலையிலும் மனம் தளராது தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் சொமலி மாமின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

படைப்பாளர்:

சக்தி மீனா

பிரதிலிபி, வைகை தமிழ் ஆகிய இணையதளங்களில் நாவல் எழுதி வருகிறார்.