சமூகத்தில் மதிக்கத் தக்க பெண்மணி அவர். அவரது வீட்டார், அவரது படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி, நல்ல வரன் வந்ததும் இள வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அவருக்கோ படிப்பில் பெரியளவு சாதிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. இப்போது அவருக்கு ஐம்பது வயது. பேரன், பேத்தி எல்லாம் எடுத்துவிட்டார். தான் படிப்பில் சாதிக்க முடியாதது இன்றும் பெருங்குறையாக அவருக்கு உள்ளது. அதற்குக் காரணமாகத்தான் நினைக்கும் பெற்றோர் மீதும் சொந்தக்காரர்கள் மீதும் இப்போதுவரை பெருங்கோபம் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பெண்மணி, திருமணமாகி இளம்வயதிலேயே கணவர் இறந்து போக, தன்னந்தனியாகத் தன் பிள்ளைகளைப் பாடுபட்டு வளர்த்தார். பையன்கள் இருவரும் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். பேரன், பேத்தியும் எடுத்துவிட்டார். வயது அறுபதற்கும் மேல். அவருக்குக் கோபம் சமூகத்தின் மீதா, பிள்ளைகள் மீதா, வாழ்க்கை மீதா இல்லை தன் மீதேவா எனப் புரியாமல் எப்போதும் எல்லாருடனும் சிடுசிடுத்துக்கொண்டிருப்பார்.

நண்பர் ஒருவர் ‘நான் ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டேன்; எனது அப்பாவோ என்னை ஒர்க்‌ஷாப்பில் சேர்த்துவிட்டார்; இது எனக்குத் தீராத வருத்தமாக என் வாழ்வையே இப்போதுவரை சலிப்புறச் செய்கிறது’ என்கிறார்.

இன்னொருவர், சமூகத்தின் பெரிய செல்வந்தரின் மனைவி. வீட்டில் வேண்டுமளவு எல்லா வசதிகளும் உண்டு. வயது எழுபதைத் தாண்டி விட்டது; கொண்ட நாள் முதற்கொண்டு இப்போது வரை கணவரோடு எதற்கென்று புரியாமல் எப்போதும் பிணக்கு.

மிகப் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர். அவர் சாதாரணமாக ‘இம்’மென்று சொன்னாலே, வெறும் தலையசைப்பிலேயேகூட எதுவும் நடக்கும்; ஆனால், அவரோ எல்லாரையும் அதட்டியும் மிரட்டியும் பயமுறுத்தியுமே வேலை வாங்குவார். அதனாலோ என்னவோ, எவரும் தன்னைப் பின்னாலிருந்து குத்தி விடுவார்களோ என்று எப்போதும் பயந்துகொண்டே இருப்பார்.

ஏன் இப்படி? எதனால் இதெல்லாம்? எல்லோருக்குமே ஏன் வாழ்வு சொல்லொணாத போராட்டமாக இருக்கிறது. நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கிறது.

ஒவ்வொருவருக்குமே ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? எனக்கு ஏன் இத்தனை கஷ்டம்?’ என்கிற கேள்விகள் இருக்கும்.

நான் கறுப்பாக இருப்பதால்தான் இந்தக் கஷ்டம் எனக்கு வந்தது; நான் பெண்ணாகப் பிறந்ததால்தான் இப்படியான பிரச்னைகள் வந்தன; எனக்கு உயரம் குறைவு என்பதால்தான் எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது; எனக்கு அம்மா இல்லாத காரணத்தால்தான், என்னை எல்லாரும் இப்படி நடத்துகிறார்கள். என் அப்பா இருந்திருந்தால், என்னை இப்படிக் கஷ்டப்பட விட்டிருப்பாரா? என்னைப் படிக்க விட்டிருந்தால் இப்படிப் பிரச்னைகள் இல்லை. பிடித்தவருக்கே மணம் முடித்திருந்தால் தொல்லைகள் இல்லை. கணவர் இறக்காதிருந்தால், சமூகம் என்னை ஒதுக்கி வைத்திருக்காது என்று அவரவர் சூழலுக்குத் தக்க, வாழ்நிலைக்கு ஏற்ப, ஏதாவது ஒன்றைக் காரணமாக நினைத்துக்கொள்கிறோம்.

உண்மையில் கவலை, கஷ்டம், துன்பம், பிரச்னைகள் இல்லாத மனிதர்கள் யார்?

நான் மட்டும் இன்னும் கொஞ்சம் சிவப்பாகப் பிறந்திருந்தால்… எனக்குத் தெற்றுப்பல் இல்லாமலிருந்தால், வழுக்கை இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் குண்டாக இருந்தால், கொஞ்சம் ஒல்லியாக இருந்தால், இந்தத் தொப்பை மட்டும் இல்லாமலிருந்தால், கழுத்து கொஞ்சம் நீண்டு இருந்தால், உயரம் கூடுதலாக இருந்தால், அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், என்னிடம் நிறைய பணம் இருந்தால், கணவர் உயிரோடு இருந்தால், காதலித்தவரையே மணம் முடித்திருந்தால்… இவை எல்லாம் இருந்திருந்தால், அவை எல்லாம் இல்லாமல் இருந்தால் நமக்கு எந்தப் பிரச்னையுமே வந்திருக்காது என்று நினைப்போம்.

எனில், பணக்காரர்களுக்குப் பிரச்னையே இல்லையா? அம்மா உள்ளவர்களுக்குக் கஷ்டங்கள் இல்லையா? அப்பா உள்ளவர்களுக்குக் கவலையே கிடையாதா? காதலித்து மணம் முடித்தவர்கள் சண்டையே இல்லாமல் வாழ்கிறார்களா?

அழகாகப் பிறந்திருப்பவர்களுக்குப் பிரச்னையே இல்லை என்றால், உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு எந்தப் பிரச்னைகளும் இருக்கக் கூடாதுதானே? பதவி, பெரும் புகழ் உள்ளவர்களுக்குப் பிரச்னைகள் கிடையாது என்றால், ஜெமினி கணேசனுக்கோ கமலஹாசனுக்கோ பெரும் பதவியிலுள்ள மந்திரிகளுக்கோ பெருந் தலைவர்களுக்கோ வாழ்வில் எந்தப் பிரச்னைகளும் இருக்காதுதானே? ஆனால், நிஜம் அப்படி இல்லையே!

உண்மையில் ஒரு ரூபாய் சம்பளக்காரர்களுக்கு ஒரு ரூபாய்க்கான பிரச்னை என்றால், லட்ச ரூபாய் பணமுள்ளவர்களுக்கு அதற்கான பிரச்னை; கோடீஸ்வரர்களுக்கோ அதற்கேற்ற பிரச்னைகள். எனவே, பிரச்னைகள், கஷ்டங்கள், வருத்தங்கள், கவலைகள், தோல்விகள், பயங்கள், குழப்பங்கள் அனைவருக்கும் உள்ளதுதான்.

நமக்கு மட்டும்தாம் பிரச்னைகள், கவலைகள் உள்ளதாக நாமாக நினைத்துக்கொள்கிறோம். அதுவும் இப்படி இப்படியான காரணங்களால்தாம் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகவும் நாமாக கற்பித்துக்கொள்கிறோம்.

எனவே, துன்பங்கள் எனப்படுபவை வெளியே உள்ள காரணங்களால் இல்லை; நம்முள், நமது சிந்திக்கும் முறையில் உள்ளது. இதை உணர்ந்தால், நமது சிந்திக்கும் முறைகளில் மாற்றம் ஏற்பட, ஏற்பட நமது துன்பங்களும் குறையும்.

உதாரணமாக, நாம் எல்லாருமே எப்போதும் வெற்றியடையவே நினைப்போம்; தோல்வியை எதிர்கொள்ளத் தயங்குவோம். தோல்வியை எதிர்கொள்ளத் தயங்குவதால், வெற்றியடைந்தே தீர வேண்டும் என்பதில், தீவிரமாக இருப்போம். எனவே, அப்படி நிகழாவிட்டால் உடைந்து போய்விடுவோம். தோல்வி அடைந்ததால் தான் பிரச்னைகளைவிட, அதை இயல்பாக எதிர்கொள்ள விரும்பாததால் ஏற்படும் பிரச்னைகளே அதிகம்.

சிறுவயதிலிருந்தே வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். வெற்றி என்பது மஞ்சள் நிறச் சட்டை என்றால், தோல்வி என்பது நீல நிறச் சட்டை. அவ்வளவுதான். வெற்றியடைந்தவரும் தோல்வி அடைந்தவரும் உழைத்த உழைப்பில் அவரவருக்கான பங்கு இருக்கிறது.

உண்மையில், 100 பேர் விளையாடும் போட்டியில் ஒருவர் வெற்றி பெற, மற்ற 99பேரும் மறைமுகக் காரணமாக இருக்கிறார்கள். வெற்றி பெற்ற ஒருவர் தனது வெற்றியை மற்ற 99பேருடனும் பகிரும் வகையில் நமது சிந்தனை வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும்.

‘வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது, நீங்கள் செய்வதை விரும்புவது மற்றும் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை விரும்புவது’ என்கிறார் மாயா ஏஞ்சலோ.

உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை எல்லாம் வரிசைப்படுத்துங்கள். அவற்றை மேலும் அதிகப்படுத்துங்கள். பிடித்தவற்றை அதிகமாகச் செய்யச் செய்ய, பிடிக்காதவை, வெறுப்பானவை எல்லாம் தாமாக விட்டுப் போகத் தொடங்கும்.

(தொடரும்)

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.